Bandit Queen

 ///நேற்று அக்டோபர் 11 சர்வதேச பெண்கள் தினத்தில் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "Bandit Queen" படத்தைப் பார்த்தது எதேச்சையாக அமைந்த ஒன்று.



சமீபத்தில் நாடெங்கும் பெரும் பேசு பொருளான உத்தரபிரதேசத்தில் தாக்கூர் உயர் சாதியினரால் வல்லாங்கு செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா வால்மீகி என்ற பெண்ணின் துயர் நிகழ்விற்கும்,இந்தப் படத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு.


காரணம் பூலான்தேவி உத்தரபிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்தவர்.

அவரும் தாக்கூர் சாதியினரால் பலமுறை வன்புணர்வு செய்து கொடுமை செய்யப்பட்டவர்.


பால்ய பருவமான 11 வயதில் திருமணம் செய்யப்பட்டு தன்னை மணந்த புட்டிலால் என்பவனால் மனச்சிதைவுக்கும் உடல் சிதைவிற்கும் உள்ளாகிறார் பூலான் தேவி.


கணவனிடமிருந்து தப்பி வரும் பூலான்தேவி தாகூர் சாதி ஆண்களால் தொடர்ந்து வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்.


பால்ய வயதில் தனக்கு நிகழ்ந்த உடல் சுரண்டல், தாக்கூர் ஆதிக்கசாதி ஆண்களால் பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டதின் வலி,வேதனை, குடும்ப வறுமை என எல்லாம் சேர்ந்து பூலான்தேவியை ஒரு மூர்க்கமான பெண்ணாக மாற்றுகிறது.


பின் சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரியாக மாறி தன் வாழ்வை சிதைத்த 22 தாக்கூர் சாதி ஆண்களை சுட்டுக் கொள்கிறார்.

இந்நிகழ்விலிருந்துநாடே திரும்பி பார்க்கும் ஒரு முகமாக மாறுகிறார் பூலான் தேவி.


மல்லா எனும் தாழ்ந்த சாதியில் பிறந்தவர் பூலான் தேவி.அங்குள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆதிக்க சாதியான தாகூர் வகுப்பை சேர்ந்தவர்களே இருப்பதால் காவல் அதிகாரிகளும் பூலான்தேவியை வன்புணர்வு செய்கிறார்கள்.


அங்கு தாகூர்கள்  வைத்தது தான் சட்டம்,நீதி எல்லாம்.இன்றும் கூட வட இந்திய கிராமங்களில் சாதிய வெறி எப்படி உள்ளது என்பதற்கு Bandit Queen படமே பெரிய சாட்சி.


எல்லோராலும் சித்திரவதை செய்யப்பட்டு ஒரு கட்டத்தில் பூலான் தேவி காளியாக மாறுகிறாள்.

தன்னை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்திய அத்தனை பேருக்கும் துப்பாக்கியால் பதில் சொல்கிறாள்.


ஒரு கட்டத்தில் அரசுடன் சமாதானமாகி சரண்டர் ஆகிசாதாரண வாழ்க்கை வாழ விரும்பிய பூலான்தேவி அதே தாக்கூர் ஆதிக்க சாதியினரால்

தன்னுடைய 37 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை பண்டிட் குயின் என்ற பெயரில் 1994 ஆம் ஆண்டு இயக்கியவர் சேகர் கபூர்.

                    (இயக்குனர் சேகர் கபூர்)

"I am Phoolan Devi.Sister fuckers" என்ற பூலான் தேவியின் கர்ஜனையுடன் 1968 ஆம் ஆண்டில் தொடங்குகிறது படம்.


சிறந்த திரைக்கதை சிறந்த ஒளிப்பதிவு,மிகச் சிறந்த எடிட்டிங் என மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு படம்.இந்தப் படத்தில் பூலான் தேவியாக நடித்திருக்கும் சீமா பிஸ்வாஸ் நிஜ பூலான் தேவியை நடிப்பின் வழியே நம் கண்முன் நிறுத்துகிறார்.

                      (நடிகை Seema Biswas)

ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தாவின் ஒளி வண்ணம் உத்திர பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கை அப்படியே அதன் அசல் நிறத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. 


Gangs of wasseypur படத்தில் பீகாரின் நிலப்பரப்பையும்,நிலக்கரி வயல்களையும் தன்னுடைய ஒளிப்பதிவு வழியே  தத்ரூபமாக காட்டியிருப்பார்

அசோக் மேத்தா.

(ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தா)


இப்படத்திற்கு இசையமைத்தவர் கவ்வாலி கானத்தின் கடவுள் Nusrat Fateh Ali Khan.
                    Nustrat Fateh Ali khan


என் விருப்பத்திற்குரிய நடிகர் மனோஜ் பாஜ்பாய்,மன் சிங் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். கைலாஸ் கதாபாத்திரத்தில் வரும் செளரப் சுக்லா (ஹேராம் படத்தில் வரும் வழுக்கை மனிதன்),விக்ரம் மல்லா பாத்திரத்தில் வரும் நிர்மல் பாண்டே என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.


இந்தப்படம் பூலான் தேவியின் மொத்த வாழ்க்கையை மனதில் கனம் கூடும் அளவிற்கு கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் அத்தனை கொடுமைகளிலும் முன்னணி வகிக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் இருக்கிறது.


அன்று பூலான் தேவிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு ஆதரவாக நின்ற அதே தாக்கூர் சாதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள்,

ஆட்சியாளர்களைப் போலவே இன்றும் மனிஷாவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறது உத்தரபிரதேச அரசு.


அதற்கு காரணம் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தும் அதே தாகூர் சாதியை சேர்ந்தவர் என்பது தான்.


படம் தொடங்கும் போது நுஸ்ரத் பதே அலிகானின் ஆலாபனை குரலுடன்


 "Animals,drums,illiterates,Low Castes and Women are worthy of being beaten "-

Manu Smirti


"மிருகங்கள்,மேளங்கள், கற்காதவர்கள்,தாழ்ந்த சாதியினர் மற்றும் பெண்கள் ஆகியோர் அடி வாங்கவே படைக்கப்பட்டவர்கள்"- (மனு ஸ்மிருதி)


என்று ஹிந்து மதத்தின் மனு ஸ்மிருதியில் உள்ள வாசகம் போடப்படுகிறது.


இப்படிப்பட்ட இந்துமதத்தின் மனுஸ்மிருதியை பின்பற்றுபவர்களின் ஆட்சியின் கீழ் தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்///


velu malayan

12.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்