உறுபசி

 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நாவலை முன்வைத்து



சமூகத்தின் கண்கள் உற்றுநோக்கி கவனிக்காத உதிரி மனிதர்களின் மீதான விசாரிப்பும்,கரிசனமும் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் என்பது என் எண்ணம்.


மனிதர்களின் வாழ்க்கை மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரணம் உடலின் இருப்பை தான் முடித்து வைக்கிறது. மரணத்திற்கு பிறகும் மனிதர்கள் நினைவுகளாக வாழ்கிறார்கள்.


அப்படி சம்பத் என்பவனின் மரணத்திற்கு பின்  அவனது கல்லூரி நண்பர்கள் மூன்று பேர் சம்பத்துடன் பழகிய நினைவுகளை அவரவர் பார்வையில் மீட்டுக் கொள்வதையே நாவல் விவரிக்கிறது. 


கன்னடத்தில் சிவராம காரந்த் எழுதிய "அழிந்த பிறகு" நாவல்

(கன்னட மூலம்:அழித மேலே)   தன்னுடைய நண்பர் யசுவந்தராயர் இறந்த பின் அவரைப் பற்றிய நினைவுகளோடு 

யசுவந்தராயரின் குடும்பத்தை காண செல்லும் சிவராம காரந்த் பார்வையிலேயே நாவல் எழுதப்பட்டிருக்கும்.


அதேபோல மலையாளத்தில் கல்பட்டா நாராயணன் அவர்கள் எழுதிய

 "சுமித்ரா" நாவல்

(மலையாள மூலம்:இத்ரமாத்ரம்) ஒரு பெண்ணின் மரணத்திற்கு பிறகு அவளது கணவன்,மகள் அவளது உறவினர்கள் பார்வையில் இறந்த சுமித்ரா என்ற பெண்ணின்  நினைவுகளை பேசும்.


உறுபசி என்ற இந்த நாவல் சம்பத் என்பவனின் மரணத்திலிருந்து பின்னோக்கி ராமதுரை,அழகர்,

மாரியப்பன் ஆகிய மூன்று நண்பர்கள் சம்பத் உயிருடன் இருந்த போது சம்பத்துடன் தாங்கள் பழகிய நினைவுகளின் தொகுப்பாக இந்நாவல் விரிகிறது.


நாவலில் வரும் சம்பத் ஒரு சிக்கல்  மனம் கொண்ட மனிதன்.


எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வதைப் போலவே சம்பத் யாரும் அணைத்துக் கொள்ள முடியாத ஒரு கற்றாழையை போல வாழ்ந்து இறக்கிறான்.


பொது சமூகத்துடன் பொருந்திப் போகாத ஒரு மனிதனாகவே அவன் விலகி இருக்கிறான். கடவுள் மறுப்பு கொள்கையாளனாக இருக்கிறான்.


சம்பத் தன்னுடைய 12 வயதில் தன்னுடைய தங்கை ஒரு சுனை நீரில் மூழ்கி இறந்து போவதிலிருந்து தன் அக்கா அவனை விலக்குகிறாள்.தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அவன் செயல்படுவதால் அவன் தந்தையும், குடும்பமும் அவனை வெறுக்கிறது.


நீண்ட நாட்களுக்கு பிறகு நாவலின் கதை சொல்லியான அழகருடன்,சம்பத் அவனுடைய சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என நினைக்கும் போது சம்பத்தின் அப்பா அவனை விறகு கட்டையால் அடிப்பதும்,பிறகு சம்பத் அவனுடைய அப்பாவின் மண்டையை அடித்து உடைப்பதும் என்ற நிகழ்விலிருந்து முற்றிலும் தன்னை தன் குடும்பத்திலிருந்து துண்டித்துக் கொள்கிறான் சம்பத்.


சம்பத்தின் அப்பாவும் அவனுடைய அக்காவும் அவனை ஆழமாக வெறுக்கிறார்கள்.


சம்பத் தன்னுடன் கல்லூரியில் படிக்கும்  யாழினி என்ற பெண்ணை காதலிக்கிறான்.


சம்பத் பொருளியல் வாழ்வுக்கு உகந்தவன் அல்ல என்பதை உணர்ந்து யாழினி அவனை விட்டு விலகி வேறு ஒருவனை மணந்து கொள்கிறாள்.


சம்பத் தன்னுடைய 40 வயதில் நாமக்கல்லில் இருக்கும் போது டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.


காமம் தன்னை மெல்ல மெல்ல கரையான் போல் அரித்து தின்பதால் பெண் பிள்ளைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்வது போல,ஆண் பிள்ளைகளுக்கும் அப்படி செய்தால் நல்லது என்கிறான் சம்பத்.


40 வயது வரை சம்பத்தை காமம் கரையான் போல அரித்து அவன் வீட்டு சுவர்களில் விந்து கறையை ஏற்படுத்துகிறது.காமம் சம்பத்தின் உடலில் உறுபசியாய் ஊறி அவனை வதைக்கிறது.


யாழினியை  காதலிக்கும் போது சென்னை நோக்கிய ஒரு பேருந்து பயணத்தில் யாழினியை முத்தம் கொடுக்க முயற்சி செய்து அவளிடம் தோற்கிறான்.


நாமக்கல்லில் தான் தங்கியிருந்த லாட்ஜ்ஜில் விநாயகம் என்ற ரூம் பாய் முன்னிலையில் ஜெயந்தியை சம்பத் திருமணம் செய்து கொள்கிறான்.


ஜெயந்தியை திருமணம் செய்துகொண்டு ஒரு கிராம பாதையை நோக்கிச் செல்லும் போது பாதையின் ஓரத்தில் உள்ள ஒரு இடத்திலேயே ஜெயந்தி மீது இயங்கி அவனுடைய காம உறுபசியை தணித்துக் கொள்கிறான் சம்பத்.


ஜெயந்தியின் அப்பா கேரளாவிலிருந்து பத்மஜா என்ற இருபத்தைந்து வயது பெண்ணை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொள்கிறார். ஜெயந்தி வேலை முடித்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் பகலிலேயே தன்னுடைய அப்பா தன்னுடைய சித்தியுடன் பகல் புணர்ச்சி கொள்கிறார். ஜெயந்தியின் வாழ்வும் துயர் நிறைந்ததாக இருக்கிறது.


சம்பத்தின் நண்பனாக வரும் மாரியப்பன் தமிழ்த்துறை பயின்றதால் வேலை கிடைக்காமல் உப்பளத்தில் உப்பு இ2Gஅள்ளும் வேலையிலும்,ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையிலும் ஈடுபடுகிறான்.பின்னர் ஒரு சிட்பண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான்.


விலைமாதுகளுடன் விளையாடுபவனாக,குடிகாரனாக, லாட்டரி சீட்டு வாங்கும் ஒரு சூதாட்ட மோகியாக,கடவுளை மறுப்பவனாக தன் வாழ்வைக் கழிக்கிறான்.


சுவர்கள் இல்லாத காலத்தில் வசித்தது போல வீட்டு வெளியில் வாழ்ந்தால் நன்றாகத்தானே இருக்கும் என நாவலில் ஒரு இடத்தில் கூறுவான்.சம்பத் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ நினைக்கும் ஒருவன்.


கடைசிவரை ஜெயந்தியுடன் அவன் குழந்தை பெற்றுக் கொள்வதே இல்லை. ஜெயந்தி ஒரு தடவை கருத்தரிக்கும் போதும் அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று கருவை கலைத்து விடுகிறான்.


தன் தந்தையை அடிக்கும் சம்பத், குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என நினைக்கும் சம்பத் கடற்கரை மணலில் பூ விற்கும் ஒரு சிறுமியிடம் காட்டும் அனுதாபம் தான் சம்பத்தின் அடிமன ஆழம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டும் இடம்.


ஒருவனின் சிறு வயது வாழ்க்கை தான் அவனது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.


சம்பத்தின் பால்யம் தன் தங்கையின் மரணத்திற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் கழிகிறது.


அதுதான் அவனை குடும்பத்திலிருந்து சமூகத்திலிருந்து அவனை ஒரு பிடிப்பற்றவனாக வாழச் செய்கிறது.


சமூகத்தில் நமக்கு தெரிந்து நம்மோடு வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் நிறைய மனிதர்களின் ஒற்றை பிரதியே இந்நாவலில் வரும் சம்பத் என்பவன்.


சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் அனுதின அவஸ்தையை ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைப் போல எளிமையாய் எழுதிச் செல்வது தான் எஸ்.ரா எழுத்தின் மிகப் பெரும் பலமே.


முன்பின் கதை சொல்லல் பாணியில் எழுதப்பட்ட உறுபசி நாவல் மரணத்திற்கு பின்பான சம்பத் என்பவனைப் பற்றி அவன் மீதான அவனது நண்பர்களின் மன மதிப்பீடுகளை நாவல் பதிவு செய்கிறது.


நாவல் முழுதும் வாசித்து முடித்ததும் சம்பத் பற்றிய ஒரு சித்திரமும்,நினைவும் ஒரு மாய சர்பம் போல நம் உள்மனதில் ஊறிக் கொண்டேயிருக்கும்.


இலக்கிய பசி உள்ளவர்களுக்கு கண்டிப்பாக உறுபசி பிடிக்கும்///


Velu malayan

12.9.2020


❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்