கிடங்குத் தெரு

 ///செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய கிடங்குத் தெரு நாவலை முன்வைத்து



ராஜா என்ற 30 வயது இளைஞனின் சுய வாழ்வு பதிவின் வழியே கிடங்குத் தெருவின் மனிதர்களையும்,அங்கு நடக்கும் வியபார நுட்பங்களையும்,அதன் அரசியலையும் பேசும் ஒரு  சுய சரிதை வகை நாவல் என்றே கிடங்குத் தெரு நாவலை கூறலாம்.


என் வாசிப்பனுவத்தில்  தனித்த எழுத்து நடையிலும்,மொழி கையாள்கையிலும் என்னை வசீகரித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் என்று சொல்வேன்.


புதுமைப்பித்தன் எழுத்திலும்,சுந்தர ராமசாமி எழுத்திலும் என் அகம்  அடைந்து கொள்ளும் நிறைவை கிடங்குத் தெரு நாவலிலும் நான் அடைந்தேன்.


இவ்வளவு இலக்கிய அடர்வும்,எழுத்து நடையும் உள்ள எழுத்தாளரான செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.


அவர் தொடர்ந்து எழுதி இருந்தால் தமிழ் இலக்கிய உலகில் 

அவருக்கான இடம் மிகப்பெரிதாக இருந்திருக்கும்.


அதனால் என்ன ஒன்றின் தரத்தையும்,தகுதியையும் தீர்மானிப்பது எண்ணிக்கை அல்ல.


சம்பத் இடைவெளி என்ற ஒரு நாவலைத் தான் எழுதினார்.


பா.சிங்காரம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகிய இரண்டு  நாவல்களை மட்டும் தான் எழுதினார்.


ஆனாலும் இலக்கிய உலகம் இன்றுவரை அந்த படைப்புகளை சிலாகித்துப் பேசுகிறது.அந்த வகையில் கிடங்குத் தெரு நாவலும் ஒரு நல்ல இலக்கியப் பிரதி.


இந்த நாவலில் வரும் ராஜா என்பவர் செந்தூரம் ஜெகதீஷ் அவர்களின் நிழல் உருவப் புனைவு என நான் நினைக்கிறேன். 



குடும்ப வறுமை காரணமாக பணி செய்யும் இடங்களில் பெண்களிடம் முதலாளிகள் எப்படி உடல் தீண்டலிலும்,உடல் அபகரிப்பிலும் ஈடுபடுகிறார்கள் என்பதை கிடங்கு தெரு வியாபாரி மேத்தாவின் மூலமும்,அவருடன் பணிபுரியும் லலிதாவின் மூலமும் பதிவு செய்திருப்பது சமூக நடப்பின் நிதர்சனம்.


ராஜாவின் மாமனார் மதன்லால் 30 பிட்டு துணிகளை 150 ரூபாய்க்கு வாங்கி அதில் குழந்தைகளுக்கு சட்டைகள் தைத்து 400 ரூபாய் லாபம் பார்த்த மறுநாள் இதய அடைப்பு வந்து இறந்து விடுகிறார்.


தன் மாமனார் மதன்லால் உயிருடன் இருக்கும் போது மனிதன் நேர்மையாக வாழனும்,தப்பா சம்பாதித்து வசதியா வாழனும்னு நினைக்கிறது தேனில் விஷம் கலந்து குடிப்பதற்கு சமம் என்று கூறியதை நினைத்துப் பார்த்துக் கொள்கிறான் ராஜா.


உண்மையில் வியாபாரம் என்பது அங்கீகாரத்துடனும்,அறிவு நுட்பத்துடனும் நடக்கும் திருட்டு.


மதன்லாலுக்கு  வியாபாரம் செய்வது அவரளவில் நேர்மை.அவரவர் நேர்மை அவரவர்க்கு.


ராஜாவின் மனைவி தீபா தாண்டி ராஜாவிற்கு துளசியின் மீதான காதல் அவன் காம இச்சைகளைத் தாண்டிய ஒரு அகத் தேடல்.


ராஜாவின் ஆதிக் கொடி பாகிஸ்தானின் சிந்து மாகாணம்.


இந்து முஸ்லிம் மத கலவரத்தின் போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த சிந்தி இன மக்களில் தானும் ஒருவன் என்கிறான் ராஜா.


நிலமிழந்த ஒரு அகதி மன நிலைக்காரன்,சிந்தி மொழியுடன் தமிழை தாய்மொழியாக சுவீகரித்துக்

கொண்டவன்,பூரணமற்ற இந்த பொய் வாழ்விலிருந்து சற்றே வெளியே வாழ நினைக்கும் ஒரு ஞான பித்தனின் வாழ்க்கை நகல் இந்த நாவல்.


ஒருவனின் சுய மன புலம்பல்களை நேர்மையாக பதிவு செய்த விதத்தில் கிடங்குத் தெரு கட்டாயம் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு நல்ல நாவல்.


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் மிகச் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலில் கிடங்குத் தெரு நாவலையும் சேர்த்துள்ளார்.


நாவலை வாங்கி வாசிக்க நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்///


#கிடங்குத் தெரு

#செந்தூரம் ஜெகதீஷ்

#தமிழினி பதிப்பகம்


Velu malayan

26.2.2021

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்