சோளகர் தொட்டி

 ///ச.பாலமுருகன் எழுதிய"சோளகர் தொட்டி" நாவலை முன்வைத்து



மேற்கு தொடர்ச்சி மலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தொட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை,அவர்கள் பட்ட வாதையை முன் வைக்கிறது இந்நாவல்.


வீரப்பனை பிடிக்க தமிழக-கர்நாடக எல்லை போலீஸ் படையினரால் சோளகர் பழங்குடியின மக்கள் எப்படி சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதின் துல்லிய சித்தரிப்பை இந்நாவலில் செய்திருக்கிறார் ச.பாலமுருகன்.


பொது வெளியில் வீரப்பனைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களைத் தாண்டி வீரப்பனால் பழங்குடியின மக்களுக்கு எவ்வித தீங்கும் நேரவில்லையென்றாலும் அவனுக்கு சோளகர்கள் உதவி செய்கிறார்கள் என எண்ணி தமிழக கர்நாடக போலீஸ்கள் சோளர்களை அடித்து சித்ரவதை செய்ததை பதிவு செய்ததில் இந்நாவல் மிக முக்கிய கவனம் கொள்கிறது.


காட்டுக்கும்,சோளகர்களுக்கும் இருந்த உறவை,அவர்களின் கூட்டு வாழ்க்கை முறையை நாவலின் முதல் பாகம் பதிவு செய்கிறது.


இரண்டாவது பாகம் வீரப்பனை தேடும் போலீஸ் அதிரடி படையினரால் சோளகர்களின் வாழ்வும்,நிம்மதியும் எப்படி  சீர்குலைகிறது என்பதை பதிவு செய்கிறது.


அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள்(Roots) நாவல் வாசித்த போது நான் அடைந்த மனத்துயரை ஈரம்மாள்,மாதி,சித்தி சிக்கைய தம்பிடியின் மகள் மல்லி ஆகியோரை அதிரடி போலீஸ்கள் வன்புணர்வு செய்துகொடுமைப்படுத்தியதிலும் அதே மனத்துயரை அடைந்தேன்.


ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஈரம்மாளை நான்கு கர்நாடக போலீஸ்கள் வல்லாங்கு செய்து அவளை கொடுமை செய்யும் இடத்தில் கல் நெஞ்சம் கொண்ட எவர்க்கும் நெஞ்சில் ஈரம் சுரக்கும்.


வீரப்பனுக்கு உதவி புரிந்தார்கள் என்று சிறையில்அடைக்கும் ஒரு நிறைமாத பெண் சிறையிலேயே குழந்தை பிரசவிக்கும் போது சிக்கைய தம்பிடியின் மகள் மல்லி தான் அந்தப் பெண் பிரசவம் செய்ய உதவுகிறாள்.


அப்போது குழந்தையின் தொப்புள்கொடி அறுக்க எந்த ஆயுதமும் கிடைக்காத நிலையில் தன்னுடைய வாயிலேயே அந்த தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை கையில் எடுக்கும் இடம் மன கனத்தை கூட்டுகிற ஒரு இடம்.


வீரப்பன் கூட்டத்தில் சிவண்ணா சேர்ந்து விட்டதால் அவனுடைய மனைவி மாதி,அவனது மகள் சித்தி ஆகியோரை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி வன்புணர்ச்சி செய்யும் இடங்களில் வீரப்பன் வந்து இந்த போலீஸ்களை சுட்டுத்தள்ளிவிட மாட்டானா என வாசிக்கும் மனம் தவிக்கிறது. 


ஆனால் அப்படி பொது வாசிப்பு மனங்களின் சுவாரஸ்யங்களுக்கு எழுதாமல் நடந்த உண்மை நிகழ்வுகளின் மீது சிறிது புனைவை பூசி சோளக பழங்குடியின மக்களுக்கு தமிழக கர்நாடக  எல்லை போலீஸ் படையினரால்  நிகழ்ந்த கொடுமை,வாதையை கதையாக்கியதில் நல்ல கலைப்படைப்பாகிறது இந்நாவல்.


வனவேட்டையில் சிறந்த வீரனாக திகழும் சிக்குமாதா காட்டில் பன்றிவேட்டையின் போது கொம்பன் யானையால் கொல்லப்படுகிறான். சிக்கு மாதா சாவுக்கு காரணம் முன்பொருமுறை காட்டில் தன் துணையுடன் ஜோடியாக இருந்த ஆண் கரடியை கொன்றதுதான் காரணம் என அவன் மனைவி கெம்பம்மா எண்ணுகிறாள்.


பேதனின் நிலத்தை பிடுங்கிக்கொள்ளும் துரையன் தன்னுடைய நிலத்தில் காட்டுப்பன்றிகள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்காக வேலியில் கரண்ட் விடுவது காட்டுப்பன்றியால் தூக்கி வீசப்பட்டு அதே கரண்ட் கம்பி வேலியில் மாட்டி துரையன் இறந்து போவதால் பேதனின் நிலத்தை அபகரித்து அவனுக்கு செய்த துரோகம் தான் இப்படி துரையன் செத்து விட்டான் என சோளகர்கள் முன்வினைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


சீர் காட்டிற்கு கூலி வேலைக்கு செல்லும் போதுகோத்தகிரியில் இருந்து சீர்கேட்டிற்கு நிலத்தை ஒரு டிராக்டர் ஓட்டிவரும் சேகரன் என்பவருடன் காதல் ஏற்பட்டு ஜோக் அம்மாளின் மகள் ரதி அவனுடன் ஓடிவிடுகிறாள்.


ஜோகம்மாளின் மகன் ஜடையன் கோத்தகிரிக்கு சென்று சேகரன் என்ன சாதி என்று விசாரிக்கும் போது அவன் செருப்பு தைக்கும் சக்கிலியர் சாதி என்பதை அறிந்து அவனும் அவனது அம்மா ஜோகம்மாளும் வேதனைப்படுகிறார்கள்.இந்த விஷயம் தொட்டி கிராமத்துக்கு தெரியக் கூடாது என மறைக்கிறார்கள்.


சாதிக் கலப்பு கூடாது என்கிற சாதியக் கட்டுமானம் சோளகர் பழங்குடியின மக்களிடமும் இருக்கிறது என்பதை பாலமுருகன் பதிவு செய்கிறார்.



மெக்கர் பெட்டியிலிருந்து பெண்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தி கொடுமைப்படுத்துவது,இரவில் பெண்களை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்வது,வீரப்பனுக்கு நீங்கள்தானே அரிசி பருப்பு கொடுத்து உதவி செய்கிறீர்கள் என்று அரப்புலி,புட்டன் ஆகியோரை அடித்துக் கொள்வது என விசாரணை படத்தில் நிகழ்த்தப்படும் கொடுமைகளை விட சோளகர்ளுக்கு நிகழ்ந்த பல மடங்கு கொடுமைகளை ஆவணப்படுத்துகிறது சோளகர் தொட்டி நாவல்.


சிவண்ணா நாவலில் ஓரிடத்தில் சொல்லுவான் நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்.இந்த காடு என்னுடையது.நான் எதற்காக இவர்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று.வீரப்பனை முதல் முதலாக காட்டில் பார்க்கும்போது  உன்னால் தானடா நாங்கள் இவ்வளவு சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம் என்று மனதிற்குள் எண்ணிக் கொள்வான் சிவண்ணா.


ஒரு தனி மனிதனால் ஒரு இனமே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதின் வலியை பாலமுருகன் சரியாக பதிவு செய்திருக்கிறார்.


நாவலை வாசிக்கும் போது காவலர்கள் மீது நம் மனதில் கோபம் எழுந்தாலும் அதற்கு மூல காரணி வீரப்பன் தான் என்பதே நிதர்சனமான உண்மை.


1980களின் இறுதியிலும்,1990களின் துவக்கத்திலும் நடந்த உண்மை நிகழ்வுகளை புனைவு கலந்து எழுதப்பட்டுள்ள இந்நாவல் வீரப்பனை தேடுதல் என்கிற பெயரில் பழங்குடியின மக்களுக்களை சித்திரவதை செய்தததையும்,இயற்கையோடு அவர்களுக்கு இருந்த உறவை சீரழித்ததையும் பதிவு செய்த விதத்தில் இது ஒரு நல்ல நாவல் என்று சொல்வேன்.


வாய்ப்பிருந்தால் வாங்கி வாசியுங்கள்///


velu malayan

11.2.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்