யூமா வாசுகியின் ரத்த உறவு

 ///யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை முன்வைத்து 



ரத்த உறவு நாவல் இன்று வாசித்து முடித்தேன்.நான் வாசித்த வரை தமிழில் எதார்த்தவாத படைப்புகளில் கண்மணி குணசேகரன் அவர்கள் எழுதிய அஞ்சலை ,இமையம் எழுதிய கோவேறு கழுதைகள், பூமணி எழுதிய பிறகு போன்ற நாவல்கள் வரிசையில் யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை முதன்மையான இடத்தில் வைக்கலாம்.


குடும்ப அமைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் குரூரமும்,வன்முறையும் தான் ரத்த உறவு நாவலின் கதை என்றாலும் அதை எழுதிய விதமும்,மனித பாத்திரங்களின் எதார்த்த சிருஷ்டியும்,யூமா வாசுகியின் அழகிய மொழியும் தான் இந்த நாவலின் பெரும் பலம் என எண்ணுகிறேன்.


மங்களத்தம்மாள் கிழவி போன்ற ஒரு கொடூரக்காரி பாத்திரம் என் நிஜ வாழ்வில் நான் கண்ட ஒரு பாத்திரம். மகன்களுடன் சாராயம் குடிப்பதும், சுருட்டு புகைப்பதும்,எந்நேரமும் வாயில் வசுவுகளை வைத்திருக்கும் ஒரு வெறிக் கிழவி அவள்.


ஆட்டின் கர்ப்பப்பையில் உள்ள குட்டியை அறுத்து குழம்பு வைத்து தின்பதிலேயே கிழவி குரூரம் பிடித்தவள் என்பதை உணரலாம்.


நீண்ட நாள் உயிர்வாழ ஆமைக்கறி தின்கிறாள் கிழவி.வாழ்ந்த வீட்டை சித்தப்பாவிற்கு விட்டு விட்டு ஊரை விட்டுப் போகும்முன் வீட்டின் ஓரம் இருக்கும் பூவை பறிக்கப் போகும் தன் பேத்தி வாசுகியை பூவை பறிக்க விடாமல் செய்யும் குரூரமும்,மூர்க்கமும் கடைசி வரை கிழவியிடம் அப்படியே இருக்கிறது.


எஸ்.எல்.பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கங்கம்மாவை நினைவுபடுத்துகிறாள் 

இந்நாவலில் வரும் மங்களத்தம்மாள் கிழவி.இருவரும் கடைசி வரை மாறாமல் தன் பேரக்குழந்தைகளை, மருமகள்களை சபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.


ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் நஞ்சம்மாவும்,ரத்த உறவு நாவலில் வரும் ரமணியும் அவ்வளவு துயர்களை அனுபவிக்கிறார்கள்.



கதைசொல்லியின் அப்பாவாக வரும் தினகரன் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு குடிகார அப்பனின் பிரதிச்சித்திரம்.தினகரன் தன் மனைவியை,தன் மகள் வாசுகியை,தன் மகனை எல்லோரையும் பாரபட்சமின்றி அடித்து சித்ரவதை செய்கிறார்.


தன் தந்தை தினகரன் குடித்துவிட்டு எத்தனை தடவை தன் முகத்தில் காரி உமிழ்ந்தாலும் தன்னை அடித்து துன்புறுத்தினாலும் சாராயக்கடையிலிருந்து குடித்துவிட்டு வீடு திரும்பாத தந்தையைத் தேடி அலைகிறாள் வாசுகி.


தன் தம்பிகளை தன் அப்பாவின் சித்திரவதைகளிலிருந்து பொத்தி பாதுகாக்கிறாள் வாசுகி.


நிறைய குடும்பங்களில் வாசுகி அக்கா போன்றவர்கள்தான் தம்பிகளுக்கு அம்மாவாக இருக்கிறார்கள். 


பொதுவாகவே குடும்ப அமைப்பு என்பது நான்கு சுவர்களுக்குள் மனிதர்கள் மறைந்தும் தங்களை மறைத்தும் வாழ்ந்து கொள்ளும் ஒரு பயங்கரவாத அமைப்பிடம்.


குடும்ப அமைப்பில் பெண்கள் ஏன் இவ்வளவு துயர்களைத் தாங்கிக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்காத கேள்வியாக இருக்கிறது.


நாவலில் ரமணியை தன்னுடைய கொழுந்தன் தனபாலும்,தன் கணவர் தினகரனும் அடித்து மண்டையை உடைத்து கொடுமை படுத்தும் போது அவர்கள் இரண்டு பேர் மீது போலீசில் அவள் புகார் அளிப்பதையே தவறு என்றும்,ஒரு குடும்பப் பெண் போலீஸ் வாசல் படியை மிதிக்கலாமா என்று ஒரு கேள்வி எழுப்பும் பழைய காலகட்டத்தில் நாவல் நிகழ்ந்தாலும் இன்றும் குடும்ப அமைப்பில் பெண்கள் மண்டை உடைபவர்களாகவே

இருக்கிறார்கள்.


சீட்டு ஆட்டம் விளையாடி போலீசிடம் மாட்டிக் கொள்ளும் ராமு வாத்தியார் அவமானத்தில் முதன்முதலாக குடித்து விட்டு தன்னுடைய மனைவி கல்யாணியினுடைய முன் ரவிக்கையின் பொத்தான்களை கழட்டி மார்பகங்களை கையில் வைத்து இது யாரோட பாச்சி கல்யாணி? என கேட்பதும்


தன் கணவன் தனபாலை போலீஸ் பிடித்துச் செல்லும் போது அவனுடைய மனைவி நாகலட்சுமி மங்களம்மாள் கிழவியை பார்த்து அத்தை நான் பொத்தி வளர்த்த உத்தமனை போலீஸ் பிடித்து போகிறது என்று அழுதவுடன் அதற்கு மங்களத்தம்மாள் கிழவி "அம்மணியம்மாள் ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா" என தன் மருமகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை பாட்டில் உடைக்கிறாள் கிழவி.ஊரில் உள்ள அம்மணியம்மாளுடன் தனபாலுக்கு ரகசிய உறவு உள்ளதை கிழவி தன் மருமகளுக்கு நாசுக்காக குத்திக் காட்டும் இடமும் நாவலில் மெலிதாய் நகைப்பதற்கான இடங்கள்.


நாவலில் வரும் ஐந்து தாரங்களை மணக்கும் முகைதீன் பாய்,

சாக்குக்காரபாய்,அஜீஸ் பாய், ராமநாதன்,செவிடர்,சிங்கப்பூரார் என நிறைய பாத்திர மனிதர்கள் நாம் பார்த்த மனிதர்களை நினைவு படுத்துகிறார்கள்.


நான் வாசித்த வரை ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் நஞ்சம்மாவுக்காகவும்,தோட்டியின் மகன் நாவலில் வரும் சுடலைமுத்துக்காகவும், அவனுடைய மகன் மோகனுக்காகவும்,

ரத்த உறவு நாவலில் வரும் வாசுகி,ரமணிக்காகவும் மட்டுமே என் அடிமனம் அதிகம் அழுதிருக்கிறது என நினைக்கிறேன்.


எதார்த்தவாத படைப்பான ரத்த உறவு கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த படைப்பு.நாடியம்மன் எல்லோரையும் காக்க வேண்டும்///


velu malayan

25.9.2020.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்