Velu malayan

 ///அமர் மித்ராவின் "துருவன் மகன்" நாவலை முன்வைத்து



வங்க மொழி கலை,இலக்கியங்களில் எப்போதும் தன்னை உயரத்தில் வைத்துள்ள மொழி.எந்த மண் செழிப்புற்று இருக்கிறதோ அங்கே கலையும்,இலக்கியமும் கூட செழிப்புற்று வளரும்.


கங்கை நதி பாயும் மண் வங்காளம். ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக ஆங்கிலேயர்கள் குடியேறிய மண் என்பதாலும்,மேற்கத்திய மனிதர்களின் காலடிகளையும்,கலாச்சாரத்தையும்,

அவர்களின் மொழிகளையும் மெல்ல தன்னுள் நுழைத்துக் கொண்ட மண் வங்காளம்.


பதேர் பாஞ்சாலி என்ற சிறந்த திரைப்படம் மூலம் உலகை இந்திய சினிமா நோக்கி உற்று நோக்க வைத்த சத்யஜித்ரே வங்க மண்ணின் ஒரு வார்ப்பு தான்.


இந்திய செவ்வியல் இலக்கியங்களில் முதன்மை இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் படைப்பான 

"ஆரோக்ய நிகேதனம்" நாவல்

 வங்க மொழி தந்ததே.


கலை,இலக்கியத்தில் கங்கையைப் போல் வற்றாத அறிவுச்செழுமையைக் கொண்ட வங்க மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று புனைவே இந்த துருவன் மகன் நாவல்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உஜ்ஜையினி நகரத்தின் நிலத்தை,அதன் மக்களை,அம்மக்களின் அரசனை,அவன் வீழ்ச்சியை அவன் மீது நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சியை,அந்நிலம் கண்ட மண்வெடிக்கும் வறட்சியை நம் கண் முன் காட்டும் சரித்திர புனைவுச் சித்திரம் இந்நாவல்.


சிவநாதர் எனும் வைசிய குல பெரியவரின் நண்பன் துருவனின் மகன் கணிகை தேவதத்தை மீது ஆசைப் பட்டான் என்பதற்காக வணிகர் சுபக் தத்தராலும் அவனுடைய அடியாள் உதங்கனாலும் அவந்தி நாட்டின் தலைநகர் உஜ்ஜையினியிலிருந்து அடித்து துரத்தப்படுகிறான்.


ஹீணர்களை எதிர்த்து செல்லும் படையெடுப்பில் சிவநாதரின் மகன் கார்த்திக்குமார் காணாமல் போகிறான்.

கார்த்திக்குமாரின் மகள் கந்தவதி துருவன் மகனை காதலிக்கிறாள். 

தன் கணவர் கார்த்திக்குமார் எப்படியும் திரும்பி வருவார் என அவனது மனைவி ரேபாவும்,துருவன் மகனை எதிர்நோக்கி கந்தவதியும் காத்து கிடக்கிறார்கள்.


இடையில் கந்தவதி மீது அரசவையில் பணிபுரியும் உத்தபநாராயணன் ஆசை கொண்டு அவளை அடைய நினைக்கிறான்.

கணிகை தேவதத்தை மீது வணிகர் சுபக் தத்தருக்கு ஆசை.


ஆனால் தேவதத்தை துருவன் மகன் மீது ஆசை கொள்கிறாள்.


குழந்தை பாக்கியம் இல்லாத அரசர் பர்த்ருஹரி ஒரு நாள் இரவு மகா காலேஷ்வரர் கோயில் தேவதாசி லலிதாவின் ஆசை தூண்டுதலால் அவளுடன் கூடி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் இவ்விஷயம் பரவி விடுகிறது.அரசர் தேவதாசி லலிதாவை கற்பழித்து விட்டார் என்று.


அரசர் மீது வெறுப்பு கொண்ட அரசி பானுமதி அரசனின் மாற்றாந்தாய்க்கு பிறந்த தம்பி சேனாதிபதி விக்ரம் பக்கம் சென்று விடுகிறாள்.


சுபக் தத்தர் கூறுவதால் உதங்கன் சூத்திரர்கள் வசிக்கும் சேரிக்கு தீ வைத்து விடுகிறான்.


சூத்திரர்களின் கோபம் சுபக்தத்தர் மீது திரும்பக் கூடாது என அரசவை புரோகிதரும்,சேனாதிபதி விக்ரமனும் உதங்கனை சூத்திரர்களின் முன்னிலையில் அவனை தீயிட்டு கொழுத்தச் சொல்லி கொல்கிறார்கள்.

உதங்கன் ஒரு மலைவாழ் இனத்தவன். 



அவன் குழந்தையாக இருக்கும் போதே சுபக் தத்தர் அவனை எடுத்துவந்து வளர்த்தி அவனை ஒரு கொடுமைக்காரனாக உருவாக்குகிறான்.


உதங்கனை கொன்ற பிறகு சுபக் தத்தரின் மனம் குற்ற உணர்ச்சியில் உதங்கனுடன் உரையாடுவது போல் நாவலில் வரும் இடம் முக்கியமான ஒன்று.


ஒரு கட்டத்தில் வணிகர் சுபக் தத்தர் உஜ்ஜையினியை விட்டு வணிகம் செய்ய பஹ்ஹாலி என்ற நாட்டிற்கு சென்று விடுகிறார்.


ஒரு கட்டத்தில் உஜ்ஜையினி மழையின்றி கடுமையான வறட்சிக்கு உட்படுகிறது.

ஆறுகள்,ஏரிகள் மழையின்றி வற்றிப்போகிறது.வறட்சிக்குக் காரணம் அரசனுக்கு குழந்தையின்மையும்,

அரசனின் முறை தவறிய நடத்தையும், நிர்வாகத்திறனற்ற திறமையும் தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.


ஒருபுறம் கந்தவதியும்,சிவநாதரும் துருவன் மகன் உஜ்ஜையினியை விட்டு போனதிலிருந்து தான் மழை பெய்யவில்லை,

வறட்சி உண்டானது என்கிறார்கள். திருமணமான யாரும் கர்பம் தரிப்பதில்லை.

வறட்சியை மக்களின் உணர்ச்சிகளைக் கூட வற்றச் செய்து விடுகிறது.

வறட்சி அதிகமாவதால் மக்கள் உஜ்ஜையினியை விட்டு வெளியேறுகிறார்கள்.


சூத்திரக் கிழவன் பராசரர் சூத்திர மக்களை வைத்து ரத்னகர் ஏரியை தோண்டி நீர் வர வைக்கிறார். மழை வர தவம் செய்கிறார் பராசரர்.மற்ற ஏரிகளிலும் நீர்வரவைக்க சூத்திரர்களை சிறைபிடிக்கிறான் உத்தபநாராயணன்.


படைத்தலைவனாக பதவி உயர்வு பெறும் உத்தப நாராயணன் ஒருநாள் இரவு தேவதத்தை வீட்டிற்கு சென்று நான் தான் அரசன் என பொய் சொல்லி தேவதத்தையை கற்பழித்து கொன்று விடுகிறான்.பழி அரசன் பர்த்ருஹரி மீது விழுகிறது.


காலத்தை கணித்து கூறும் ஆச்சாரியார் விருஷபானு உஜ்ஜையினியை விட்டு நடந்து செல்லும் போது காட்டில் இறந்து கழுகு,நரிகள் அவர் உடல் தின்ன இறந்து போகிறார்.அவருடைய சிஷ்யன் தாமிரதுவஜன் துருவன் மகனைப் பற்றி கணித்து கூறி கந்தவதியுடன் பழகி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.


சிவநாதர்,ரேபா,தாமிர துவஜன்,கந்தவதி ஆகியோர் உஜ்ஜையினியை விட்டு ஷிப்ரா நதி நோக்கி செல்கிறார்கள்.


கடைசியில் வெளிநாட்டிலிருந்து அரசரைப் பார்க்கவும்,மழை வர வைக்க என்னால் முடியும் என்று கூறி மாயவித்தை செய்யும் பைத்திய உருவில் ஒருவன் வருகிறான்.


அரசனின் அறியாமையை சுட்டிக் காட்டுகிறான்.நாட்டில் நடக்கும் எதுவும் அரசருக்கு தெரிவதில்லை.


குற்ற மற்ற மக்களை காப்பாற்றுங்கள். சூத்திரர்களை காப்பாற்றுங்கள். கணிகைகளை காப்பாற்றுங்கள். ஆபத்திலிருப்பவர்களின் பக்கம் நிற்பதுதான் வறட்சியை எதிர்ப்பதாகவும் என அரசரிடம் கூறுகிறான். 


அரண்மனையை விட்டு ஷிப்ரா நதிக்கு வாருங்கள் அரசே இரவு பேசுவோம் என அந்த பைத்தியக்காரன் கூறுகிறான்.


அரசன் அரண்மனையை விட்டு வந்தவுடன் அரண்மனையை அரசரின் தம்பி விக்ரமன் கைப்பற்றிக் கொள்கிறான்.


அரசருடன் மாயஜாலம் செய்யும் பைத்தியக்காரன் பேசிக் கொண்டிருக்கும் அந்த இரவில் ஷிப்ரா நதியில் வந்து ஓய்வெடுக்கும் தாமிர துவஜனும்,கந்தவதியும் உடல் இணைவில் கலக்கிறார்கள். 


அப்போது கந்தவதி அதோ சப்தரிஷிகளைப் பார்க்கிறேன். அருந்ததியைப் பார்க்கிறேன்.அதோ துருவ நட்சத்திரம் என்கிறாள்.


வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் அந்த ஒருவன் அரசன் முன் காளிதாசர் இயற்றிய மேகதூதம் நூலிலிருந்து முதலிரு அடிகளை மந்திரமாக ஓதுகிறான்.அப்போது இடியோசை கேட்கிறது.காற்று குளிர்ச்சி அடைகிறது நனைந்த மண்வாசனையை அரசரால் உணர முடிந்தது.


மழை வந்துவிட்டது.என்ன ஆச்சர்யம் மழை வந்துவிட்டது என தாமிரதுவஜன் கந்தவதியிடம் கிசுகிசுத்தான் என்பதுடன் நாவல் நிறைகிறது.


மழையை மந்திரம் ஓதி வரவழைத்தவன் வேறு யாருமல்ல அவன் தான் துருவன் மகன்.


அரசனின் அறியாமையும், நிர்வாகத்திறன் பொய்த்தலும் தான் அந்த நாட்டு மண்ணில்,அந்த நாட்டு மக்களின் மனதில் உண்மையான வறட்சியை உண்டுபண்ணுகிறது என்பதை பேசுகிறது நாவல்.


சூத்திரர்கள் சேரியை உதங்கன் தீயிட்டு கொளுத்தும் போதும்,துருவன் மகனை சுபக் தத்தர் அடித்து துரத்தும் போதும், கந்தவதியை மணந்து கொள்ள அவளை உத்தபநாராயணன் வற்புறுத்தி மிரட்டுவது என எதுவும் தெரிவதில்லை அரசனுக்கு.


அரசன் பர்த்ருஹரிக்கு எதிராக மிகப் பெரிய சூழ்ச்சி நடக்கிறது.சேனாதிபதி விக்ரமன்,புரோகிதர்,உத்தபநாராயணன் என எல்லோரும் அரசருக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள்.

கணிகை தேவதத்தையை உத்தபநாராயணன் தான் கற்பழித்து கொள்கிறான்.


அரசனின் நிர்வாக வறட்சி எப்படி மக்களை பாதிக்கிறது என்பதையும் உஜ்ஜையினி நகரின் நிலச்சித்திரத்தையும் நம் கண் முன் காட்டுகிறது இந்நாவல்.


பெ.பானுமதி அவர்களின் மொழிபெயர்ப்பு வாசிக்க எளிதாக உள்ளது.ஆனால் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்.பொதுவாக சரித்திரப் புனைவுகளை நான் விரும்புவதுமில்லை. வாசிப்பதுமில்லை.ஆனால் துருவன் மகன் நாவல் நல்ல வாசிப்பனுவம் மிக்க நாவல்.வாசிக்கலாம்///


Velu malayan

13.8.2020


❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்