கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov)

 ///தஸ்தாயேவ்ஸ்கியின்

கரமசோவ் சகோதரர்கள் நாவலை முன்வைத்து



உலக மொழிகளில் உள்ள உன்னத உயர் இலக்கியங்கள் என பத்துக்குள் வரிசைப்படுத்தினால் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்,அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய மூன்று நாவல்கள் நிச்சயம் இடம்பெறும்.


தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிப்பதின் வழியே ஒருவன் உலகின் ஒட்டுமொத்த மானுட மனங்களை வாசித்துவிட்ட பேரனுபவத்தை அடைகிறான்.


மானுட ஆன்மாவின் ஆழங்களில் நடந்து அதன் கீழ்மையை கிழித்து நம் முன் வைப்பவர் தஸ்தயேவ்ஸ்கி.


குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிவ்,

அசடன் நாவலில் வரும் மிஷ்கின்,

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா பாத்திரங்கள் வழியே அவர் மானுடத்திற்கு வலியுறுத்துவது அன்பையும், மனிதநேயத்தையும் தான்.


குற்றமும் தண்டனையும் நாவலில் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கிழவியையும் அவளது தங்கையையும் கொலை செய்துவிடும் ரஸ்கோல்னிவ் சட்டம் பயின்ற அறிவு நுட்பமானவன்.


தான் செய்த குற்றத்தை நியாயப்படுத்தி அதை ஏற்றுக்கொள்ளாமல் தப்பிக்கிறான். கடைசியில் அவனுடைய அறிவுக்கும் சோனியா என்ற பெண்ணின் அன்புக்கும் இடையே நிகழும் தர்க்கத்தில் கடைசியில் அன்பு ஜெயிக்கிறது.ரஸ்கோல்னிவ் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைகிறான்.


அசடன் நாவலில் வரும் மிஷ்கின் முட்டாள்தனமானவன்

ஆனால் அனைவருக்கும் அன்பையே வழங்குபவன்.அவன் இயேசுவின்,புத்தரின் மறு வடிவமாக இருக்கிறான்.


அதனால்தான் சிறுவயதிலேயே ஆண்களால் உடல் சுரண்டலுக்கு உள்ளான நஸ்டாலியா பிலிப்போவ்னா என் வாழ்வில் சந்தித்த முதல் மனிதன் நீ தான் என்று மிஷ்கினைப் பார்த்து கூறுகிறாள்.


அன்பின்,மனித வாழ்வின் மேன்மையை அசடன் நாவல் முழுக்க பேசியிருப்பார் தஸ்தயேவ்ஸ்கி.


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா கிட்டத்தட்ட அசடன் நாவலில் வரும் மிஷ்கினைப் போன்றவனே.காந்தி என்று கூட கொள்ளலாம்.


மனதை எதன் மீதும் பற்று கொண்டு கறைபடுத்திக் கொள்ளாத மனம் கொண்டவன் அல்யோஷா.


கால் முடமாகி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 16 வயது பெண்ணான லிசாவை மட்டும் காதலிக்கிறான்.


பணம்,பொருள்,பதவி,புகழ் போன்ற மனித மனதை கீழ்மைக்கு இழுத்துச் செல்லும் எதன் மீதும் நாட்டம் கொள்ளாத ஒரு துறவியாக இருக்கிறான்.


அதனால்தான் தன் தந்தை கரமசோவ் மற்றும்

தன் அண்ணன் திமீத்ரி இருவரும் காதலித்து ஏமாற்றும் வேசி குரூசென்காவை தன்னுடைய சகோதரியாக ஏற்றுக் கொள்கிறான்.



தன் அண்ணன் திமீத்ரி விஷயமாக குரூசென்காவிடம் பேசப் போகும் மிஷ்கின் மடிமீது வந்து அமர்ந்து உன்னை நேசிக்கிறேன் என மிஷ்கினிடம்  குரூசென்கா கூறும்போதும் அவளை  வேசி என்று வெறுத்து ஒதுக்குவதில்லை.

அவளை சகோதரி என்று ஏற்றுக் கொள்ளுகிறான்.


நான் வாசித்த தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்,அசடன்,கரமசோவ் சகோதரர்கள் ஆகிய மூன்றில் உச்ச கலையம்சம் கொண்ட படைப்பாக  கரமசோவ் சகோதரர்கள் நாவலை கருதுகிறேன். 


மூன்று நாவல்களிலும் கொலை நிகழ்வது ஒரு பிரதான அம்சம்.


"உனக்குள் மகானும் பாவியும் ஒருங்கே இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளும் துணிவு உனக்கு வேண்டும்" என்று  ஓஷோ கூறுவதைப் போல மனிதனுக்குள் இருக்கும் பிசாசையும் ,கடவுளையும் மோத விட்டு கடைசியில் கடவுள் தன்மையை உணரச் செய்வதே தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் மையம்.


மனித ஆழ்மனங்களில் ஒளிந்திருக்கும் வன்முறையை, காமத்தை கச்சிதமாக வெளிப்படுத்திய படைப்பு கரமசோவ் சகோதரர்கள் நாவல்.


தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகள் பாத்திரங்கள் வழியே நமக்கு அதிகம் காட்டுவது மனித மனங்களில் பிறக்கும் குற்ற உணர்ச்சி,வன்முறை, நம்பிக்கையின்மை மற்றும் காமத்தையே.


சமூகத்தின் கரங்களால் பாதிப்புக்குள்ளான பாவப்பட்டவர்கள்,

அளவற்ற அன்புக்கு ஏங்கும் மனிதர்கள் போன்றவர்களே தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் வருபவர்கள்.



மனித மனங்களில் இருக்கும் சாத்தானையும்,கடவுளையும் மோத விட்டு கடைசியில் கடவுள் பக்கம் எல்லோரையும் நிற்க வைத்து விடுகிறார்.


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் கடவுளின் இருப்பு குறித்து மிகப் பெரும் கேள்வி எழுப்பும் அல்யோஷாவின் சகோதரன் இவானை இறுதியில் மனச்சிதைவு கொண்டவனாக மாற்றிவிடுகிறார்.


தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய கிறித்துவ மத சார்பு நிலையை நேரடியாக வாசகர்கள் மீது திணிக்காமல் அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் வழியே அந்த சார்பு நிலையை கடைபிடிக்கிறார்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலையே பைபிளின் நீட்சி என்றே சொல்லலாம்.


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் பாத்திரம் கடவுள் மறுப்பு கொண்டவனாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இயேசுவைப்பற்றி இவான் நிகழ்த்தும் உரை நாவலில் மிக முக்கியமானது.


செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவிக்கும் திமீத்ரி(மித்யா) முரடன்.குடிகாரன் திமீத்ரியே சொல்கிறான்,நான் தவறுகள் செய்து உள்ளேன் ஆனால் நன்மைகளை நேசித்தவன்.கொலை செய்யும் அளவுக்கு கொடியவன் அல்ல என்கிறான்.


உண்மையில் திமீத்ரி  கடவுளை ஏற்பவனும் அல்ல,மறுப்பவனும் அல்ல.பணம்,குடி,பெண்ணாசை என திரிபவன்.பொறுப்பற்றவன்.


அன்பு,பணம்,தன் காதலி குரூசென்கா என எல்லாவற்றையுமே தனக்கு கொடுக்காததன் தந்தை கரமோசோவ்வை வெறுக்கிறான்.

ஆனாலும் அவன் அவரை கொலை செய்வதில்லை.


கொலைப் பழியில் சிக்கி இருபது ஆண்டுகள் தண்டனைப் பெற்று சைபீரிய சிறைக்குச் செல்கிறான்.


அல்யோஷாவின் தந்தை கரமசோவிற்கும்,அழுக்கு

லிசவித்தாவிற்கும்  முறை தவறிப் பிறக்கும் ஸ்மெர்டியோகோவ் கரமசோவ் வீட்டில் பணியாளாக இருக்கிறான்.


ஸ்மெர்டியோகோவ் வேலைக்காரர்கள் கிரிகோரி மற்றும் மார்த்தா ஆகியோரால் வளர்க்கப்படுகிறான்.அவனை இவான்,திமீத்ரி என யாருமே மதிப்பதில்லை.


அவனை ஒரு வேலைக்காரனாக நடத்துகிறார்கள்.அல்யோஷாவின் தந்தை கரமசோவ் ஸ்மெர்டியோ கோவ்வை நம்புகிறான்.ஆனால் அவனை தனக்கு பிறந்தவன் என்று அவனுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுப்பதில்லை.


கரமசோவ்  செய்த பாவத்திற்கு ஈடாக ஸ்மெர்டியாகோவ் கரமசோவை கொலை செய்துவிட்டு பழியை திமீத்ரி மீது திருப்பிவிட்டு இறந்து விடுகிறான்.


தஸ்தாயெவ்ஸ்கி நாவலில் வரும் பெண்கள் வாழ்க்கையில் யாரோ ஒருவரால் வஞ்சிக்கப்பட்டவர்களாக,

ஆண்களால் சுரண்டப்பட்டவர்களாக, அன்புக்கு ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.


குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் சோனியா குடும்ப வறுமை காரணமாக வேசியாக மாறுகிறாள்.


அசடன் நாவலில் வரும் நஸ்டாஸியா பிலிப்போவ்னா டாட்ஸ்கி என்கிற 55 வயது பண்ணையாரால் 16 வயதிலேயே சிதைக்கப்படுகிறாள்.


கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் குரூசென்காவும் சிறுவயதிலேயே ஒருவனால் உடல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வேசியாக மாறுகிறாள்.


சோனியா,நஸ்டாஷியா மற்றும்குரூசென்கா ஆகியோர் வேசியாகவும்,ஆண்களை பழிவாங்குபவர்களாகவும் இருப்பதற்கு ஒரு வலுவான காரணத்தையும் அவர்களின் பக்கமுள்ள நியாயத்தையும் பதிவு செய்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.


அடிப்படையில் பெண்கள் நிற மற்றவர்கள்.அதிலும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பில் வரும் பெண்கள் பாவப்பட்டவர்கள்.

அவர்கள் எந்த அறமும் அற்றவர்கள்.


தாஸ்தாயேவ்ஸ்கி பெண்களை கற்பரசி,வேசி என எல்லாம் வகைபடுத்தாமல் அவர்கள் வெறும் பெண்கள்.அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்ற ரீதியிலேயே பெண் பாத்திரங்களை சித்தரிக்கிறார்.


தஸ்தயேவ்ஸ்கி சொல்வதுபோல பெண்களை சாத்தானால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


இந்த நாவலில் அல்யோஷாவை காதலிக்கும் 16 வயது லிசா அசடன் நாவலில் மிஷ்கினை காதலிக்கும் அக்லேயாவை நியாபகப்படுத்துகிறாள்.


திமீத்ரி கொலை வழக்கு சம்பந்தமாக அரசு வழக்கறிஞர் கிரில்லொவிச் மற்றும் திமீத்ரிக்கு ஆதரவாக வாதிடும் ஃபெத்பகோவிச் ஆகியோருக்கு இடையே நிகழும் வாதம் மிக முக்கியமானது.


கரமசோவ் திமீத்ரி, இவான் அல்யோஷா ஆகியோருக்கு ஒரு சிறந்த தந்தையாக இருக்கவில்லை. தந்தை சரியாக இல்லையென்றால் பிள்ளைகள் எப்படி திசைமாறிப் போகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என்கிறார் ஃபெத்யுகோவிச்.


நாவலில் ரஷ்ய மக்களின் பாவங்களை போக்கும் குரு ஜொசீமாவிடம் துறவியாக சேரும் அல்யோஷா குரு ஜொசீமாவின் மரணத்தில் தான் உலகைப் புரிந்துகொள்கிறான்.


குரு ஜொசீமா ஓரிடத்தில் அல்யோஷாவிடம் இப்படி கூறுகிறார். அல்யோஷா நீ திருமணம் செய்துகொள்.லெளகீக வாழ்வின் துன்பங்களை ஏற்றுக்கொள். துன்பங்களில் தெளிந்து இன்பம் காண் என்கிறார்.


மனித ஆழ்மனதின்  வன்முறை,குரூரம், பிறழ்வுகள், நம்பிக்கையின்மை

ஆகியவற்றை தன் படைப்புகள் வழியே தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.


மனிதனின் ஆழ்மன வேரிலிருக்கும் மிருகத்தை தேடிப் பிடித்து அதை கடவுளாக்கும் கலையை செய்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.


நீங்கள் கீதை,குர்ரான்,பைபிள் மூன்றையும் ஒருசேர வாசிக்க விரும்பினால் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசியுங்கள்.


ஒட்டுமொத்த மானுடத்திற்கான கலை ஆவணம் கரமசோவ் சகோதரர்கள் நாவல்///


Velu malayan

10.12.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்