சாயாவனம்

 ///சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை முன்வைத்து



எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களை ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக திருவிழாவில் சந்தித்துப் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


சா.கந்தசாமியின் படைப்புகளில் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையும்,இரணிய வதம் சிறுகதையும் எனக்கு நெருக்கமானவை.


தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்படும் மன தன் முனைவை(Ego) எழுத்தில் காண்பித்திருப்பார் சா.கந்தசாமி.


தன்னிடமிருந்து பிரிந்து வேறு இடத்தில் ராமு மீன் பிடிக்க தூண்டில் போடுவதிலிருந்தே தாத்தா மாணிக்கத்திற்கு பேரன் ராமு மீது Ego வளர ஆரம்பித்து விடுகிறது.


வாளை மீனை தன்னால் பிடிக்க முடியவில்லை என்ற கழிவிரக்கத்தில் தன் மனைவி மீதும்,பேரன் ராமு மீதும் கிழவர் மாணிக்கம்  கோபத்தைக் காட்டுகிறார்.


தான் பிடிக்க முடியாத பெரிய வாளை மீனை ராமு ஒருநாள் பிடித்து விடுவதை அவனுடைய பாட்டி பெருமையாக மாணிக்கத்தை அழைத்துச் சென்று காட்டும் போது  மாணிக்கம் ராமுவின் தோள் மீது கை வைத்து மெதுவாக அவரின் கைகள் காது நோக்கி தலையை உரசிச் செல்லும் போது தன்னுடைய பாட்டியின் பின்பக்கம் ஓடிச் சென்று ராமு மறைந்து கொள்வதாக கதை முடியும்.


தன் சுயம் தோற்க்கும் போது,தன் சொந்த பேரன் மீதே மனம் எழுப்பும் பொறாமை உணர்ச்சியை அசலாக பதிவு செய்த படைப்பு தக்கையின் மீது நான்கு கண்கள்.


இரணிய வதம் சிறுகதை இரண்டு தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றியது.


தன் மனைவி பாப்பாவை வன்புணர்வு செய்யும் இரணிய கசிபு வேஷம் போடும்  சின்ன கருப்புவை நரசிம்ம வேஷமிடும் ராஜாராமன் தெருக்கூத்து நாடகத்தில் கொல்வதுடன் கதை முடியும். 


இந்த இரணிய வதம் சிறுகதையை அடிப்படையாக வைத்துத்தான் நாசரின் நடிப்பில் வெளிவந்த அவதாரம் படம் எடுக்கப்பட்டது.


தமிழில் சூழலியல் குறித்த  நாவல்களுக்கு முன்னோடி கந்தசாமியின் சாயாவனம் நாவல் தான் என்று சொல்லப்படுகிறது.



காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமான சாயாவானத்தினைப்பற்றியது நாவல்.


சாயாவனம் என்றால் சூரியனின் ஒளிக்கதிர்கள் நுழைய முடியாத வனம் என்று பொருளாம்.


கரும்பாலை அமைப்பதற்காக

அய்யரிடமிருந்து

சாயாவனத்தை வாங்கும் சிதம்பரம் அவ்வனத்தை மெல்ல மெல்ல அழித்து நிலமாக்கும் சித்திரத்தை நாவல் காட்டுகிறது.


அலங்காரமற்ற மொழி,

எவ்வித பிரச்சார தொனியற்ற நடை,உணர்ச்சி மேலோங்களற்ற புறவய சூழல் சித்தரிப்புகள் என நாவல் அதன் போக்கிலேயே நகர்கிறது.


வனம் தீவைத்து அழிக்கப்படும் நிகழ்வை வெறும் நிலத்தை சீர் படுத்தும் ஒரு சாதாரண செயல்தான் என்ற உணர்வுடன் சிதம்பரம் எண்ணிக் கொள்கிறான்.


தீயில் பாதி கருகி தன்மடியில் வந்துவிடும் காகத்தை எந்தவித குற்றவுணர்வும் இன்றி மீண்டும் தீயில் தூக்கி வீசுகிறான்.


நரிகள்,பாம்பு மாடுகள் என வனத்தில் உள்ள உயிர்கள் தீயில் கருகி இறப்பதை சிதம்பரம் வெறுமனே பார்த்து நடக்கிறான்.


பல ஆண்டுகளாய் ஐயர் வீட்டுக்கும்,செட்டியார் வீடுகளுக்கும் சாயாவனம் புளியந்தோப்பிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த புளியமரங்கள் அனைத்தும் தீயில் கருகி நிற்கின்றன.


சாயாவனத்தில் சிதம்பரம் வைத்துள்ள  மளிகை கடைக்கு வெளியூரிலிருந்து புளி வாங்கி வந்து விற்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.


நாவல் முழுக்க சிதம்பரத்துடன் சிவனாண்டி தேவர் வருகிறார்.சிதம்பரம் சாயாவனத்தை விலைக்கு வாங்கும் போது அவன் மீது பொறாமைப்படுகிறார் சிவனாண்டித் தேவர்.

பின் சிதம்பரம் தன்னுடைய தூரத்து உறவு பையன் என்று தெரிந்ததும் அவனுக்கு உதவி புரிகிறார்.


நாவலில் ஐயர்,செட்டியார், படையாட்சி என நிறைய பாத்திரங்கள் வந்தாலும் சிதம்பரம் சிவனாண்டித் தேவரும் தான் நாவல் முழுக்க  ஆக்கிரமிக்கிறார்கள்.


காடு அழிவு குறித்த படிமத்தை மனிதர்களின் அன்றாடச் செயல் வழியே அது அழிவல்ல அது ஒரு சாதாரண நிகழ்வுதான் என சிதம்பரம் பார்வையில் பதிவு செய்துள்ளது தான் சாயாவனம் நாவலின் பலமே.


மனிதனால் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை அழிப்பிற்கான ஒற்றைக் குறியீடு தான் சாயாவனம் நாவல்.


மனிதன் மிகப்பெரும் நுகர்வு கலாச்சாரத்திற்குள் நுழைந்து விட்டான்.அவனுக்கு அவனைத்தவிர மற்றவை முக்கியமானவையாக தெரிவதில்லை.


எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது போல்

 "தனிப்பட்ட முறையில் மனிதர்களுக்கு கருணை உண்டு.ஆனால் மனித இனத்துக்கு கருணையே இல்லை. 

ஏனெனில் மனிதனின் வாழ்க்கைமுறை அப்படிப்பட்டது.

அவனுடைய கலாச்சாரம் அப்படிப்பட்டது.இயற்கையை அழித்துத் தான் அவனால் வாழ முடியும்.அவன் அப்படியே பழகி விட்டான்".


நாவலின் பலவீனம் என்றால் தொய்வாக நாவல் நகர்வது தான். மற்றபடி அதைத்தாண்டி வாசிப்பதற்கான தேவைகளைக் தனக்குள் கொண்ட ஒரு நல்ல நாவல் சாயாவனம்///


velu malayan

15.11.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்