///டி.தருமராஜ் எழுதிய "அயோத்திதாசர் "
(பார்ப்பனர் முதல் பறையர் வரை) நூலை முன்வைத்து

பள்ளிப் பாடப் புத்தகங்கள் வழியாகவும், ஒரு சில பேர் சொல்லியும் ஒரு தெளிவற்ற பிம்பமாய்  இதுவரை நான் உள் வாங்கி வைத்திருந்த அயோத்திதாச பண்டிதரை அருகில் அணுகிப் பார்ப்பதற்கான பாதையை ஏற்படுத்தி தந்துள்ளது இந்த நூல்.

வரலாற்றாய்வாளர்களால் இருட்டிப்பு செய்யப்பட்ட தமிழகத்தின் மிகச் சிறந்த  சிந்தனையாளர் அயோத்திதாசர் பண்டிதரின் எண்ணங்களை, படைப்புகளை அவர் உண்மையான அகமுகம் எது என பேராசியர் டி.தருமராஜ் ஆய்வு நோக்கில் அணுகும் வரலாற்று விசாரணை இந்நூல்.

அயோத்திதாசர் என்பவரின் தனிப்பட்ட முகத்தை துதிக்காமல் அவரது அக சிந்தனைகளின் மீதான ஆய்வு விசாரணையாக இருக்கிறது இந்நூல்.

பௌத்தமே தமிழர்களின் பூர்வீக சமயமாக இருந்தது என்றும்,
பூர்வ பௌத்தர்களே பறையர்கள். பறையர்களின் ஆதி சமயம் என்பது பெளத்தமே என்றும்,
வேஷ பிராமணர்களே பெளத்த மதத்தை சீர்குலைத்து பெளத்தர்களாக இருந்தவர்களை பறையர்களாக மாற்றினார்கள் என்றும்,
பார்ப்பனர்களுக்கும்,
பறையர்களுக்கும் உள்ள முரண் எப்படி உருவானது என்பதை அயோத்திதாசர் தன்னுடைய இந்திரதேச சரித்திரம் நூலில் தர்க்கரீதியாக கூறியுள்ளதை எவ்வித மனச் சாய்வுமின்றி ஆய்வு நோக்கில் விவாதிக்கிறார் டி.தருமராஜ்.

நான் பூர்வ பெளத்தன்,இது பெளத்த நிலம் மற்றும் பூர்வ பெளத்தனின் கல்லறை என மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்நூல் எல்லா கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி அவருடைய உண்மையான பிம்பத்தை நமக்கு காட்டுகிறது.

அயோத்திதாசர் தனது இந்திர தேச சரித்திரம் எனும் நூலில் பெளத்த அரசர்கள் நந்தன்,காசி அரசன் காசிபன் போன்றவர்களை நயவஞ்சகமாக வேஷ பிராமணர்கள் கொன்றதையும், பௌத்த ஒழுக்கத்தில் கட்டப்பட்ட இந்த சமூகம் வீழ்த்தப்பட்டு வேஷ பிராமணர்களின் இந்தியா எப்படி  எழுப்பப்பட்டது என்பதை பதிவு செய்கிறார்.

ஒரு பௌத்த துறவி விளக்கெண்ணெய் கண்டுபிடித்தது தான் கார் துலக்கிய தீப நாள் கார்த்திகை தீபம், நல்லெண்ணெய் கண்டுபிடித்த தினம் தீபாவளி என கொண்டாடப்படுவதற்கு காரணம் என்று சொல்லாராய்ச்சி வழியே நிறுவுகிறார்.

அயோத்திதாசர் பனுவல்கள்,பல்வேறு நூல்களிலிருந்து தனது இந்திரதேச சரித்திரம் நூலில் பெளத்த தர்மத்தை, வேஷ பிராமணர்களால் பௌத்தர்கள் வீழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றை முன்வைக்கிறார்.
திருமந்திரம் நூல் கூட பௌத்த தர்மத்தை முன்வைக்கக் கூடிய நூல் என்று வாதிடுகிறார்.

பெரியாருக்கு முன்பே பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பை முன்னிறுத்திய அயோத்திதாசரை பெரியாரும் திராவிட இயக்கங்களும் முன்னிலைப்படுத்தாமல் அல்லது அவரை பற்றி பேசாமல் போனதற்கு காரணம் என்ன?

பார்ப்பனர்கள் தங்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றிக் கொண்டது எப்படி?

தன் மீது படிந்துள்ள பறையர் என்ற சாதி இழிநிலையை போக்கிக்கொள்ளவே பௌத்தம் என்ற மதத்துக்குள் அயோத்திதாசர் நுழைந்து கொண்டாரா?

வெகுஜனங்களை தொன்று தொட்டு வரும் பழக்கமே நிர்வாகம் செய்கிறது. அவர்கள் உண்மையை நேரடியாய் எதிர்கொள்ளும் மன நிலை அற்றவர்கள். அவர்கள் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணியதும்
பிராமணர்களின் சதி வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என கேட்க முடிந்த அயோத்திதாசரால்,வெகு ஜனங்களை  நோக்கி விழிப்படைய செய்ய முடியாத தோல்வியையும்,
வெற்றிடத்தையும் தான் திராவிட இயக்கங்கள் நிரப்பிக் கொண்டனவா?

டி.தருமராஜ் அவர்கள் கூறுவது போல் புனைவு ஒரு சிந்தனா முறை. எழுதுவதை விடவும் உருவாக்குதல்,கற்பனை செய்தல் உங்களுக்கு பேருதவிகளை செய்ய முடியும். தர்க்கம் தயங்கி நிற்கிற பொழுதுகளில் புனைவே உங்களை உந்தச் செய்கிறது.பூர்வ பெளத்தன் அப்படி ஒரு உந்தித் தள்ளும் புனைவு தானா?
(பேராசிரியர் டி.தருமராஜ்)

பல்வேறு ஆண்டுகளாக தமிழின் சிறந்த சிந்தனையாளரான ஒருவர் தொடர்ந்து மறைக்கப்பட்டவராகவும்,
மறுக்கப்படுபவராகவும் இருந்து வந்ததற்கான காரணம் என்ன?

அவர் ஏன் மறைக்கப்பட்டவராக இருந்தார் போன்ற புதிர்கள் கலந்த கேள்வி பூட்டுகளை திறக்கும் சாவியாய் இருக்கிறது இந்நூல்.அயோத்திதாசரை அனைவரும் உள்நுழைந்து அவரை அருகில் பார்ப்பதற்கு ஒரு வாசல் இந்த நூல்///

Velu malayan
3.5.2020.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்