எழுத்தாளர் இமையம் எழுதிய எங்கதெ நாவல்

 எழுத்தாளர் இமையம் எழுதிய "எங்கதெ" நாவலை முன்வைத்து


///2019ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள பாலம் வாசகர் சந்திப்பு ஒருங்கிணைத்த எழுத்தாளர் இமையம் அவர்களின் கோவேறு கழுதைகள் நாவலின் 25 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இமையம் அவர்கள் கலந்து கொண்டார்.நானும் அந்நிகழ்வில் கலந்துகொண்டேன்.



கோவேறு கழுதைகள் நாவலின் மீதான பார்வையை எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் விரிவாகப் பேசினார்.


எழுத்தாளர் இமையம் அவர்களின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது "கோவேறு கழுதைகள்" நாவலும்,"பெத்தவன்" நெடுங்கதையும் தான்.


கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் என்ற தலித் கிருத்துவப் பெண்ணின் சுரண்டலை எழுதிய இமயம்,பெத்தவன் நெடுங்கதையில் சாதி மாறி திருமணம் செய்துகொள்ள நினைக்கும் ஒரு மேல்சாதி பெண்ணின் தகப்பன் பழனி பாத்திரம் வழியே

இறுகி போகியிருக்கும் சாதிய நஞ்சு மனங்களின் மீது கல்லெறிகிறார்.


இமயம் அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது கோவேறு கழுதைகள் நாவலை நான் எழுதும்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.


பயம் தெரியாத ஒரு குழந்தை மலைப்பாம்புடன் விளையாடுவதைப் போல அப்போது நாவலை நான் எழுதி விட்டேன். ஆனால் இப்போது நினைத்தாலும் என்னால் அது எழுத முடியாத, சாத்தியப்படாத ஒரு மலைப்பாம்பு கோவேறு கழுதைகள் நாவல் என்றார்.


இமையம் பேசும்போது என்னுடைய படைப்புகளை,கதைகளை நான் உருவாக்குவதில்லை.

இந்த சமூகம் தான் எனக்கு உருவாக்கி கொடுக்கிறது.

இந்த சமூகத்தில் நான் அவதானிப்பதைத்தான் நான் எழுதுகிறேன் என்று சொன்னார்.


அப்படி இந்த சமூகத்தில் காலம் காலமாக ஆண் பெண் உறவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார பிசகைத் தான் எங்கதெ என்கிற பெயரில் நாவலாக்கியிருக்கிறார் இமையம்.


திருமணமாகாத விநாயகம் என்பவனுக்கும்,கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் கமலா என்ற பெண்ணுக்கும் இருந்த பத்தாண்டு உறவை பேசுகிறது எங்கதெ நாவல்.


குடும்பம்,சமூகம் யாவும் அங்கீகரித்துக் கொள்ள தயங்கும் கமலாவுக்கும்,விநாயகத்துக்குமான உறவை கதையாக்கியிருக்கும் இமையம் ஆண் பெண் உறவில் நிகழும் முரண்,சந்தேகம்,சண்டை என எல்லா பரிமாணங்களையும் எதார்த்தமாய் எழுதியிருக்கிறார்.


இமையத்திடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருடைய வட்டார வழக்கு மொழி தான்.இந்த நாவலை வாசிக்கும்போது நாம் வாசிக்கிறோம் என்ற உணர்வு நிலையைத் தாண்டி விநாயகம் நம்மோடு நேரடியாக உட்கார்ந்து பேசுவது போன்றதொரு உணர்வைத் தருகிறது.



ஆசிரியராக இருந்த தன் கணவர் ஆடியபாதம் வாகன நேர்ச்சியில் இறந்து விட்டதால் வாரிசு வேலை அடிப்படையில் விநாயகத்தின் ஊரில் உள்ள பள்ளிக்கு கிளார்க்காக வந்து சேருகிறாள் கமலா.


28 வயது நிரம்பிய கமலாவின் முக வடிவமும்,நிறமும் விநாயகனை அவள் மீது பித்துக் கொள்ள வைக்கிறது.


ஒரு கட்டத்தில் உதவியாளராக பதவி உயர்வு பெற்று கமலா கடலூருக்கு செல்வதால் அவளை அங்கு ஒரு வீடு பார்த்து குடி வைக்கிறான் விநாயகம்.


பொதுவாக ஆண் பெண் உறவில் சந்தேகம் ஒரு தவிர்க்கமுடியாத நோய்.அந்த நோய் விநாயகத்துக்கும்உண்டாகிறது.


கமலாவும் தன்னுடைய தொழில் ஸ்திரத்தன்மைக்காக பி.ஏ,

சி.இ.ஓ போன்றவர்களுடன் நெருங்கி பழகுகிறாள்.அதையறிந்த விநாயகம் அவளுடன் சண்டையிட்டு அவளிடமிருந்து பிரிய நினைக்கிறான்.பிறகு அவளை கொள்ளவும் திட்டம் போடுகிறான்.


கமலா எதையும் வெளிப்படுத்தாத அழுத்தக்காரி.பிள்ளை நல்லா கத்துனா தான் பால் தரணும் அப்டிங்கற ரகம் அவ.


உண்மையில் ஒரு பெண்ணை அவளுடைய அக ஆழம் வரை புரிந்து கொள்ள உலகில் எந்த ஆண்களாலும் முடிவதில்லை.


கமலாவை அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

கடைசிவரை அவளிடம் அவன் தோற்பவனாகவே அவனைக் கருதிக் கொள்கிறான்.


கடைசியில் அவளை கொல்ல திட்டமிட்டு அதிலிருந்து பின்வாங்கி கமலாவை கொல்லாமல் வந்துவிடுகிறான்.


இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.மனிதனின் மூர்க்கம் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போய்விடக் கூடியதா என்ன.


இந்த நெடுங்கதை முழுதும் கிராமத்து மனிதர்களின் சொல் வழக்குகளை கையாண்டிருக்கிறார் இமையம்.


"எங்கேயோ பெய்ய வேண்டிய மழை காத்தடிச்சா எங்கேயோ போய் பெய்யறதில்லையா?"அந்த மாதிரி தான் கமலா எங்க ஊருக்கு வந்தது.


"மொட்டபாறையில எம்மாம் மழை பேஞ்சி என்ன?அவ காத்து.நானு பஞ்சி"


"விரியன் பாம்பு கிட்ட இருக்கிற விஷத்துக்கு அதுவா பொறுப்பு?"


"கதவ கண்டுபிடித்ததே ஊட்டச் சாத்தி வைக்கத்தான்ங்கிற ரகம் அவ"


"மண்புழுவால நெளியத்தான முடியும்? சீற முடியாதுல்ல?"


"தவளைக்கு வாழ்க வளையில தான?"


"அவளோட நாக்கு எப்பவும் தீச்சட்டி தான்"


"ஒறவுல என்னா தகாத ஒறவு"


"கோழி எங்க மேஞ்சா என்ன? 

எப்படி மேஞ்சா என்ன?என்னிக்கு இருந்தாலும் அது கறியா சட்டியில வெந்துதான ஆகணும்"


"மனசுன்னா என்னா?தெரியல.அது தெரிஞ்சா இம்மாம் தொல்லை இல்லை"


"எந்தப் பேய் பிடித்தாலும் எதனால காலனி பொம்பளைங்களை மட்டும் புடிக்குது? தெரியல".

என நாவல் முழுக்க இப்படி நிறைய சொல்லலாம்.


தன்னுடைய மூன்று தங்கைகளின் கணவர்களின் பெயர்களும் தண்டபாணி,முருகேசன் வேல்முருகன் என முருக பெருமானின் பெயரை வைத்துள்ளார்கள்.


ஆனால் தன்னுடைய பெயரை மட்டும் விநாயகம் என்று எந்த நேரத்தில் தன் தந்தை வைத்தாரோ? தெரியவில்லை  என்று சலிப்பு கொள்கிறான் விநாயகம்.


இச் சமூகத்தில் இன்றும் நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆண் பெண் உறவைப் பற்றிய உண்மைப் புனைவு இந்த நெடுங்கதை.


கமலாவும்,விநாயகமும் நம் தெருவில்,நம் ஊரில் வெவ்வேறு பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.


ஒரு எழுத்து எப்பொழுது மேம்பட்ட கலையாகிறது என்றால் அது இச் சமூகத்தில் நடப்பதை உற்று அவதானித்து பாஷாங்கற்ற படைப்பாக்கும்போது தான்.

அது எங்கதெயில் நிகழ்ந்திருக்கிறது.


இமையம் எதார்த்தங்களை எழுத்தாக்குபவர்.எதார்த்தம் தான் அவருடைய அத்தனை படைப்புகளின் மூல வேர்.

எங்கதெ அவரின் இன்னுமொரு எதார்த்த வாத படைப்பு///


velu malayan

29.9.2020

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்