ஆடு ஜீவிதம்

 ///பென்யாமின் எழுதிய "ஆடுஜீவிதம்" நாவலை முன்வைத்து



இந்தியாவில் இருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்னை ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை செய்கிறார்கள்,வீட்டு வேலை செய்ய சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்ற பல்வேறு  மனிதர்களின் அவலக் குரல்களை நாம் செய்தித்தாள்கள் வழியாகவும்,சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பார்த்திருப்போம்.


சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மலையாள படமான 

C U Soon என்ற படத்தில் கூட கேரளாவில் இருந்து அரபு தேசத்திற்கு வேலைக்கு சென்ற ஒரு பெண்ணை அடித்து பாலியல் சித்திரவதை செய்வதை காட்டியிருப்பார்கள்.


கல்ஃபிற்கு வேலைக்குச் சென்று அவதிப்படும் இதைப் போன்ற நிறைய நாம் அறியாத மனிதர்களின் துயர் சம்பவங்கள் உள்ளன.


அப்படி 1992 ஆம் ஆண்டு அரபு தேசத்திற்கு வேலை தேடிச் சென்ற நஜீப் முகமது என்ற ஒரு மலையாளியின் துயர் மிகுந்த வாழ்க்கை நிகழ்வின் உண்மையை அடிப்படையாக கொண்டு மலையாள எழுத்தாளர் பென்யாமினால் எழுதப்பட்டது தான் இந்த ஆடு ஜீவிதம் நாவல்.


வெம்மை தகிக்கும் அரபி பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு மூன்று வருடம் மூச்சு சுருங்கி, உருக்குலைந்து தப்பி வந்த ஒரு அப்பாவியின் கண்ணீர்க் கதை இந்நாவல்.


கேரளாவில் ஆற்று மணல் அள்ளிக் கொண்டிருந்த நஜிப் அரபு தேசத்திற்கு கட்டிட கட்டுமான பணிக்கு செல்கிறான்.

ஆனால் அங்கு சென்று பிறகு ஒரு அரபியால் நஜிப்பும் அவனுடன் சென்ற ஹக்கீம் என்ற பையனும் கடத்தப்பட்டு ஒரு பாலைவன பிரதேசத்தில் ஆடு மேய்க்க வைக்கப்படுவதும் அங்கிருந்து நஜீப் தப்பி வருவதும் தான் நாவலின் கதை.


நாவல் அரபு தேசத்தில் உள்ள பத்தா நகர சிறையிலிருந்து தொடங்குகிறது.


தப்பித்து சிறையில் வந்து அடைக்கலமான நஜீப்போன்ற நிறைய அப்பாவிகளை மீண்டும் அவர்களுடைய 

அர்பாபுகள்(அரபிகள்)அடித்து இழுத்துப் போகிறார்கள். 


அவனுடன் ஜெயிலில் நண்பனாகும் ஹமீது என்பவனை அவனுடைய அர்பாபு அடித்து இழுத்துக்கொண்டு போகிறான்.இதற்கு அங்குள்ள அரபு போலீஸ்களும் துணைபுரிகிறார்கள்.


தன்னையும் தன்னுடைய அர்பாபு மீண்டும் வந்து அழைத்து போய்விடுவானோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறான் நஜீப்.அப்போது சிறைக்கைதிகளிடம் தான் மூன்று வருடம் பட்ட சித்ரவதையை கூறுகிறான்.


மஸ்ரா எனப்படும் ஆட்டுப்பட்டி,

அர்பாபு (அரபி) மற்றும் நஜீப் இவர்கள் மட்டுமே உள்ள ஒரு தனி பாலைவன பிரதேசத்தை எழுத்தில் காட்டுவதும்,அதில் நாமே மாட்டிக் கொண்டதைப் போன்ற ஒரு உணர்வை நமக்குள் கடத்துவதும் தான் இந்த நாவலின் பெரும் பலமே.


ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது ஏதாவது ஒரு தவறு செய்து விட்டாலோ நஜீப்பை பெல்டால் அடித்து சித்திரவதை செய்கிறான் அர்பாபு அரபி.


ஆடுகளுக்கும்,ஒட்டகங்களுக்கும் குடிக்க தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் அரபி ஒரு தடவை இயற்கை உபாதையை கழித்துவிட்டு கழுவ தண்ணீர் எடுக்கும் நஜீப்பை சரமாரியாக அடித்து விடுகிறான்.

அன்றிலிருந்து இயற்கை உபாதை கழித்துவிட்டு துடைத்துக்கொள்ள கல்லை மட்டுமே  பயன்படுத்துகிறான் நஜீப்.


பாலைவனத்தில் தண்ணீர் எவ்வளவு மதிப்புள்ள பொருள் என்பதை நஜீப் உணர்கிறான்.


நஜீப் அரபியிடம் அடிமையாய் மாட்டியிருந்த 3 வருடம் நான்கு மாதம் 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டும் குளிக்கிறான்.அது பாலைவனத்தில் ஒருநாள் மழை வரும் நாளில்.


நாவலில் நஜீப்புக்குள்ளிருக்கும் தாய்மையும்,தந்தைமை உணர்வும் வெளிப்படக்கூடிய இடம் ஒரு ஆடு ஆட்டுக்குட்டியை பிரசவிக்கும் இடம்.


நஜீப் அந்த ஆட்டுக்குட்டிக்கு நபீல் என்ற பெயர் வைக்கிறான்.அது அவனுக்கு பிறக்கப்போகும் தன்னுடைய மகனுக்கு வைக்க இருந்த பெயர்.


நஜீப் ஊரிலிருந்து அரபு தேசத்திற்கு கிளம்பும்போது அவனுடைய மனைவி ஸைனு கர்பிணியாக இருக்கிறாள்.அந்த ஆட்டுக்குட்டியை தன்னுடைய மகன் நஜீப்பை போல எண்ணி வளர்க்கிறான்.


ஆட்டுக் கிடையில் உள்ள எல்லா ஆடுகளுக்கும் கமலஹாசன், வடிவேல்,சந்திரபாபு என பெயர் வைக்கிறான்.


நஜீப் தினமும் அரபியும்,ஆட்டுக்குட்டிகளும் குடிப்பதற்காக ஆட்டுக்கிடையில் புகுந்து பால் கறப்பான்.நஜீப்பிற்கு ஆடு மேய்ப்பது மற்றும் பால் கறப்பதை கற்றுத்தரும் ஒருவனை அர்பாபு யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்து விடுகிறான்.


அவன் முதன் முதலாய் காம்பில் கை வைத்து பால் கறந்த ஆட்டுக்கு புல்காரி ரமணி என்று பெயர் வைக்கிறான்.


அதற்குக் காரணம் அவன் சிறுவயதாக இருக்கும் போது அவனுடைய மாமா புல்காரி ரமணியின் முலையை  25 பைசா காசு கொடுத்து கசக்குகிறான்.அதைப் பார்த்து நஜீப்பும் அந்த  தாசியின் முலையை 25 பைசா கொடுத்து கசக்குகிறான்.


தன்னை முட்டி கீழே தள்ளி கையை உடைத்து விடும் பொலி ஆட்டு கிடாவிற்கு கசாப்பு ராவுத்தர் என பெயர் வைக்கிறான்.அவன் ஊரில் உள்ள கசப்பு ராவுத்தர் என்பவன் தன்னுடைய தந்தையின் கையை ஒரு பாலத்திலிருந்து கீழே தள்ளி உடைத்து விடுகிறான்.


நஜீப் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை நிகழ்வுகளோடு நிகழ்கால நிகழ்வுகளை பொருத்திப் பார்த்து கொள்கிறான்.


நஜீப் கடவுள் அல்லாவுக்கும்,அற உணர்ச்சிக்கும் பயப்படுவானாக இருக்கிறான்.பாலைவனத்தில் ஒரு நாள் மழை வரும்போது மழையைப் பார்த்து பயந்து நடுங்கும் அரபி நஜீப்பை கட்டிலில் தன் அருகில் அமர வைக்கும்போது நஜீப்பின் கைகளுக்கு அரபியின் துப்பாக்கி கிடைக்கிறது.


ஆனால் பயந்து கொண்டிருக்கும் ஒருவனை கொன்று விட்டா நாம் தப்பித்துச் செல்வது என்று தன்னை சித்திரவதை செய்பவனையும் மன்னித்து விட்டு விடுகிறான் நஜீப்.


ஒரு நாள் இரவு அரபி ஒரு திருமணத்திற்கு சென்று விடுவதால் நஜீப்,பக்கத்து ஆட்டுக் கிடையில் இருக்கும் ஹக்கீம் மற்றும் இப்ராஹிம் தாகிரி ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்.


பாலைவனத்தின் வெம்மை,தாகம் தாங்காமல் ஹக்கீம் பாதி வழியிலேயே இறந்து விடுகிறான்.


கூடவே வரும் இப்ராஹிம் தாகிரியும் ஒரு கட்டத்தில் நஜீப்பிற்கு மனித நடமாட்டம் உள்ள பகுதிவரை வழிகாட்டிவிட்டு மறைந்து விடுகிறான்.


நஜீப் இப்ராஹிம் தாகிரை தான் வாழ வழிகாட்டிய அல்லாவின் உருவாக பார்க்கிறான்.


வாகனங்கள் வரும் ஒரு ரோட்டிற்கு வந்து

கடைசியில் ஒரு அரபியின் காரில் ஏறி நகரத்திற்குள் வருகிறான்.


அங்கு ஓட்டல் வைத்திருக்கும் குஞ்ஞிக்கா என்ற மலையாளியால் பராமரிக்கப்பட்டு போலீசிடம் சென்று ஜெயிலில் அடைக்கப்படுகிறான்.


ஜெயிலுக்கு போவதற்கு முன் குஞ்ஞிக்காவின் போனிலிருநது ஊரிலுள்ள தன்னுடைய மனைவியுடன் பேசி அழுது தீர்க்கும் இடம் மூன்று வருட வலியை தீர்த்துக்கொள்ளும் இடம்.


கடைசியில் நஜீப்பையும் கூட்டி போக அவனுடைய அர்பாபு ஜெயிலுக்குள் வந்துவிடுகிறான்.


ஜெயிலுக்குள் எல்லோரும் வரிசையாக நிற்க வைக்கப் படுகிறார்கள் அப்போது நஜிப்பை கூட்டிப்போக வந்த அர்பாபு நஜிப்பை உற்றுப் பார்த்துவிட்டு அவன் தோள்மீது கைவைத்து தட்டி  விட்டு இவனில்லை நான் தேடி வந்தது என அடுத்தவனை நோக்கி நடக்கிறான்.


ஒரு பக்கம் நம்மை அர்பாபு கண்டுபிடிக்காமல் போனது எப்படி என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம் நம் மனசுக்குள் ஒரு சந்தேக  கேள்விகளுடன் நிற்கிறான் நஜீப் அர்பாபு சிறையை விட்டு போனவுடன் தனக்கு தெரிந்த ஒரு அரபு போலீசிடம் அவர் தான் என் அர்பாபு என்னை அடையாளம் தெரியாமல் விட்டுட்டு போயிட்டார் என சொல்கிறான்.


 அதற்கு அரபு போலீஸ் இவ்வாறு கூறுகிறான் "அவன் என்னுடைய விசாக்காரனாக இல்லாமல் போய்விட்டான்.இல்லையென்றால் நான் அவனை என்னுடைய மஸ்ரா வாசல் வரையிலும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் இருப்பேன் என்றல்லவா உன் அர்பாபு சொல்லி விட்டு போனான்"


அப்போது தான் நஜீப்பிற்கு தெரிகிறது தான் வேறொருவனின் விசாவில் வந்திருக்கிறோம் என்று.


அதை வைத்துதான் அந்த சூழ்ச்சிக்கார அர்பாபு ஏர்போர்ட்டிலிருந்து தன்னை கடத்திக் கொண்டுபோய் இருக்கிறான் என்பதை உணர்கிறான் நஜீப்.


கடைசியில் எம்பஸி ஆட்களால்  டிக்கெட் எடுக்கப்பட்டு  தன்னுடைய மனைவி ஸைனு மற்றும் மகன் நபீலைக்கான இந்தியாவை நோக்கிச்செல்லும் விமானத்தில் ஏறுவதுடன் நாவல் முடிகிறது.


கல்ஃப்பில் வேலை செய்வதற்காக சென்று அங்கு அவதிப்படுவர்களின் ஒற்றை அவஸ்தை பதாகை இந்த நஜீப்பின் கதை.


ஒரு பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட ஒரு அப்பாவியின் கண்ணீர் கதை என்பதையும் தாண்டி இது ஒரு தன்னம்பிக்கை கதையாகவும் நிற்கிறது.


தேவையே மனிதனுக்குள் வலிமையை நிரப்புகிறது.அந்தத் தேவையை உயிர் தேவையாக இருக்கும் போது மனிதன் தன் பசி,உறக்கம்,காமம் அனைத்தையும் மறந்துதன் உயிர் மீட்க போராடுகிறான்.


அப்படி உயிர் மீட்டு  வந்த ஒருவனின் ஒரு கதை தான் இது.சுவாரஷ்யமும், பாலைவனச் சூடும் நிரம்பிய ஒரு கதை.


 ஆடுஜீவிதம் நாவலைப் போலவே வாசிப்பவர்களுக்கு ஒருவித உளநசிவை ஏற்ப்படுத்தக்கூடிய நாவல் அலெக்ஸ் ஹேலியின்

 "ஏழு தலைமுறைகள்". 


ஆடு ஜீவிதம் நாவலை விட எனக்குள் அவஸ்தைகளை உண்டாக்கிய நாவல் ஏழு தலைமுறைகள் தான்.


ஏழு தலைமுறைகள் நாவலில் வரும் குண்ட்டாவும்,ஆடு ஜீவிதம் நாவலில் வரும் நஜீப்பும் வேறு வேறு மண் சார்ந்த மனிதர்கள் என்றாலும் அவர்களின் அவஸ்தை ஒன்று.


குண்ட்டா,நஜீப் இருவருமே கடத்தப்பட்டு அடிமைபடுத்தப்படுகிறார்கள். கொடுமைபடுத்தப்படுகிறார்கள்.


நாவலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த எஸ்.ராமனின் மொழிபெயர்ப்பு அபரிமிதமானது.


எஸ்.ராமன் மலையாள மனோரமா பத்திரிக்கையில் 20 வருடங்கள் பணியாற்றியவர் என்பதால்  நாவலை மூல மொழியின் சாரம் குறையாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார்.


இந்நாவலை மலையாளத்தில் எழுதிய எழுத்தாளர் பென்யாமினுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகடாமி விருது கிடைத்திருக்கிறது.

                           
                            (பென்யாமின்)


இந்நாவலை வாசிக்கும் போது பாலைவன வெம்மையும்,

அதன் மணற்புயலும் உங்களை நிச்சயம் சுடும்.


வாழ்வில் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய நாவல்///


Velu malayan

19.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்