///நான் இதுவரை வாசித்த ஆக்கங்களில் வாசித்து முடிக்க முழுமையாய் முழு மாதத்தை எடுத்துக்கொண்ட நாவல் அசடன் தான் என நினைக்கிறேன்.

தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை குறுகிய நாட்களில் வாசித்து முடித்த என்னால் அசடன் நாவலை அவ்வளவு எளிதாகவும்,விரைவாகவும் வாசிக்க முடியவில்லை.

மனித மனங்களின் இருண்மையான இடங்களில் இறங்கி நடந்து பார்த்தவர் தஸ்தயெவ்ஸ்கி.

மனித மன உளவியலின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளையே அவரின் எழுத்துக்கள் பேசுகிறது.

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் ஒரு வாசகன்
சகித்துக் கொள்ள முடியாத அகச் சலிப்பையும்,அக நடுக்கத்தையும் அடைந்தாலும் இறுதியில் வாசக மனம் ஒரு திறப்பை பெறுகிறது என்பதே என் எண்ணம்.

குற்றமும் தண்டனையும் நாவலில் கொலை செய்துவிட்ட ரஸ்கோல்னிவ் என்ற இளைஞனின் அக போராட்டத்தை எழுதிய தஸ்தயெவ்ஸ்கி அசடன் நாவலில் மிஷ்கின் என்ற பெயர் கொண்ட ஒரு அசட்டு இளவரசனின் மனத்தூய்மையை,எவரோடும் முரண்படாமல் அன்பு செய்யும் ஒரு குழந்தைமை குணக்காரனின் மன உருவத்தின் உயரத்தை,அவன் மன உயரத்தின் வீழ்ச்சியை விவரிக்கிறார்.

இந்த நாவலில் வரும் மிஷ்கின் இயேசு நாதரைப் போன்றவன்.புத்தரைப் போன்றவன்.சூழ்ச்சிகளற்ற சுத்த மனம் கொண்டவன்.முட்டாள் தனங்களின் முழு உருவம் அவன்.முட்டாள்தனம் நிரம்பிய மனம் கொண்டிருப்பதாலயே மிஷ்கின் நிபந்தனையற்ற அன்பை எல்லோருக்கும் அளிப்பவனாக இருக்கிறான்.

மிஷ்கின் கதாபாத்திர சாயலை ஜெயகாந்தன் எழுதிய "ஒரு மனிதன், ஒரு வீடு,ஒரு உலகம்" நாவலில் வரும் ஹென்றி கதாப்பாத்திரத்திடம் காணலாம்."ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்" நாவலை நான் வாசித்து முடித்தப்பின் என்னை மிகவும் ஆக்கிரமித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய பாத்திரம் ஹென்றி கதாபாத்திரம் தான்.

ஜெயகாந்தன் உருவாக்கிய  இயேசுவின் மனச்சாயல் உருவம்தான் ஹென்றி.

ஹென்றி போன்ற ஒரு மனிதன் இந்த நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமானவனா? ஹென்றியைப் போல ஒரு நாளாவது வாழ்ந்து விட கூடாதா? அப்படி நம்மால் வாழ்ந்து விட முடியுமா? என எண்ணற்ற கேள்விகளை எனக்குள் எழுப்பிய கதாபாத்திரம் ஹென்றி கதாபாத்திரம்.அப்படிப்பட்ட ஹென்றியை தாண்டிய ஒரு பாத்திர வார்ப்பு தான் அசடன் நாவலில் வரும் மிஷ்கின் பாத்திரம்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் ஹென்றி ஒரு பைத்தியக்கார பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரவையும்,அன்பையும் அளிப்பது போலவே அசடன் நாவலிலும் மிஷ்கின் ஒரு கிராமமே வெறுக்கும் மேரி என்ற பெண்ணிற்கு அன்பையும்,ஆதரவையும் கொடுக்கிறான்.

அழுக்கு  படிந்த ஆடைகளோடும், நோய்மை சுமந்து,அகவலிமை அறுந்து சிக்குண்ட மனம் கொண்ட ஆண்களே தஸ்தயெவ்ஸ்கியின் படைப்பில் வரும் கதை நாயகர்கள்.ஆனாலும் அவர்கள் புற அழுக்கோடு இருந்தாலும் அகத்தில் ஆன்ம சுத்தம் கொண்டு அன்புக்கு ஏங்குபவர்களாக அவர்களை சித்தரிப்பது தான் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளின் பலமே.

குற்றமும் தண்டனையில் வரும் ரஸ்கோல்னிவ்,அசடன் நாவலில் வரும் மிஷ்கின் ஆகிய இருவருமே இதற்கு உதாரணங்கள்.

சுவிட்சர்லாந்திலிருந்து ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு வரும் மிஷ்கின் அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களுடனான உறவுகள்,உணர்ச்சி உரையாடல்கள் மற்றும் ரஷிய பிரபுத்துவ காலத்தையும் பின்னணியாக கொண்டது நாவல்.

மிஷ்கின்  ஒரு வித நரம்புக் கோளாறினால் ஏற்படும் வலிப்பு நோயினால் பாதிக்கப்படுகிறான். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழப்பதால் பாவ்லிஷ்ட்சேவ் என்பவரின் பராமரிப்பில் டாக்டர் ஷெனிட்டர் என்பவரிடம் சிகிச்சை எடுத்து கொள்கிறான்.பாவ்லிஷ்ட்சேவ் இறந்து விடுவதால் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத மிஷ்கின் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அவனுடைய தூரத்து உறவினரான இபான்சின் சீமாட்டியை பார்க்க சுவிட்சர்லாந்திலிருந்து ரஷியா வருகிறான்.

ரயிலில் வரும்போது மிஷ்கினுக்கு ரோகோஸின் பர்ஃபியான் மற்றும் லெபதேவின் அறிமுகம் கிடைக்கிறது. தளபதி இவான் ஃபியோதரவிச் இபான்சின் மற்றும் அவரது மனைவி லிசாவெதா ப்ரோகோஃபியேவ் ஆகியோரை சந்திக்க வரும் மிஸ்கின் தளபதியின் மூன்று பெண்களில் கடைசிப் பெண்ணான அக்லேயா இவானோவ்னா மீது மிஷ்கின் ஈர்ப்பு கொள்கிறான்.

ரயிலில் வரும் போது ரோகோஸின் தான் அடைய விரும்பும் பெண்ணாகவும்,
மிகப் பெரிய செல்வந்தரான டாட்ஸ்கி (அஃபனாசி இவாேனாவிச்) என்ற 55 வயது மனிதருக்கு ஆசை நாயகியாக தற்போது இருந்து வரும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னாவையும் மிஷ்கின் காதலிக்கிறான்.

அசடன் நாவலில் மிக முக்கிய கதாபாத்திரமாக நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னாவை கூறலாம்.நஸ்டாஸியா பேரழகு கொண்டவள்.

ரஷ்யாவின் மத்திய மாகாணம் ஒன்றில் டாட்ஸ்கியின் எஸ்டேட்டுக்கு அருகில் மிகச்சிறிய சொத்துக்கு சொந்தக்காரனான ஃபிலிப் அலெக்ஸாண்ட்ரோவிச் பரஷ்கோவ் என்பவருக்கு மகளாக பிறக்கிறாள்.
கடன் வறுமையால் சொத்தை இழக்கும் பரஷ்கோவ் ஒரு கட்டத்தில் வீட்டு தீ விபத்தில் தன் மனைவியும் இறந்து விட, பின் ஒரு மாதம் கழிந்து ஜன்னி கண்டு தானும் இறந்து விடுகிறார்.

தாய் தந்தையை இழந்து நிற்கும் தன்னுடைய தங்கை மற்றும் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை டாட்ஸ்கி ஏற்கிறார்.தன்னுடைய இளைய தங்கையும் கக்குவான் இருமல் கண்டு இறந்து விடுவதால் நஸ்டாஸியா தனித்து விடப்படுகிறார்கள்.16 வயது நிரம்பிய வயதில்  நஸ்டாஸியா பேரழகியாக இருப்பதைப் பார்த்து டாட்ஸ்கி அவளை தனதாக்கி கொள்கிறார்.

சிறு வயதிலேயே உடல் சுரண்டலுக்கு ஆளாகும் நஸ்டாஸியா வெறுப்பு நிரம்பியவளாகவும்,எதனையும் பெரிதென பொருட்படுத்தாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள்.

தளபதி இபான்சிடம் குமாஸ்தாவாக இருக்கும் கன்யா மற்றும் ரோகோஸின் ஆகியோரிடையே நஸ்டாஸியாவை அடைய போட்டி நடைபெறுகிறது.
நாவலில் இளவரசன் மிஸ்கினை யார் அடைவது என அக்லேயாவுக்கும், நஸ்டாஸியாவுக்கும் நடக்கும் வாதம் சுவாரஷ்யமானது.

அக்லேயா மிஷ்கினை காதலிக்காதது போல் அவனை பரிகாசம் செய்கிறாள்.அலைக்கழிக்கிறாள். ஆனால் உள்ளுக்குள் அவனை நேசிக்கிறாள்.அக்லேயாவுக்கும், நஸ்டாஸியாவுக்கும் நடக்கும் தன் முனைப்பு போட்டியில் நஸ்டாஸியா ரோகோஸினை விட்டு விட்டு மிஷ்கினை மணந்து கொள்ள சம்மதிக்கிறாள்.

மிஷ்கினுடன் திருமணத்திற்கு தயாராகும் திருமண நாளில் நஸ்டாஸியா மீண்டும் ரோகோஸினுடன் ஓடி விடுகிறாள்.ரோகோஸினையும், நஸ்டாஸியாவையும் தேடிச் செல்கிறான் மிஷ்கின்.

ரோகோஸின் நஸ்டாஸியாவை கொலை செய்து எவருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்திருக்கிறான்.
ரோகோஸின் மிஷ்கினை கூட்டிச் சென்று அவள் பிணமாக படுத்திருக்கும் அறையை காண்பிக்கிறான்.
இருவரும் அந்த இரவு வெளியில் செல்லாமல் பிணத்துடன் ஒரே அறையில் உறங்குகிறார்கள்.

மிகுந்த பதற்றத்துடனும்,
நடுக்கத்துடனும் பிதற்றிக் கொண்டிருக்கும் ரோகோஸினின் தலையை கோதி விடுகிறான் மிஷ்கின்.மெத்தையில் தன் முகத்தை ரோகோஸின் முகத்திற்கு அருகில் வைத்திருக்கும் மிஷ்கினின் கண்களிலிருந்து வரும் கண்ணீர் ரோகோஸின் கன்னங்களின் மீது விழுகிறது.

பின் பல மணி நேரங்களுக்குப் பின் கதவை உடைத்து உள்ளே வருபவர்கள் மனப்பிறழ்வு அடைந்து பிதற்றிக் கொண்டிருக்கும் ரோகோஸினை கைது செய்து சைபீரியா சிறையில் அடைக்கிறார்கள்.

மிஷ்கின் ஆரம்பத்தில் வலிப்பு நோயினால் நடுங்கிக்கொண்டிருந்த பழைய மிஷ்கினாகவே ஆகிவிடுகிறான் என நாவல் முடிகிறது.

கடைசியில் அக்லேயாவை ஒரு போலந்து நாட்டுக்காரன் நான் போலந்து நாட்டின் பிரபு என ஏமாற்றி அவளை திருமணம் செய்து இபான்சின் குடும்பத்தை ஏமாற்றி விடுகிறான்.

தன் பேரழகால் எல்லோரையும் கவர்ந்த நஸ்டாஸியாவின் மரணம் மிஷ்கின் மற்றும் ரோகோஸினிடமிருந்து அவளுக்கு நிரந்தர விடுதலையைக் கொடுக்கிறது.நஸ்டாஸியாவை குத்தி கொலை செய்வது ரோகோஸின் தான் என்றாலும் மிஷ்கினுக்கும் அவள் கொலையில் பங்கிருக்கிறது.

நாவலில் மிஷ்கின் இயேசுகிறிஸ்துவாகவும்,
ரோகோஸின்  சாத்தானாகவும்
உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ரோகோஸினிடமிருந்து நஸ்டாஸியாவை காப்பாற்ற முடியாமலும்,தான் விரும்பிய அக்லேயாவை அடைய முடியாமலும் ஒரு தோல்வியடைந்த மனிதனாக கடைசியில் நிற்கிறான் மிஷ்கின்///

நாவல் பெயர்:அசடன்
தமிழில் :எம்.ஏ.சுசீலா
பதிப்பகம் : நற்றிணை
விலை: ரூ.1250/-

Velu malayan

16.7.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்