கடவுள் தொடங்கிய இடம்

 ///அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" நாவலை முன்வைத்து



"குந்தியிருக்க ஓர் நிலம்

குறித்துக் காட்ட ஒர் பூமி

அள்ளி அணைக்கும் உறவு 

இழந்தவர் இங்கே

காற்சட்டை மேற் சட்டை போட்டு நிர்வாணமாக திறிகின்றோம் அந்நியர் பூமியிலே"


என்ற "செல்வம்.அருளானந்தம்" அவர்களின் கவிதை அகதிகளின் அவல நிலையை நெருங்கி பதிவு செய்கிற ஒரு கவிதை.


ஒரு அகதியின் மனநிலையை புரிந்து கொள்ள நாம் ஒரு அகதியாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.


ஆனால் எழுத்தாளர் ஷோபா சக்தி சொல்வது போல் ஒரு அகதியின் மனநிலையை இன்னொரு அகதியால் கூட புரிந்து கொள்ள முடியாது என்பதே நிதர்சனம்.


கடவுள் தொடங்கிய இடம் என்ற இந்த நாவல் ஒரு அகதியின் அலைதல் பயணத்தைப் பற்றியது.


இலங்கையின் குப்பிளான் எனும் குக்கிராமத்திலிருந்து தன் அம்மாவின் கால் காணி நிலத்தை விற்ற பணத்தில் ஜெர்மனிக்கு அகதியாய் செல்லும் 19 வயது நிஷாந் என்ற அகதியின் அலைதல் பயணத்தையும், அவனது அகதி மனநிலையையும் பதிவு செய்கிறது.


ஏஜெண்டுகள் மூலம் கள்ள பாஸ்போர்ட்டில் ரஷ்யா சென்று அங்கிருந்து ஜெர்மனி செல்வது தான் திட்டம்.


ஆனால் குடிவரவு அதிகாரிகளின் கெடுபிடி, எல்லைதாண்டுவதில் உள்ள சிக்கல் காரணமாக உக்ரைன் நாட்டிலேயே இரண்டு வருடம் நிஷாந் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.


அகதி பயணத்தில் நிஷாந்துடன் பயணப்படும் அகதிகளுடன் அவனுக்கு ஏற்படும் உறவு,பகை,துரோகம், காதல் தோல்வி என நீள்கிறது நாவல்.


திவ்யா,லாரா மற்றும் அகல்யா ஆகிய மூன்று பெண்களுடன் காதல் தோல்வி கொள்கிறான்.


திவ்யா நிஷாந்தை விட்டு இயக்கப் பெடியன் சுரேஸ் என்பவனுடன் போய் விடுகிறாள்.


லாரா ரஷ்யப்  பெண்மணிஅவளும் அவனை விட்டுப் பிரிந்து விடுகிறாள்.


உக்ரைனில் அறிமுகமாகும் அகல்யா ஜெர்மனி செல்வதற்காக அவனுடன் பழகி அவனுக்கு துரோகம் செய்கிறாள்.


தனக்கு துரோகம் செய்த அகல்யாவை ஆண்டன் செகாவ் கதையில் வரும் கணவனுக்கு துரோகம் செய்யும் அகவ்யா என்ற பெண்ணின் பெயரை அழைப்பது போல் எண்ணிக்

கொள்கிறான்.


நிஷாந்தின் அகதி பயண வாழ்க்கையில் ஆறு பெண்கள் அவன் வாழ்வில் பயணப்படுகிறார்கள். 


ஒன்று:


அவனுடன் அகதியாய் பயணம் செய்த சந்திரா மாமி வாசிப்பு பழக்கமும் இயற்கை விரும்பியாகவும் இருக்கக் கூடிய ஒரு மனுஷி.இந்நாவலில் வரும் சந்திரா மாமி பாத்திரம் எனக்கு சயந்தனின் ஆதிரை நாவலில் வரும் சந்திரா டீச்சரை நியாபகப்படுத்துகிறார்.


உக்ரைனிலிருந்து போலந்து காட்டில்பயணிக்கும் போது ஒரு சதுப்புநிலக் காட்டில் மரக்கட்டை தொடையில் குத்தி காயம் படுவதால் படுக்கையிலிருந்து இறந்து விடுகிறார்.


அடுத்து இரண்டாவது:


 நிஷாந்த் உக்ரைனில் இருக்கும்போது அவனுக்கு வீடு வாடகை தரும் வீட்டுக்கார மனுஷி.


அவரிடம் நிஷாந்த் ரஷ்ய மொழி கற்றுக் கொள்கிறான்.அவருடன் சேர்ந்து சமகோன் ஓட்கா அருந்துகிறான்.


அவருடன் ட்ரொய்கா என்கிற நடனம் ஆடுகிறான்.


ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் அகதியாய் தங்கியுள்ள அனைவரும் அந்த ரஷ்ய பெண்மணியிடம் எதுவும் சொல்லாமல் மூன்று மாத வாடகை கொடுக்காமல்  சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறும் போது நிஷாந்த் மட்டும் குற்றவுணர்ச்சியில் வருந்துகிறான்.


ஒரு நாள் வீடு வாடகை விட்ட அந்த ரஷ்ய பெண்மணியை நேரில் பார்த்து பேசும் நிஷாந்அவரிடம் தான் சொந்தமாக சம்பாதித்த 200 டாலர் பணத்தை கொடுத்துவிட்டு மீதியை ஏஜெண்ட் தருவார் இல்லை என்றால் நானே தருகிறேன் என்று சொல்லி விட்டு வருகிறான்.


மூன்றாவது பெண்:


அகல்யா.அவளுக்கு ரோமன் எழுத்து வகை கடிகாரத்தை பரிசளித்து அகல்யாவை உயிருக்குயிராய் காதலிக்கிறான்.


ஆனால் கடைசியில் அவள் அவனுக்கு டா டா காட்டிவிட்டு ஜெர்மனி சென்று விடுகிறாள்.


நான்காவது பெண்:


கற்பகதரு விலாஸ் உணவகத்தில் வேலை செய்யும் ஆச்சி. 


ஐந்தாவது பெண்:


தன் பிள்ளைகளை காண ஜெர்மனி செல்ல நிஷாந்தின் காதலியாக நடித்து குடிவரசு அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் சகுந்தலா. 


ஆறாவது பெண்:


 ஈஸ்வரி.உக்ரைனில் இருக்கும்போது ஈஸ்வரியை மற்றும் அவளுடைய குழந்தை லைலாவுடனும் அறிமுகமாகும் நிஷாந்த் கடைசியில் ஒரு வழியாக கனடா வரும் போது நிஷாந்த்க்கு தன்னுடைய Theolon Export Company-ல் வேலை கொடுக்கிறாள்.


குளுப்யா என்ற மட்ட ரக மீனை சமைத்ததற்காக கேயாரை கத்தியால் குத்திக் கொள்ளும் வீர சைவ வேளாளர் புஷ்பநாதன் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குப் போகும் முன் தன் 3 வயது மகளின் போட்டோவை நிஷாந்திடம் கொடுத்து சவுதி அரேபியாவில் இருக்கும் தன் மகளுக்கு கிட்கட் சாக்லேட் ரொம்ப பிடிக்கும் அவளுக்கு தயவு செய்து அனுப்பி வை என்று சொல்லும் இடம் இவர் எப்படி கொலை செய்தார் என எண்ண வைக்கிறது.


அகல்யாவிடம் சில்மிஷம் செய்து அடிவாங்கும் வைரவநாதன்,

ஈஸ்வரியிடம் நெருக்கமாக பழகுவதால் நிஷாந்த்தால் முகம் உடைபடும் அலெக்ஸ்,அகதிகளின் ஏஜெண்டுகளாக வரும் அம்பிகாபதி, ஜம்பர்,தோட்டு ரவி, மாஃபியா கும்பலிலிருக்கும் ஜெயகரன் என நிறைய மனிதர்ளுடன் பழகி தன் அகதி பயணத்தைக் கடக்கிறான் நிஷாந்.


லாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் ரயிலில் விழுந்து இறக்க செல்லும் நிஷாந்திடம் பழக்கமாகும் ஷாஷா (எ) அலெக்ஸாண்டர் எனும் 50 வயது மதிக்கத்தக்க ரஷ்யர் ஒருவர் அவனுக்கு வாழ நம்பிக்கை ஊட்டுகிறார்.


வீரகேசரி பேப்பரில் முன்பக்கத்தில் இலங்கைத் தமிழர் சண்முகம் சபாபதி கனடாவின் சிறை உடைப்பு தோல்வி என்று கேள்விப்பட்ட அவருடைய அப்பாஅவனுடைய குழந்தை பெயரான சபுக்குட்டி சபுக்குட்டி என சொல்லித் திரிந்து பைத்தியமாகி இறந்து போவது என நிறைய அகதிகளின்

அகலத்துயரை நாவலில் காணமுடிகிறது.


கடைசியில் ஒரு வழியாக பல்வேறு தடைகளையும் தாண்டி கனடா வரும் நிஷாந்த் தன் வாழ்வில் இனி வெளிச்சம் பிறந்து விட்டது என அவன் பணிபுரியும் கம்பனி அவனுக்கு ஒதுக்கிய அறையை திறப்பதற்கு முன் கனடா நாடு வழக்கமாக கடைபிடிக்கும் மின்வெட்டு இருட்டில் அவன் நிற்பதாக நாவல் நிறைவுறுகிறது.


ஒரு இளைஞனின் அகதிப் பயண அவஸ்தைகளின் வழியே ஒட்டு மொத்த அகதிகளின் அல்லலை இந்நாவலில் நமக்கு காட்டுகிறார் அ.முத்துலிங்கம்.



தாம் பிறந்து தொப்புள்கொடி அறுத்து அது புதையுண்ட மண்ணில் புழுதி படிய புரண்டு வளர்ந்த மண்ணில் நிரந்தரமாய் வாழமுடியாத எல்லோருமே ஒருவகையில் இங்கு அகதிகள் தான்.


நாவலில் கையாளப்பட்டுள்ள நறுக்கு வரிகள் கீழே


நிஷாந்த் அம்மா அவனுக்கு எழுதும் கடிதத்தில் 


"நீயும் நானும் ஒன்பது மாதம் ஓர் உடம்பை பங்கிட்டுக் கொண்டோம் என்பதை நினைத்துப் பார்ப்பேன்.

கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்"


"ஒரு துணியை எடுத்து

 அவனுடைய முகத்தில் உள்ள புத்திசாலித்தனத்தை யாரோ அழுத்தி துடைத்து விட்டது போல இருக்கும்"


"அகதி என்றால் அதன் மறுபெயர் காத்திருப்பது"


"ஏஜென்ட் எச்சரிக்கையானவர். விஷத்தைக் குடிக்கும் முன்னர் பாட்டிலில் உள்ள முடிவு தேதியை சரி பார்ப்பவர்" என நிறைய சொல்லலாம்.


ஏற்கனவே நான் புலம்பெயர் படைப்பாளர்களான

சயந்தனின் ஆதிரை,ஆறாவடு,

குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு,செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய எழுதித் தீராப்

பக்கங்கள் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன்.


அ.முத்துலிங்கம் அவர்களின் கடவுள் தொடங்கிய இடம் நாவல் தான் நான் வாசிக்கக்கூடிய அவருடைய முதல் படைப்பு. 


அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்து பலமே அவரது சிறுகதைகள் 

தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


இந்த நாவலும் 20 சிறுகதைகளை கோர்த்து ஒரு நாவலாக்கப்பட்ட வடிவில் உள்ளது///


velu malayan

22.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்