///Palasa 1978 தெலுங்குப் படத்தைப் Uற்றி ஒரு பார்வை.

நான் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போது பர்கூரில் இருந்த மூன்று சினிமா தியேட்டர்களில் ஏதாவது ஒன்றில் ஒரு தெலுங்கு படம் ஓடிக்கொண்டிருக்கும்.

பர்கூரில் தெலுங்கு பாஷை பெரும்பான்மையாக பேசக்கூடிய ஒரு சமூகம் இருந்ததால் தெலுங்கு படம் திரையிட கூடிய ஒரு நிலை அங்கு இருந்தது.

 சஞ்சீவி தியேட்டர், துரைஸ் தியேட்டர் மற்றும் துரைசாமி பாரடைஸ் என இருந்த மூன்று தியேட்டரில் இப்போது துரைஸ் தியேட்டர் மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

அங்குதான் நான் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா, ஜீனியர் NTR நடித்த திரைப்படங்களை பார்த்தும்,அங்குள்ள உள்ளூர் நண்பர்களோடு பழகியும் தெலுங்கு மொழி பேசக் கற்றுக் கொண்டேன்.

தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட,
கலையம்சம் அல்லாத ஜனரஞ்சக தெலுங்கு சினிமாக்களையே பார்த்து வந்த எனக்கு நேற்று இரவு பார்த்த "Palasa 1978" என்ற தெலுங்குத் திரைப்படம் வெகுவாக என்னை ஈர்த்தது.

ரெட்டியார்களும்,நாயுடுகளும்,ராஜு (பிரபாஸ் குலம்)  மற்றும் கபூ (சிரஞ்சீவி குலம்) என பெரும்பான்மையான ஆதிக்க சாதிகளைக்கொண்ட ஆந்திராவில் ஒரு தலித் சமுதாய மக்களை சாதிய அதிகாரமும்,அரசியல் அதிகாரமும் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அம்பேத்கரிய கருத்தியல் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அங்கு எப்படி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

தலித்துகள் ஒழுக்கமில்லாதவர்கள், வன்முறையாளர்கள்,அணுக முடியாதவர்கள் என பொது சமூகத்தின் பார்வையில் படிந்துள்ள கேள்விகளுக்கான காரணத்தை, விடையை இத்திரைப்படம் சரியாக அணுகியிருக்கிறது.

இது ஒரு Period Movie .1978ல் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள Palasa என்ற கிராமத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களாக வாழும் ஒரு தலித் குடும்பம் தங்களை காத்துக் கொள்வதற்காக கத்தி எடுப்பது தான் கதை.ஆனால் வன்முறை முன்னேற்றத்துக்கான வழிமுறை அல்ல. கல்விதான் அதிகாரத்தை நோக்கி செல்வதற்கான ஆயுதம் என்ற அம்பேத்கரிய எண்ணத்தை வெளிப்படையாக பேசியிருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு.

லிங்கமூர்த்தி நாயுடு,குருமூர்த்தி நாயுடு ஆகிய இரண்டு அண்ணன் தம்பிகளின் பகைக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் மோகன்ராவ் ( கதாநாயகன்) மற்றும் அவனுடைய அண்ணன் ரங்கராவ் ஆகிய தலித் இளைஞர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை சாதிஅரசியல் கலந்து படம் பேசுகிறது.

ஒரு காட்சியில் லிங்கமூர்த்தி நாயுடு கதாநாயகனுடைய அண்ணன் ரங்கா ராவிற்கு தன் கையாலேயே சாப்பாடு போடும் போது அவனது தட்டில் கறித்துண்டை எடுத்து வைப்பான். அப்போது கேமிரா ஒரு செகண்ட் பின்னாடிப் போகும் அப்போது நாய் தட்டில் வாய் வைத்து கஞ்சியை நக்குவதை காண்பிப்பார்கள்.
ஆதிக்க சாதிக்காரர்கள்
சாதி அதிகாரத்தையும்,அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தலித்துக்களை விசுவாசமுள்ள நாய்களைப் போல் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதற்கான குறியீடு இந்த காட்சி.

கதாநாயகன் மோகன் ராவ்   பீகார் ராஜஸ்தான் என எங்கெங்கோ சுற்றிவிட்டேன் எல்லா இடத்திலும் சாதியைக் கேட்கிறார்கள்.சாதி கூடவே வருகிறது எங்கு தான் போவது என சலித்து நடக்கும் போது தன் கையில் கட்டியிருந்த எல்லா சாமி கயிறுகளையும் கழட்டி கீழே வைத்து விட்டு சிலையாக நிற்கும் அண்ணலின் கை விரல் காட்டப்படும் திசை நோக்கி நடக்கும் காட்சி அபாரம்.

படத்தின் வசனங்கள் மிகக் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன.

சின்னசாவுக்காரராக வரும் குருமூர்த்தி நாயுடு இன்ஸ்பெக்டர் செபாஸ்டியனிடம் பேசும் வசனங்கள் அவனது ஆதிக்க சாதி மமதை, அதிகார திமிரை காட்டுகிறது.

" நாங்க அசுத்தத்தை உண்டாக்க பிறந்தவர்கள்.அதை சுத்தப்படுத்த பிறந்தவர்கள் நீங்கள் "

"தலித்துகள் என் வீட்டுக்கு வெளியில நிற்க வேண்டியய நாய்கள். அவங்க தெரு நாய்ங்க அப்படின்னா,உன்னைப் போன்ற தலித் போலீஸ் அதிகாரிகள் எங்களுக்கு pet dog மாதிரி என்றும்,
என் கார் டிரைவருக்கு செபாஸ்டியன்னு உன் பேருதான் வச்சிருக்கிறன்" போன்ற வசனங்களும்,

தன் அண்ணன் ரங்கா ராவை தியேட்டரில் அடிக்கும் லிங்க மூர்த்தியின் மகன் காலை உடைப்பதற்கு முன் கதாநாயகன் மோகன்ராவ் பேசும் வசனம் இது

"அவன் மேல்ஜாதி .
அடிச்சான் நாம விழுந்திட்டோம்.
உடனே எந்திரிச்சிட்டோம்.
ஆனா நாம திருப்பி அடிக்குற அடியில அவனுங்க எந்திரிக்கவே கூடாது"

"நான் எல்லோரையும் வெறுத்து மனசுடைஞ்சு நின்னுட்டு இருக்கும்போது என் அப்பா ஜங்ஷன்ல நின்னுட்டுருக்க ஒருத்தருடைய சிலையைக் காட்டுனாரு.அவரோட ஒருகைல புத்தகம் இருந்தது.இன்னொரு கை எனக்கான படிப்புங்குற பாதையை காட்டுச்சு.

நம்ம ஜாதியில பொறந்த எந்த கடவுளும் நம்மா காப்பாத்தல.நமக்கான ஒரே மகாதேவுடு கடவுளா அண்ணலின் சிலையை நான் பாத்தேன்" என சப் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் பேசும் வசனம் சிலிர்க்க வைக்கிறது.

“எங்க பிள்ளைங்க படிக்கற இடத்துல தற்கொலை பண்ணிக்காம இருக்கும்போது (ரோகித் வெமுலா), கல்யாணம் பண்ணதுக்காக எங்காளுங்கள அவங்க கொல்லாம இருக்கும்போது.நாம எல்லாரும் மனுஷங்க தான்னு நீங்க உணரும்போது.
வினாயகரோட தலைய ஒட்ட வைக்க
ஒரு கடவுள உருவாக்கனதுக்கும் ஏகலைவனோட விரல ஒட்ட வைக்க எந்த கடவுளும் இல்லாம போனதுக்கான வித்தியாசத்த நீங்க புரிஞ்சுக்கும் போது என்ன மாதிரியான  மோகன் ராவ்கள் உருவாகுவது நின்னு போயிடும்" என்ற வசனம் என பட்டாஸ் கிளப்புகிறது படம்.

இந்த படத்தோட Casting சிறப்பாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் கருணா குமார் இது போன்ற படங்கள் இன்னும் ஆந்திராவில் வருவதற்கான வாசலை திருந்திருக்கிறார்.

மராட்டியில் Fantry,Sairat படங்கள் வழியே தலித் பின்னனியுள்ள படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, இந்தியில் Article 15 எடுத்த அனுபவ் சின்ஹா போல இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இயக்குனர்கள் வரவேண்டும்///

Velu malayan
25.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்