///இரா.ஆனந்தகுமார் எழுதிய நான்காம் தடம் நூலை முன்வைத்து

மனம் மேய்ச்சல் மாட்டைப் போல இடைவிடாது அலைந்து கொண்டும், எதன் மீதாவது தன்னை முட்டிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டும் இருப்பதிலிருந்து வெளியேற ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை,ஆன்மீக ஞானிகளின் உரையாடல்களை வாசிக்கத் தொடங்கினேன்.

அப்படி என்னைப் பெரிதும் பாதித்தவர் ரமண மகரிஷி.அவருடைய Who Am I?
(நான் யார்?) வாசித்தது என் அகத்திறப்பிற்கான வழி என்றே சொல்லலாம்.

தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு,அவர் நிகழ்த்திய உரைகள் என என் மனம் அவரை உற்று அவதானிக்கத் தொடங்கியது.

அதன் பிறகு நான் விரும்பி வாசித்தது ஓஷோவின் நூல்கள்.ஓஷோ பயணங்களின் மூலம் பல்வேறு மனிதர்களின் மதங்களை கடந்த அகத் தேடலில் வாழ்ந்தவர்.

நாம் இதுவரை கட்டிவைத்திருந்த அத்தனை நம்பிக்கைகள் மீதும் கல்லெறிந்தவர்.

எதுவெல்லாம் புனிதம் என நம் பொது
புத்தி பொத்தி வைத்திருந்ததோ அதை அத்தனையும் தன் உள் மன உரைகளால் உதைத்தவர்.

தன் உரைகளில் காமத்தை வெளிப்படையாய் பேசிய கலகக்காரர்.

நான் விரும்பி வாசிக்கக் கூடிய மற்றொருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

மனிதர்களுக்கு தேவை மாற்றமல்ல விழிப்புணர்வே என்று கூறியவர்.

இப்படி இந்திய ஞான மரபைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை போன்று அகத் தேடல் கொண்ட அர்மேனிய நாட்டு ஞானி  ஜார்ஜ் இவானோவிச் குர்ஜிப்பின் வாழ்க்கைப்பயண சாகசமே இந்த புத்தகம்.

எல்லா மனிதர்களையும்,எல்லா மதங்களையும் கடந்து அக தாகம் கொண்டு உண்மையைத் தேடியலைந்த ஒரு போக்கிரி ஞானியின் கதை இது.

தன் வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக் களமாக்கி பல்வேறு நாடுகள்,பல்வேறு மனிதர்கள்,பல்வேறு மதங்களை தேடி அதில் லயத்து பின் அதை விட்டு விலகியவர் குர்ஜீப்.

உண்மையைக் கண்டறிவதின் முடிவு என்பது அறிதலும் அல்ல,உணர்வதும் அல்ல,அனுபவித்தலுமல்ல வெறுமனே கைவிடுதல் மட்டுமே என்கிறார் குர்ஜுப்.

ஜார்ஜியா,துருக்கி,எகிப்து என பல்வேறு நாடுகளுக்கு சாகசப் பயணம் செய்யும் குர்ஜிப் கடைசியாக தன் பயணத்தை இந்தியாவில் முடிக்கிறார்.

பயணம் மேற்கொள்வதற்கான பணத்தை தன்னுடைய மதி நுட்பத்தால் புத்தகம் விற்பவனாக,சுற்றுலா வழிகாட்டியாக, பழுதான பொருட்களை சரி செய்து கொடுப்பவனாக என பல்வேறு தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்கிறார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள பெரா எனும் பாலத்தின் கீழ் குதித்து கடலில் மூழ்கி பாஷா என்ற பெரும் பணக்காரரின் வைர ஜெபமாலையை எடுத்து தருவதால் அவரிடமிருந்து பெறும் பெரும் சன்மானம்,

சாதாரண குருவிகளை பிடித்து அதன் மீது வண்ணம் அடித்து உயர்ரக பறவை என்று விற்பது என எல்லா போக்கிரி வேலைகளையும் செய்கிறார் இந்தப் போக்கிரி ஞானி.

பருவ வயதில் கயோன் என்று பெண்ணுக்காக குர்ஜிப்பும்,
தன் நண்பன் கார்பெங்கோவும் பங்கு கொள்ளும் ட்யூயல் எனும் ஒரு வித துப்பாக்கிச் சண்டை திகில் நிறைந்த ஒன்று.

போலந்து நாட்டு பெண்ணான வித்வித்ஸ்கயா உடனான உறவு, அவளுடன் மேற்க்கொள்ளும் பயணம் சுவாரஷ்யமானது.

குர்ஜிப்பின் ஞான வாசலை  திறந்து விடும் அருட்தந்தை போர்ஷ் அவனுடைய நண்பர்களாக வரும் யெலோவ்,போகா செவ்ஸ்கி,இளவரசர் யூரி என பல்வேறு மனிதர்கள் உடனான உரையாடல் மற்றும் பயணம் என நாவல் நகர்கிறது.

ஒட்டுமொத்த உலக ஞான மரபுகளின் மூன்று பிரிவுகளான துறவியின் பாதை,பக்கிரியின் பாதை,யோகியின் பாதை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மற்றும் அதைத் தாண்டிய ஒரு நான்காம் பாதை தான் குர்ஜிப் கண்டடைய முனைந்தது.

புத்தகத்தின் முகப்பு அட்டையை உற்று நோக்கும் போது அதில் ஒரு சூபி ஞானி நடனமாடிக் கொண்டிருப்பதும்,
ஒரு பரதநாட்டிய உருவமும்,அதன் பின்னாடி புத்தரின் உருவமும்,
துப்பாக்கி ஏந்திய ஒருவனின் உருவம், ஒரு அழகிய பெண் உறங்கிக் கொண்டிருப்பது போலவும் இருப்பதைக் காணலாம்.

சூபி நடனம்,கவ்வாலி இசை,பரதம் என பல்வேறு நாட்டு நடன,இசைகள் மீது ஈர்ப்புக் கொண்டு அதனை உற்று அவதானித்து நான்காம் தடத்தை அதன் வழியே அடைய முனைந்திருக்கிறார் குர்ஜீப்.

ரமண மகரிஷி ஒரே இடத்தில் அமர்ந்து பெற்ற உண்மை ஞானத்தை உலக நாடுகளெல்லாம் பயணம் செய்து பெற்றவர் குர்ஜிப்.ரமண மகரிஷியின் நெறி அத்வைதம் என்றால் குர்ஜிப்பின் நெறி நான்காம் தடம்.

நாவலில் கையாளப்பட்டுள்ள சில தத்துவ சொல்லாடல்கள்

"மனிதன் என்பவன் ஒரு முடுக்கி விடப்பட்ட எந்திரத்தை தவிர வேறொன்றுமில்லை"

"நான் இருக்கும் போது மட்டுமே வாழ்வென்பது நிஜம்"

''என்னுடைய சுயப் புரிதலை இன்னொருவனுக்கு கடத்த முயற்சிப்பது என்பது ரொட்டிகளைப் பற்றி விஸ்தீரணமான விளக்கத்தின் மூலம் ஒருவனைப் பசியாற சொல்வதைப் போன்றது"

 "காற்று என்பதும் ஒரு உணவேயன்றி வேறில்லை" என நிறைய இருக்கிறது புத்தகத்தில்.

தன்னுடைய அக தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கும்,மேலான உண்மையை அறிந்து கொள்வதற்கும் தன்னுடைய வாழ்க்கையை சாகசம் நிறைந்த பயண களமாக மாற்றிக் கொண்ட குர்ஜிப்பின் இந்த வாழ்க்கை வரலாறு நூல் ஆன்ம தாகம் கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்///

Velu malayan
28.7.2020

❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்