///கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலை முன்வைத்து

சிறுவயதில் கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான்.என்னுடைய தாத்தம்மா (அம்மாவை பெற்றவள் ) தான் எனக்கு நிறைய கதைகள் சொல்லுவாள்.

என்னுடைய தாத்தம்மா பிறந்த ஊர் ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள நாயக்கனூர்.அவளுடைய சிறு வயதில் அவளுடைய அண்ணன்களுடன் சேர்ந்து பார்த்த நிறைய சினிமாப் படங்கள், அவள் கேட்ட கதைகள் என நிறைய கதைகளை எனக்கு சொல்லுவார். அலிபாபாவும் 40 திருடர்களும்,
குலேபகாவலி போன்ற படங்களின் கதையை தாத்தம்மா என்னிடம் சுவாரஸ்யமாக சொல்லியது என் நினைவின் சுவடுகளில் இன்னும் இருக்கிறது.

என் தாத்தம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் கதை ஈசன்காட்டு மொட்டையன் கதை தான்.இந்தக் கதையில் ஈசன் காட்டு மொட்டையன் எதுவும் தெரியாத ஒரு அப்பாவியாக இருப்பான்.ஒரு தடவை பலாப் பழம் வியபாரம் செய்வதற்காக பலாப் பழக்கூடையை தலை சுமாடு இல்லாமல் தலையில் சுமந்து கொண்டு போகும் போது பலாப்பழ பால் அவன் தலைமுடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுவதால் பலாப்பழம் கூடை என் தலையை முழுங்கப் பார்க்கிறது என ஊரையே கூப்பிடுவான்.

ஒருமுறை ஈசன் காட்டு மொட்டையன் கல்யாணமாகி தன் புது மனைவியை கூட்டிக்கொண்டு தன் ஊருக்கு நடந்து வரும்போது வழியில் மழை பிடித்துக் கொள்வதால் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி தங்களுடைய துணிகளை எல்லாம் கழட்டி பிழியும் போது மனைவியின் மார்பகங்களை பார்த்த ஈசன் காட்டு மொட்டையன் நெஞ்சில இவளுக்கு இவ்வளவு பெரிய இரண்டு கட்டிகள் இருக்கிறதே இவளை நான் எப்படி காப்பாற்றப் போகிறேன் என்று பயந்து அவளை விட்டு விட்டு ஓடி விடுகிறான் என்பதாக இந்த கதை போகும்.
அப்படி எனக்கு கதை சொன்ன என் தாதம்மாவைப் போல் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கதைச் சொல்லி தாத்தா கி.ராஜநாராயணன் அவர்கள்.

கோழிகள் ஏன் குப்பைகளை தன் கால்களால் தோண்டிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான காரண கதை வழியாகத்தான் கி.ரா எனக்கு பரிட்சயமானார்.

நாட்டுப்புறக் கதைகளை, தொன்மக் கதைகளை தன்னுடைய படைப்புகளில் அதிகம் எழுதியவர் கி.ராஜநாராயணன் அவர்கள். தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த கதைசொல்லியான கி.ரா எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவல் நம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை பின்னணியாகக் கொண்டது. இரண்டு பாகங்களை கொண்டது இந்த நாவல்.

முதல் பாகத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியினால் கோபல்ல கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அம்மண்ணின் மரபுகளை பேசுகிறது.

விளக்கெண்ணெய் விளக்கு மாறி அரிக்கன் விளக்கு வந்தது பற்றியும், தூக்கமே வராமல் இருப்பதற்கு ஒரு இலை வந்திருக்கு என தேயிலையை குறிப்பிடுவது என கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறுவதை பதிவு செய்கிறார் கி.ரா.

சீனிநாயக்கர் இறந்த உடன் அவரது மனைவி எங்க்கச்சி உடன் கட்டை ஏறுவதால் அப்போதிருந்த உடன்கட்டை பழக்கத்தையும் பதிவு செய்கிறது நாவல்.

முதல் பாகத்தில் மிக சுவாரசியமாக இருப்பது கிட்டப்பனுக்கும், அச்சிந்த்தலுக்குமான உறவு தான். கிட்டப்பன் மாநோம்பில் வன்னி மரத்தை பிடுங்குவதும்,காரிக் காளையை அடக்கும் இடமும் நாவலில் சுவாரஷ்யம் கூட்டும் பகுதிகள்.

கன்னி வேப்பமரத்தின் அடியில் நாவறண்டு மயங்கி விழுந்து கிடக்கும் கிட்டப்பனின் உதடுகளை தன் ஈர நாக்கினால் தடவி அவர்கள் இருவரும் இணையும் இடத்துடன் முதல் பாகம் முடிகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தன்மைகளைப் பற்றியும்,அதன் தாக்கம் கோபல்லபுரத்து மக்களை எப்படி பாதிக்கிறது. அவர்களை எப்படி கிளர்ந்தெழச் செய்கிறது என்பதை விரிவாகப் பேசுகிறது இரண்டாம் பாகம்.

நாவலின் பலம் என்பது மண்ணின் மரபார்ந்த விஷயங்களை எழுத்தாக்கியதும்,கரிசல் மண்ணையும், கரிசல் மண்ணின் மனிதர்களையும் கண்முன் நிறுத்துவது தான்.

நாவலின் பலவீனம் என்பது நாவலில் காணப்படும் தொடர்ச்சியற்ற தன்மை.

என்னளவில் முதல் பாகம் படித்து முடித்தவுடனே ஒரு நாவல் முடிந்ததற்கான நிறைவை கண்டேன்///

Velu malayan

29.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்