வாழ்க வாழ்க

 ///இமையம் எழுதிய வாழ்க வாழ்க நாவலை முன்வைத்து



எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும் என்கிறார் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம்.


எளிய மக்களின் வாழ்வியலை அம்மக்களின் மொழியிலேயே கலையாக்கும் வேலையை எப்பொழுதும் தன் எழுத்துக்களில் செய்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் இமையம் அவர்கள்.


இமையம் அவர்களின் படைப்புகளில் வரும் மனிதர்கள் வாசகர்களுக்கு அந்நியப்பட்டு போகாதவர்கள்.


அவரது படைப்புலகம்  எளிய மனிதர்களைப் பற்றியது.நம்மை சுற்றியுள்ளவர்களைப் பற்றியது.


நான் வாசித்த வரை கோவேறு கழுதைகள்,பெத்தவன்,எங்கதெ ஆகிய நாவல்களில் எளிய மனிதர்களை,அவர்களின் எதார்த்த வாழ்வின் சிடுக்குகளை எழுதியிருப்பார்.


எல்லாமே அரசியலிலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கி போகிறது

(Everything must be from politics or towards politics) என்ற சொற்றொடர் போல அரசியலற்ற கலையும், அரசியலற்ற வாழ்வும் நாம் கற்பனை செய்ய முடியாத ஒன்று.


அப்படி அரசியல் சார்ந்த ஒரு நெடுங்கதை அல்லது குறு நாவல் தான்  வாழ்க வாழ்க.


இமையம் அவர்கள் எழுத்தாளர் என்ற முகத்தை தாண்டி அடிப்படையில் அவர் ஒரு திமுக அபிமானி.


ஆனாலும் தன் எழுத்துக்களில் தன் கட்சி சார்ந்த கொள்கைகளை, நிலைப்பாடுகளை பிரதிபலிக்க மாட்டார்.ஆனால் இந்த வாழ்க வாழ்க நாவலில் அதை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார்.


தமிழ்நாடு உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவியின் கட்சி பிரச்சார கூட்டத்திற்கு சின்னகண்டியான்குப்பம் என்கிற கிராமத்திலிருந்து விருத்தாச்சலத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்ககு செல்லும் பெண்களுக்கு நேரும் அனுபவங்களை அவஸ்தைகளை பெண்களின்  பார்வையில் எழுதியிருக்கிறார் இமையம்.- .


கட்சி கூட்டத்திற்கு ஒரு ஆளுக்கு 500 ரூபாயும்,ஒரு புடவையும் கொடுத்து கூட்டி வரும் உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் பிரதிநிதியான வெங்கடேச பெருமாள் கதாபாத்திரம் நிகழ்காலத்தில் கட்சியினை வைத்து பெருக்கித்தின்னும் பெருச்சாளிகளின் நகல் உருவம்.


கட்சி கூட்டத்தில் மாட்டி அவஸ்தைப்படும் கண்ணகி,ஆண்டாள்,சொர்ணம் ஆகிய பெண்கள் நிஜத்தில் நம்மூரில் நம்முடன் உள்ள பெண்களை நியாபகப்படுத்துகிறார்கள்.


தமிழ்நாடு உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் தங்கத் தலைவி சாயங்காலம் வரும் பிரச்சாரக் கூட்டத்திற்கு காலையிலிருந்து கடும் வெயிலில் அவதியுறும் அப்பாவி தொண்டர்களின் மனநிலையை நாவலில் காட்டியுள்ளார் இமையம்.


நிகழ்ந்த ஒரு நிஜ நிகழ்வை புனைவாக்கியுள்ளார் இமையம்.


கட்சிக் கூட்டத்தில் தங்களுக்கு சரிசமமாக எப்படி  கீழ்சாதி பெண்கள் உட்காரலாம்,கூட்டத்துல உட்கார்ந்துட்டா சாதி இல்லாம போகுமா? என மேல்சாதி பெண்கள் கீழ்சாதி பெண்களுடன் சண்டையிடுவது,


ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலி திருடப்படும் நிகழ்வு,


கட்சி கூட்டத்திற்கு வந்த வேன் மோதி ஒருவர் இறந்து விடுவது,


பெண்கள் ஒண்ணுக்கு போக,ஒதுங்க கூட இடமில்லாமல் கூட்ட நெரிசலில் உட்கார்ந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது,


தங்கத் தலைவியை பார்க்க  ஏறி நிற்கும் ஆண்களால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே தடுப்பாக கட்டியிருக்கும் சவுக்குக் கழிகள் சரிந்து விழுந்து நிறையபேர் இறந்து போவது என ஒரு கட்சிக் கூட்டத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் எழுத்தாக்கியிருக்கிறார்.


இந்த நாவல் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நீங்களும் ஒரு கட்சிக் கூட்டத்தில் இருப்பதை போன்ற பிரக்ஞைனையை உருவாக்குவது தான் இந்த நாவலின் பலம் என்பேன்.


தான் ஒரு திமுக கட்சி ஆதரவாளன் என்ற பார்வையிலிருந்து விலகி சாதாரண பெண்களின்  பார்வையிலேயே தமிழ்நாடு உழைப்பர் முன்னேற்ற கழகத்தின் தலைவியை அணுகியிருக்கிறார் இமையம்.


பொதுவாக எழுத்தாளர் இமையம் அவரது படைப்புகளை  வலிந்து உருவாக்குவதில்லை.

சமூகத்தில் நிகழக் கூடியவைகளை அவர் புனைவாக்குகிறார்.



சவுக்குக் கழிகள் சரிந்து விழுந்து கூட்ட நெரிசலில் அப்பாவி தொண்டர்கள் சில பேர் இறந்தது கூட தெரியாமல் மேடையில் தமிழ்நாடு உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவி பேப்பரில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பார்த்து படித்துக்கொண்டிருந்தார் என்ற இடத்தில் இமையம் ஒரு எழுத்தாளர் என்ற புள்ளியிலிருந்து விலகி ஒரு திமுக காரனாக தெரிகிறார்.


திராவிட கட்சிகள் தமிழ்நாட்டிற்கு செய்த மிகப்பெரிய கேடு சினிமாவில் அரசியலையும்,அரசியலில் சினிமாவையும் நுழைத்தது தான். 


அண்ணா தொடங்கி கலைஞர்,எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இப்போது ரஜினி என பட்டியல் நீள இருக்கிறது.


மக்களின் ஜனநாயக உரிமையான ஓட்டை காசு கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தை உருவாக்கியது திராவிட கட்சிகள் தான்.


சாராயம்,பிரியாணி பொட்டலம்,காசு, புடவை,டிவி,மிக்ஸி கொடுத்து தான் கட்சிக்கு ஆட்களையும் கூட்டத்தையும் சேர்க்க வேண்டி இருக்கிறது என்பதையும்,அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எப்போதும் அப்பாவி மக்களே பலியாகிறார்கள் என்ற சித்திரத்தை வாழ்க வாழ்க நாவல் காட்டுகிறது.


நாவல் நடந்த உண்மையைத்தான் புனைவாக பேசுகிறது. 


ஆனால் இமையம் திமுகவின் அபிமானி என்பதை மறந்து விலக்கிவிட்டு வாசிக்கும் பட்சத்தில் இது ஒரு அரசியல் சார்பு தன்மையற்ற நல்ல நாவல் என்பது என் எண்ணம்///


Velu malayan

27.12.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்