சிதம்பர நினைவுகள்

 கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்து எழுதிய "சிதம்பர நினைவுகள்" நூலை முன்வைத்து



நாம் எல்லோருக்குள்ளும் சொல்ல ஒரு கதை இருக்கிறது.

நாம் அனுபவித்த அவமானங்களைப் பற்றியும்,

நம்மை துவளச் செய்த தோல்விகளைப் பற்றியும்,

நாம் தூக்கி சுமந்த துயர்களைப் பற்றியும்,

நாம் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும் சொல்ல நம்மிடம் ஏராளமான கதைகள் உள்ளன.

நம் அடி மனம் வாங்கி ஒளித்து வைத்திருக்கும் வாழ்வின் சகல விசயங்களையும் அப்படியே அசலாய் வெளிப்படுத்த தயங்கும் தன் மனதின் சின்னத் தனங்களை,


முன்பின் தெரியாத மனிதர்களின் மேன்மையை,மனித நேசிப்பை,

மனிதர்களின் அன்பை,அழுகையை எவ்வித ஒளிவு மறைவுகளின்றி எழுத்தாக்கியிருக்கும் எதார்த்த கலையை இந்த புத்தகம் வழியே நிகழ்த்தியிருக்கிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


கட்டுரை வடிவில் எழுதப் பட்டிருந்தாலும் இந்நூல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் தன்வரலாற்று அனுபவங்களின் தொகுப்பு என்று கொள்ளலாம்.


தன்னுடைய 18 வயதில் அப்பாவுடன் ஏற்பட்ட பிணக்கில் வீட்டை விட்டு வெளியேறிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தான் வேலையின்றி, பணமின்றி,உணவின்றி திரிந்து அலைந்த போது தன் வாழ்வில் நேர்ப்பட்ட மனிதர்களோடு பெற்ற அனுபவங்களின் அசல் பதிவு தான் இந்நூல்.


தமிழின் ஆகச் சிறந்த சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் முதல் மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வரை அப்பாவுக்கும், வீட்டிற்கும் அடங்காத சுயமனவெறி கொண்ட கலகக்காரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.


இந்த நூல் என்னளவில் பிடித்துப்போனதற்கு மிக முக்கிய காரணம் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தன் மனதின் உண்மைகளை உள்ளபடி மனக்குறுக்கமின்றி அப்படியே நம்முன் எடுத்து வைத்தது தான்.


ஒரு எழுத்து கலைத்தன்மை அடையும் இடம் ஒருவன் தன் கீழ்மைகளையும்,தன்னையும் அப்படியே கிழித்து காண்பிக்கும் இடத்தில்தான்.


தான் கேரளம் அறிந்த ஒரு படைப்பாளியாக இருந்தாலும் தன் வீட்டிற்கு ஊறுகாய் விற்க வரும் ஒரு பெண்ணின் இடையை பிடித்து அவளிடம் கன்னத்தில் அடிவாங்கி குற்ற உணர்ச்சியில் அவளிடம் மன்னிப்பு கேட்டு நிற்கும் இடமாகட்டும்,


தன் காலனியில் வசிக்கும் ராதா மற்றும் லைலா ஆகிய திருமணமான பெண்களின் மீது அவர் மனம் கொள்ளும் சபல வெறியாகட்டும்,


இரண்டு பெண்களில் ராதா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளும்போதும்,

தன் மகளுக்கும்,வேலைக்காரிக்கும் விஷம் வைத்து கொன்றுவிட்டு கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் லைலாவுக்கும் அவர் மனம் கொள்ளும் மெளனத்துயரை வெளிப்படுத்தும் இடத்திலும் மனிதர் உண்மையில் தன்னை மனிதர் என்று நிரூபிக்கிறார்.


              (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு)

இரவில் போலீஸிடம் மாட்டி அடிவாங்கிய இரவு ஸ்நேகிதி வாஸந்தி என்ற வேசியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உபசரிக்கும் உள்ளம் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உள்ளம்.


இரவு முழுக்க தன்னுடன் பேசியிருந்த சாந்தம்மா என்ற வேசியை விட்டு எழுந்து நடக்கும்போது அவளுடைய ஜாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாயை பாலச்சந்திரன் பாக்கெட்டில் வைக்கும்போது உலகம் உதிரி என நினைக்கும் மனிதர்களின் உள்ளம் எப்போதும் உயர்வானது என்று காட்டுகிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் அவர் கையாலேயே ஜானிவாக்கர் ப்ளாக் லேபிள் விஸ்கி அருந்திவிட்டு அவர் முன்னாடியே ராவணனைப் போல் நடித்துக் காண்பித்து விட்டு தன் பால்யத்தில் வியந்து பார்த்த அந்த மகா நடிகனை நேரில் பார்த்ததை வியந்து பார்க்கிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


மால்யாங்கரை எஸ்.என்.எம் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி தோழி சாஹினாவை மிரட்டி தன் கன்னத்தில் வாங்கிய முத்தத்தை கணவனால் கைவிடப்பட்டு வாழ்வு சிதைந்து, தற்கொலை முயற்சியில் தீயில் கருகி சுருண்டிருக்கும் கன்னத்தில் பாலச்சந்திரன் அழுத்தி முத்தமிடும் போது அதில் ஒரு தாய்மையின் அன்பை அவளுக்கு அளித்து விட்டு அவளை திரும்பிப்பார்க்காமல் அவஸ்தை மனதுடன் நடந்து செல்லும் இடம் ஒரு உணர்ச்சி மிகுந்த இடம்.


காசில்லை என்பது இந்த பூமியில் அவ்வளவு பெரிய அவமானமா?எனக் கேட்கும் பாலச்சந்திரன் திருவோணம் நாளில்வயிற்றுக்கு சாப்பாடு இல்லாமல் அலைந்து முகம் தெரியாத ஒருவரின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டு பெண் இவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எங்கள் கல்லூரியில் வந்து கவிதை வாசித்திருக்கிறார் என்று சொல்லும்போது அவர் அவமானத்தில் குனிந்து சாப்பிட்டு விட்டு செல்லும் இடத்திலும்,


மலையாள கவிஞர் ஸ்ரீவத்சனுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் போது காசில்லாமல் அவமானப்பட்டு அவர் நிற்கும் போதும் இந்திய படைப்பாளிகளின் நிலையை எழுத்து சோறு போடாது என்பதை கூறுகிறார்.


எழுத்தாளர் மாதவகுட்டி என்கிற கமலாதாஸை "அகங்காரியான ஒரு ராஜகுமாரி" என்று கூறும் பாலச்சந்திரன் கமலா தாஸின் அன்பிலும்,ப்ரியத்திலும் நெகிழ்ந்து போகிறார் பாலச்சந்திரன்.


இவ்வளவு சாந்தமும், தயாள குணமும்,பிரியமும் உள்ள இந்த பெண் தானா? எழுத்தில் உலகை உலுக்கும் கலகக்காரியாக இருக்கிறாள் என்று ஆச்சரியப்படுகிறார்.


நோபல் பரிசு வாங்க தகுதி வாய்ந்த ஒரு எழுத்தாளர் கமலாதாஸ் என்கிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடங்கும் கட்டுரை ஸ்வீடன் நாட்டு நோபல் அகடாமியில் முடிவுறுகிறது.


மொத்தம் 21 கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையை ஒத்த அனுபவத்தைக் கொடுக்கிறது.


வயது முதிர்ந்த தம்பதிகள் ரங்கசாமி - கனகாம்பாள் தன்னுடைய நண்பர்கள் மோகனன்,ராதன், பெளலோச்சன்,தன் ரத்தம் விற்ற தன் தங்கையின் மருத்துவ செலவுக்காக பெற்றுக்கொள்ளும் கிருஷ்ணன் குட்டி,தன் மகன் பிறந்ததிலிருந்து பழனி கோயிலுக்கு போவதை தவிர்க்கும் அய்யாவு செட்டியார்,

தன் முதல் குழந்தையை கருக்கலைப்பு செய்தது என இப்படி நிறைய அனுபவங்களையும், மனிதர்களைப் பற்றியும் கலப்படமற்ற உண்மையில் எழுதியிருக்கிறார் பாலச்சந்திரன்.


இந்நூலை மலையாளத்திலிருந்து மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் மரியாதைக்குரிய கே.வி.சைலஜா அவர்கள்.

                        (கே.வி.ஷைலஜா)

ஏற்கனவே நான் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்த்த "சுமித்ரா" 

மற்றும் "கதை கேட்கும் சுவர்கள்" நாவல்களை வாசித்திருக்கிறேன்.

ஆனால் சிதம்பர நினைவுகள் நூலில் மிக நேர்த்தியான ஒரு மொழிபெயர்ப்புப் பணியை செய்திருக்கிறார் கே.வி.ஷைலஜா அவர்கள்.அவருக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.


Velu malayan

3.10.2020.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்