பனி மனிதன்

 ///ஜெயமோகன் எழுதிய "பனி மனிதன்" நாவலை முன்வைத்து



தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி என்று ஆத்திச்சூடி எழுதிய அவ்வையாரைச் சொல்லலாம்.


சமகாலத்தில் குழந்தைகளுக்கான நூல்களை யூமா வாசுகி,

பாவண்ணன் ஆகியோர் கணிசமான அளவு எழுதி வருகிறார்கள்.


தொடர்ச்சியாக சிறுவர்களின் செயல்பாடுகள்,வளர்ச்சித் திறன்,சிறுவர்களுக்கான கற்பித்தல் திறன் குறித்தும் தும்பி சிறுவர் மாத இதழ் வழியாக மிக முக்கிய பங்கை செய்து வருகிறார் காந்திய செயற்பாட்டாளர் திரு.சிவராஜ் அவர்கள்.


சிறுவர்களுக்கான நூல் என்ற வகையில் ஒரு முக்கியம் பெற்ற நாவலாக ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் நாவலை கூறலாம்.


இமயமலையில் வாழ்வதாக கூறும்

யதி எனும் பனி மனிதனை தேடிய பயணம் தான் முழு நாவலும்.


நேபாளம்,மியான்மர் போன்ற நாடுகளில் பனி மனிதன் இருப்பதாக இன்றும் நம்பப்படுகிறது.


2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பனி மனிதனின் காலடித் தடத்தை வெளியிட்டு ஒரு சர்ச்சையை கிளப்பியது.



பனி மனிதன் இமயமலையில் இருப்பதாக கூறப்படும் ஒரு புராதான நம்பிக்கையை அடிப்படையாக வைத்துதான் ஜெயமோகன் இந்த பனிமனிதன் நாவலை எழுதி இருக்கிறார்.


மேஜர் பாண்டியன், டாக்டர் திவாகர், மற்றும் கிம்சுங் என்ற சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பனி மனிதனை தேட மேற்கொள்ளும் பயணமும் உரையாடலும் தான் பனிமனிதன் நாவல்.


சிறுவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு சாகசங்கள்,

மர்மங்கள் ஏராளமான அறிவியல் தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள அறிவியலும் ஆன்மீகமும் கலந்த ஒரு புனைவு நாவல் என்றே இதனைக் கூறலாம்.


அறிவியல் தகவல்களுடன் சிறுவர்கள் வாசிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் வெறும் பனி மனிதனை தேடிச் செல்லும் நாவல் என்பதையும் தாண்டி ஆன்மீகத்தையும் பேசுகிறது.


இந்த நாவலில் கிட்டத்தட்ட புத்தரின் உருவமாக கிம்சுங் என்ற சிறுவன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.


சிறுவர்களின் மனம் ஆச்சரியம் கொள்ளும் வகையிலான பறக்கும் குதிரைகள்,பறக்கும் ஓணான்கள், நடக்கும் முதலைகள் என ஒரு மாய பனிமலை உலகினை இந்நாவலில் உருவாக்கி காட்டுகிறார் ஜெயமோகன்.


வாசிக்கும் போது நாமும் பனிமலையில் பயணம் செய்கின்ற ஒரு ஜில்லிடல் அனுபவத்தை கொடுக்கிறது நாவல்.


சிறுவர்களுக்கு மட்டுமல்ல வளர்ந்த பெரியவர்களுக்குள்ளிருக்கும் சிறுவர்களையும் உற்சாகமும்,

ஆச்சரியமும் கொள்ளச் செய்யும் ஒரு நாவல் பனிமனிதன்.


சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்த நாவலில் அறிவியல்,ஆன்மீகம் சூழலியல் பாதுகாப்பு குறித்தும் எழுதியுள்ளார் ஜெயமோகன்.


நாவலில் கையாளப்பட்டுள்ள சில வாசகங்கள்:


"நான் தான் புத்தர்.இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு புழுவும் எனக்கு சமமானது.ஒரு சிறு கிருமி கூட எனக்கு நிகரானது தான்"


"பனிமலை புத்தரின் மனம்.

ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன.

தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும்.

இங்கு எந்த ஒலியும் இல்லை.

தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது.சூரிய ஒளி சிவக்க ஆரம்பிப்பது புத்தர் புன்னகைப்பதை குறிக்கிறது.சூரிய ஒளி மறைவது புத்தர் தூங்குவதை குறிக்கிறது"


"தனிப்பட்ட முறையில் மனிதர்களுக்கு கருணை உண்டு.

ஆனால் மனித இனத்துக்கு கருணையே இல்லை. 

ஏனெனில் மனிதனின் வாழ்க்கைமுறை அப்படிப்பட்டது.

அவனுடைய கலாச்சாரம் அப்படிப்பட்டது.இயற்கையை அழித்துத் தான் அவனால் வாழ முடியும்.அவன் அப்படியே பழகி விட்டான்"


சிறுவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் பனி மனிதனை நிச்சயம் முதன்மையாக சிபாரிசு செய்யலாம்///


velu malayan

10.11.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்