மானுட வாசிப்பு

 ///தொ.பரமசிவன் எழுதிய "மானுட வாசிப்பு" நூலை முன்வைத்து



பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.


தமிழ்நாட்டின் பண்பாட்டு, நாட்டாரியல் ஆய்வு கருத்துகளின் கருவூலமாக கருதப்படும் தொ.ப அவர்களின் கருத்து தெறிப்புகளை உள்ளடக்கிய இப்புத்தகம் சாதி, மதம்,தமிழரின் உணவுப் பண்பாடு,சிறுதெய்வ வழிபாடு என எல்லாத் தளங்களை பற்றியும் பேசுகிறது.


அம்பேத்கரை சிந்தனையாளராக ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்துத்துவாவாதிகள் பெரியாரை புறக்கணிப்பதற்கான காரணம் இந்துத்துவவாதிகளின் அடிப்படைக் கொள்கையான வேதத்தின் அத்தாரிட்டியை,சாதிய மேல்-கீழ் அடுக்கை ஒத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ளாத பெரியாரை ஏற்க மறுக்கின்றனர்.


அம்பேத்கர் பெரிய படிப்பாளி, அறிவாளுமை என்பதால் வேறு வழியின்றி அவரை பிராமணர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.


இசைஞானி இளையராஜா அவர்களை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல.


தமிழில் ஜாதி என்ற சொல்லே இல்லை என்கிறார் தொ.ப.

தமிழில் ஜா என்ற வேர்ச் சொல்லே கிடையாது.ஜா என்ற வேர்ச் சொல்லுக்கு அர்த்தம் பிறப்பு என்பதாகும்.


தொல்காப்பியத்தில் ஒரே ஒரு இடத்தில் உயிர்வாழ் சாதி என்று பறவைகளை செல்வதாக குறிப்பிடும் தொ.ப அதுவும் இடைச்செருகல் என்கிறார்.


எனக்கு உணவியல் பற்றி அதிகம் தெரியாது.தெரியாத விஷயங்களை பேசாமல் இருப்பது தான் நாகரீகம் என்று கூறும் தொ.ப பிராமணர்களின் உணவு அரசியலைப் பேசுகிறார்.


பூமிக்கு கீழே விளைகின்ற கிழங்கு வகைகளான பனங் கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை பிராமணர்கள் உண்ண மாட்டார்கள்.


ஏனென்றால் பூமிக்கு கீழே விளைபவை சூத்திரர்களுக்கும், பன்றிகளுக்கும் உரியது என்பதால்.


ஆனால் உருளைக்கிழங்கு சாப்பிடுவார்கள் காரணம் அது வெள்ளையர்களின் உணவு அதிகாரத்தோடு வந்தது என்பதால் என்கிறார் தொ.ப.


அதேபோல பிராமணர்கள் காபிக்கு கருப்பட்டி சேர்க்க மாட்டார்கள் காரணம் கருப்பட்டி காய்ச்சி எடுப்பவர்கள் கீழ் சாதிக்காரன் என்பதாலும்,அதை அவர்கள் தொடுவார்கள் என்பதாலும் சர்க்கரை பயன்பாடு தான் பிராமண வீடுகளில் அதிகம் இருக்கும் என்கிறார் தொ.ப.


உப்பு குறித்த தொ.ப வின் செய்தி சுவாரஸ்யமானது.

உப்பு ஒரு புனிதப் பொருள்.

உறவின் தொடர்ச்சியை காட்டுவது என்பதாகும்.எல்லாச் சுவைகளுடைய பெயரும் உப்பு என்று  தான் முடியும். 


கரிப்பு, எரிப்பு,இனிப்பு என அனைத்தும் உப்பு என்றே முடியும்.

எனவே உப்பு என்ற சொல்லுக்கே சுவை என்று பெயர்.


பேராசிரியர் தொ.பரமசிவன் ஆண்ட பரம்பரை ராஜாக்கள் எல்லோருமே சாதி கெட்டவர்கள் தான்.ஏனென்றால் ராஜாக்கள் எல்லா சாதியிலும் பெண் எடுத்திருக்கிறார்கள்.


ராஜராஜனுக்கு அதிகாரப்பூர்வமாக நான்கு மனைவிமார்கள் வெவ்வேறு சாதியில் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி நாம் இப்போது பின்பற்றிக் கொண்டிருக்கும் சாதி புனிதத்தின் மீதான சவுக்கடி எனலாம்.


மூட நம்பிக்கைக்கும்,நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?


நம்பிக்கைக்கும்,மூடநம்பிக்கைக்கும் இடையில் என்ன இருக்குன்னு கேட்டா அதிகாரம் இருக்கு.நுண் அதிகாரம் இருக்கு.

பாலை கல்லு மேல இருக்கிற சிலை மேல கொட்டுவது மூட நம்பிக்கை கிடையாது.அது நம்பிக்கை. 

கொட்டுனா கடவுள் சொர்க்கம் தருவார் என்று நம்புவது மூடநம்பிக்கை.

இந்த இரண்டுக்கும் இடையில் என்ன வருதுன்னா பூசாரி,குரு.

மறைமுக நுண் அதிகாரம் வருது.இதுதான் வித்தியாசம் என்று கூறுகிறார்

பேராசிரியர் தொ.பரமசிவன்.


பள்ளி என்ற வார்த்தை சமணம் கொடுத்த கொடை.


பள்ளி என்றால் Bed என்று அர்த்தம்.சமண குகைத்தலங்கள் கல்லால் செதுக்கப்பட்டிருக்கும்.


சமணத்துறவிகள் அந்த கல்லின் மீது அமர்ந்த படித்ததால் அதற்கு பெயர் பள்ளிக்கூடம் என்று ஆச்சு.


சமண மதம் தமிழகத்தில் வீழ்ந்ததற்கான காரணம் அது கடைபிடித்த தீவிர பட்டினி கோட்பாடும்,நிர்வாண கோட்பாடுமே காரணம் என்பது தொ.பவின் கருத்து.



5001 அடிகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 5000 வகை தாவரப் பெயர்கள் கையாளப்பட்டுள்ளது என்றும்,

வம்ப மலர் என்றால் புதுமலர் என்று அர்த்தம்.அதிலிருந்துதான் வம்புச்சண்டை (புதுச்சண்டை)வந்தது என்ற தகவலை தெரிவிக்கிறார் பேராசிரியர் தொ.ப.


பறையர்கள் இம்மண்ணின்  மூத்தக்குடிகள்,ஆதிக்குடிகள்.


பாப்பானுக்கு மூப்பு பறையன்,கேட்க நாதியில்லாமல் கீழ்சாதியாக போனான்" என்பது பழமொழி.


பார்ப்பான்னா ஜூனியர் என்று அர்த்தம்.பாப்புனா The young என்று அர்த்தம்.அதான் நாம் குழந்தையை பார்ப்பா என்று கூப்பிடுகிறோம்.


அப்போ யாரு சீனியர் என்ற கேள்வி வருகின்றபோது பறையர் தான் சீனியர் என்பது தெளிவாகிறது என்கிறார் தொ.ப.


இடதுசாரி இயக்கத்திற்கும்,பெரியார் இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிடும்போது பெரியார் இயக்கத்தில் உள்ளவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறார்கள்.


ஆனால் இடதுசாரி இயக்கத்தில் உள்ளவர்கள் அதை செய்வதில்லை என்ற கருத்தை முன் வைக்கிறார் தொ.பரமசிவன்.


தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்ற சீமான் போன்ற தமிழ் தேசியவாதிகளின் குரலுக்கும் பதிலளிக்கிறார் தொ.ப.


13ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆட்சி அதிகாரம் தமிழ் பேசாத அன்னிய சாதிக்காரன் கையிலிருந்திருக்கிறது.

இன்றும் அது தொடர்கிறது.கலப்பே இல்லாத Air tight Compartment ஆக ஒரு இனம் இருக்க முடியாது.


காற்று போகாத ஒரு அடைப்புக்குள் மொழியை வைத்து பாதுகாக்க முடியாது.


நிறைய கோயில்களில் பறையர்கள் பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள் என்றும்,உசிலம்பட்டி கருமாத்தூர் மாரியம்மன் கோவில் பூசாரிகளாக இன்றும் பறையர்கள் தான் இருக்கிறார்கள்.அவர்களிடம் தான் உசிலம்பட்டி கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள்.


மாரியம்மன் பெண் தெய்வம் என்பதால் அவர்களுக்கு பறையர்கள் தாலி கட்டும் திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.


பறையர்கள் தாலி கட்டுவதை எப்படி பார்ப்பது என்று திருக்கல்யாணம்  நடத்துவதே நிறுத்தப்பட்ட வரலாறு என இப்படி  நாம் அறியாத பல்வேறு செய்தி கருவூலங்களை கொண்டதாக இருக்கிறது இந்நூல்.


தமிழர்களின் விருந்தோம்பல் முறை பற்றி குறிப்பிடும் போது எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தலித் சகோதரர்களுக்கும் நாங்கள் டீ பருகும் டம்டலரிலேயே, அவர்களுக்கும் டீ தருகிறோம் என குறிப்பிட்டு தான் ஒரு தலித் அல்லாதவர் என்பதை பதிவு செய்துவிடுகிறார் தொ.பரமசிவன் அவர்கள்.


இந்த புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்றது போல தமிழ் மானுடத்தைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளுவதற்கான ஒரு நுழைவாயிலாக இருக்கிறதுஇந்த புத்தகம்///


Velu malayan

30.12.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்