///இந்த வருடம் பயணம் தொடர்பான
ஏ.கே.செட்டியாரின் "இந்தியப் பயணங்கள்", "குடகு" மற்றும்  வெ.சாமிநாத சர்மா எழுதிய
"எனது பர்மா வழி நடைப்பயணம்" போன்ற நூல்களை வாசித்திருக்கிறேன்.

ஒரு இளைஞனின் பயணத்தைப் பற்றி Sean Penn இயக்கிய In to the Wild படத்தையும் பார்த்திருக்கிறேன்.பணம் குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து ஒரு அடையாளமற்ற மனிதனாக அலாஸ்கா நோக்கி பயணம் செல்லும் ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இடுப்புக்கு கீழே மட்டுமே வாழ்க்கை இருக்கிறது என நாம் வாழும் சராசரியான,சலிப்பான இந்த வாழ்க்கையைத் தாண்டி வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளுவதற்கான அகத் தேடலை  உணர்த்தும் படம் In to the Wild.

நாம் ஒரே இடத்தில் ஒரே மாதிரி வாழும் வாழ்க்கைச் சார்ந்த குறுகிய மண் பரப்பையும்,மனப்பரப்பையும் விரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை பயணமே வழங்குகிறது என்பது என் எண்ணம்.

பயணம் என்பது இந்த பூமியின் பல்வேறு பக்கங்களை பாதங்களால் வாசிக்கும் ஒரு கலை.

அது புதிய மண்ணை,
புதிய மனிதர்களை,புதிய கலாச்சாரங்களை,புதிய உணவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

பயணம் செய்வதிலும் பயணம் குறித்தான நூல்களை வாசிப்பதிலும் எனக்கு எப்போதுமே ஒரு ஆர்வமுண்டு.

பெரும்பாலும் இந்திய நிலப் பயணங்கள் பற்றிய நூல்களை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு வாய்த்த எனக்கு ஆப்பிரிக்க நிலப் பயணங்கள் குறித்தான அனுபவங்களை சொல்லும் நாடோடியின் கடிதங்கள் நூல் ஒரு மாறுதலான அனுபவத்தை கொடுத்தது.

இதுவரை நாம் பார்க்காத,கேள்விப்படாத ஆப்பிரிக்க  நில மனிதர்களின் பண்பாடு,கலாச்சாரம்,அரசியல்,வறுமை, வன்முறை என நிறைய விடயங்களை இந்நூல் வழியே நமக்கு நெருங்கி காட்டுகிறார் அதியமான் கார்த்திக்.

கென்யா நாட்டு பிச்சைக்காரர்களும்,மாடு மேய்க்கும் மசாய் பழங்குடியின சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமலேயே ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பதை நம் இந்திய நாட்டு கல்வி முறையோடு ஒப்பிட்டு இந்திய கல்வி அறிவின் உயர்ந்தபட்ச இலக்கு ஆங்கில மொழி கற்றுக் கொள்வது என்பதை பகடி செய்கிறார்.

மசாய் பழங்குடியின மக்கள் இறந்த உடல்களை புதைக்காமல்,
காட்டில் வீசி காட்டு விலங்குகளுக்கு தின்ன கொடுக்கும்
இயற்கையோடு பிணைந்த வாழ்க்கை,

டர்கானா மற்றும் போகோட் பழங்குடியின மக்களுக்கு இடையே நடக்கும் மாட்டுத் திருடு சண்டை,

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலை கிளிமாஞ்சாரோவின் அழகு,திருமணம் செய்து கொள்ளாமலே தங்களுக்கு பிடித்த ஆண்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் கென்யாவின் ஒற்றைத் தாய்மார்கள் கலாச்சார முறை என நாம் அறியாத ஒரு தேசத்தின் பக்கங்களை எழுத்தின் வடிவில் நமக்கு காட்டுகிறார் அதியமான் கார்த்திக்.

கிகுயு,மெரு,மசாய் போன்ற பழங்குடிகளின் கடவுள் எங்காய் தான் உலகத்தை படைத்தார் என்ற கதையும்,

ஆப்பிரிக்காவில் அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நரபலியிட தான்சானியா நாட்டுக் கள்ளச்சந்தையில் 75000 அமெரிக்க டாலர்கள் வரை விற்கப்படுவது என வாசிப்பவர்களுக்கு ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும் தருகிறது.

உகாண்டாவின் மசாகா நகரில் ஒரு மாபியா கும்பல் தன்னை தாக்கியதையும்,

கம்பாலா நகரில் ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உகாண்டா கடத்தல்காரர்களால் தான் கடத்தப்பட இருந்த போது அங்கிருந்த வட இந்தியர்கள் யாரும் காப்பாற்ற முன்வராத இந்தியர்களின்  உதவும் குணத்தையும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார் அதியமான் கார்த்திக்.

பிளாட்டினம் மற்றும் வைர வயல்கள் நிறைந்த ஜிம்பாப்வே நாட்டின் 70 சதவீதம் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கி கருப்பர்களுக்கு பகிர்ந்தளித்த ஜிம்பாபே அதிபர் ராபர்ட் முகாபே மீது பொருளாதார தடை விதித்து அந்த நாட்டை வறுமை நாடாக்கிய ஐரோப்பிய நாடுகளின் அதிகார அரசியல் குணம்

ஒரு நாட்டின் வளங்களை காடுகளை அழிப்பதை தடுப்பதில் அக்கறை காட்டுவது போல் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து யுரேனியம் இருக்கிறதா? பிளாட்டினம் இருக்கிறதா? ஹைட்ரோகார்பன் இருக்கிறதா? என வேவு பார்க்கும் WWF,IUCN,UNEP போன்ற உலக அமைப்புகளின் உள் அரசியல்
முகம் என நிறைய விடயங்களை இந்நூல் பேசுகிறது.

இலங்கை சிங்கள ராணுவத்தால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை போன்று
நாட்டின் பெரும்பான்மை இனமான ஹூட்டு இனம் சிறுபான்மை இனமான டூட்ஸி இனத்தின்  8 லட்சம் மக்களை சாய்த்த ருவாண்டா நாட்டின் இனப்படுகொலை வரலாறு,
மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் அந்நாட்டு மக்கள் அனைவரும் கூடி சமூகப்பணி செய்வது

கென்யாவின் அரசியலையே தீர்மானிக்கக்கூடிய மிரா என்ற ஒரு வகை போதை செடி சாகுபடி

பிச்சைக்காரர்கள் மிகுந்து வாழும் மலாவி நாடு,கென்யாவின் அம்பாசெலி தேசியப் பூங்கா,ஜஃக்கா பழங்குடியின மக்களிடம் கிளிமஞ்சாரோவை உருவாக்கிய ருவா கடவுள் பற்றிய கதை, காட்டில் உள்ள தேவதாரு மரங்களை வெட்டி காட்டை அழிக்க கில்காமேஷ் மற்றும் என்கிடு இருவரும் ஹம்பாபா என்ற காட்டு பூதத்தை கொல்லும் கதை என நூல் ஒரு சுவரஷ்யமான அனுபவத்தைக் கொடுக்கிறது.

வெறுமனே ஒரு பயண அனுபவங்களைக் கூறிச் செல்வதைத்தாண்டி கென்யா,புருண்டி, ஜிம்பாபே,தான்சானியா,ருவாண்டா , உகாண்டா,மாலாவி போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் நிலவியல் அமைப்பு,அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம்,அரசியல்,பழங்குடியின அழிப்பு என உற்று அவதானித்து எழுதியதில் முக்கிய பயண நூலாக கவனம் பெறுகிறது இந்நூல்.

அதியமான் கார்த்திக் வனவியல் படித்தவர் என்பதால் அவருக்கு சுற்றுச்சூழல் மீதும்,விலங்குகள் மீதும் தீராத காதல் இருப்பதை இந்நூல் வழியே உணர முடிகிறது.

புத்தகத்தின் விலை ரூ.400 என்பது தான் கொஞ்சம் விழி வீங்கச் செய்கிறது.

 வாங்கி வாசிக்க வேண்டிய நூல்///

Velu malayan
22.7.2020

❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்