///தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலை முன்வைத்து

இஸ்லாம் சமூகம் ஒரு இறுகிய கட்டமைப்பைக் கொண்டது.குறிப்பாக பெண்கள் மீதான அதன் இறுக்கம் இன்னும் தளர்ந்ததாகவே இல்லை.

இஸ்லாம் சமூக பெண்களின் நொம்பலங்களை தனது எழுத்துக்களின் வழியே அம்பலமாக்கியவர் உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய்.

இஸ்லாம் சமூகம் எவற்றையெல்லாம் தன் மதத்திற்கான  கண்ணியம்,
கட்டுப்பாடு  என இறுக்கி வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தன் எழுத்துக்களில் பிரதிபலித்து தன்னை எப்போதும் பிரச்சனைகளில் வைத்துக் கொண்ட மீறலின் வடிவம் இஸ்மத் சுக்தாய் அவர்கள்.

அவர் கதைகளின் வழியாகத்தான் இஸ்லாமிய பெண்களின் சுதந்திர முனகளையும்,அவர்கள் மீது நூற்றாண்டுகளாய் போர்த்தப்பட்டு கிடந்த திரை விலகளையும் கண்டேன்.

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த மீறல் இஸ்மத் சுக்தாய்.

ஆனால் இந்த நொடியிலும்
இன்னும் வற்றி விடாத இருண்மையை இஸ்லாம் சமூகம் தனக்குள் சுமந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படி முதல் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கடலோர கிராமத்தில் எவ்வித நாகரிக வளர்ச்சியையும் தனக்குள் அனுமதிக்காமல்,இறுக்கமான மத கட்டுப்பாடுகளை ஒழுகி
வாழ்ந்த இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பதிவு தான் இந்நாவல.

வடக்கு வீட்டு அகமது  கண்ணு  முதலாளிக்கும்,மேற்கு வீட்டு சேமக் கண்ணு முதலாளிக்குமான தன் முனைப்பு நாவலில் தொடர்ந்து காட்டப்படுகிறது.

இஸ்லாம் சமூகத்தைப் பற்றிய ஒரு யதார்த்த படிமம் இந்த நாவல்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆழப்புழையிலிருந்து வந்த மெளல்வி, மதப்பண்டிதரை ஒரு மாத காலம் தன் வீட்டில் தங்க வைத்து தினமும் கோழி அடித்து விருந்து நடித்திய மேற்கு வீட்டு சேமக் கண்ணு முதலாளிக்கு வீம்பாக செய்யிதினா முகமது முஸ்தபா இம்பிச்சிக்கோயாத் தங்ஙள் என்பவரை வடக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளி இரண்டு மாதம் தன் வீட்டில் தங்க வைக்கிறார்.

கல்யாணமாகி 14 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என தங்ஙகளைப் பார்க்க வரும் பாத்திமா என்ற பெண்ணை அறையின் கதவை சாத்திவிட்டு அவளுடன் சல்லாபிக்கும் போதே மதப்பண்டிதர் தங்ஙள் மீதான புனிதத்தன்மை மீது ஒரு கேள்வியை எழுப்பி விடுகிறார் மீரான்.

வடக்கு வீட்டு அகமது கண்ணு தேகங்காய்ப் பட்டிணம் கிராமத்தையே தன் அதிகாரத்தின் காலடியில் வைத்துள்ளார்.

நாவலின் மிக முக்கிய பாத்திரங்கள் வடக்கு வீட்டு அகமது கண்ணுவின் தங்கை நூஹு பாத்திமா,அவளது மகன் பரீது, அகமது கண்ணுவின் ஒரே மகள் ஆயிஷா, பள்ளிவாசலில் ஓதும் மோதினார் அசனார் லெப்பை, கணக்குப் பிள்ளை அவுக்கார், அகமது கண்ணுவை எதிர்க்கும் முஹமூது, வாத்தியாராக வரும் மகபூப்கான்,பெட்டிகடை வைத்திருக்கும் உஸன் பிள்ளை ஆகியோர்களே.

வடக்கு வீட்டு அகமது கண்ணு :

அந்த கிராமத்தின் தலைவர்.
அவர் சென்ற பிறகுதான் பள்ளியில் தொழுகை நடத்த வேண்டும்.
அவரில்லாமல் தொழுகை தொடங்கக் கூடாது.அந்த கல்வியறிவு இல்லாத ஏழை இஸ்லாமிய மக்களை
ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு அதிகார பேயாக இருக்கிறார்.

தன்னை மதிக்காமல் தன்னை எதிர்த்துப் பேசிய ஒரே காரணத்திற்காக மீன் வியாபாரம் செய்து பிழைக்கும் முஹ்மூது வின் பெயரில் உள்ள தோப்பை தன் பெயருக்கு எழுதி வைக்கச் சொல்லி மிரட்டுகிறார்.

ஒரு பெண் தன் மகனுக்கு அகமது கண்ணு பெயரை வைத்து அவர் பெயர் சொல்லி தன் மகனை அழைத்த ஒரே காரணத்திற்காக அந்தப் பெண் பெயரில் இருந்த தோப்பை தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்கிறார்.

இந்த கிராம மக்கள் கல்வியறிவு பெறக்கூடாது இருளிலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கிராமத்திற்கு பள்ளிக்கூடமே வேண்டாம் என்றும், பள்ளிகட்ட நிலத்தையும் கொடுக்க மறுக்கிறார்.

வட்டிக்கு பணம் சம்பாதிக்கும் லட்சுமி என்ற ஒரு ஆதரவற்ற பெண் இவரிடம் நகையும் பணமும் நிரம்பிய ஒரு பெட்டியை கொடுத்திருக்கிறாள்.
பெட்டி வாங்கிய ரகசியம் அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்தது என்பதற்காக அந்தப் பெட்டியை அபகரிக்க கருப்பனை வைத்து லட்சுமியை கொலை செய்து வலியாற்றில் வீசச் செய்கிறான்.

தன் சொந்த சகோதரியின் மகனான பரீதை ஒரு வேலைக்காரனை போல நடத்துகிறான்.தன்னை மீறி முஹ்மூது பள்ளி கட்ட இடம் கொடுத்து அந்த ஊரில் பள்ளி கட்டப்படுவதை எதிர்க்கிறான். கருப்பான வரவழைத்து பள்ளிக்கூடத்திற்கு தீ வைக்கச் சொல்கிறான்.கருப்பன் முடியாது என்பதை மறுப்பது அவனே தீவைத்து பள்ளிக்கூடத்தை எடுத்து விடுகிறான்.

தன்னுடைய வீங்கி போன அதிகாரம் சரியக் கூடாது என நினைக்கிறான்.

பதினான்கு வயதில் விதவையாக்கப்பட்டு வீட்டிலிருக்கும் தனது சகோதரி நூஹூ பாத்திமா, திருமணமான ஒரே மாதத்தில் கணவன் பைத்தியம் என்று தெரிந்து வாழா வெட்டியாய் வீடு வந்து சேரும் தனது ஒரே மகள் ஆயிஷா, தன்னிடம் அடிமையாக வேலை செய்த மோதினார் அசனார் லெப்பை தன்னை விட்டு விலகி தன்னுடைய இடத்தில் ஊர் மதிப்பவனாக மாறியது, தனக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த தனது சகோதரி மகன் பரீது தன்னை விட்டு இலங்கைக்கு சென்றது என அவரின் வீங்கிய அதிகாரம் முழுதும் வற்றி,பொருள், அதிகாரம் என எல்லாம் தேய்ந்து  ஒரு தோல்வியாளன் என்ற மன வெடிப்பில் பைத்தியமாகி விடுகிறான் அகமது கண்ணு.

அவன் வளர்த்த குதிரை இறந்து விடுகிறது. அவன் சாம்ராஜ்யமே முழுவதுமாக சரிந்து விடுகிறது.

மதப்பற்றிலும்,மதக் கட்டுப்பாடுகளிலும் நம்பிக்கை கொண்ட அகமது கண்ணு தன் விதவை தங்கையை மணக்க மாலத்தீவு செய்யிதினா முகமது முஸ்தபா தங்ஙள் கேட்கும் போது தன் தங்கையின் விருப்பமில்லாததால் அவளை மணக்க முடியாது என்கிறான். அதனால் தங்ஙள் தன்னை ஏதாவது செய்து விடுவானா என பயப்படுகிறான். தங்ஙளின் சாபம் தான் தன் மகளின் கணவனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தது.அகமது கண்ணுவும் இப்படி ஆகிவிட்டான் என ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

மோதினார்  அசனார் லெப்பை:

மசூதியில் தொழுகை செய்பவன்.வடக்கு வீட்டு அகமது கண்ணுவிற்கு அடிமைப் போல் செயல்படுகிறான்.அகமது கண்ணுவின் கட்டளை மீறி முஹ்மூது மகளின் திருமணத்திற்கு ஆடு அறுக்க செல்வதால் அகமது கண்ணுவிடமிருந்து விலகுகிறான்.ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம் எரிந்து விடுவதால் இது மனிதர் செய்த செயலல்ல என மக்களிடம் பேசுவதால் அசனார் லெப்பையின் மதிப்பு கூடுகிறது.
அகமது கண்ணு இருந்த இடத்திற்கு மோதினார் அசனார் லெப்பை வந்து விடுகிறான்.அகமது கண்ணு மட்டும் தான் அவனை ஊரில் மதிக்காத ஒரே நபர். அதற்கு லெப்பை எங்கு போய் விடுவான் அகமது கண்ணு ஒரு நாள் என் காலில் வந்து விழுவான் என்கிறான். அந்த கிராமத்தை மீண்டும் இருளில் வைத்திருக்க ஒரு ஊர் முதலாளி உருவாகிறான்.

மஹ்மூது:

சுறா மீன் வியபாரம் செய்யும் மஹ்மூது தான் இந்த நாவலின் முக்கிய பாத்திரம்.மஹ்மூது அகமது கணணின் அதிகாரம்,மதகுரு தங்ஙகளின் மோடி வேலைகளை உதாசீனம் செய்து அந்த இறுகிப் போன இஸ்லாமிய கிராமத்தின் மீறலாக இருக்கிறான்.அந்த கிராமம் கல்வியறிவு பெற்று முன்னேற வேண்டும் என தன் மகளுக்கு சீதனம் கொடுக்க வைத்திருந்த தோப்பை பள்ளிக் கூடம் கட்ட கொடுக்கிறான்.அவன் கடைசி வரை அகமது கண்ணு எனும் அதர்மத்தை எதிர்க்கும் தர்மத்தின் உருவமாக இருக்கிறான்.

ஆயிஷா :

அகமது கண்ணுவின் ஒரே மகள் தன்னுடைய அத்தைமகன் பரீதை அவள் விரும்புகிறாள்.பரீது ஒரு அப்பாவி விவரமறியாதவன் புத்தி மந்தம் உள்ளவன் என்பதால் அவனை ஒரு வேலைக்காரன் போலவே நடத்துகிறார் அகமது கண்ணு.ஆயிஷா தன் காதலை பரீதிடம் சொல்லும் போது பரீதுக்கும் அவளை கல்யாணம் செய்து கொள்ள ஆசைதான்.ஆனால் தன் மாமன் அகமது கண்ணுவிற்கு பயப்படுகிறான். தன்னுடைய அம்மா நூஹுபாத்திமாவை சீரழித்த போலி கெளரவம்,அந்தஸ்து, பணம் தான் ஆயிஷாவையும் ஒரு பணக்கார பைத்தியக்காரனுக்கு வாக்கப்பட வைக்கிறது.ஒரு கட்டத்தில் பரீது எல்லோரையும் விட்டு இலங்கை சென்று விடுகிறான்.

தன் தந்தை பைத்தியமானதை நினைத்து,பரீதை நினைத்து அழுது மனமுடைந்து கடைசியில்  வலியாற்றில் விழுந்து செத்துப் போகிறாள் ஆயிஷா.

எல்லா மதங்களும் பெண்கள் மீது ஒரு இறுக்கத்தை செலுத்தத் தான் செய்கிறது. ஆனால் இஸ்லாம் அதை கூடுதலாக நிகழ்த்துகிறது.
வெறுமனே பெண்களை ஒரு குடும்ப கௌரவம் பொருளாக பார்க்கும் அகமதுக்கண்ணு தன் தங்கைக்கும் தன் மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்காமல் தன்னை ஒரு அதிகார இருக்கையில் அமர்த்திக்கொண்டு கடைசியில் ஒரு வெற்றுப் பிம்பமாய் உடைந்து காணாமல் போகிறார்.

இந்த நாவலில் முக்கியமான ஒன்று நூஹூ பாத்திமா மற்றும் ஆயிஷா ஆகியோரின் அக வலி நாவல் முழுதும் தொடர்வது.

இஸ்லாம் சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை, அதில் நிகழும் மீறல்களை எழுத்தாக்கியதில் இந்த நாவல் முக்கிய படைப்பாக எனக்குப்படுகிறது.

தோப்பில் முஹம்மது மீரான் இந்த நாவலில் நிகழ்த்தி இருப்பது தன்னுடைய சொந்த மத அமைப்பின் மீதான சுயக் கீறல் என பார்க்கிறேன்.
தான் வாழும் சூழலை தான் வாழும் அமைப்புக்குள் இருக்கும் சிக்கலை எவ்வித மனப்பதுக்கலும் இல்லாமல் அதை கீறிக்காண்பிப்பது தான் படைப்பிற்கான உண்மைத்தன்மையும் இலட்சணமும் என கருதுகிறேன்.

முஸ்லிம் சமூகம் பற்றிய ஒரு எதார்த்த சித்திரம் இந்த நாவல்.நான் வாசிக்கும் முகமது மீரானின் முதல் படைப்பு இந்த நாள்.இந்த ஒரு நாவலே அவரின் மற்ற  படைப்பின் கனத்தை எனக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.

Velu malayan
4.5.2020.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்