///இன்று தகடூர் புத்தக பேரவை நடத்திய இணையவழி நூல்கள் அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு

இன்றைய சமூகச் சூழலில் புத்தகங்கள் வாங்குவதும்,புத்தகங்களை வாசிப்பதும் ஒரு ஏளனமாக பார்க்கக்கூடிய மனோநிலை உள்ளது.

 புத்தகங்களை ஒரு அறிவுச் சார்ந்த சொத்தாக கருதாமல் புத்தகங்களை எதிரிகளாக கருதக்கூடிய பொதுவான மனோபாவ நிலை உள்ள மனிதர்கள்  உள்ள சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என் சக நண்பர் ஒருவர் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகப்பையை அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லாமல் என் வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டு நீ கல்லூரிக்கு வரும்போது தினமும் இரண்டு இரண்டு புத்தகமாக எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடு நான் என் வீட்டு அலமாரியில் வைத்து விடுகிறேன்.அது என் வீட்டில் இருப்பவர்கள் கவனிக்க மாட்டார்கள் என அவருடைய நண்பரின்  நிகழ்வை கூறுகிறார்.

தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ள நிறைய பேரின் நிலைமை அவரவர் குடும்பங்களில் உள்ள மனைவியோ,பிள்ளைகளோ புத்தகம் வாங்குவதையும் வாசிப்பதையும் விரும்புவதில்லை. குடும்பம் சார்ந்த நபர்களிடம் இலக்கியத்தின் அவசியத்தை உணரவைக்க வேண்டும்.

இலக்கியம் என்பது இலக்கியம் சார்ந்த  நாவல்கள் செவ்வியல் படைப்புகளை படிப்பது மட்டுமே இலக்கியம் என்ற ஒரு குறுங் குழு மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது.

வீட்டிலுள்ள பெண்கள் விரும்பி வாங்கும் சமையல் பற்றிய புத்தகங்களும் இலக்கியங்கள் தான்.

தமிழில் நிறைய தன்வரலாற்று புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன அவற்றில் எனக்கு மிக முக்கியமாக படும் மூன்று நூல்கள் மகாத்மா காந்தியின் சுயசரிதை,நாமக்கல் கவிஞரின்
என் கதை நூல் மற்றும் உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம்.

தன்வரலாற்று நூல்கள் வாசகர்கள் ருசித்துப் படிக்கும் ஜோடனைகள் அற்றவையாக இருக்க வேண்டும்.
அப்படி திறந்த உள் மனதுடன் மனதின் உண்மைகளை வெளிக்கிளறி எழுதப்பட்டவை மேற்கூறிய மூன்று நூல்களும்.

தன் மனைவி இறந்ததற்கு தான் தான் காரணம் என்பதை என்கதை நூலில் நாமக்கல் கவிஞர்  எழுதுகிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக எனக்கு தேவையானதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது என் சரித்திரம் நூல்.

என் சரித்திரம் கருத்து மொழி இலக்கிய நுட்பங்கள் கொண்டு எழுதப்பட்ட ஒரு இலக்கியப் பேழை.

25 வயதில் உ.வே.சாமிநாதய்யர் எழுதிய நூல்களை என் 50 ஐ தாண்டிய வயதில் 10 விழுக்காடு கூட என்னால் வாசிக்க முடியவில்லை.

அவர் இருபதை தாண்டிய வயதில் எழுதிய படைப்புகளை ஐம்பது வயது கடந்த பிறகுதான் என்னாலே புரிந்துகொள்ள முடிகிறது.

சமையல் புத்தகங்கள் என்பவை வெறும் Recipie யைப் பற்றியது மட்டுமல்ல அது ஒரு பண்பாடு சார்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இருந்தே தமிழில் சமையல் சார்ந்த புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
பேராசிரியர் வீ.அரசு அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் தொடர்பான புத்தகங்களை தொகுத்துள்ளார்.

தமிழர்களின் சமையல் பண்பாட்டைப் பற்றிய " தமிழர் உணவு"என்ற நூலை பக்தவச்சல பாரதி அவர்கள் எழுதியுள்ளார். இந்நூல் பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு பற்றிய குறிப்புகளை கொண்டதாக உள்ளது.

அந்த தமிழர் உணவு நூலில்
"உள்ளது கொண்டு உண்ணுதல் " என்ற தலைப்பிலான கட்டுரையை நான் எழுதியுள்ளேன்.

 உள்ளது கொண்டு உண்ணுதல் என்றால் பழங்குடிகள், விவசாயம் சார்ந்தவர்கள் அவர்களின் சூழலுக்கு தகுந்த தேவையான பொருட்களை விளைவித்துக் கொள்வது.

ஜெர்மன் வாழ் தமிழர் பிரசாந்தி சேகரம் என்பவர் மாத நாட்காட்டிகளை தமிழ் நாவலில் உணவு குறிப்புகளை குறிப்பிட்டு எழுதிய நஞ்சில் நாடன் மற்றும் பிரபஞ்சன் போன்றவர்களின் குறிப்புகளைக் கொண்டு காலண்டர் செய்து வருகிறாராம்.

மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் ஆங்கிலத்தில் உணவுகள் பற்றி எழுதும் Cook book Writer என எழுத்தாளர்களே உண்டு. எனவே சமையல் நூல்களை எழுதுபவர்களை தாழ்வாக நினைக்கக் கூடாது.

சா.கந்தசாமி முதலியார் 1956ல் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூல் முக்கியமானது.பாரி நிலையம் பதிப்பாக வெளிவந்தது.

இந்த நூலில் "ஆறாதார கண்ணாடி" ஆறு சுவைகளை பற்றி குறிப்பிடுகிறது.
அறுசுவைகளில் ஒரு சுவை குறைந்தால் கூட அதனால் ஏற்படும் விளைவுகளை அதை நிவர்த்திகளை இந்நூல் பதிவு செய்கிறது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் உணவு பற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்று
 "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது". மற்றொன்று ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்.

சமகாலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று வரலாற்று நூல்கள்
1.பழ. அதியமான் எழுதிய
 " வைக்கம் போராட்டம்"

2. ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "பெயர் அழிந்த வரலாறு"
( அயோத்திதாசரை பற்றியது)

3. கோ ரகுபதி எழுதிய
 "காவிரி வெள்ளம் 1924 "

தமிழில் குழந்தைகளுக்கான குழந்தை இலக்கிய நூல்கள் வெகு குறைவு . சிறந்த சிறுவர் இலக்கிய நூலாக ஜப்பானிய நூலான "போட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி" யை கருதுகிறேன்.

தமிழில் சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களை பல்வேறு மொழிகளில் இருந்து யூமா வாசுகி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

தீவிர இலக்கியம் என்பது எல்லோருக்கும் சேர்ந்ததுதான்.அவரவர் துறை சார்ந்த அலுப்பிலிருந்து விலக,வெளியுலக வாழ்க்கையை அறிந்து கொள்ள இலக்கியம்தான் வாயிலாக இருக்கிறது.

புதுமைப்பித்தனின் பெரும்பான்மையான கதைகள் வெளியுலக வாழ்வின் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை.

அதைத்தாண்டி சிறுகதைகளில் சில பரிசோதனை முயற்சிகளையும் காஞ்சனை, அன்றிரவு போன்ற படைப்புகள் வழியாக புதுமைப்பித்தன் நிகழ்த்தியிருக்கிறார்.

மேலும் இலக்கியத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள சம்பவ வலு கொண்ட படைப்புகளை கொடுத்தவர்கள்
 கி. ராஜநாராயணன், கு.அழகிரிசாமி,
 ஜி நாகராஜன்,கந்தர்வன் மற்றும் சுந்தரராமசாமி ஆகியோர்கள் .

எதுவும் இங்கு ஸ்திரத் தன்மை கொண்டு நிலையாக நிற்பது இல்லை. இலக்கியமும் அப்படித்தான். இலக்கியமும் காணாமல்போகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல்வேறு நூல்களில் பிரதாப முதலியார் சரித்திரம் மட்டும் நமக்கு முக்கியமாகப் படுகிறது.

திருக்குறளுக்கு மு.வ.உரை மற்றும் சிற்பி பாலசுப்ரமணியம் உரை தாண்டி நிறைய மாறிக்கொண்டே இருக்கிறது. காலம் மாறும்போது எல்லாம் காலாவதியாகிறது.

குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாசிக்கும் பழக்கம் ஏற்படவேண்டும். குடும்பத்தில் அறிவுச் சூழல் உருவாக வேண்டும்.

வாசிப்பின் மூலம் அறிவு சார்ந்து நம்மை மேம்படுத்திக் கொண்டவர்களாக மாற்றிக் கொள்வதே சமூகத்தில் நமக்கான இடமாக கொள்ள வேண்டும்///

இந்நிகழ்வை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து ஒரு தொழில் முறை நெறியாளுகையாளர் போல செயல்பட்ட தர்மபுரியின் இலக்கிய முகம் மரியாதைக்குரிய ஆசிரியர்
 திரு . தங்கமணி,

தன்னுடைய நெருக்கடியான அலுவல்களை ஒதுக்கிவிட்டு எப்பொழுதும் இந்நிகழ்வை ஊக்குவிக்கும் மரியாதைக்குரிய மருத்துவர் திரு.செந்தில் மற்றும் தோழர் இரா.சிசுபாலன் அவர்களுக்கும் இப்படி ஒரு நிகழ்வை சாத்தியப்படுத்த பின்புலமாக இருந்த நண்பர் அறிவுடைநம்பி, லோகநாதன், சிங்காரவேலு மற்றும் இந்நிகழ்வில் இணைந்த அனைவருக்கும் என் நெஞ்சம் நிரம்ப நன்றிகள்.

நாள் : 11.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்