ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

 ///ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்(Brief Answers to the big Questions) நூலை முன்வைத்து



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதகுல வரலாற்றை அறிவியல் பார்வையில் பதிவு செய்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகம்

என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு சிறந்த புத்தகம் என்பேன்.


அறிவுப் புரட்சி,வேளாண்மைப் புரட்சி மனிதகுல ஒருங்கிணைவு, அறிவியல் புரட்சி என்கிற நான்கு தலைப்பில் மனிதகுலம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சி பாதை,மனிதகுலத்திற்கு வேளாண் புரட்சி செய்த மோசடி,

மனிதகுலம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது,

அதன் முன்னிருக்கும் சவால்கள் ஆகியவற்றைஅறிவியல் கலந்த வரலாற்றுப் புனைவின் வடிவில் சேப்பியன்ஸ் புத்தகத்தை எழுதியிருப்பார் யுவால் நோவா ஹராரி.


சேப்பியன்ஸ் புத்தகத்திற்கு பிறகு என்னை பெரிதும் பாதித்த புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் (Brief Answers to the big Questions) புத்தகம் என்று சொல்லலாம்.


கடவுள் ஒருவர் இருக்கிறாரா?

இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?


மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா?


வருங்காலத்தைப் பற்றி கணிக்க நம்மால் முடியுமா?


ஒரு கருந்துளைக்குள் என்ன இருக்கிறது?


காலப்பயணம் சாத்தியப்படக் கூடிய ஒன்றா?


வருங்காலத்தில் இந்த பூமியில் மனித இனம் உயிர் பிழைத்திருக்க முடியுமா?


விண்வெளி நாம் காலனிப் படுத்த முடியுமா?


செயற்கை நுண்ணறிவு மனித இனத்தை விஞ்சிவிடுமா?


வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?


என்ற பத்து தலைப்பு வடிவ கேள்விகளுக்கு விரிவான பதில்களைநாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தருகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்ற முதல் கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளிக்கும் பதில் அறிவியலே கடவுள் என்பது தான்.


ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடவுளை பற்றிய கருத்து இப்படி இருக்கிறது 

"எனக்கு கடவுள் மீது எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.கடவுளின் இருத்தலை நிரூபிப்பது அல்லது அதை நிராகரிப்பது தான் என் வேலை என்பது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்க நான் விரும்பவில்லை.

நம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றி புரிந்துகொள்ள ஓர் அறிவார்ந்த வழிமுறை உருவாக்குவது மட்டுமே என் வேலை" என்பதே.


இயற்கை விதிகள் நிலையானவை என்று ஏற்றுக்கொண்டால், கடவுளுக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியைக் கேட்க அதிக நேரம் ஆகாது என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


பிரபஞ்ச தோற்றம் பற்றி குறிப்பிடும் போது இயற்கை விதிகளின்படி ஒன்றும் இல்லாததில் இருந்து தானாகவே உருவான ஒன்றுதான் பிரபஞ்சம் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


மனித குலத்திற்கான எதிர்காலம் மிக நெருக்கடி நிறைந்ததாக இருக்கும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


2600 ஆம் ஆண்டு வாக்கில் உலகில் உள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் தோளை உரசிக்கொண்டு நிற்பதற்கு மட்டும்தான் இடம் இருக்கும் என்றும், மக்கள் பயன்படுத்தும் மின்சக்தி இந்த பூமியை பெரிதும் சூடாக்கும்.


2600ஆம் ஆண்டு வாக்கில் மனித வாழ்க்கை முறை என்பது முழுமையான  மின்னணு வடிவத்தை சார்ந்த ஒரு வாழ்க்கை முறையை கையாளும்.


எதிர்காலத்தில் மனித இனம் வாழ இந்த பூமி போதுமானதாக இருக்காது.அதனால் மனிதர்கள் பூமிக்கு மாற்றாக நிலவு மற்றும் செவ்வாயில் வசிப்பதற்கு ஏதுவான முன்னேற்பாடுகளையும் விண் முகாம்களையும் அமைக்க வேண்டும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


மனித அறிவுக்கு சாமான அல்லது அதை விஞ்சுகின்ற செயற்கை நுண்ணறிவை வடிவமைப்பது பயங்கர விளைவுகளை உண்டாக்கும்.


மெதுவான பரிணாம வளர்ச்சியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்கின்ற மனிதர்களால் அவர்களோடு போட்டி போட முடியாது.அதை மனிதர்களை தூக்கி சாப்பிட்டு விடும்.


செயற்கை நுண்ணறிவு கொண்டு வர இருக்கின்ற ஆபத்து அதன் அபரிமிதமான ஆற்றலால் தான் வரப்போகிறது.செயற்கை நுண்ணறிவை கொண்டு உங்களை போன்ற அச்சு அசலான ஒரு டிஜிட்டல் பிரதியையும் உருவாக்க முடியும்.


செயற்கை நுண்ணறிவின் ஆபத்தை ஸ்டீபன் ஹாக்கிங் இப்படி கூறுகிறார்


"அறிவியல் அறிஞர்கள் பலர் சேர்ந்து பெரும் நுண்ணறிவு படைத்த அதிநவீன கணினி ஒன்றை உருவாக்கினர்.அவர்கள் அதனிடம் கேட்ட முதல் கேள்வி கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்பதுதான்.

அதற்கு அக்கணினி இப்போது அவர் உருவாக்கி விட்டார் என்று பதிலளித்து விட்டு தன்னை யாரும் ஒருபோதும் அனணத்து விட முடியாதபடி செய்து விட்டது"



எந்த ஒரு நாகரீகமும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்து விட்டால் அது நிலைகுலைந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்று கூறும் ஸ்டீபன் ஹாக்கிங் அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி புல் பூண்டு உட்பட இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முற்றிலுமாக அழித்து நாசமாக்கிவிடும் தொழில்நுட்பம் இப்போது நம்மிடம் இருக்கிறது.


மனித இனத்திற்கு பூமியில் மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால் உயிர்களை நாம் வேறு கோள்களுக்கு காலனிப் படுத்த வேண்டும் என்கிறார்.


21 வயதில் இயக்க நரம்பணு நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய 76 வயது வரை வாழ்ந்து காலத்தைப் பற்றியும், கருந்துளைகள் பற்றியும்,இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆய்வு செய்து நமக்கு பெரிய அறிவியல் வழிப்பாதையை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.


உடல் முழுக்க இயங்காமல் போனாலும் ஒரே இடத்தில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு இந்த பிரபஞ்ச இயக்கத்தை பற்றி சிந்தித்த மனிதர் ஸ்டீபன் ஹாக்கிங்.


இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை விட மதிப்பைவிட இப்படிப்பட்ட ஒரு உடல் நிலையை வைத்துக்கொண்டு உலகமே வியந்து போற்றக்கூடிய ஒரு அறிவியல் அறிஞராக தன்னை வளர்த்துக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை நாம் நம் வாழ்வு மீது மிகப்பெரிய பற்றுதல் கொள்ள வேண்டும் எனவும்,நாமும் வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும்,நம்மாலும் முடியும் என்ற புரிதலை உணர்த்துகிறது.


நாம் பூமி எனும் இந்த சிற்றுருண்டையை கடந்து பிரபஞ்சம் எனும் பெருவழியில் பிழைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


பிரபஞ்சத்தில் நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் தேடி நாம் மனிதர்கள் ரோபோட்டுகள் என்று தொடர்ந்து விண்வெளிக்கு அனுப்பி கொண்டேயிருக்க வேண்டும்.


நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் மாசுபட்டு கொண்டே இருக்கின்ற திணறிக் கொண்டிருக்கின்ற இந்த பூமிக்குள்ளாகவே நாம் நம்முடைய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேடிக் கொண்டிருக்க கூடாது.

 நாம் வாழ்வதற்கு உகந்த வேறு கோள்களை ஒருநாள் நம்மால் கண்டிப்பாக கண்டுபிடித்துவிட முடியும்.


அதனால் நீங்கள் கீழே குனிந்து உங்கள் காலடிகளை பார்க்காதீர்கள். நிமிர்ந்து வானத்தை உற்று நோக்குங்கள்.அங்கே என்ன பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.


இப்பிரபஞ்சத்தை எது கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்று மூக்கின் மீது விரலை வைத்து வியப்படையுங்கள். 


எப்போதும் ஆர்வத்துடிப்போடு இருங்கள்.வாழ்க்கை எவ்வளவு சிறந்ததாக தோன்றினாலும் உங்களால் ஏதோ ஒன்றைச் செய்ய முடியும்.அதில் வெற்றியும் அடைய முடியும்.


ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். உங்களுடைய கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.


வருங்காலத்தை வடிவமையுங்கள்.


என்ற வார்த்தைகளால் நம்க்கு நம்பிக்கையூட்டுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.


கண்டிப்பாக அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.

குறிப்பாக மாணவர்கள் வாசித்து 

கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்//


velu malayan

25.12.2020.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்