///எழுத்தாளர் சயந்தன் எழுதிய "ஆறாவடு" நாவலை முன்வைத்து

ஈழப் போருக்கு முன்பாகவே புலம்பெயர்ந்து வாழக்கூடிய நிறைய தமிழர்களின் குற்றவுணர்ச்சியோடு சயந்தன் தன்னுடைய தாழாத குற்றவுணர்ச்சியையும் ஆற்றிக்கொள்ள எழுதப்பட்டதே ஆதிரை நாவல்.

ஆதிரை நாவலின் கடைசி அத்தியாயத்தில் சந்திரா டீச்சரிடம் பயின்ற பழைய மாணவனாகவும்,
சந்திரா டீச்சர் எப்படி இறந்தார் என கேட்கும் பத்திரிகையாளராகவும் சயந்தன் வருவது அந்த ஒரு குற்ற  உணர்ச்சியின் உறுத்தல் தான்.

அரசியலற்ற மக்களின் வாழ்வில் போர் நிகழ்த்திய பேரழிவையும்,
போரின் வலியைப் பதிவு செய்ததிலும் தமிழ் பேரிலக்கியங்களில் ஆதிரை ஒரு வலுவான வார்ப்பு என்பது என் எண்ணம்.

முப்பதாண்டு கால தமிழீழ மக்களின் போர் அச்சுறுத்தல்,அலைக்கழிப்புகள் இடப்பெயர்வுகள்,இனப்படுகொலைகள் என இறுதி யுத்தம் வரையிலான இழப்புகளை ஆதிரை நாவல் பேசியது.

ஆறாவடு நாவல் 1987 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையேயான காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் புனைவுக் கதை.

புலிகள் இயக்கத்தில் இருக்கும் பொழுது தனது வலது காலை இழந்த ஐயாதுரை பரந்தாமன் என்ற இயற்பெயர் கொண்ட அமுதன் இத்தாலிக்கு செல்ல மீன்பிடி வள்ளத்தில் முன்னோக்கி பயணிப்பதும் அவனுடைய முன் வாழ்க்கைப் பற்றி அவனது நினைவுகள் பின்னோக்கி பயணிப்பதும் என 21 அத்தியாயங்களைக் கொண்டது நாவல்.

இத்தாலி புறப்பட்டுச் செல்ல நீர்கொழும்புக் கடற்கரையில் டிராவிலிங் பேக்குடன் அமர்ந்திருக்கும் அமுதன் தன்னுடைய பேக்கில் வைத்துள்ள ஆல்பத்தில் இரண்டு அம்மாவின் படங்களும்,இருபத்தியிரண்டு அகிலாவின் படங்களும் இருந்தன எனும் போதே அகிலா அவனுக்கு எவ்வளவு  முக்கியம் என புரிந்து விடுகிறது.
அகிலா அமுதனின் காதலி.
அவள் தான் 12 லட்சம் ரூபாய் ஏஜென்ஸிகாரனுக்குக் கொடுத்து அவன் இத்தாலி செல்ல உதவுகிறாள்.

ஆதிரை நாவலில் போரின் அச்சத்தையும்,அழிவுகளையும் பொதுமக்களின் பார்வையில் மட்டுமே காட்டியிருப்பார் சயந்தன்.
இயக்கத்தைப் பற்றி,இயக்கக் கட்டுப்பாடுகள் பற்றி,இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகள் என ஆதிரையில் பேசாததை ஆறாவடுவில்
பேசியிருக்கிறார்.

நாவலின் நான்கு இடங்களில் வாசிப்பவரின் மனம் கண்டிப்பாய் கனத்துப் போகும்

 ஒன்று:

தன்னை வன்புணர்வு செய்ய வரும் இந்திய ஆர்மிக்காரனை நிலாமதி தன் மார்புக்கு இடையில் ஒளித்து வைத்திருக்கும் கிரானைட் குண்டுகளை வெடிக்கச் செய்வது

இரண்டு:

தன் தாய் உடற்ச்சதைகள் சிதறி இறப்பதைக் கண்டு மனப்பிறழ்வாகி சுற்றித்திரியும் தேவியை இந்திய ஆர்மிக்காரர்கள் சாப்பாடு தருகிறேன் வா என்று கூட்டிச் சென்று வல்லாங்குச் செய்து அவளை கர்பிணியாக்கி எட்டு மாத கர்பிணியாக இருக்கும் போது அவள் வயிற்றில் குண்டு துளைக்கக் கொன்று கிணற்றுக்கேணியில் வீசுவது

மூன்று:

யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் முற்றுகையிடுவதால் யாழ்ப்பாணத்தை விட்டு தன் மூன்று பெண் பிள்ளைகளையும் மனைவியையும் அழைத்துச் செல்லும் சிவராசன் படுத்தப்படுக்கையாக இருக்கும் தன் 80 வயது தாயை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாத சூழலில் ஆறு மாதம் கழித்து வீடு திரும்பும் போது "கட்டிலில் இன்னமும் ஊனம்  வடிந்து கொண்டிருந்த எலும்புக்கூடொன்று புழுக்கள் நெளிய நீட்டி நிமிர்ந்து கிடப்பதைப் பார்த்து" அம்மா என்று சிவராசன் கதறி அழுவது

நான்கு:

இத்தாலி செல்ல வள்ளத்தில் அமுதனுடன் பயணிக்கும் சிறுவனொருவன் உடல் நிலை சரியில்லாமல் இறந்து போக அவனை ஒரு சேலையில் கட்டி கடலில் பிணமாக போடுவது.

சண்டையை மட்டுமே விரும்பும், இயக்கத்தில் இருப்பது பெருமையாக கருதும் அமுதன் முல்லைத்தீவு சண்டையில் இறந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான ஆர்மிக்காரர்களின் உடல்களை எரிக்கும் முன் அவர்களின் பர்சில் அம்மாவின்,மனைவியின், ஏதோரு ஒருவரின் புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்தும்,இறந்த ஒரு ஆர்மிக்காரனின் விரல்கள் வெள்ளைச் சிறுமி ஒருத்தியின் புகைப்படத்தை இறுக்கி பிடித்திருப்பதை கண்டு அன்று இரவு நித்திரைக் கொள்ளாமல் தவிக்கிறான்.

அமுதன் இயக்கத்திலிருக்கும் போது கடலில் நீந்தி வரும் ஒரு ஆர்மிக்காரனை அமுதனுடனிருக்கும் இயக்கத் தோழன் அவனை சுடுடா எனக் கூறும்போது அமுதன் கை நடுக்கத்துடன் சுடாமல் அவனை தப்பிக்க விடுகிறான்.

அப்போதுதான் அவனது வலது கால் தாக்குதலில் சிதைந்து போகிறது. அவனுக்குள் எழும் குற்ற உணர்ச்சியும் பாவ உணர்ச்சியும் தான் ஆர்மிக்காரனை தப்பிக்க விடுகிறான்.

ஆர்மிக்காரனுக்கும் ஒரு அம்மாவோ,
ஒரு மனைவியோ,அழகான ஒரு மகளோ இருக்கக் கூடும் என நினைக்கிறான்.
அன்றிரவு அமுதனின் நித்திரையின் கனவில் வெள்ளைச் சிறுமியொருத்தி பூங்கொத்துடன் இவனை அண்ணாந்து பார்ப்பது போல் கனவு காண்கிறான்.

நாவலில் இயக்கத்தின் அரசியல் பிரிவில் அமுதன் பணிபுரியும் போது இயக்கத்திற்கான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பில் இருக்கும் நேரு ஐயா உடனான உரையாடல்கள் முக்கியமானவை.

நாவலில் யுத்தம் விரும்பாத,அரசியலற்ற பொது மக்களின் குரலாக நேரு ஐயாவின் பாத்திரம் உள்ளது.

நேரு அய்யா புலிகள் இயக்க அரசியல் பிரிவில் வேலை செய்தாலும் இயக்கத்தின் மீதான கொள்கைகளில் எதிர் நிலைப்பாடு கொண்டவர்.

இயக்கத்தை குறை சொல்லிக்கொண்டு பின் ஏன் இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என அமுதன் நேரு ஐயாவிடம் கேட்கும்போது பணத்திற்காகத்தான் என்று கூறுகிறார். உடனே அமுதன் ராணுவம் பணம் கொடுத்தாலும் செய்வீர்களா என்பதற்கு ஓம் என்கிறார்.

"நீங்கள் இனத்தின் சுதந்திரத்திற்காக என்று சொல்லிக்கொண்டு தனிமனித நிறுவனங்களில் தலையிட்டு தடுக்கிறீர்கள் அது சரியில்லை"

"கேள்வி கேட்க வேண்டும் அது ஒரு மனிதனின் உரிமை.அதே மாதிரி ஆகக்குறைந்தது கேள்வி கேட்பதை நீங்கள் அனுமதிக்க வேண்டும் அது உங்களுடைய கடமையும் கூட" என நேரு ஐயா இயக்கத்தின் முரண்பாடுகளை அமுதனிடம் கேள்வி எழுப்புகிறார்.

அகிலா அவளுடைய அப்பாவுக்கு ஒரே பெண்.அவளுடைய காதலை அவருடைய அப்பா ஏற்றுக்கொள்கிறார்.அகிலாவின் அப்பா அமுதனிடம் இயக்கத்தை விட்டு எப்போது வெளியே வருவீர்கள் என கேட்டுவிட்டு சப்பாத்து (ஷு) அணியாத அமுதனின் வலது செயற்கைக் காலை உற்றுப் பார்த்து அவர் மனம் தேடுவது ஒரு சராசரி தகப்பனாக தன் மகளை இவன் வைத்து காப்பாற்றுவானா?என்ற நம்பிக்கையையே.

32 நாள் பயணத்திற்கு பிறகு வள்ளம் ஒரு கப்பலில் மோதி உடைந்து அமுதனும் அவனுடன் பயணித்த அனைவரும் இறந்து போகிறார்கள்.அகிலன் கடலில் மூழ்கி இறப்பதற்கு முன் அவனது நினைவில் கடலில் நீந்தி வரும் ஆர்மிக்காரன்,வெள்ளை நிறச் சிறுமி ஒருத்தி,அகிலா,அவனது அம்மா என அனைவரும் வந்து போகிறார்கள்.

அடுத்த கரையில் ஒதுங்கும் அமுதனின் வலது செயற்கைக்கால் இத்ரிஸ் என்ற எரித்திரிய போராளி கிழவனுக்கு கிடைக்கிறது.செயற்கை கால்கள் இல்லாமல் ஊன்றுகோலில் நடக்கும் கிழவனுக்கு இந்த செயற்கைக் கால் கிடைத்ததிலும்,அது தனக்கு பொருந்தி போவதிலும் அதை முத்தமிட்டு மகிழ்ச்சி கொள்கிறான்.

ஒவ்வொரு கரையிலும் ஒரு தேச விடுதலைக்கான வரலாறு இருக்கிறது.போரில் பாதிக்கப்பட்டு தோல்வியடைந்தவனின் கதை இருக்கிறது.எதித்தோப்பியாவிற்கும், எரித்திரியாவுக்கும் நடக்கும் பிரச்சனையில் தனி எரித்திரிய விடுதலை தேசம் காண முப்பதாண்டுகளுக்கு முன் எரித்திரிய விடுதலை முன்னணியில் தன்னை இணைத்து கொண்டவர் இத்ரிஸ்.

தமிழீழ விடுதலைக்காகப் போராடி வலது கால்களை இழந்த அமுதனைப் போலவே எரித்திரிய தேச விடுதலைக்காக தனது வலது காலை இழக்கிறான் இத்ரிஸ்.

இலங்கைக்கு சிங்கள ராணுவத்திற்கு எப்படி இந்தியா துணை புரிந்ததோ அதே போல எதித்தோப்பியாவிற்கு ரஷ்யா துணைபுரிகிறது.ஒவ்வொரு கடலின் கரையிலும் இத்ரிஸ் போன்றவர்களின் நிறைவேறாத விடுதலைக் கனவுகள், கதைகள் இருக்கவே செய்கிறது.

இயக்கத்திலும், இயக்கத்திற்கு வெளியேயும் சாதியம் இருந்ததை இரண்டு இடங்களில் காட்டுகிறார் சயந்தன்.ஒன்று கோயிலில் அகதியாய் தங்கியிருக்கும் ஒரு இளைஞன் கோயில் கிணற்றில் குளிப்பதை பார்த்து கோயில் பராமரிப்பாளர் அந்த இளைஞரை எளிய பறை நாயே என்று திட்டுவது,
பின் இளைஞன் இயக்கத்தை சேர்ந்தவர்களை அழைத்து வந்து தன்னை சாதி சொல்லி பேசியவனை மிரட்டுவது.

இரண்டாவது:

பள்ளி நாடகத்தில் பண்டாரவன்னியனாக நடிப்பவனை காக்கை வன்னியனாக நடிக்கும் அமுதன் தூஷணமாக பேசுவதால் பள்ளி அதிபர் அமுதனை எளிய பறை நாயே தூஷணம் பேசுகிறாயா என்று அடிக்கும் இடங்கள் என சாதியத்தை பதிவு செய்கிறார்.

சயந்தனிடம் எனக்கு மிகப் பிடித்தது அவருடைய அங்கத மொழியாடல் தான். அமுதனுடன் நீர் கொழும்பிற்கு செல்லும் 14 வயது சிறுவனை பார்த்து சிங்கள போலீஸ் ஒருவன் கீழ் கண்டவாறு கூறுவது:

"தமிழர்கள் சின்ன வயதிலேயே துவக்கையும்,சாமானையும் கையில் தூக்குகிறார்கள்"

அமுதன் ஒரு தடவை வயிற்றில் குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போது நர்ஸ் ஊசி போட வரும் போது மயக்க நிலையில் "எடி சந்திரிக்கா வேசை உனக்கு இருக்கடி ஒரு நாளைக்கு" என திட்டியிருந்தேனாம். அவவைத் திரும்ப பார்த்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் இடம் குபீர் சிரிப்பிற்கு உத்ரவாதம்.

அமுதன் வள்ளத்தில் பயணிக்கும் ஒரு நாள் மலம் கழிக்கும் போது மலத்துண்டுகள் தொப் தொப் என்று கடலில் விழுகிற சத்தத்தை கேட்டு அவன் நினைவுக்கு வரும் பாட்டு "ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று" என்பதாகட்டும்

சண்டை என்று வந்துவிட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுன்சும்,வாயிலிருந்து தூஷணமும் வந்து கொண்டேயிருக்கும் என்பதால் சண்டை வீடியோக்களை எடிட் செய்து பின்புற சத்தமாக பாட்டு சேர்த்து கொள்வது என்பது

அகிலாவை ஒரு தலையாக காதலிக்கும் மணிவண்ணனுக்கு விதிக்கும் ரூபாய் 365 தண்டனைக் கட்டணத்தை ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என வந்து செலுத்தி விட்டுப் போ என போலீஸ் கூறுவது

இயக்கம் பொதுமக்களிடமிருந்து நீலப்பட சிடி'க்களை பறிமுதல் செய்யும் போது அதில் ராமாயணம்,மகாபாரதம் என எழுதப்பட்டுள்ளதாகட்டும் அதில் ஒரு சிடியில் மட்டும் பாய்ஸ் என்று எழுதப்பட்டு இயக்கம் ஷங்கர் எனவும் இசை ஏ ஆர் ரகுமான் எனவும் எழுதப்பட்டுள்ளது என நாவல் முழுக்க பகடியை பயன்படுத்துகிறார் சயந்தன்.

இயக்கத்தை விட்டு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இயக்கம் கொடுக்கும் தண்டனை,இயக்கத்திற்கு எதிராக இயங்குபவர்களை இயக்கம் சுட்டுக்கொல்வது,வள்ளத்தில் அமுதனுடன் பயணம் செய்யும் சிங்கள ராணுவத்தில் பணிபுரிந்த பண்டாரவின் கதை,இயக்கத்தில் பணிபுரிந்த பெண்கள் வெளியில் வந்து திருமணம் செய்துகொண்டாலும் கணவனிடம் அடி வாங்கும் தமிழ் பண்பாட்டு எதார்த்தம் என நாவல் நிறைய விடயங்களைப் பேசுகிறது.

வடிவக் கச்சிதம்,சொல்லப்பட்ட முறை, மொழியாளுகை என இலக்கிய அழகியல் மேலோங்கிய படைப்பாய் இருக்கிறது ஆறாவடு.

ஆறாவடுவும்,ஆதிரையும் ஈழ இலக்கியத்தின் இரட்டைக் காப்பியங்கள் என்றே சொல்லலாம்.தேய்ந்து போன ஒரு இனத்தின்,இயக்கத்தின் சாட்சியமாக இருக்கிறது சயந்தனின் இவ்விரு படைப்புகளும்///

Velu malayan

20.7.2020

❤❤❤❤

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்