சோமன துடி

 ///இந்திய செவ்வியல் ஆக்கங்களில் நான் வாசித்த வரை சிறந்த நாவல்களாக கன்னடத்தில் சிவராம் காரந்த் அவர்களால் எழுதப்பட்ட "மண்ணும் மனிதரும்" மற்றும் "அழிந்த பிறகு" நாவல்களைச் சொல்வேன்.



சிவராம காரந்த்  கலை,

இலக்கியம், சினிமா,நடனம்

(யகஷகானா) ஆகிய பல்வேறு கலை வடிவங்கள் மூலம் கன்னட மொழிக்கு பெரும் பங்காற்றியவர்.


மண்ணும் மனிதரும்  நாவல் ஒரு பிராமணர் குடும்பத்தில் உள்ள பெண்கள் படும் துயரை எதார்த்த மீறலும்,மிகையுமின்றி பதிவு செய்த பேரிலக்கியம் என்பேன்..


அழிந்த பிறகு ஒரு நவீனத்துவ நாவல்.தன் நண்பர் யசுவந்த ராயர் மரணத்திற்கு பின் அவருடன் பழகிய நினைவுகளை சுமந்து யசுவந்தரின் குடும்பங்களை சொந்தங்களை தேடிச் செல்லும் ஒரு நவீன புனைவு நாவலே அழிந்தபிறகு.


நாவலில் யசுவந்தரின் உறவுகளைத்

தேடி செல்பவராக சிவராம் காரந்தே வருகிறார்.


குடும்பங்களுக்குள் இருக்கும் மனிதர்களின் மன பகையை,

அது உடையும் இடங்களை மிக நுட்பமாக எழுத்தாக்கியிருப்பார் சிவராம காரந்த் அழிந்த பிறகு நாவலில்.



நான் தமிழில் படிக்க தேடி கிடைக்காத நாவல் சிவராம் காரந்த் எழுதிய "சோமன துடி" நாவல்.


சோமன துடி என்ற பெயரிலேயே

அதை படமாக பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.படம் B.V. காரந்த் அவர்களுடைய இயக்கம் மற்றும்  இசையில் 1975 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ளது.


பண்ணையில் வேலை செய்யும் சோமா என்ற தலித்தின் வாழ்க்கையும்,சாவதற்குள்

சொந்தமாக ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஏக்கமும் தான் படத்தின் கதையே.


அடர் இருட்டில் கையில் தீப்பந்தங்களுடன் ஆண்களும் பெண்களும் கோயில் திருவிழாவுக்கு செல்வது போல படத்தின் முதல் காட்சி வருகிறது.


சோமன் தன் மகள் மற்றும் மகன்களுடன் தன் குடிசைக்கு முன் உடுக்கை அடித்து சந்தோஷமாக ஆடும் போது நாளைக்கு காலையில் பண்ணைக்கு வேலை செய்ய வருமாறு முதலாளி சொல்லிவிட்டுச்

செல்கிறான்.


பலமுறை தன் முதலாளியிடம் தனியாக விவசாயம் செய்ய குத்தகைக்காவது நிலம் கேட்கும் சோமன் கீழ் சாதிக்காரன் எப்படி ஒரு விவசாயம் செய்யும் முதலாளியாக மாறலாம்  என நிலம் மறுக்கப்படுகிறான்.


பண்ணையில் வேலை செய்துவிட்டு அதற்கு கிடைக்கும் அரிசியை கள்ளுக்கடை காரனிடம் கொடுத்துவிட்டு கல்லு வாங்கி குடிக்கிறான் சோமன்.


சோமனின் துயர் குறையவும், அவனை ஆறுதல் படுத்தவும் இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று கள் குடிப்பது. இன்னொன்று உடுக்கை அடிப்பது.


தான் வாங்கிய 20 ரூபாய் கடனைக் கழிக்க தன் மகன்கள் சனியா,குருவா இருவரையும் காபி எஸ்டேட்க்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறான் சோமன்.


இந்த படத்தில் மிக நுட்பமான ஒரு காட்சி.ஜார்ஜ் என்பவரின் உதவியுடன் சோமன் ஒரு பாதிரியாரை சந்திக்கச் செல்கிறான்.


சோமன் சர்ச்சுக்குள் நுழைவதற்கு முன்பு படியில் நின்றுகொண்டு உள்ளே நுழைவதற்கு தயங்குகிறான்.


காரணம் இந்து உயர் ஜாதியினர் அனைவரும் அவனை அப்படித்தான் வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து பேசுகிறார்கள்.


சர்ச் உள்ளே செல்ல தயங்கும் சோமனை தாராளமாக உள்ளே வா என்று பாதிரியார் அழைக்கிறார்.


அப்போது சோமன் பாதிரியாரிடம் தனக்கு சொந்தமாக நிலம் வேண்டும் என்று கேட்கும்போது நிலம் தருகிறேன்.ஆனால் நீ கிருத்துவ மதத்தை தழுவி விடு என்று பாதிரியாரும்,ஜார்ஜுவும் சொல்கிறார்கள்.


உடனே சோமன் கிடுகிடுவென்று தன்னுடைய வீட்டை நோக்கி நடக்கிறான்.


அப்போது ஒரு ஒற்றை மர ஆற்றுப் பாலத்தை கடக்கும்போது  எதிரில் வயதானவர் வருவதால் சோமன் பின் நோக்கி திரும்பி நடந்து ஆற்றில் இறங்கி தலைமுழுகி குளித்து விட்டு ஆற்றைக் கடந்து வீட்டுக்குச் செல்கிறான்.


மதம் மாற கேட்டதற்கும் சர்ச் உள்ளே நுழைந்ததும் தீட்டு என நினைத்து ஆற்றில் குளித்து விட்டு செல்கிறான்.


ஆற்றைக்  கடக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கும் சோமன் வாழ்வதற்கு மாற்று மதம் மாற மறுக்கிறான்.


சகமனிதன் மீது எந்த விலக்கமும் காட்டாமல் அவனை அரவணைத்து அனுமதிக்கும் கிருத்துவ மதத்தை ஏற்க மறுக்கிறான் சோமன்.


ஆனால் சோமனின் மகன் குருவா வேலை செய்யும் இடத்தில் மேரி என்கிற கிருத்துவப் பெண்ணை காதலிக்கிறான்.அவளை

திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான்.


இப்படத்தில் சோமனாக எம்.வி வாசுதேவ ராவ் என்பவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.


சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் ஒரு மலம் அள்ளும் ஒரு தோட்டியை முதன்மை பாத்திரமாக வைத்து தகழி சிவசங்கரன் பிள்ளை மலையாளத்தில் "தோட்டியின் மகன்" நாவலை எழுதியிருப்பார்.


 

அதைப்போலவே தாழ்த்தப்பட்ட சோமனை முதன்மைப் பாத்திரமாக வைத்து "சோமன துடி" நாவலை கன்னடத்தில் எழுதியிருக்கிறார் சிவராம காரந்த்.


கன்னடத்தில் அரவிந்த மாளகத்தி எழுதிய "கவர்ன்மெண்ட் பிராமணன்" போன்ற கன்னட தலித் இலக்கியங்களுக்கு முன்னோடியாக பார்க்கப்படுவது சிவராம் காரந்த் எழுதிய சோமன துடி நாவல் தான்.


ஒரு நாவல் வாசிக்கும் போது மனம் உண்டாக்கிக் கொள்ளும் பல்வேறு உணர்ச்சி  நிலைகளை ஒரு திரைப்படம் தந்துவிடாது என் எண்ணம்.


பெரும்பாலும்

ஒரு நாவலுக்கு நிகரில்லாத குறைந்தபட்ச சரிக்கட்டல் பணியைத்தான் அதை திரைப்படமாக்கும் போது செய்கிறார்கள்.


ஆனால் நான் படம் பார்த்ததிலிருந்து

இந்தப் படத்தை மிக தரமாக,

எள்ளளவும் எதார்த்தம் குறையாமல் எடுத்திருக்கிறார்கள்.


ஆனால் சோமன துடியை நாவலாக முழுமையாக வாசிக்கும் போதுதான்

என் மனம் முழு திருப்தி அடையும் என எண்ணுகிறேன்///


#Chomana Dudi Movie

#Shivarama karanth


velu malayan

(13.10.2020)

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்