///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "பதின்" நாவலை முன்வைத்து

நாம் ஒவ்வொருவருக்குள்ளும்  அவரரவர்களுடைய பால்ய பருவ நினைவுகள் கட்டாயம் இருக்கும்.

நாம் தொலைத்த அந்த பால்ய காலத்தின் நினைவுகளில் நம் மனம் வாழ்ந்து பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது இந்த பதின் நாவல்.

நம் அறிவாளித்தனத்தையும்,
மேதாவி மனதையும் கழட்டி வைத்துவிட்டு நமக்குள் மிச்சமிருக்கும் குழந்தைத்தன மனதின் கண்களால் வாசிக்க வேண்டிய நாவல் இது.

இந்நாவலில் வரும் நந்துவும்,சங்கரும் யாரோ இரண்டு சிறுவர்கள் அல்ல. நீங்களும்,நானும் தான்.

சிறுவர்களின் உலகம் தனித்துவமானது.அங்கே பெரியவர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது.

நாம் பெரியவர்களாக வளர வளர நமக்குள்ளிருக்கும் குழந்தைத்தனங்கள் வற்ற ஆரம்பித்து விடுகிறது.

என் பால்ய காலம் நடு நாக்கில் வைத்ததும் கரைந்து இனிக்கும் சோன் பப்டியைப் போன்றது தான்.ஆனால் அதை கசப்பாக்கியது பள்ளி தான்.

ஒரு நாள் எங்கள் ஊர் வறட்டாறு மணலில் விளையாடிக் கொண்டிருந்த என்னை என் அப்பா வாடா சேலத்திலுள்ள அத்தை வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லி அழைத்துக் கொண்டுப் போய் தீர்த்தமலையிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்த்து விட்டார்.

அன்று முதல் பறந்து திரிந்த என் பால்ய மனச் சிறகுகளை சிறைபடுத்தியது பள்ளி.

பால்யத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய பயங்கரவாதம் கல்வி தான் என்பது என் கண்ணோட்டம்.

இந்நாவலில் வரும் நந்தகோபால் கடுமையான மஞ்சள் காய்ச்சலில் தேர்வு எழுத முடியாமல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்து நான் அந்த ஸ்கூலுக்கு போக மாட்டேன் எனும் போது அவனுடைய அம்மா அவனை வேறு பள்ளியில் சேர்த்து விடுகிறேன் என சொல்லும்போது மஞ்சள் காமாலையை விட அதிகமான வலியை கொடுத்தது என்கிறான் நந்து.

ஏன் சிறுவர்களை அடக்கும் சர்வாதிகாரிகளாக இருக்கிறார்கள் பெற்றவர்கள்.

ஏன் பெரியவர்களால் சிறுவர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.

சிறுவர்களின் ஆசைகளையும், பிரார்த்தனைகளையும் பெற்றோர்கள் மட்டுமல்ல,கடவுளும் கூட காது கொடுத்து கேட்பதில்லை என்ற வருத்தத்தை உணர்ந்து கொள்ள பதின் நாவலை வாசியுங்கள்///

Velu malayan
30.7.2020

❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்