எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவலை முன்வைத்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேசவரெட்டி எழுதிய "அவன் காட்டை வென்றான் " என்ற நாவலை வாசித்து விட்டு அந்நாவலைப் பற்றி என் நண்பர்களிடம் சிலாகித்து பேசியிருக்கிறேன்.

ஒரு வயதான கிழவன்,ஒரு காடு, குட்டிகள் ஈன்ற ஒரு தாய்ப்பன்றி இவைகள் மட்டும் தான் நாவலில் வருபவைகள்.

தான் வளர்க்கும் சினை பன்றி வழி தவறி காட்டுக்குள் சென்று ஒரு புதரில் குட்டிகள் ஈன்று உள்ளதை கண்டுபிடித்து பன்றியையும், குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வர ஒரு கிழவனுக்கும்,பன்றிக் கும், பன்றியை கொல்ல  வரும் நரிகளுக்கும் இடையே ஓர் இரவில் நடக்கும் போராட்டம் தான் நாவல்.

 அவன் காட்டை வென்றான் நாவலோடு ஒப்பிடக்கூடியதாகவே இருக்கிறது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்
"கிழவனும் கடலும் "நாவல்

காட்டை வென்றான் நாவலின் களம் காடு.கிழவனும் கடலும் நாவலின் களம் கடல்.இரண்டு நாவலிலும் பொதுவான ஒன்று இரண்டு கிழவர்களும் இயற்கையோடு போராடுகிறார்கள்.
(எர்னெஸ்ட் ஹெமிங்வே)

"அவன் காட்டை வென்றான்" நாவலில் தனது பன்றி மற்றும் அதன் குட்டிகளை உயிருடன் மீட்க கடைசி வரை போராடி பன்றியையும் குட்டிகளையும் இழந்து வெறுங்கையுடன் வீடு திரும்புகிறான்
அந்த பெயரற்ற கிழவன்.

"கிழவனும் கடலும்" நாவலில் வரும் கிழவன் தன் பசியை வறுமையை போக்க ஒரு மீனுடன் போராடி அதை கொல்கிறான்.ஆனால் அதை கரைக்கு கொண்டு வருவதற்குள் அவன் பிடித்த மீனை சுறா மீன்கள் சுற்றி வளைத்து தின்று விடுவதால் சதைகள் தின்று விட்ட வெறும் மீன் முள்ளும், தலையும் மட்டுமே எஞ்சிய மீன்கூடுடன் வெறுமையோடு கரை சேர்கிறான்.

இரண்டு கிழவர்களுமே இயற்கையிடம் தோற்றுப் போகிறார்கள்.ஆனால் கடைசிவரை போராடுவதிலும்,
தளர்வை முறித்து தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களாக வெல்கிறார்கள்.

அவன் காட்டை  வென்றான் நாவலில் பன்றிக்கு அருகில் செல்லும் கிழவனை தாய்ப் பாசத்தின் மூர்க்கத்தால் பன்றி கிழவனை தொடையில் கடித்து குதறி விடுவதால் தொடையில் ரத்தம் வழிய ஒரு மரக்கிளையில் ஏறி அமர்ந்து கொண்டு இரவு முழுக்க பன்றியை நரிகளிடமிருந்து காவல் காக்கிறான்.
(கேசவ ரெட்டி)

கிழவனும் கடலும் நாவலில் வரும் கிழவன் தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீன் கயிறை இழுத்து துள்ளுவதால் கைகளிலும் நெற்றியிலும் காயமடைகிறான்.

கிழவனும் கடலும் நாவலில் வரும் சந்தியாகு கிழவன் தான் பிடித்த மீனை சுறா மீன்களிடமிருந்து காப்பாற்ற ஈட்டியை பயன்படுத்துகிறான்.

அவன் காட்டை வென்றான் நாவலில் வரும் கிழவன் தன்னுடைய பன்றியையும், குட்டிகளையும் நரிகளிடமிருந்து காப்பாற்ற ஈட்டியை பயன்படுத்துகிறான்.

இரண்டு நாவலின் உயிரோட்டத்தன்மை என்பது இரண்டு கிழவர்களின் போராட்டம் தான்.

கிழவனும் கடலும் நாவலில் வரும் சந்தியாகு கிழவன் 84 நாட்கள் மீன் கிடைக்காத ஒரு அதிஷ்டமற்ற மனிதனாக இருப்பதால் அந்த அதிஷ்த்தை தன் பக்கம் திருப்பவும், தன்னை ஒரு விசித்திரமான மனிதன்,மீனவன் என நிரூபிக்கவும் மனோலின் என்ற சிறுவனுடன் தான் பிடித்த மீனை பங்கு போட்டுக் கொள்ளவும் 85 ஆவது நாளில் அந்த பெரிய 1500 பவுண்டுள்ள மீனை கரை சேர்க்க போராடுகிறான்.

தூண்டிலில் மாட்டியுள்ள அந்தப் பெரிய மீனை விட சந்தியாகு கிழவனின் நம்பிக்கை பெரியது.

கடலில் அந்த மீனை பிடிக்கவும்,
கரை சேர்க்கவும் ஒவ்வொரு நொடியும் கிழவன் தனக்குள் சுயவலு ஏற்றிக் கொள்கிறான்.

அவன் காட்டை வென்றான் நாவலில் கிழவனுக்கு பேரனாக கோபால் என்ற சிறுவன் வருகிறான்.கடலும் கிழவனும் நாவலில் சந்தியாகு கிழவனுக்கு நன்பனாக மனோலின் என்ற சிறுவன் வருகிறான். இரண்டு சிறுவர்களும் கிழவன்களுடன் செல்வதில்லை. ஒரு வேளை சென்றிருந்தால் ஒரு கிழவன் காட்டிலிருந்து பன்றியையும், ஒரு கிழவன் கடலிலருந்து மீனையும் மீட்டு கொண்டு வந்திருப்பார்களோ என்னவோ?

தனிமையும், வயோதிகமும் சுமந்த ஒரு கிழவனுக்கும்,ஒரு பெரிய மீனுக்குமான போராட்டத்தில் கிழவனின் நம்பிக்கையும், மனத்திண்மையும் முடிவில் வென்றதாகவே நான் கருதுகிறேன்.

வாழ்வின் கடைசி துளி நம்பிக்கையும், மனித மனதின் முழு வலு சுருங்கும் போதும் நம்மை மீட்சி செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நாவல் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஒரு இந்திய எழுத்தாளனும்,
ஒரு அமெரிக்க எழுத்தாளனும் இரண்டு நாவல்களையும் தங்களது தாய் மொழியில் தனித்தனியே எழுதி இருந்தாலும் நாவல்களின் கதைச்சாரம் ஒத்தத் தன்மை உடையதாக இருப்பது ஆச்சர்யம்.

"அத்தடு அடவினி ஜெயின்ச்சாடு" என்ற பெயரில் தெலுங்கு மொழியில் கேசவரெட்டி எழுதியதின் தமிழ் வடிவம்தான் ஏ.ஜி.எத்திராஜிலு எழுதிய "அவன் காட்டை வென்றான்" நாவல்.
அவன் காட்டை வென்றான் நாவலைப் போலவே கிழவனும் கடலும் நாவலும் எனக்கு பிடித்த நாவல் வரிசையில் சேர்கிறது.

Velu malayan
30.4.2020

❤❤❤❤

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்