///ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய "குற்றமும் தண்டனையும்" நாவலை முன்வைத்து

வெண்ணிற இரவுகள், நிலவறைக்குறிப்புகள் போன்ற படைப்புகளை வாசித்ததின் வழியே தான் எனக்கு தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் பரிட்சயம் ஆனது.

பொதுவாகவே தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் என்பது வாசகர்கள் எளிதில் அணுக முடியாத மனித அக மனங்களின் ஆழங்களை பேசுபவை.

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை படிப்பது என்பது உங்களை நீங்களே சுயவதைப் படுத்திக் கொள்வதைப் போன்றது.உங்கள் முன் உங்களையே நேர் நிறுத்தி பேசிக்கொள்வது.

ஒரு வருடங்களுக்கு முன்பு குற்றமும் தண்டனையும் நாவலை நான் வாசிக்கத் தொடங்கியபோது மனம் இருநூறு பக்கங்களை கடப்பதற்குள் சலிப்புகளால் சரிந்து பின்வாங்கி நின்றதால் நாவலை தூக்கி தூர வைத்து விட்டேன்.

குட்டி ஆக்கங்களை விடுத்து கெட்டி அட்டை போட்ட பெரிய ஆக்கங்களை வாசியுங்கள் என கூறிய எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களால் குற்றமும் தண்டனையும் நாவலை பதினைந்து நாட்களில் படித்து முடித்தேன்.

எனக்கு பெருத்த அகச்சலிப்பையும்,
அகச் சிதைவையும் ஏற்படுத்திய நாவல் குற்றமும் தண்டனையும் நாவல்.

தன்னை வதைக்கும் வறுமை சூழலின் விரக்தி,அடகு வைக்கும் பொருள்களுக்கு அதிக வட்டியை பிடித்துக்கொண்டு குறைவாக பணம் தரும் ஒரு அறுபது வயது கிழவி அல்யோனா இவானோவ்னா மீதான கோபம்,
எரிச்சல் எல்லாம் திரண்டு ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞன் கிழவியையும் அவளது தங்கை லிஸாவெதாவையும் கொலை செய்துவிடுவது தான் நாவலின் மையம்.

கொலை செய்தப் பின் ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞனுக்குள் ஏற்படும்  அகப் போராட்டம் தான் நாவல் முடிய நீடிக்கிறது.

ரஸ்கோல்னிகோவ் அகத்திற்குள்ளிருக்கும் அவனது அறிவுக்கும்,அன்புக்கும் தொடர்ந்து  தர்க்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

ரஸ்கோல்னிகோவ்வின் தன்முகதர்க்கமும்,கொலை செய்ததற்கு மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அவனது மனத் தவிப்பும் தான் நாவல் முழுதும் நாம் காண்பது.

கடைசி வரைக்கும் ரஸ்கோல்னிகோவ் தான் செய்த கொலைக்காக குற்ற உணர்ச்சி கொள்ளாமல் தான் செய்த கொலையை நியாயப்படுத்தவே செய்கிறான்.நான் அந்த கிழவியை கொலை செய்யவில்லை.சமூகம் சரியென வைத்திருந்த ஒரு தவறான கொள்கையைத் தான் கொலை செய்தேன் என்கிறான்.

ரஸ்கோல்னிகோவ் சட்டம் படிக்கும் ஒரு அறிவார்ந்த இளைஞன்.
கடைசி வரைக்கும் அந்தக் கொலைப்பழியிலிருந்து சிக்காமல் தப்பித்துக் கொள்கிறான்.

தொடர்ந்து அவனுக்குள்ளே நடக்கும் அறிவுக்கும்,அன்புக்குமான தர்க்கத்தில் அன்பு அவன் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்துவிடுகிறது.
அந்த அன்பு சோனியா.உலகில் உள்ள மனிதர்கள் படும் எல்லா துயரங்களின் ஒட்டு மொத்த உருவமான சோனியாவின் முன் மண்டியிடுகிறான்.

வெறும் கணக்குகளால் மதிப்பிடப்படும் மனித அன்பையும்,உறவுகளையும் வெறுக்கும் ரஸ்கோல்னிகோவ் தன்னை பெற்றெடுக்காத தாயான தனது சித்திக்காகவும் சித்தியின் பிள்ளைகளுக்காகவும் தன்னலம் கருதாமல் விபச்சாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் சோனியாவின் தியாகத்தைப் பார்த்து அவளது பாதத்தில் தன்னுடைய பாவத்தை இறக்கி வைக்கிறான்.சோனியா ரஸ்கோல்னி கோவ்வை மீட்டெடுக்கிறாள்.

சைபீரிய சிறையில் இருக்கும் ரஸ்கோல்னிகோவ் ஒருமுறை உடல்நலம் குன்றியிருக்கும்போது சோனியாவிடம் பைபிளின் புதிய ஏற்பாடு கொண்டு வந்து தருமாறு கேட்கிறான்.அந்தப் புத்தகத்தை தலையணைக்கு அடியில் இருந்து எடுக்கும் ரஸ்கோல்னிகோவ் முன்பொருமுறை சோனியா அந்தப் புத்தகத்திலிருந்து லாசரஸ் உயிர்த்தெழும் காட்சியை தனக்கு படித்துக் காட்டியதை நினைவு கூர்கிறான்.ஆனால் கடைசிவரை அதை அவன் பிரித்துக் கூட பார்ப்பதில்லை. அவனுடைய ஒரே நம்பிக்கை சோனியா தான் அவன் சோனியாவை முழுமையாக நம்புகிறான்.
அவளுடைய நம்பிக்கைதானே என்னுடையதும்.அவளுடைய உணர்வுகள்,அவளுடைய விருப்பங்கள் இவற்றையெல்லாம் நான் மதிக்க வேண்டுமல்லவா என மாறத்துவங்குகிறான்.

மன நோயிலும் கனவுகளிலும் உழன்று கொண்டிருந்த ரஸ்கோல்னிகோவ்வை எதார்த்த உலகில் வாழவும் உயிர்த்தெழவும் செய்பவள் சோனியா தான்.

நியாயப்படி பார்த்தால் வறுமைக்காக தன் வாழ்க்கையை விபச்சாரத் தொழிலாக்கிய சமூகத்தையும்,
தன் உடல் மேல் ஊறும் ஆண்களையும் சோனியா தான் கொலை செய்திருக்க வேண்டும்.ஆனால் கிழவியோடு தனக்கு நெருக்கமான லிஸவெதாவையும் கொன்றது நான் தான் என ரஸ்கோல்னிகோவ் சோனியாவிடம் சொல்லும் போதும் அவனை கட்டியணைத்து ஆறுதல் படுத்துகிறாள் சோனியா.தான் வாழவேண்டும் என்ற பற்று சோனியாவின் மீது அவன் அன்பு கொள்ளும் போது ஏற்படுகிறது. சோனியாவின் மீது அவன் கொண்ட அன்பு தான் அந்தப் பற்று தான் அவனை தான் கொலைகாரன் என்பதை ஒப்புக் கொள்ளச் செய்கிறது.

இந்த நாவலில் வரும் ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் மனப்பிறழ்வு கொண்டவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள்.மர்மெலாதோவ், ஸ்விட்ரிகைலோவ்,மிகோலாய்.

நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் சூழலால்,வறுமையால்,
ஆண்களால் சுரண்டப்பட்டாலும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள்.

நாவலில் மதுபான விடுதியில் குடிபோதையில் ரஸ்கோல்னிகோவிடம் உளரும் அரசாங்க குமாஸ்தா மர்மெலாதோவ்வின் உளறல்கள் ஒட்டுமொத்த உலக குடிகாரர்களின் ஒற்றை எண்ண உளறல்கள்.

இந்த குடி பழக்கத்தால் தன் வேலையை இழந்தது பற்றியும்,தன் மனைவி காதரீனா இவானோவ்னா தன் தலைமுடியை பிடித்து இழுத்து தன்னை அடிப்பது பற்றியும்,குடும்பத்தின் கட்டாய சூழ்நிலைகளால் தன் மகள் சோனியா விலைமகளாகிப்போனது பற்றியும் அவன் பேசுவது ஒரு தனி மனிதனின் குரல் அல்ல.அது ஒரு சூழலை விவரிக்கும் குரல்.அது ஒரு வலியின் குரல்.

நாவலில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவை  இரண்டு ஆண் கதாபாத்திரங்கள்.ஒருவன் பீட்டர் பெத்ரோவிச் லூசின்.இன்னொருவன் ஸ்விட்ரிகைலோவ்.இருவருமே ரஸ்கோல்னிகோவ்வின் தங்கை துனியாவை அடைய விரும்புபவர்கள்.

துனியாவும்,ரஸ்கோல்னிகோவ்வும் லூசினின் கெட்ட குணம் தெரிந்து அவனை புறக்கணித்து விடுவதால் மர்மெலாதோவ் இறுதிச் சடங்கு விருந்து நிகழ்வில் சோனியாவிடம் பத்து ரூபிள் நோட்டை கொடுத்து விட்டு அவள் தன் பணத்தை திருடி விட்டாள் என்று கபட நாடகம் ஆடுவதை லெபாஸியாட்னிக்கோவ் என்பவன் உண்மையை உடைத்து அவன் முகத்திரையை கிழிக்கும் போது லூசின் வெளிறிய தன் முகத்தில் குரூரத்தையும், குற்றத்தையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து வெளியேறுகிறான். லூசினுடைய  உள்நோக்கம் சோனியாவை அவமதிப்பதின் வழியாக ரஸ்கோல்னிகோவ்வை பழிவாங்குவது.

ஸ்விட்ரிகைலோவ் ஒரு பணக்காரன். தன்னை விட வயது மூத்தவளான தன் மனைவி மார்ஃபா பெத்ரோவ்னாவை கொன்று விட்டு ரஸ்கோல்னிகோவ்வின் தங்கை துனியாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான்.

துனியா அவன் வீட்டில் வேலை செய்யும் போதிருந்தே அவளை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்து வந்துள்ளது.நாவலில் ஒரு இடத்தில் தான் கொலை செய்ததை ரஸ்கோல்னிகோவ் சோனியாவிடம் சொல்லிக் கொண்டிருப்பதை ஸ்விட்ரிகைலோவ் ஒளிந்திருந்து கேட்டு விடுகிறான்.இதை வைத்து துனியாவை ஸ்விட்ரிகைலோவ் தன் அறைக்கு வரவழைக்கிறான்.அவளை வன்புணர்வு செய்வதற்கு முன் துனியாவிடம் நீ என்னை காதலிக்கிறாயா என கேட்கும் அவன் அதற்கு அவள் இல்லை என கூறிய உடன் அவளை அறையை விட்டு ஓடச் சொல்கிறான்.

ஸ்விட்ரிகைலோவ் பணக்காரன்.தனது பணத்தாலும்,அதிகாரத்தாலும் நிறைய பெண்களை அடைந்தவன்.
ஆனால் யாரையும் அவன் விரும்பியதில்லை.எவர் மீதும் அன்பு கொண்டதில்லை.தான் செய்த அத்தனை விசயங்களையும் ஒரு மது அருந்தும் விடுதியில் ரஸ்கோல்னிகோவ்விடம் ஸ்விட்ரிகைலோவ் கூறுகிறான். தான் செய்த அத்தனை கெட்ட காரியங்களுக்கும் பிராயச்சித்தமாக சோனியாவிற்கும்,சோனியாவின் குடும்பத்திற்கும் உதவுகிறான்.

துனியா தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் ஸ்விட்ரிகைலோவ் தெருவில் நின்று தன்னைத்தானே சுட்டு கொன்று கொள்கிறான்.வாழ்க்கையில் எவர் மீதும் அன்பும்,பற்றும் இல்லாமல் வாழும் ஸ்விட்ரிகைலோவ் முதன்முறையாக துனியா மீது அன்பு வைக்கிறான்.அவள் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.

ரஸ்கோல்னிகோவ் சோனியா மீது கொண்ட அன்பு அவனை கொலைகாரன் என ஏற்றுக்கொள்ள செய்கிறது.துனியாவின் காதல் கிடைக்காத ஸ்விட்ரிகைலோவ் தற்கொலை செய்து கொள்கிறான்.

நாவல் முழுக்க அறிவுக்கும்,அன்புக்குமான தர்க்கத்தை மோத விட்டுக் கொண்டே இருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

நாவலில் காவல் அதிகாரி போர்பரி பெத்ரோவிச்சுக்கும்,
ரஸ்கோல்னிகோவ்க்கும் நடக்கும் தர்க்கம் சுவாரஸ்யமான இடங்கள். அந்த
காவல் அதிகாரிக்கு நன்றாக தெரியும் ரஸ்கோல்னிகோவ் தான் கொலைகாரன் என்று.சரியான சாட்சியங்கள் இல்லாததால் அவனை கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறான்.

வறுமையால் தன் குழந்தைகளுடன் தெருவில் பிச்சையெடுக்கும் மர்மலெதோவ்வின் மனைவி காதரீனா இவானோவ்னா ஒரு கட்டத்தில் காசநோய் முற்றி இறந்து போவது,
கடைசி வரைக்கும் தன் மகன் கொலை செய்தவன் என்பதை அறியாமலேயே இறந்து போகும் ரஸ்கோல்னிகோவ்வின் அம்மா பல்கேரியா அலெக்ஸாண்ரோவ்னா என நாவல் முழுக்க பலவீனப்பட்டவர்களின் குரலை,இருண்மையை மட்டுமே காட்டுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

கடைசியில் தன்னுடைய தங்கை துனியாவை மணந்து கொள்ளும் ரஸ்கோல்னிகோவ்வின் நண்பன் ரஸுமிகின்,டாக்டராக வரும் ஜோஸிமோவ்,வீட்டு வேலைக்காரியாக வரும் நஸ்டாஸியா என சில நேர்மறையான பாத்திரங்களையும் நமக்கு காட்டுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

இந்த நாவலின் ஒட்டுமொத்த கதாபாத்திரங்கள் வழியே தஸ்தயெவ்ஸ்கி நமக்கு காட்டுவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தையும்,நம்முன் இருக்கும் வாழ்க்கையையும் தான்.

ஒட்டுமொத்த மனித மனங்களின் அகச் சிக்கல்களின்,அகச்சிதைவுகளின் ஒற்றைப் பிம்பம் குற்றமும் தண்டனையும் நாவல்///

❤❤❤❤

Velu malayan
26.5.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்