கானகத்தின் குரல்

 ///ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல்(Call of the wild ) நாவலை முன்வைத்து



மனித வளர்ச்சியின் ஆதியிலிருந்தே மனிதன் முதன் முதலாக பழக்கப்படுத்திய விலங்கு நாய் தான் என்று வரலாறு சொல்கிறது.


மனிதன் நாடோடியாய் திரிந்ததிலிருந்து,இன்றைய நாகரீக வாழ்க்கை முறை வரை மனித உறவின் தொடக்க விலங்கான நாய் நம்முடன் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது.


"மாட்டிடம் பால் கறக்க ஆரம்பிக்கும் முன்,ஆடுகளை மேய்க்கும் முன்,பன்றிகளை வளர்க்கும் முன், விவசாயத்தை கண்டுபிடிக்கும் முன்,எழுத கற்றுக் கொள்ளும் முன், நிரந்தர வீடுகளை உருவாக்கும் முன், பூனைகளை வளர்க்க தொடங்கும் முன் மனிதர்கள் நாய்களை வளர்க்க தொடங்கி இருந்தனர்"


என்று கூறுகிறார் ஜேம்ஸ் கார்சன் என்பவர்.(தியோடர் பாஸ்கரனின் இந்திய நாயினங்கள் நூலில் இருந்து)


பொதுவாக நாய்கள் கூர்மையான மோப்ப உணர்வும், மனிதர்களின் உடல் மொழிகளை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் கொண்டவை.


அதனால் தான் மனிதர்களுடன் அவை அவ்வளவு நெருக்கத்துடன் பழக முடிகிறது.இதைத் தான் நாம் நாய் விசுவாசமுள்ள பிராணி என்கிறோம்.


நாய் நன்றியுள்ள விலங்காக நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றும் ஒரு விசுவாசமுள்ள நண்பனாக நிறைய தமிழ் படத்தில் பார்த்திருக்கிறோம்.

குறிப்பாக இயக்குனர் ராமநாராயணன் படங்களில் எப்போதும் நாய்களும் நடிப்பதற்கு இடமுண்டு.


ஆனால் ஒரு நாவல் முழுக்க நாயையே முதன்மையான பத்திரமாக வைத்து ஒரு நாவலை எழுதியிருக்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜாக் லண்டன்.அந்த நாவலின் பெயர் கானகத்தின் குரல்(Call of the wild).



பக் என்ற நாயின் கதாபாத்திரத்தை சிருஷ்டித்து ஒரு அழியாத பாத்தித்தை உருவாக்கியிருக்கிறார் ஜாக் லண்டன்.


அமெரிக்காவின் சான்டா கிளாரா என்ற இடத்தில் மில்லர் என்ற நீதிபதியின் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பக் அந்த வீட்டில் பணிபுரியும்  நீதிபதியின் தோட்ட வேலைக்காரனின் உதவியாள் மானுவெல் என்பவனால்   

பக் திருடி ஒருவனுக்கு விற்கப்பட்டு பின் பெரோல்ட் மற்றும் பிரான்சுவா என்பவர்களால் 300 டாலருக்கு விலை கொடுத்து வாங்கப்படுகிறது.


பல்வேறு மனிதர்களிடம் விற்கப்பட்டு  கை மாறும் பக் யூக்லான் பகுதியின் பனிப்பிரதேசத்தில்

தபால் எடுத்துச் செல்லும் சறுக்கு வண்டியை இழுக்க பயன்படும் நாய்களில் ஒன்றாக மாற்றப்படுகிறது.


நீதிபதி மில்லரிடம் சொகுசாக வாழ்ந்த பக் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கிறது.


மனிதர்களால் வளர்க்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்ட தன்னுடைய ஆதி விலங்குணர்ச்சி,

தந்திரம்,பலம் ஆகிய அனைத்தையும் மெல்ல மெல்ல பெற்று ஒரு பேய் பலம் கொண்ட நாயாக மாறுகிறது.


சறுக்கு வண்டியிழுக்கும் நாய்களுக்கு தலைமை தாங்கும் ஸ்பிட்ஸ் என்ற மூர்க்கமான நாயிடம் கடுமையாக சண்டையிட்டு அதை கொன்று மற்ற நாய்களை வழி நடத்தும் அதன் தலைமை இடத்திற்கு பக் வருகிறது.


கிட்டத்தட்ட மனிதன் தனக்கான நிலையை அடைய என்ன மாதிரியான எத்தனங்களை செய்வானோ அப்படியான ஒரு மனிதன தந்திர புத்தியை பக்கும் வளர்த்துக் கொள்கிறது.


பக் நாயிடம் இருவர் மட்டுமே கருணையாக நடந்து கொள்கிறார்கள்.

ஒருவர் மெர்ஸிடஸ் என்ற பெண் இன்னொருவர் ஜான் தார்ன்ட்டைன்.


ஹால் என்பவன் பக்கை அதிக எடை ஏற்றி இழுக்குமாறு அடித்து சித்திரவதை செய்யும் போது அந்தப் பகுதியில் விறகு வெட்டியாக இருக்கும் ஜான் தார்ன்டன் பக்கை அவனிடமிருந்து காப்பாற்றுகிறான்.


தார்ன்டன் பக்கை காப்பாற்றியதால் அவனிடம் விசுவாசத்துடன் இருக்கிறது பக்.


ஒரு நாள் காட்டில் படகு செலுத்தும் போது தார்ன்டன் ஆற்றின் வெள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்போது பக் அவனை காப்பாற்றுகிறது.


ஆயிரம் ராத்தல் சுமை நிரம்பிய வண்டியை இழுக்கும் போட்டியில் தார்ன்டனுக்கு 1600 டாலர் சம்பாதித்துக் கொடுக்கிறது பக்.

தார்ன்டனும் அவரது நண்பர்களும் தங்கம் தேடி பள்ளத்தாக்குகளில் திரியும் போது தங்கத்துகள் கிடைக்க பக் உதவி செய்கிறது.


ஒரு நாள் ஒரு பெரிய கனமான வேட்டையாடிவிட்டு தார்ன்டன் தங்கியுள்ள முகாமிற்கு வரும் போது செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த என்ற ஈஹட் காட்டுவாசிகளால் தார்ன்டன் ஒரு குட்டையில் அமிழ்ந்தும்,அவனுடைய நண்பர்கள் பீட் மற்றும் ஹான்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள்.


அதைப் பார்த்த பக் கொடுஞ் சீற்றத்துடன் ஈஹட்டுகளின் தலைவன் மேல் பாய்ந்து அவனுடைய குரல்வளையை கடித்து கிழிக்கிறது.அங்குள்ள பலரையும் கடித்து கிழித்துக் கொல்கிறது.


பக்குடன் இருந்த கடைசி மனிதத் தொடர்பான தார்ன்டன் இறந்து விட்டதால் பக் காட்டுக்குள் ஓடிச்சென்று ஓநாய் கூட்டத்துக்குள் சென்று வாழ்கிறது.


சில ஆண்டுகளுக்குப்பின் ஓநாய்களின் வர்க்கத்தில் ஒரு புதிய மாறுதலை ஈஹட்டுகள் காண்கிறார்கள்.


நாய்க்கும்,ஓநாய்க்கும் பிறந்த ஒரு கலப்பின பேய் நாய் வருவதாக ஈஹட்டுகள் கூறிக் கொள்கிறார்கள்.


ஓநாய்களிலிருந்து மாறுபட்ட ஒரு வகை நாய் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குட்டைக்கு அருகில் வந்து நின்று பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு புறப்படுவதற்கு முன் மிகுந்த துயரமான குரலில் ஒரு தடவை ஊளையிடுவதுடன் நாவல் முடிகிறது.


இந்த நாவலில் பக் என்ற நாயின் உழைப்புச் சுரண்டலை,

அதன் அன்பை,விசுவாசத்தை புரிந்துகொள்ளாத மனிதர்களின் கீழ்மையை ஜாக் லண்டன் எழுத்தாக்கியிருக்கிறார்.


நாவலில் திடீரென்று காட்டிலிருந்து பக்கிற்கு  ஒரு குரல் கேட்கிறது.

அது அதன் ஆதி மூதையர்களின் குரல்.அந்தக் குரல் பக்கை காட்டுக்கு அழைக்கிறது.


ஆனால் பக் தார்ன்டனின் அன்புக்கு அடிபணிந்து காட்டுக்குள் சென்று பிறகு திரும்பி வந்துவிடுகிறது.


எப்போதுமே நான்கு கால் நாய்களுக்கு இருக்கும் விசுவாசமும்,

நன்றியுணர்ச்சியும்

இரண்டுகால் நாய்களுக்கு இருப்பதில்லை.


மனிதர்கள் இயற்கையின் மீது அதிகாரம் செய்ய நினைத்து பின் இயற்கையிடம்

தோற்றுப் போகிறவர்கள்.


கானகத்தின் குரல் ஒரு நாயைப் பற்றிய நாவல் என்பதோடு அல்லாமல் இயற்கையை தனதாக்கிக் கொள்ள நினைக்கும் மனிதர்களின் சுயநலத்தின் மீதும்,பேராசையின் மீதும் ஒரு கேள்வி குரலை எழுப்புகிறது///


velu malayan 

14.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்