குஜராத்தி படம் "HELLARO"

 ///ஆணாதிக்கத்தையும்,பெண்களின் எழுச்சியையும் பேசும்

" HELLARO"



பொதுவாக வட இந்திய மொழி திரைப்படங்கள் என்றாலே நம் நினைவை முதலில் ஆக்கிரமித்துக் கொள்பவை ஹிந்தி திரைப்படங்கள் தான்.அப்படி ஒரு பிம்பத்தை அவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.


காரணம் இந்தி மொழி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்பதும்,ஹிந்தி திரைப்படங்களின் வணிகச் சந்தையின் வலு உலகம் முழுக்க வியாபித்திருப்பதுமே அதற்கு காரணம்.


இந்தி மொழியைத் தவிர்த்து இந்தியாவின் பிற பிராந்திய மொழியிலிருந்து எடுக்கப்படும் படங்களே கலை நேர்த்தி மிகுந்த திரைப்படங்களாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக நான் ரசித்து பார்த்த Court,Fandry மற்றும் Sairat போன்ற மராட்டிய படங்களைச் சொல்லுவேன்.


இன்று வரைக்கும் நான் மிகவும் பார்த்து பிரமித்த திரைப்படம்,

என் விருப்பப் பட்டியலில் எப்போதும் இருக்கும் படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்ட "Thithi" திரைப்படத்தைச் சொல்வேன்.கர்நாடக மண்ணின் அசல் கலை பதிப்பு Thithi திரைப்படம்.


அதைப் போலவே குஜராத் மண்ணின் ஒரு அசல் கலைப் பதிப்பாக வந்திருக்கும் படமே Hellaro.


1975 ஆம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் Hellro.


படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு தந்தை வீட்டை விட்டு வெளியே வாளுடன் செல்லும் போது அவனுடைய மகள் அப்பா நானும் உன் கூடவே வரவா? எங்கு செல்கிறீர்கள்?என்று கேட்கும் போது அதற்கு அந்த தந்தை பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.ஆண்களை நோக்கி பெண்கள கேள்வி எழுப்பக்கூடாது என்று சொல்லிவிட்டு செல்கிறான்.


பெண்களின் மீது மிகப்பெரிய கட்டுப்பாடுகளை வைத்துள்ள கிராமம் அது.அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெண் துணியில் எம்ராய்டு செய்து அதை ஒருவனிடம் கொடுத்து நகரத்தில் விற்று காசு சம்பாதிப்பதை அறிந்த ஊர் ஆண்கள் அவளைக் கொன்று விடுவார்கள் என்று எண்ணி ஒருவனுடன் ஊரைவிட்டு அந்தப் பெண் ஓடி விடுகிறாள்.


அந்த நிகழ்விலிருந்து தான் மூன்று வருடங்களாக அந்த கிராமத்தில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டுவிட்டது என அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள்.


அந்த கிராமத்தில் பெண்கள் பிற ஆண்களிடம் நேரில் நின்று பேசக் கூடாது.துணியில் எம்பிராய்டரி செய்யக்கூடாது.கர்பா நடனம் ஆடக்கூடாது.


இந்த எல்லா கட்டுப்பாடுகளையும் மீறக் கூடிய ஒருத்தியாக அந்த கிராமத்திற்கு வருகிறாள் மஞ்சரி என்ற ஒரு பெண்.


அந்த ஊரில் ராணுவத்தில் பணிபுரியும் அர்ஜன்(Arjan) என்பவனுக்கு மனைவியாக வாக்கப்பட்டு வருகிறாள் மஞ்சரி.மஞ்சரி நகரத்தில் பிறந்தவள். ஏழாம் வகுப்பு வரை படித்தவள்.


கட்ச் பகுதி கிராமம் தண்ணீர் பஞ்சம் கொண்ட ஒரு வறண்ட பூமியை கொண்ட கிராமம்.தண்ணீர் எடுக்க கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளஒரு ஏரியில் இருந்துதான் பெண்கள் குடத்தில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.


தண்ணீர் எடுத்துவர வெளியில் செல்வது தான் அந்த கிராமத்தில் பெண்களுக்கு கிடைத்த ஒரே சுதந்திரம்.அப்போதுதான் கும்பலாக அவர்கள் செல்லும் போது பேசிக்கொள்கிறார்கள்.

சிரித்துக் கொள்கிறார்கள்.


இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் இரவில் அனைவரும் சேர்ந்து கர்பா நடனம் ஆடுகிறார்கள்.

ஆனால் அதை வெளியில் வந்து பார்ப்பதற்கு கூட பெண்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.


ஒரு நாள் ஏரிக்கு தண்ணீர் எடுக்க பெண்கள் குழுவாக சென்று கொண்டிருக்கும் போது  ஆண் வறண்ட நிலத்தில் ஒர் ஆண் விழுந்து கிடக்கிறான்.அவனை பார்க்க மஞ்சரி அருகில் செல்லும் போது கூட இருக்கும் அத்தனை கண்களிலும் வேண்டாம் என்று மறுக்கிறார்கள்.


அனைவரும் தண்ணீர் எடுத்துக்கொண்டு அந்த ஆளை கடக்கும் போது அவன் மயக்கத்தில் தண்ணீர் தண்ணீர் என்று கெஞ்சுகிறான்.அப்போது எல்லா பெண்களின் எதிர்ப்புகளையும் மீறி அஞ்சலி அவன் குடிக்க தண்ணீர் கொடுக்கிறாள்.தண்ணீர் குடித்துவிட்டு மஞ்சரி ஆண் கை கூப்பி வணங்குகிறான்.


அவன் பெயர் முல்ஜி.அவன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவன். தன் மனைவி மங்களா மற்றும் மகள் ரேவாவை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்கிறான்.


முல்ஜியின் முன்கதைதான் இந்தப் படத்தில் முக்கியமானது. முல்ஜி இரவில் டோல் அடிக்கும் போது அவனுடைய மனைவியும்,மகளும் நடனம் ஆடுவதால் அவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஊரே சேர்ந்து தீயிட்டு கொன்று விடுகிறார்கள்.அன்றிலிருந்து முல்ஜி மனம் பிறழ்ந்து திரிகிறான்.


அவன் டோலக் அடிப்பவன்.

மஞ்சரி அவனிடம் டோலக்கை ஒரு தடவை எங்களுக்காக வாசிக்கிறாயா? என கேட்கிறாள்.

அவன் டோல் வாசிக்கிறான்.

மஞ்சரி தன்னை மறந்து கர்பா நடனம் ஆடுகிறாள்.மற்ற பெண்களும் அவளுடன் சேர்ந்து ஆடுகிறார்கள்.

இவ்வளவு நாள் பூட்டி வைக்கப்பட்ட அவர்களின் அத்தனை அத்தனை நாள் ஆனந்தத்தையும் ஆடி தீர்க்கிறார்கள்.


இவர்கள் இந்தப் பொட்டல் வெளியில் நடனமாடுவது ஊருக்கு தெரியாது. ஊர் விதியை மீறி விட்டுடோம்.பாவம் செய்துவிட்டோம் என்று அந்த இரவு தன் பிள்ளைகளுக்கு, தன் கணவனுக்கு, தன் தாய்க்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என கடவுளிடம் கெஞ்சி வேண்டி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள் அத்தனை பெண்களும்.


மறு நாள் எதுவும் நேர்வதில்லை.

மறுநாளும் தண்ணீர் எடுக்கப் போகும்போது முல்ஜியின் டோல் வாசிப்பிற்கு சந்தோசமாக நடனமாடுகிறார்கள் பெண்கள்.


மறுநாள் காலை பிரசவ வலியில் துடிக்கும் ஒரு பெண்ணின் குழந்தை இறந்து விடுகிறது.இந்த பாவத்திற்கு நான் தான் காரணம் என மஞ்சரி குழந்தையை இழந்த அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கோரும்போது அந்தப் பெண் என் குழந்தை இறந்ததற்கு நீங்கள் செய்த பாவம் அல்ல காரணம்.

என் கணவன் என்னை அவஸ்தைக்கு உள்ளாக்கியது தான் காரணம் என்கிறாள்.


என் உடல்நிலை சரியானால் நானும் உங்களோடு தண்ணீர் எடுக்க வரும்போது நடனம் ஆடுகிறேன் என்று சொல்கிறாள்.


ஒரு கட்டத்தில் பெண்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது நடனமாடும் விஷயம் ஒரு பெண்ணின் தகப்பனும் அண்ணனும் இறந்து விடுவதால் அவள் ஊர் விதியை மீறி ஆடியதன் பாவம்தான் தன் தந்தையும் அண்ணனும் இறந்துவிட்டார்கள் என புலம்பி தன்னுடைய மாமியாரிடம் சொல்லி விடுவதால் ஊரில் எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விடுகிறது.


பிறகு முல்ஜியையும்,பெண்களையும் ஆண்கள் அடித்து உதைக்கிறார்கள். முல்ஜியை இரவில் நடத்தும் சாமி பூஜையில் கொல்வதாக முடிவு எடுக்கிறார்கள்.முல்ஜி கொல்லப்பட்டானா? அந்தப் பெண்களை என்னச் செய்தார்கள்? கிராமத்திற்கு மழை வந்ததா?என பல்வேறு கேள்விகளுக்கு பதில் அறிய கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள்.


பொதுவாக இந்திய சமூக ஆண்களின் மனம் ஆணாதிக்கம் கொண்டது.ஆண்கள் காலம் காலமாக பெண்களை கதவடைத்து வைத்தே கலவி செய்தவர்கள்.

படுக்கையறையிலும், சமையலறையிலும் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை

தொலைத்து நின்றவர்கள்  பெண்கள்.


ஒரு பெண் அவளைச் சார்ந்த ஒரு ஆணின் வார்த்தையை அல்லது விருப்பத்தை மீறும்போது அந்த ஆணின் சுயம் உடைவதாக அவனே எண்ணிக் கொள்கிறான்.


ஒரு பெண் தன்னை எதிலும் மீறக் கூடாது.அவளிடம் தான் தோற்று விடக் கூடாது என அவன் மனம் ஆணாதிக்கத்தில் வீங்கும் போதெல்லாம்

பெண் மீதான தன்னுடைய வன்முறையை கட்டுப்பாடுகளை செலுத்துகிறான்.


ஆண் பெண்ணிடம் எந்த புள்ளியிலும் தோற்று விடக் கூடாது என்கிற அந்த அக பயம் தான் ஒரு பெண் எப்போதும் தனக்கு கீழே ஆட்பட்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது.


கலை எல்லோருக்கும் பொதுவானது.அதில் ஆண் பெண் பேதமில்லை.ஆனால் பெண்கள் ஆடக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் மீது எழும் பெண்களின் எழுச்சி தான் Hellaro திரைப்படம் உணர்த்துவது.


கோயில்களில் பெண் உருவில் இருக்கும் கடவுளை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வீட்டில் நுழைந்ததும் பெண்களை தனக்கு கீழ் அடிமையாக அடித்து நடத்தும் ஒரு முரண் உருவமாக இருக்கிறான் ஆண்.


 கிராமத்திலுள்ள ஆண்கள் மழை பெய்ய பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள்.

அதற்கு பூஜை செய்கிறார்கள்.

ஆனால் வீட்டில் உள்ள பெண்களை அடிமையாக நடத்துகிறார்கள்.

அடிக்கிறார்கள்.


படத்தின் இறுதிக் காட்சியில் பெண் தெய்வத்திற்கு பூஜை செய்துவிட்டு முல்ஜியை கொல்வதற்கு அனைத்து ஆண்களும் வாளை உருவும் போது அந்த ஊருக்கும் நகரத்திற்கும் சென்று வரும் Bhaglo பாத்திரத்தில் வரும் Maulik Nayak  முல்ஜியின் கடைசி ஆசை என்ன என்று கேட்டு விட்டு அதன் பிறகு கொல்லுங்கள் என்கிறான்.


அதற்கு முல்ஜி என்னை தனியாக வைத்து எரித்து விடுங்கள்.அதற்கு முன் டோலை வாசிக்க எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறான்.


அவன் டோலை அடித்து வாசிக்கும் போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற விதியை மீறி மஞ்சரி வெளியில் வரும்போது அவள் முகத்தில் மழைத்துளி விழுகிறது.


அவளுடைய கணவன் அவளை கொல்வதற்கு கத்தியுடன் ஓடும் போது ஊர்த் தலைவர் அவனை தடுத்து அவள் உன் மனைவி அல்ல.நம் ஊருக்கு வந்துள்ள பெண் தெய்வம் அவளை வணங்கு என்று சொல்லிவிட்டு அவளை வணங்குகிறார்கள்.


பின் மழை தொடர்ந்து பெய்கிறது. முல்ஜி டோல் அடிக்க மழையில் மஞ்சரி நடனமாடுகிறாள்.

படம் நிறைவடைகிறது.


உண்மையில் இந்தப் படம் பார்க்கும் போது குஜராத் கிராமத்தில் தான் நாமும் இருக்கிறோம் என்ற பிரக்ஞையை ஏற்படுத்துகிறது.


படத்தின் ஒளிப்பதிவு வறண்ட குஜராத் கிராமத்தின் புழுதி மண்ணை உங்கள் மீது பூசி விடும் உணர்வு.மஞ்சரியாக நடித்திருக்கும் Shradha Dangar,முல்ஜியாக நடித்திருக்கும் Jayesh More நடிப்பிற்கு அங்கீகாரமாக தேசிய விருதே கிடைத்துள்ளது.


இந்த படத்தின் இயக்குனர் அபிஷேக் ஷா குஜராத்தி மொழி திரைப்படங்களுக்கான தகுதியை முதல் படத்திலேயே உயர்த்தியிருக்கிறார்.

          
               (இயக்குனர் அபிஷேக் ஷா)


வளர்ந்து வண்ணமயமாக இருக்கும் தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சி குஜராத்தின் ஒரு பழைய குக்கிராமத்தின் கதை வழியே ஆணாதிக்கம்,கடவுள் நம்பிக்கை,பெண்கள் மீதான அடக்குமுறை, கட்டுப்பாடுகள்,

கிராமங்கள் கட்டி காப்பாத்தும் சாதிய கட்டுமானம் என பல்வேறு விஷயங்களை கொண்டு ஒரு  எதார்த்த கலை வடிவில் Hellaro படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பார்க்க தவறவிடக்கூடாத படம்///


velu malayan

10.10.2020

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்