///தகழி சிவசங்கரன் பிள்ளையின் "இரண்டு படி" நாவலை முன்வைத்து

தகழியின் படைப்புகளை வாசிக்கும் போது அவரது படைப்புகளில் எளிய மனிதர்களின் குரல்களை கேட்கலாம்.

சமூகத்தின் பார்வையிலிருந்து சாதிய,வர்க்க பேதத்தால் விலக்கப்பட்ட ஒரு தோட்டியின் குரலை தோட்டியின் மகன் நாவலில் பதிவு செய்திருப்பார் தகழி.

அதே போல் "இரண்டு படி" நாவலில் கேரளாவின் குட்ட நாட்டில் உள்ள பண்ணையார்களுக்கும், புலையர்களுக்கும் உள்ள வர்க்க பேதத்தை, புலையர்களின் உழைப்புச்சுரண்டலை, அவர்களின் இனத்திற்காக போராடும் கோரன் என்பவனின் குரலை பதிவு செய்கிறார் தகழி சிவசங்கரன் பிள்ளை.

சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் குட்டநாடு பண்ணையார்களிடம் அடிமைகளாக வயல்களில் வேலை செய்யும் புலையர்கள் அதிக கூலி வேண்டியும், நிலம் உழபவனுக்கே சொந்தம் என ஓங்கும் புரட்சி மற்றும் அதனால் சுட்டு வீழ்த்தப்படுபவர்களின் தியாகத்தை பேசும் "இரண்டு படி" நாவல் ஒரு இனப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

குட்ட நாட்டு வழக்கப்படி காளிச் சாம்பனின் மகள் சிருதையை ஐம்பது ரூபாய் பணமும்,இருப்பத்தைந்து பறை நெல்லும் கொடுத்து கோரன் திருமணம் செய்து கொள்கிறான்.

திருமண கடனை அடைப்பதற்காக நண்பன் குஞ்ஞப்பு உதவியுடன் கைனகிரியில் உள்ள யோசேப்பு என்ற பண்ணையாரிடம் வேலைக்குச் சேர்கிறான்.

பொய்க் கணக்கு எழுதி கூலியை ஏமாற்றும் யோசேப்பு பண்ணையாரை எதிர்த்து எல்லோரையும் ஒன்றிணைத்து சங்கம் அமைத்து புரட்சி செய்கிறான் கோரன்.

புரட்சி செய்து போலீசிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருக்கும் போது தன் மனைவி சிருதையை கற்பழிக்க முயலும் சாக்கோ எனும் பண்ணையாரை கொன்று விட்டு பிடிபட்டு கொள்கிறான்.

பிடிபடும் முன்  அவனது மனைவி சிருதை மாசமாக இருப்பதை அறியும் கோரன் சிருதையை மணக்க விரும்பிய தனது நண்பன் சாத்தானுடன் சேர்ந்து வாழ்ந்து கொள் என சொல்லிவிட்டு தலைமறைவாகிறான்.

ஆனால் சாத்தன் சிருதையை தன் தங்கையைப் போல பாவித்து கோரனின் ஐந்து வயது மகன் வெளுத்தையை வளர்த்து மீண்டும் கோரனிடமே சேர்த்து வைக்கிறான்.

இந்த நாவலில் என்னைப் பெரிதும் ஈர்த்து வியப்பில் ஆழ்த்திய பாத்திரம் சாத்தனின் பாத்திரம் தான்.

ஒட்டுமொத்த மனித நம்பிக்கையின் உருவமாக தெரிகிறான் சாத்தன்.
அப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்ற கேள்வியை சாத்தியப்படுத்தும் ஒரு பாத்திரம்.

நாவலின் இறுதி வரியில் கோரனின் ஐந்து வயது மகன் வெளுத்தை தன் சிறு கை விரல்களை மடக்கி உயர்த்திக் கொண்டு கூவும் "நிலம் உழுபவனுக்கே" என்ற குரல் தான் இந்நாவலின் தரிசனம்.

செம்மீன் நாவலில் மக்களின் உழைப்பை பேசாமல் அவர்களின் போராட்டத்தை காட்டாத தகழி இரண்டு படி நாவலில புலையர்களின் போராட்டத்தின்,
உழைப்பின் பக்கம் நின்று பேசுகிறார்.

இந்த நாவலை தமிழில் மொழி பெயர்த்த டி.இராமலிங்கம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு மலையாளம் வாசம் கலந்த மொழி பெயர்ப்பாக உள்ளது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதால் புலையர்களுக்கு பதிலாக இங்கே ஒடுக்கப்பட்ட சமூகங்களான பறையர் மற்றும் பள்ளர்களை கூலிகளாக காட்டியுள்ளார் ராமலிங்கம் பிள்ளை.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புகளை வாசித்து முடிக்கும் போது மனம் ஒருவித நிறைவையும், உணர்ச்சிகளின் உயரத்தையும் அடைவதை உணரலாம்.///

Velu malayan
23.4.2020.

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

ரயில் நிலையங்களின் தோழமை