///கரிச்சான் குஞ்சு எழுதிய
 "பசித்த மானிடம் "நாவலை முன்வைத்து

சில படைப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் இலக்கியப் பரப்பிலும்,
வாசகர் மத்தியிலும் சரியான மதிப்பீடுகளையும், அங்கீகாரத்தையும் பெறாமல் போயிருக்கிறது.

அப்படி காலதாமதமாக கவனம் பெற்ற நாவல் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் நாவல்.

தமிழில் ஓரினச்சேர்க்கைப் பற்றி வெளிப்படையாய் பேசிய முதல் நாவல் பசித்த மானிடம்.

பெரும்பாலும் பெண்களின் உடல் சுரண்டலை மட்டுமே பதிவு செய்து வந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆணின் உடல் சுரண்டலை பதிவு செய்ததில் முக்கிய கவனம் பெறுகிறது இந்நாவல்.

மனித உடலில் வற்றாமல் ஊறிக் கொண்டேயிருக்கும் ,
பசி,காமம்,பொருள் சேர்க்கும் வேட்கை, அதிகார அரிப்பு இவையெல்லாம் வற்றிப்போகும் ஒரு புள்ளியில் வாழ்வின் நிறைவு என்பது என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும் படைப்பாக பசித்த மானிடம் இருக்கிறது.

கணேசன் கிட்டா என்ற இரண்டு நண்பர்களின் வாழ்வின் மீது பணம், அதிகாரம்,காமம் என எல்லாம் இயங்கி இருவரும் மனிதர்களாலும்,
உறவுகளாலும் எப்படி உறிஞ்சப்படுகிறார்கள் என்பதை ஆன்மீகமும்,தத்துவமும் கலந்த பார்வையில் பதிவு செய்கிறார் கரிச்சான் குஞ்சு.

தன் பால்ய வயதில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒருவன் ஒரு கட்டத்தில் தவறான உறவுகளால் சிதைக்கப்பட்டு தொழுநோயால் பிடிக்கப்பட்டு இந்த வாழ்வின் மீது விலக்கம் கொண்டு எதிலும் பற்றற்ற ஒரு ஞானி போன்ற மனநிலைக்கு வந்து நிற்கும் கணேசன் என்பவனும்,

தன் பால்ய வயதில் எல்லோராலும் ,
உதாசீனப் படுத்தப்பட்டு பெண்களிடம் போக்கிரித்தனம் செய்து கெட்டப்பெயர் சம்பாதித்து பின் ஒரு கட்டத்தில் பொருள் பெருகி அதிகாரம் உப்பிய நிலையில் லெளகீக வாழ்க்கையின் அலைக்கழிப்பில் சோர்ந்து நிற்கும் புள்ளியில் கிட்டா என்பவனும் சந்திக்கும் போது பணம்,வசதி, அதிகாரம்,இன்பம் இன்ன பிற எல்லாம் அடைந்து அலுத்தப் பின் இந்த வாழ்க்கையிடம் நாம் கடைசியில் அடைவது என்ன என்று ஆன்மீக  ரீதியில் ஒரு கேள்வியை நம்முன் எழுப்புகிறது நாவல்.

சிங்க ரவுத்துவிடமிருந்து தப்பித்து
கணேசன்,சுந்தரியுடன் குடும்பம் நடத்துவதாய் இந்நாவலில் வரும் பகுதி ஒரு குறுங்கவிதை.

சுந்தரி இறந்த பின் சுந்தரிக்கு வைத்தியம் பார்த்த பெண் மருத்துவருடன் உடல் விளையாட்டில் இயங்குகிறான் கணேசன்.

தனக்கு தொழுநோய் என்று தெரிந்தவுடன் அந்த பெண் மருத்துவர் கணேசனை துரத்துவதால் நாடோடி போல் திரிகிறான்.

கண் தெரியாத கோதை என்ற பிச்சைக்காரியுடன் இயங்குவது வரை காமம் கணேசனை துரத்துகிறது.

கோதை உயிருடன் இருக்கும் போதே ஒரு வெறியடங்கிய மனிதனாக மாறிவிடுகிறான் கணேசன்.
கோதை இறந்த பிறகு முற்றிலும் தன்னுணர்வு துறந்த நிலையை எட்டி ஞானியாகி விடுகிறான்.

நாவலில் போலீஸ்காரராக வரும் பசுபதி என்பவருக்கும்,கணேசனுக்கும் இடையேயான ஆன்மீக நட்பு ஆழ்ந்த தத்துவங்கள் கொண்ட உரையாடல்களாய் விரிகிறது.

பிச்சைக்கானாக மாறி பிச்சை எடுக்கும் கணேசனை பசுபதி ஞானியாக,
குருவாக பார்க்கிறான்.
உண்மையில் கணேசனுக்கு குரு பசுபதியே.

நிறைய தத்துவ வரிகள் நாவலில் வருகிறது உதாரணத்திற்கு

" நாம் சாப்பாட்டை சாப்பிடுகிறோம். சாப்பாடு நம்மை சாப்பிடறது.தன் வாலைத் தானே முழுங்கும் பாம்பின் கதை தான்.சாப்பாடு தூக்கம் சாப்பாடு சாவு"

" எதுவுமே பசை இல்லாமல் ஒட்டாது.பசை இருந்தால் ஒட்டிக்கொள்ளும். ஒட்டினால் நினைவு. நினைத்தால் நீளமான தொடர்பு. மறையும் பெயர்களும் மறையும் வடிவங்களும் தாமே எல்லாம் "

சந்நியாசி ஆனவருள் மூடருண்டு.சம்சாரம் செய்பவருள் ஞானி உண்டு.மனத்தகத்து அழுக்கூறாத மாந்தர், ஞானியோகியாய் வனத்தகத்து இருப்பினும் மனத்தகத்து அழுக்கு அறார், மனத்தகத்து அழுக்கறுத்த மாந்தரான ஞானியார், முலைத் தடத்து இருப்பினும் பிறப்பறுத்து இருப்பரேன்னு"
என நீள்கிறது தத்துவ வரிகள்.

மனிதர்களின் மனதில் ஊரும் எல்லா பசிகளையும் மனிதன் கைவிடப்பட்டதற்கு பிறகான வாழ்வின் வெறுமையை பேசுவதாய் இருக்கிறது பசித்த மானிடம் நாவல்///

Velu malayan
9.5.2020.

❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்