ஒற்றை வைக்கோல் புரட்சி

 ///"ஜப்பானிய நம்மாழ்வாரும்,

ஒற்றை வைக்கோல் புரட்சியும்"



நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வியல் முறை முழுக்க முழுக்க செயற்கைத் தனங்களால் ஆனது.


ரசாயனம் கலந்த உணவு உண்டு,

ரசாயனம் கலந்த குடிநீர் குடித்து,

நஞ்சு கலந்த காற்றை நுகர்ந்து நுரையீரல் பையை  நிரப்பிக்கொண்டு ஒரு சதை தொழிற்சாலையாக

ஒவ்வொரு மனிதனும்  உலவிக்

கொண்டிருக்கிறான்.


நாம் காட்டைவிட்டு எப்பொழுது வெளியே வந்தோமோ அப்பொழுதே நம் ஆரோக்கியமும்,ஆயுளும் குறைய ஆரம்பித்துவிட்டது.


இயற்கையோடு ஒத்திசைந்து வாழும் வாழ்விலிருந்து விலகி நாகரீக நாய்களாக வளர்ந்து  நிற்கிறோம்.


இன்றைய மனிதனின் செயற்கை நுகர்வு கலாச்சார வாழ்க்கைக்கு ஒரே

மாற்று இயற்கை வேளாண்மை தான் என்பதை முன்வைக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த புத்தகம்  "ஒற்றை வைக்கோல் புரட்சி".


ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா

(Masanobu Fukuoka)

அவர்களின் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தியல் மற்றும் கள ஆய்வு ஆவணம் இப்புத்தகம்.


இயற்கை வேளாண் முறையை தன்னுடைய வாழ்வியல் முறையாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் மசானபு ஃபுகோகா.


இந்த புத்தகத்தை வெறுமனே ஒரு இயற்கை வேளாண் குறித்த புத்தகம் என சுருக்கி மதிப்பிட முடியாது.


உணவு முறை பற்றி,மனித வாழ்க்கை பற்றி,மனித ஆன்ம உளவியல் பற்றிய ஒரு புத்தகம் இது.


எதுவும் செய்ய தேவையற்ற வேளாண் முறையை அடிப்படையாகக் கொண்டது மசானபு ஃபுகோகா கூறும் வேளாண் முறை.


அதாவது நிலத்தை உழக்கூடாது. உரமிடக்கூடாது.பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.


இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுவது தான் எதுவும் செய்ய தேவையற்ற வேளாண் முறையின் அடிப்படை பொருளே.


பயிர்கள் தானாக வளர வேண்டும் அதை நாமாக வளர்க்கக் கூடாது.

காட்டிலுள்ள மரங்களை யார் வளர்க்கிறார்கள்? யார் அதற்கு உரமிடுகிறார்கள்? என்று கேட்கிறார் மசானபு ஃபுகோகா.



வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்று தான் இயற்கை வேளாண்மை காலம். பயிர்களை வளர்க்கத் தொடங்கியது கலாச்சார கண்டுபிடிப்பு என்கிறார் மசானபு ஃபுகோகா.


மேலும் இயற்கை வேளாண்மை என்பது இயற்கையோடு ஒத்துழைப்பது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவது அல்ல என்கிறார் மசானபு ஃபுகோகா.


செய்ய தேவையற்ற வேளாண்மை குறித்து பேசும் போது நான் எதுவுமே செய்ய தேவையற்ற வேளாண்மை குறித்து பேசுவதால் படுக்கையிலிருந்து கூட எழாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு மாய உலகத்தை காண இங்கு பலரும் வருகின்றனர்.


அவர்களுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது. 

அது இங்கு விவாதம் உழைப்பை எதிர்த்தல்ல.

தேவையற்ற உழைப்பை எதிர்த்தே. என்று அவர் கூறுவது உழுதல்,உரமிடுதல் பூச்சிக்கொல்லிகள் தெளித்தல் என தற்போதைய நடைமுறையில் இருக்கும் பல வேளாண்மை செயல்முறைகள் தேவையற்றது என்பதையே.


சுற்றுச் சூழலியல் மற்றும்  வேளாண்மை சார்ந்த படைப்புகளில் மிக முக்கியமான ஒரு தரமான புத்தகம் "ஒற்றை வைக்கோல் புரட்சி".


புத்தகத்தில் உள்ள நிறைய கருத்துச் செறிவுள்ள வரிகளில் சில கீழே


"வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல.

மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வது தான்"


"நிலத்தை குணப்படுத்துவதும், ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஒரே செயல் தான்"


"அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை.அது எலும்புக் கூட்டுடன் உலாவும் ஒரு பிசாசு. 

அதற்கு ஆத்மா கிடையாது"


"பள்ளிப்படிப்பிற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் கிடையாது.

ஆனால் உலகத்தோடு ஒட்டி வாழ ஒருவன் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மனித இனம் விதிக்கும் போது அது தேவையானதாகி விடுகிறது"


"இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.

அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது.

காலம் எவ்வளவு தான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும"


"இயற்கை வேளாண்மை மென்மையானது.எளிமையானது. 

அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழி தான்"


"நமக்கு ஒரு உணவு நெருக்கடி ஏற்பட்டால்,அது இயற்கையின் உற்பத்தி சக்தியின் பற்றாக்குறையால் விளைந்ததாக இருக்காது.மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்படும்"


புத்தர் கூறுகிறார்


 "வடிவம் வெறுமையானது.

வெறுமையானது தான் வடிவம்.

பொருளும்,ஆன்மாவும் ஒன்றே.

ஆனால் அனைத்தும் வெறுமையானது.

மனிதன் இறப்பதில்லை.

உயிரோடும் இல்லை.

அவன் இன்னும் பிறக்காதவன்.

இன்னும் இறக்காதவன்"


"பூர்வாங்கமாக மனிதர்களுக்கு எந்த குறிக்கோளும் கிடையாது.

இப்பொழுது அப்படி ஏதோ இருப்பதாக தாங்களே கற்பனை செய்து கொண்டு,

வாழ்க்கைக்கு அர்த்தம் தேட அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 இது ஒருவன் தனியாக போடும் குத்துச்சண்டை.வாழ்க்கைக்கு குறிக்கோளும் கிடையாது.

அதை தேடி அலைவதும் தேவையில்லை.குறிக்கோள் அற்ற ஒரு வாழ்க்கை அர்த்தமுள்ளதா? இல்லையா? என்பதை நீங்கள் குழந்தைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்"


மசானபு ஃபுகோகா முன் வைக்கும்விதை விதைத்து விட்ட வயல்களில் மேல்பரப்பில் வைக்கோலை பரப்பி விடும் இயற்கை வேளாண்மை முறை முற்றிலும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது.

ஆனால் மனித வாழ்க்கை முறைக்கு இயற்கை வேளாண் முறை தான் பொருத்தமானது என்கிறார் மசானபு ஃபுகோகா.


மனிதன் இயற்கைக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயற்கையான இந்த ரசாயன முறை போர்ச் செயலை துறந்து இயற்கையின் பக்கம் நிற்பது தான் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு நல்லது.


ஏனெனில் அறிவியல் அறிவை மட்டுமே நம்புகிறது.ஆனால் இயற்கை அன்பை நம்புகிறது என்று கூறும் மசானபு ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மை முறையை பின்பற்ற முயற்சிப்பதில் தான் இருக்கிறது நாளைய நம் பூமியின் மூச்சும்,பேச்சும்///


velu malayan

16.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்