பாய்மரக் கப்பல்

 ///பாவண்ணன் அவர்களின் "பாய்மரக் கப்பல்" நாவலை முன்வைத்து



நம் பொதுப் பார்வையில் விவசாயம் என்பது ஒரு தொழில்.ஆனால்  விவசாயிக்கு அது ஒரு வாழ்க்கை முறை.நிலம் அவனுடைய இன்னொரு உடல்.உழைப்பை முதலீடாக கேட்கும் உயிர் வளர்க்கும் கலை அது.


விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தலை முறைகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி வேலைவாய்ப்பு தொழில்கள்,பணம், பதவி என ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறை நாம்.


இந்த நவீன வாழ்க்கைமுறை தலைமுறைகளுக்கு இடையேயான மிகப்பெரிய இடைவெளிகளையும்,

முரண்களையும் பெருக்கி விட்டிருக்கிறது.


மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகள்,அவர்களின் விவசாய வாழ்க்கை முறையின் வீழ்ச்சி,அவர்களின் தலைமுறை இடைவெளி பிரச்சனை ஆகியவற்றை ஒரு நிஜ வாழ்வின் வாசனையுடன் பதிவு செய்கிறது பாவண்ணன் அவர்களின் பாய்மரக் கப்பல் நாவல்.


காசாம்பு கவுண்டர் மகன் முத்துசாமி கவுண்டரின் மகன்கள் ரங்கசாமி முனுசாமி,ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்தின் மகன் துரைசாமி ஆகிய மூன்று தலைமுறை மனிதர்களின் வழியாக நாவல் பயணிக்கிறது.


தன் தகப்பன் வாங்கிய கடனுக்கு ஈடாக சீதாராம ரெட்டியாரிடம் தன் நிலத்தை பறிகொடுத்து விட்டு கோர்க்காட்டு கிராமத்திலிருந்து வளவனூருக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் முத்துசாமி கவுண்டர்.


முத்துசாமிக் கவுண்டரின் முதல் மனைவி வனமயில்.முத்துசாமி கவுண்டருக்கும் வனமயிலுக்கும் பிறப்பவர்கள் தான் ரங்கசாமியும், முனுசாமியும்.சொத்து தகராறில் முத்துசாமியின் தம்பி வன மயிலை வெட்டிக் கொன்று விட இரண்டாம் தாரமாக நாவம்மாளை மணக்கிறார்.


நாவம்மாளுக்கும் முத்துசாமிக்கும் பிறப்பவன்  ஆறுமுகம்.

முனுசாமி பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து விடுகிறான்.

ரங்கசாமி திருமணம் செய்யாமலேயே வீட்டைவிட்டு சாமியாராக போய்விடுகிறான்.


மூன்றாவது மகனான ஆறுமுகம் எந்நேரமும் குடித்து அழிந்து கை கால் விளங்காமல் உட்கார்ந்து விடுகிறான்.


வளவனூரில் பார்த்தசாரதி அய்யரிடமிருந்து நிலத்தை வாங்கி 20 காணி நிலமாக மாற்றி விவசாயம் செய்யும் முத்துசாமி தனக்குப் பிறகு யாருமே விவசாயம் செய்ய முடியாமல் போகும் நிலை எழுகிறது.


தாத்தா சம்பாதித்த அத்தனை சொத்தையும் தன்னுடைய பேரன் துரைசாமி விற்று விடுகிறான்.


விவசாயம் செய்யாமல் கட்சி, அரசியல்,சாராயக்கடை என வாழ்கிறான் துரைசாமி.


முத்துசாமி கவுண்டருக்கு பிறகான தலைமுறைகள் விவசாயத்தை பின்பற்றாமல் வேறு வேறு தொழில்களை தேடி செல்வதால் விவசாயத்தை பின்பற்றாத தலைமுறையின் வீழ்ச்சியை, 

நாவல் வழியே நமக்கு காட்டுகிறார் பாவண்ணன் அவர்கள்.


நாவலில் துரைசாமியின் மனைவியாக வரும் மல்லிகா,ஆறுமுகத்தின் மனைவியாக வரும்போது தனலட்சுமி ஆகிய பெண்களின் வழியே பெண்களின் மீது ஆண்கள் செலுத்தும் குடும்ப வன்முறையை, ஆணாதிக்க  அடக்குமுறையை பதிவு செய்கிறார் பாவண்ணன்.


முத்துசாமியின் நண்பராக வரும் தியாகி காத்தவராயன் தன் மகன் சத்தியசீலன் காந்தியைப்போல் வர வேண்டும் என கனவு காண்கிறார்.

ஆனால் அவன்  சினிமா துறையில் சேர்ந்து கொள்கிறான்.


காத்தவராயனிடமிருந்து குத்தகைக்கு நிலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் முத்துசாமி சத்தியசீலன் அவனுடைய அம்மா சிவகாமி இறந்தவுடன் அந்த நிலத்தை முத்துசாமிக்கு கிரையம் செய்துவிட்டு சென்று விடுகிறான்.


முத்து சாமியின் வீட்டில் வேலை செய்யும் பிச்சாண்டி,ருக்மணியை தன் சொந்த பேரன் பேத்தி போலவே பாவிக்கிறார் முத்துசாமி.

ஆனால் துரைசாமி பிச்சாண்டியை ஒரு வேலைக்காரனை போல கேவலமாக நடத்துகிறான்.


முத்துசாமிக்கும்

தன் பேரன் துரைசாமிக்கும் மன இடைவெளி பெருகி துரைசாமி வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பிக்கிறான்.


துரைசாமி சாராயக் கடையில் சாராயம் குடித்தவர்கள் சில பேர் இறந்து விட அவனுடைய அரசியல் ஏற்றத்தில் ஒரு சரிவு வருகிறது.


பின் அரசு சாராய கடைகளை மூடிவிட்டு அரசே ஒயின் ஷாப் திறக்க இருப்பதால் துரைசாமி நஷ்டம் அடைகிறான்.தன் அப்பா ஆறுமுகத்திடமும்,தன் தாத்தா முத்துச்சாமியிடமும் தோற்று விடக் கூடாது என்று தவிக்கிறான்.


கடுமையாக உழைக்கக்கூடிய

விவசாயியான ஆறுமுகத்திற்கு பிறந்த துரைசாமி கட்சி அரசியலுக்கு போகிறான்.நாட்டுக்காக உழைத்து தியாகி பட்டம் பெற்ற காத்தவராயன் மகன் சத்தியசீலன் சினிமா துறையில் சேர்ந்து கொள்கிறான்.


தலைமுறைகளுக்கு இடையே நிகழும் முரண்களையும்,தந்தை பின்பற்றிய விவசாயத்தையும் தந்தையின் கொள்கைகளையும்  துறந்து ஒரு வேக நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி ஓடும் இன்றைய தலைமுறைகளைப் பற்றி பாவண்ணன் அவர்கள் நுட்பமாக எழுதியுள்ளார் இந்நாவலில்.



நாவல் முத்துசாமியின் கடந்தகாலம்,

தற்போதைய நிகழ்காலம் என மாறிமாறி பயணிக்கிறது.

கதைக்களம் விழுப்புரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடைப்பட்ட வளவனூர் கோர்க்காடு என்பதையும்,

புதுச்சேரி பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தையும்,சமகாலத்தையும்,

மாறி மாறி பதிவு செய்கிறது நாவல்.


தனக்கு பின்னான விவசாயத்தை தன் மகன் ஆறுமுகம் செய்ய முடியாமல் போக பேரனும் கட்சி அரசியல் என்று போய்விட வாழ்வின் தோல்வியை உணர்கிறார் வயதான முத்துசாமி கவுண்டர்.


ஒரு கட்டத்தில் முத்துசாமி கவுண்டர் தன்னுடைய நிலத்தில் நான்கு தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு இனிமேல் இது தான் எனக்கு பிள்ளை,பேரன்,பேத்தி என்று தென்னங் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதாக நாவல் முடிகிறது.


விவசாய வாழ்க்கை வாழ்ந்த ஒரு குடும்பத்தின் சரிவை பாய்மரக்கப்பல் நாவலில் காட்டுகிறார் பாவண்ணன்.


பாவண்ணன் அவர்களின் எழுத்தில் எளிய மனிதர்களின்

வாசனையை உணரலாம்.


மனித அகத்தின் உணர்ச்சிகளை எழுத்துக்களில் உருப்பெருக்கி காட்டும் உயர் கலை பாவண்ணனின் மிகப்பெரும் பலம் என்பது என் எண்ணம்.


பாய்மர கப்பல் நாவலில் முத்துசாமி கவுண்டரின் வாழ்க்கையை நம் வாழ்க்கை என நெருங்கி உணர வைக்கிறார்.


ஒரு காட்சியை,

அதன் சூழலை மிக நுட்பமாக எழுத்தில் கொண்டு வருகிறார் பாவண்ணன்.


வளவனூரில் பார்த்தசாரதி ஐயரிடம் நிலம் குத்தகைக்கு வாங்கச் செல்லும்போது அங்கு அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாட்டின் வாயிலிருந்து நூல்  போல ஒழுகும்  எச்சிலை நாக்கு நீட்டி மடித்து அறுத்தபடி கால்மாற்றி நின்றன மாடுகள் என்கிறார்.


எனக்கு எப்பொழுதுமே பாவண்ணன் அவர்களின் எளிமை மீதும்,

எழுத்து மீதும் ஒரு பெருத்த மரியாதை  உண்டு.


பாவண்ணன் அவர்களின் படைப்புத் திறனுக்கு பாய்மரக்கப்பல் நாவல் ஒரு சிறந்த பதாகை///


velu malayan

28.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்