விலங்குப் பண்ணை

 ///ஜார்ஜ் ஆர்வெல்(George orwell) எழுதிய "விலங்குப் பண்ணை(Animal Farm)" நாவலை முன்வைத்து



வாழ்க்கையில் ஒரு முறையாவது படித்து விட வேண்டிய நாவல் விலங்குப் பண்ணை என்கின்ற என் அபிப்பிராயத்தை முதலில் முன் வைத்து விடுகிறேன்.


விலங்குகளை பிரதான பாத்திரங்களாக வைத்து ஒட்டுமொத்த மனித வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறார் ஜார்ஜ் ஆர்வெல்'


மனித இனம் மனிதர்களை வைத்து இன்றளவும் செய்துவரும் அரசியலை Animals பார்வையில் நையாண்டி செய்கிறது நாவல்.


நாவலின் உள் புனைவின் நோக்கம் சோவியத் ரஷ்ய யூனியனின் அரசியல் கொள்கைகளையும், அதிகாரங்களையும் நையாண்டி செய்ய எழுதப்பட்டதாக இருந்தாலும்

இது ஒட்டுமொத்த உலக மனிதர்களின் அரசியலை நையாண்டி தனம் செய்யும் ஒரு கலை ஆவணமாக நிற்க்கிறது இந்நாவல்.


இந்நாவலின் ஆரம்பத்தில் கிழட்டு தளபதியாக வந்து இறந்து போகும் கிழட்டுப்பன்றி லெனின் ஆகவும்,

நெப்போலியனாக வரும் பன்றி ஸ்டாலின் ஆகவும்,விலங்கு பண்ணை இன் முதலாளியாக வரும் ஜோன்ஸ் ஜார் மன்னர்வம்சத்தின் கடைசி அரசன் இரண்டாம் நிக்கோலாஸ் ஆகவும்

உருவகப் படுத்தப்பட்டுள்ளார்கள்


ஒட்டுமொத்த விலங்கு பண்ணையையே 

சோவியத் ரஷிய யூனியன் ஆக உருவகப்படுத்தியுள்ளார் ஜார்ஜ் ஆர்வெல்.


ஸ்னோபால் பாத்திரம் லெனினின் உதவியாளராக இருந்த லியோன் ட்ராட்ஸ்கியை வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது.


பண்ணையிலிருந்து விலங்குகள் எல்லாம் புரட்சி செய்து சேர்ந்து  ஜோன்ஸை விரட்டியப் பிறகு பண்ணைக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி நெப்போலியனுக்கும், ஸ்னோபாலுக்கும் இடையே ஏற்படுகிறது.


நாலு கால் நல்லது.ரெண்டு கால் கெட்டது.மனிதனும் என்னைக்குமே நமக்கு முதல் எதிரி என்று விலங்குகளால் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.


"உற்பத்தி செய்யாமல் உண்பது மனிதன் ஒருவன் தான்.


அவன் பால் தருவதில்லை.


முட்டைகள் இடுவதில்லை.


ஏர் கலப்பையை அவனே இழுத்து உழ முடியாது.


முயல்களை பிடிக்கக் கூடிய அளவு அவனால் வேகமாக ஓட முடியாது.


இருந்தும் மிருகங்களுக்கெல்லாம் அதிபதியாக அவன் இருக்கிறான்.


அவன் நம்மிடம் வேலை வாங்குகிறான்.


நாம் பட்டினி கிடந்து இறந்து விடாமல் இருப்பதற்கு உணவளிக்கிறான்.


எஞ்சுவதை அவன் தனக்கென்று வைத்துகொண்டு விடுகிறான்" 


என்று மனித இனத்தை விலங்குகள் சாடுகிறது.

மனிதனைப் போல் நாம் மாறக் கூடாது என முடிவு செய்கின்றன எல்லா விலங்குகளும். 


"இரண்டு கால்களில் நடப்பதெல்லாம் நம் எதிரிகள் தான். 


எவையெவை நான்கு கால்களில் நடக்கின்றனவோ அல்லது எவற்றிற்கு இறக்கைகள் இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் நம் நண்பர்கள்.


மற்றொன்றையும் ஞாபகத்தில் வையுங்கள்.


மனிதனை எதிர்த்து போராடுவதில் நாம் மனிதனைப் போல் ஆகிவிடக்கூடாது.


அவனைப் போல் ஆகிவிடக்கூடாது என்பது முக்கியமான விஷயம்.


அவனை வென்று வீழ்த்தி விட்டபோதும் போதும் கூட அவனது தீய பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றக்கூடாது.


வீட்டில் தங்குவது.படுக்கையில் படுப்பது.உடைகள் அணிவது.

மது குடிப்பது.புகைப்பிடிப்பது.பணத்தை கையால் தொடுவது.வியாபாரம் செய்வது.

 ஆகிய காரியங்களில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.


மனிதனின் பழக்கங்கள் எல்லாம் தீயவை.


மிருகம் எதுவும் தன் வர்க்கத்தின் மேல்கொடுங்கோல் ஆட்சி செலுத்த முயலக்கூடாது.


பலமற்றவர்களோ,பலசாலிகளோ கெட்டிக்காரர்களோ,அசடர்களோ நாம் எல்லோரும்  சகோதரர்கள்.


ஒரு மிருகம் வேறு எந்த மிருகத்தையும் எக்காரணத்தைக் கொண்டும்  கொல்லக் கூடாது.


எல்லா விலங்குகளும் ஒன்றுக்கொன்று சரிநிகர் சமமானவை"


என அவற்றுக்குள் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்கின்றன.


எல்லா விலங்குகளும் ஏழு விலங்கு விதிகளை வகுத்துக் கொள்கிறது.


1.இரு கால்களில் நடப்பவை எல்லாம் நம் எதிரிகள்


 2.நான்கு கால்கள் மற்றும் இறக்கைகள் கொண்டவை எல்லாம் நம் நண்பர்கள். 


3.எந்த விலங்கும் ஆடை அணியக் கூடாது


 4.எந்த விலங்கும் படுக்கையில் படுக்கக் கூடாது


5.எந்த விலங்கும் மது அருந்தக் கூடாது.


 6.எந்த விலங்கும் மற்ற விலங்குகளை கொல்லக் கூடாது.


 7.எல்லா விலங்குகளும் சமம்.


பண்ணையில்

காற்றாடி இயந்திரம் அமைப்பதில் ஏற்படும் முரண்பாட்டில் ஸ்னோபல் பண்ணையை விட்டு துரத்தப்படுகிறது.


 ஸ்னோபால் திறமையான பன்றி.நேர்மையான முறையில் புரட்சியை நடத்த எண்ணுகிறது.ஆனால் நெப்போலியனின் சதியால் பண்ணையில் இருந்து அடித்து துரத்தப்படுகிறது.


கடைசியில் விதிகளை அதிகாரத்திலுள்ள நெப்போலியனும் அவனது குடும்பமும் மீறுகிறது.


விலங்குகள் உடை உடுத்திக் கொள்கின்றன.


மது அருந்தக் கூடாது என்ற விதி மது அதிகமாய் அருந்தக்கூடாது என மாறுகிறது.


பணத்தை கையால் தொடக்கூடாது மனிதனைப்போல் வியாபாரம் செய்யக்கூடாது என்று விதி வகுத்த நெப்போலியன் பிஞ்சு ஃபீல்ட் பண்ணை முதலாளி ஃபிரெடரிக் (மனிதன்) இடம் பண்ணையில் உள்ள மரங்களை விற்று பணம் பெற்றுக் கொள்கிறது.


"நாலு கால் நல்லது.

இரண்டுகால் மிகவும் நல்லது"

என தங்களது கொள்கையை தளர்த்திக் கொள்கின்றன விலங்குகள்.


ஏழு விதிகளும் மறைந்து எல்லா விலங்குகளும் சமம்என்ற நிலை மாறி 


"எல்லா விலங்குகளும் சரி சமமானவை.ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சரிசமமானவை"


என்ற கொள்கைக்கு வந்துவிடுகிறது நெப்போலியன்.


கிட்டத்தட்ட கொள்கைகள்,

கோட்பாடுகள்,சித்தாந்தங்கள் யாவும் அரசியல் அதிகாரத்தின் போதும் ஊழலின் போதும் அடிபட்டுப் போகிறது.


அதிகார வெறியும்,பதவி ஆசையும் கூடும் போது மனிதன் மிருகமாகி விடுகிறான்.மிருகங்கள்  மனிதனாகி விடுகின்றன என்பதை நையாண்டி தனத்துடன் எழுதியுள்ளார் ஜார்ஜ் ஆர்வெல்.



நெப்போலியனுக்கு எப்போதுமே ஆதரவாகவும் அவனது கொள்கைகளை ஆமோதிக்கும் வேலையை பாக்ஸர் என்ற குதிரை செய்கிறது.பாக்சர் குதிரை கடுமையான உழைப்பையும்,

போராடும் குணத்தையும் காட்டும் ஒரு குறியீட்டு பாத்திரம்.


ஸ்க்வீலர் என்ற பன்றி குட்டியும் நெப்போலியனுக்கு ஆதரவாக இருக்கிறது.


நாவலில் பெஞ்சமின் என்ற பெயரில் வரும் கிழட்டு கழுதை நெப்போலியனின் ஒற்றை அதிகாரத்தையும்,

அதன் செயல்களையும்

ஆதரிக்கும் முடியாமல் கண்டிக்கவும் முடியாமல் இருக்கிறது.


பெஞ்சமின் சொல்கிறது.


"தனது நீண்ட வாழ்க்கையின் அனுபவத்தில் இதுவும் எப்படியும் சீரடைந்து விடுவதுமில்லை. எப்படியும் மோசமாகி விடுவதுமில்லை. அனேகமாக சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் எல்லா விஷயங்களும் எப்போதுமே இருந்து வருகின்றன"


"பசி கஷ்டம் ஏமாற்றம் எல்லாம் அதி உச்சம் அடைவதில்லை அதிகமாக குறைந்து விடுவதும் இல்லை இதுதான் மாறாத இயற்கை நியதி"

 

என்கிறது.


கிட்டத்தட்ட ஒரு பழமைவாதத்தின் குறியீடாக பெஞ்சமின் கழுதையைகருதலாம் .


நாவலில் மாலி என்ற பெண் குதிரை எப்போதும் ரிப்பன் கட்டிக் கொண்டோம் இனிப்பு சர்க்கரை கட்டி தின்று கொண்டும் இருக்கும்.

ஒருகட்டத்தில் பண்ணையில் இருந்து வெளியேறி வேறு ஒருவனிடம் ரேக்ளா வண்டி ஓட்டசென்று விடுகிறது. 


அங்கு ரிப்பன் கட்டிக்கொண்டும்,

தன் முடிகளை அழகாக கத்தரித்துக்கொண்டும் வாழ்கிறது.


மாலி பெண்குதிரை வழியாக பெண்கள் எப்பொழுதும் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும், தங்களுக்கு கிடைக்கக்கூடியதே போதுமென திருப்திப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் பதிவு செய்கிறார்.


அல்லது புரட்சியில் விருப்பம் கொள்ளாத தன் சுகத்தை மட்டுமே விரும்புபவர்களின் பிரதியாக மாலியை காட்டுகிறார்.


நாவலில் சில இடங்களில் மட்டுமே வரும் மோசஸ் என்ற காகம் பண்ணையை விட்டு சென்று பல  ஆண்டுகளுக்குப் பிறகு பண்ணைக்கு வருகிறது.


அப்போது விலங்குகளிடம் தான் கற்கண்டு மலையை பார்த்ததாகவும், அங்கு புல்,கொள்ளு, தானியம் பசுமையான புல்வெளி என அது ஒரு சொர்க்க பூமியாக இருக்கிறது என மற்ற விலங்குகளிடம் கூறுகிறது.


பண்ணையில் பசியிலும் விரக்தியிலும் இருக்கும் விலங்குகள் மோசஸ்ஸின் சொற்களை நம்பியும் நம்பாமலும் கேட்டுக்கொண்டு இருக்கின்றன.


ஜார்ஜ் ஆர்வெல் மோசஸ் காகத்தை ஒரு மத மாற்றத்தின் குறியீடாக சித்தரிக்கிறார்.


பண்ணை முதலாளி ஜோன்சை ஒரு பொறுப்பற்ற,நிர்வாகத்திறனற்றமனிதனின் குறியீடாக காட்டுகிறார் ஜார்ஜ் ஆர்வெல்.


ஒரு மிகச்சிறந்த poltical Satire வகை நாவல் விலங்கு பண்ணை.


மனித இனம் இந்த பூமியில் வாழும் வரையும்,எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தும் என்பது தான் இந்நாவலின் பெரும் பலமே.


இந்தியாவில் பிறந்து இந்திய காவல் பணியில் பணிபுரிந்த ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஆங்கிலேயர்.


தன்னுடைய பத்து வயதில் ஒரு குதிரை வண்டி ஓட்டுபவனை பார்த்தபோது அந்த குதிரை வண்டிக்காரன் குதிரையை அடித்து துன்புறுத்தியதைப்பார்த்து விலங்குகளுக்கு தங்களுடைய வலிமை புரிந்து விழிப்புணர்வு ஏற்பட்டு மனிதர்களுக்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும் என்று எண்ணிய ஜார்ஜ் ஆர்வெல்லின் கற்பனை உரு பெருக்கத்தின் எழுத்து வடிவம் தான் விலங்குப் பண்ணை நாவல்///


velu malayan

25.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்