தகழி சிவசங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவலை முன்வைத்து

இரண்டு வருடங்களுக்கு முன்பே தோட்டியின் மகன் நாவலை  வாசித்தேன்.நாவலை வாசித்து முடித்த பிறகு ஒரு அவஸ்தையை உணர்ந்தேன்.

சுடலைமுத்து என்ற தோட்டி தன் மகன் மோகனை தன்னை விட உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என அவனை படிக்க வைக்கிறான்.ஆனால் வாழ்வு நிகழ்த்தும் கோர விளையாட்டில் அவன் மகனும் மலம் அள்ளும் தோட்டித் தொழிலே செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதை நாவல் பேசும்.

ஒரு தோட்டியை முதன்மைப்படுத்தி  தோட்டி வாழ்வின் நிறைவின்மையை,  நிராசைகளின் வலியை நெருங்கி பேசியதில் மிக முக்கிய நாவல் என தோட்டியின் மகனைப் பார்க்கிறேன்.

தகழியின் படைப்புகளில் நான் இரண்டாவதாக வாசித்தது ஏணிப்படிகள் நாவல். கேசவ பிள்ளை எனும் ஒரு சாதாரண குமாஸ்தா குறுக்கு வழியில் எப்படி உயர்ந்த அதிகாரமுள்ள பதவியில் உட்காருகிறான் என்பதை ஏணிப்படியில் எழுத்தாக்கியிருப்பார் தகழி.

வெகுஜன வாசிப்பு சாரமும்,கலைத் தன்மையையும் கலந்த படைப்புகளை உருவாக்குவதில் தகழி தன்னிகரகற்றவர்.

கறுத்தம்மா என்ற மீனவப் பெண்ணுக்கும்,இஸ்லாமிய மீன் வியாபாரியான பரீக்குட்டிக்கும் இடையே ஏற்படும் கைகூடாத தூய  காதலால் கறுத்தம்மா வாழ்வில் நிகழும் துயர்களைப் பேசுகிறது செம்மீன் நாவல்.

நீர்க்குன்றத்து கடற்கரையில் உள்ள செம்படவகுடி மனிதர்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள்,மரபுகள், மீனவ பெண்களின் கற்பு எனும் ஒழுக்க விழுமியம் ஆகிவற்றை தகழி ஆழமாகப் பதிவு செய்கிறார்.

"எங்க அப்பா தோணியும்,வலையும் வாங்கப் போறாரே.ஆனா பணம் கொஞ்சம் குறையிது எங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுப்பியா?"
சின்ன முதலாளி என பரீக்குட்டியிடம் கறுத்தம்மா கேட்பது தான் நாவலின் தொடக்கம்.

கூடையில் மீன்சுமந்து விற்று பிழைப்பு நடத்தும் கறுத்தம்மாவின் அப்பா செம்மன் குஞ்சுவிற்கும், அம்மா சக்கிக்கும் சொந்தமாக ஒரு தோணியும், வலையும் வாங்க வேண்டும் என்பது கனவு. பரீக்குட்டியிடம் கொஞ்சம் பணம் வாங்கி தோணியும்,வலையும் வாங்கி வசதி நிலையை எட்டுகிறது கறுத்தம்மா குடும்பம்.

பால்ய வயதிலிருந்தே கடற்கரையில் பழகி விளையாடித்திரியும் பரீக்குட்டியும், கறுத்தம்மாவும் பருவ வயது வந்ததும் காதலிக்கிறார்கள்.

இது கறுத்தம்மாவின் தாய் சக்கிக்கு தெரிய வர அவன் நாலாவது மதத்துக்காரன் அவனிடம் பழக்கம் வேண்டாம் என எச்சரிக்கிறாள்.
ஆனால் இந்த விஷயம் கறுத்தம்மாவின் அப்பா செம்பன் குஞ்சுவிற்கு தெரியாது.

ஒரு கட்டத்தில் திருக்குன்றம்புழையை சேர்ந்த பழனி என்ற மீனவனுக்கு கறுத்தம்மாவை கல்யாணம் செய்து வைக்கிறான் செம்பன் குஞ்சு.

கறுத்தம்மா ஒரு துலுக்கப் பையனிடம் பழகி கெட்டுப் போனவள் என ஊர் முழுவதும் பேசும் புறணியில் பழனியின் நெஞ்சில் சந்தேகமுள் முளைக்கிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை எழுகிறது.

கடைசியில் பழனிக்கும், கறுத்தம்மாவிற்கும் பிறக்கும் பெண் குழந்தையை கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமியிடம் கொடுத்து விட்டு கறுத்தம்மா பரீக் குட்டியை கட்டியணைத்த நிலையில் கடலில் விழுந்து இறந்து போகிறாள்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பழனியும் கடலில் சிக்கி இறந்து போகிறான் என்பது தான் நாவல்.

பரீக் குட்டி:

கறுத்தம்மாவின் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞன். பால்ய வயதிலிருந்தே தொடரும் பழக்கம் இருவருக்கும் காதலாக மலர்கிறது.

செம்பன் குஞ்சு பணம் கேட்டவுடன் பரீக் குட்டி பணத்தை கொடுக்கிறான் அதற்கு காரணம் கறுத்தம்மாவின் மீதிருந்த பிரியம் தான். சக்கி சாகும் தருவாயில் பரீக் குட்டியிடம் கறுத்தம்மாவுக்கு நீ அண்ணனைப் போல உன்னால் அவள் வாழ்வுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என கேட்டுக் கொள்கிறாள்.

 கறுத்தம்மாவிக்கு திருமணமான பின் அவளை பரீக் குட்டி சந்திப்பதில்லை. சக்கி இறந்த செய்தியை சொல்ல மட்டும் திருக்குன்றப் பிழைக்கு சென்று கறுத்தம்மாவை சந்திக்கிறான்.
பரீக் குட்டி ஒரு தியாகத்தின் உருவமாக இருக்கிறான். சமூக கட்டுப்பாடுகளும்,மதமும் அவர்களை ஒன்றாக சேர முடியாமல் செய்கிறது.

செம்பன் குஞ்சு:

செம்படவ குடிகளில் திறமையானவன். பணம் சிறுக சிறுக சேர்த்து கொஞ்சம் கடனும் வாங்கி சொந்தமாக ஒரு தோணியும்,வலையும் வாங்கி வசதியாக வாழ்கிறான். கறுத்தம்மாவுக்கு திருமணம் ஆன சமயத்தில் சக்கி நோய்வாய்பட்டு படுத்து கொள்கிறாள். அந்த சமயத்தில் கறுத்தம்மாவை தாயின் அருகில் இரு என சொல்லாமல் செம்பன் குஞ்சு பேச்சை மீறியும் ஊருக்கு கறுத்தம்மாவை கூட்டிச் சென்று விடுகிறான் பழனி.அதனால் கோபமடையும் செம்பன் குஞ்சு கடைசி வரை பழனியுடனும், கறுத்தம்மா உடனும் பேசுவதில்லை.

சக்கி இறந்த செய்தியைக் கூட கறுத்தம்மாவுக்கு சொல்லி அனுப்புவதில்லை.
செம்பன் குஞ்சு பேராசைக்காரன். ஆனால் உழைப்பாளி.ஒரு கட்டத்தில் கறுத்தம்மாவுக்கும்,பரீக்குட்டிக்கும் உள்ள தொடர்பை ஊரில் உள்ளவர்கள் பேசுவதிலிருந்து அறியும் போது தன் தோணிகளை விற்ற காசை பரீக் குட்டியின் கைகளில் கொடுத்து விட்டு கடற்கரைகளில் சிரித்து கொண்டே நடக்கிறான்.
மனைவியின் மரணம்,தன்னை புரிந்து கொள்ளாத மகள்,மருமகன், தொழில்முடைவு என எல்லாம் அழுத்தி கடைசியில் பைத்தியமாகி விடுகிறான் செம்பன் குஞ்சு.

பழனி:

பழனி வலிமையான தோள்களையுடைய ஒரு மீனவ இளைஞன்.கடலையே அம்மையாகவும்,அப்பனாகவும் கொண்ட ஒரு அனாதை  செம்படவன்.பழனி குடும்பம் என்ற அமைப்புக்குள் வளராத காரணத்தால் எதன்மீதும் பற்றில்லாத குணம் கொண்டவனாக இருக்கிறான். கடல் தான் அவனுடைய உயிர்,கடல் தான் அவனுடைய பலம் என்று வாழ்ந்து வந்தவனுக்கு வாக்கப்படுகிறாள் கறுத்தம்மா.

கறுத்தம்மாவை பரீக்குட்டியுடன் தொடர்புபடுத்தி ஊர் பேசும் பேச்சு பழனியின் மனதை குடைகிறது.
அவனது நெஞ்சில் சந்தேகம் படர்ந்து கறுத்தம்மாவின் மீது வெறுப்பை கொட்டுகிறான்.கடைசி வரை கறுத்தம்மா மீது அவன் கொண்ட சந்தேகத்தின் நிழல் அவனை துரத்துகிறது.ஆனாலும் அவன் மனம் அவள் கலங்கமற்றவள் என்று ஒரு புறம் நம்புகிறது.

கறுத்தம்மா கெட்டுப் போனவள் என்பதால் அவனை யாரும் தோணியில் ஏற்றுவதில்லை.வேலை கொடுக்கவும் மறுக்கிறார்கள்.நிராகரித்து விட்ட கோபத்தில் தனியாகவே தூண்டிலில் மீன் பிடிக்க சென்று கடலில் சிக்கி செத்துப் போகிறான் பழனி.

கடலுக்கு போடும் கணவனின் உயிர் கரையில் இருக்கும் மனைவியின் ஒழுக்கத்தில் இருக்கிறது.
மரக்காத்தியின் ஒழுக்கம் தான் மரக்கானுக்குச் சொத்து எனவும் மனைவி ஒழுக்கமற்றவளாக இருந்தால் கடலுக்குச் சென்ற கணவன் இறந்து போவான் என்ற தொன்மக் கதையை ஒரு முறை சக்கி கறுத்தம்மாவிடம் சொல்கிறாள்.

உண்மையில் கறுத்தம்மா தூய்மையானவள்.பரீக்குட்டியை மனதில் நினைத்ததை தவிர அவள் எந்த தவறையும், ஒழுக்கமீறலையும் செய்வதில்லை.ஆனால் ஒரு குற்ற உணர்ச்சியிலேயே பழனியுடன் வாழ்க்கை நடத்துகிறாள்.

பழனிக்கும் ஊர் ஜனங்களுக்கும் பயந்து பரீக் குட்டியை பார்க்க தயங்கும் கறுத்தம்மா தன் குழந்தையை எப்படியும் தங்கை பஞ்சமி பார்த்துக் கொள்ளவாள் என்ற தைரியத்தில் பழனியிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி பரீக்குட்டியை கட்டியணைத்து கரையில் நிற்கிறாள்.

பண்டைய காலத்தில் ஒரு பெண்மணி கடலுக்குச் சென்ற  தன் கணவனை தவ பலத்தால் கரைக்கு உயிருடன் வரவழைத்ததைப் போல் தானும் உயிருடன் கரை திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கையில் தூண்டிலில் சிக்கிய சுறா மீனுடன் கடலில் போராடுகிறான் பழனி.

"இரு தினங்களுக்கு பின் ஓர் ஆண் பெண் ஆகிய இரண்டு பிணங்கள் கரையோரம் வந்து ஒதுங்கின.
இரண்டு உடலும் ஒன்றையொன்று ஆரத்தழுவிக் கொண்டிருந்தன பரீக்குட்டியும்,கருத்தம்மாவும்.

செறீயெழிக்கல் சென்ற அடுத்த ஊரில் கடற்கரையில் இறந்து விட்ட ஒரு சுறா மீனும் கரையில் ஒதுங்கிற்று"

என நாவலை முடிக்கும் தகழி அரயர் சமூக தொன்மக்கதையின் வழியே கறுத்தம்மா பரீக் குட்டியுடன் சேர்ந்த ஒழுக்க மீறல் தான் பழனியை கொன்று விட்டது என்பதை குறிப்பிடுகிறார்.

உண்மையில் கறுத்தம்மாவின் மனதில் பரீக் குட்டியைப் பற்றிய அடங்காமல் எழுந்து கொண்டிருந்த எண்ண அலை, பரீக்குட்டியின் மனதில் அடித்துக் கொண்டிருந்த கறுத்தம்மாவை இழந்து விட்ட இழப்பின் அலை, பழனியின் மனதில் கறுத்தம்மாவை நோக்கி எப்போதும் எழுந்துக் கொண்டிருந்த சந்தேக அலை என எல்லா அலைகளையும் கடைசியில் கடல் விழுங்கிக் கொண்டு அதன் அலைகளை எப்பொழுதும் போல் எழுப்பி நிற்கிறது.

எல்லா சமூக அமைப்புகளிலும் பெண்களின் புனிதத்தன்மையை காப்பது தான் பாம்பரை கெளரவமாக இருக்கிறது. இந்தச் சமூக கட்டமைப்பில் பெண்கள் மீது கட்டப்பட்டுள்ள ஒழுக்கம், கற்பு என எல்லா கட்டுமானங்களும் ஆண்கள் தோற்று விடக் கூடாது என பெண்களை பலவீனப்படுத்த ஏற்படுத்தப்பட்டது.

அதனால்தான ஜெயகாந்தன்  இப்படிச் சொல்கிறார்

"நமது சமூகத்தில் ரொம்ப மூடர்கள் கற்பு என்பதற்கு இன்னதென்று விளங்காத எத்தனையோ குழப்பமான அர்த்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் மனைவி தன்னைத் தவிர இன்னொருவனை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள் என்று நம்புவதில் சந்தோசம் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். தங்களது குருட்டு நம்பிக்கைக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்று உள்ளூர பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அவள் பிறக்கும்போதே தமது மனைவியாக பிறக்கவில்லை என்ற உண்மை அவர்களுக்கு நினைவில் தோன்றுவதே இல்லை.அந்த உண்மை தங்கள் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை குலைத்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்"

செம்மீன் நாவல் ஒரு  சாதாரண காதல் கதையை பேசும் நாவல் என்பதைத் தாண்டி கலைத்தன்மை கொண்ட நாவல் என்ற வடிவம் கொள்ளக் காரணம் கை கூடாத ஒரு காதலின் தோல்வியை, மரணத்தை மனித மனங்களின் புள்ளியிலிருந்து எழுதியது தான்.

என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு இந்நாவலுக்கு ஆகப்பெரிய பலம்.

Velu malayan
22.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்