///மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் "சிக்கவீர ராஜேந்திரன்" நாவலை முன்வைத்து

தமிழ் மொழியைத் தாண்டி கன்னட மொழி இலக்கியங்கள் தொடர்ந்து வாசிக்க எனக்கு வாயிலாக இருந்தவர்கள் சிவராம் காரந்த்,
எஸ்.எல்.பைரப்பா இருவரும் தான்.

சிவராம் காரந்த்தின்
 "மண்ணும் மனிதரும்,
அழிந்த பிறகு" எஸ்.எல்.பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவல்களை வாசித்தப் பிறகு கன்னட படைப்புகள் மீது ஈர்ப்பும், அப்படைப்புகளை தொடர்ந்து வாசிக்கக் கூடிய ஆவலும் ஏற்பட்டது.

அந்த ஆவலின் நீட்சிதான் யு.ஆர். அனந்தமூர்த்தியின் "சம்ஸ்கரா",
அரவிந்த் மாளகத்தியின் "கவர்மெண்ட் பிராமணன்" பி.வி. பாரதியின்
"கடுகு வாங்கி வந்தவள்"
விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" போன்ற கன்னட படைப்புகளை என்னை வாசிக்கச் செய்தது.

 நான்கு தினங்களுக்கு முன் ஏ.கே.செட்டியார் எழுதிய குடகு என்ற பயண நூலை வாசித்து முடித்தேன்.
அந்த நூல் குடகு பயணத்தைப் பற்றிய நூலாக இல்லாமல் குடகின் வரலாற்றையும் கூறும் நூலாக இருந்தது.

அதில் குடகு நாட்டின் கடைசி அரசன் சிக்கவீர ராஜேந்திரன் என்றும் அவனுடைய ஆட்சி முறை சரியில்லை என்பதால் மக்களே அவனை ஆட்சியிலிருந்து 1834 ஆம் ஆண்டு இறக்கினார்கள் என்ற தகவல் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிக்கவீர ராஜேந்திரன் நாவலை நான் ஒரு வருடத்திற்கு முன்பே வாங்கி படிக்காமல் வைத்திருந்தேன்.
அதை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது ஏ.கே.செட்டியார் எழுதிய குடகு நூல் தான்.

குடகு நாடு ஒரு வளம் பொருந்திய நாடு. கர்நாடகத்திற்கும்,தமிழகத்திற்கும் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி ஆறு உற்பத்தியாகும் நாடு குடகு நாடு.

அப்படிப்பட்ட  வளம் பொருந்திய ஒரு நாட்டை தன்னுடைய மதி கெட்ட நடத்தையால்,மக்களின் விரோதத்தை விரக்தியை சம்பாதித்து ஆங்கிலேயரிடம் தன் நாட்டை இழந்த சிக்கவீர ராஜேந்திரன் என்ற மன்னனின் ராஜ்ஜியத்தின் சரிவை,வீழ்ச்சியை பதிவு செய்கிறது இந்நாவல்.

குடகு நாடு குடகர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் குடகு நாட்டை எப்பொழுதும் ஆண்டதாக தெரியவில்லை.குடகர் அல்லாதவர்களே குடகை இதுவரை ஆண்டிருக்கிறார்கள்.

சுற்றியுள்ள மைசூர்,கேரளா,மங்களூர் ஆகிய ராஜ்ஜியங்களலிருந்து சுதந்திரத்தை பாதுகாத்தும், வெளி ராஜ்ஜியங்களால் வெல்ல முடியாத மலைக்காடான குடகு நாட்டை தொட்ட வீர ராஜேந்திரன் என்ற மன்னன் மிகச் சிறப்பாக அரசாண்டு வந்தான். அவனுக்குப் பின் அவனது மகள் தேவம்மாஜி ஆட்சிக்கு வருகிறாள். ஆனால் தேவம்மாஜியின் தம்பி லிங்கராஜன் அவளை ஆட்சியிலிருந்து அகற்றி 9 ஆண்டுகள் ஆட்சி புரிகிறான். அவன் இறந்த பிறகு அவனது மகன் சிக்க வீர ராஜேந்திரன் தனது 20 வயதில் அரியணை ஏறுகிறான்.

1820 முதல் 1834 வரை 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சிக்க வீர ராஜேந்திரனின் நிஜ வரலாற்றுடன் புனைவு கலந்து அவன் சாம்ராஜ்யம் சரிந்ததை நாவலாக்கியுள்ளார் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்.
(சிக்க வீரராஜேந்திரன் தன் குடும்பத்துடன்)


மடிக்கேசரி அரன்மனையில் சிறை வைக்கப்பட்டுள்ள
அரசனின் தங்கை தேவம்மாஜிக்கு மந்திரி நொண்டி (எ) பசவன் சாப்பிடச் சொல்வதில் ஆரம்பிக்கிறது நாவல்.
(மடிக்கேரி அரண்மனை)

சிக்கவீர ராஜேந்திரன் ஒரு துஷ்டன். எவரையும் எடுத்தெரிந்து பேசக் கூடியவன். பெண் மோகம் கொண்டவன்.

அரண்மனைக்கு பொருட்கள் வழங்கும் சிக்கண்ணச்செட்டியின் மருமகளை மன்னன் அந்தப்புரத்திற்கு வர வேண்டும் என கேட்பதில் சிக்கல் தொடங்குகிறது. சிக்கண்ணச் செட்டி தனது மருமகளை வேறு இடத்திற்கு அனுப்பி விடுகிறான்.
இதனால் மன்னனின் மந்திரிகள் போபண்ணா மற்றும் லட்சுமி நாராயணய்யா ஆகியோர் மன்னனுக்கு எதிராக திரும்புகிறார்கள். மக்களும் மன்னனுக்கு எதிரான மனநிலையில் வாழ்கிறார்கள்.

சிக்க வீரராேஜந்திரனின் தந்தை உயிரோடு இருக்கும் போதே தேவம்மாஜிக்கு குடகைச் சேர்ந்த சென்ன பசவய்யனுக்கு திருமணம் செய்து வைத்து அப்பங்கொளத்து அரண்மனையை கொடுக்கிறான்.

சிக்க வீரராஜேந்திரனுக்கு ஒரே பெண் குழந்தை மட்டும்.அவள் பெயர் புட்டவ்வா (எ) கெளரியம்மாள். தனக்கு ஆண் வாரிசு இல்லாததால் தன்னுடைய தங்கையின் கணவன் சென்னபசவய்யன் ஆட்சிக்கு வந்து விடுவான் என்று தன் தங்கையை அவனிடமிருந்து பிரித்து சிறை வைக்கிறான்.

அரசனின் மனைவி ராணி கெளரம்மாவும்,ராஜகுமாரி புட்டவ்வாவும் அரசனுக்குத் தெரியாமல் சிறையிலிருக்கும் தேவம்மாஜியையும், அவளது கணவன் சென்ன பசவய்யனையும் சேர விடுவதால் அவள் கர்பமாகிறாள்.

தனது மகள் அத்தையை விட்டுவிடுங்கள் என கெஞ்சுவதால் தேவம்மாஜியை சிறையிலிருந்து விடுவிக்கிறான் சிக்க வீரராஜேந்திரன்.

தேவம் மாஜிக்கு 7 மாதத்தில் குறை பிரசவத்தில் ஆண்குழந்தைப் பிறக்கிறது. மீண்டும் அரசன் தன் தங்கையையும் தங்கை கணவனையும் சிறை பிடிக்க ஆணையிடுகிறான்.

குழந்தையை தூக்கிக்கொண்டு குதிரையில் செல்லும்போது ஒரு இடத்தில் குதிரை தாண்டும்போது தொட்டிலில் இருக்கும் குழந்தை  தவறி கீழே விழுந்து விடுகிறது. அது மன்னன் கைக்கு கிடைத்து மன்னன் குழந்தையை கழுத்தில் கத்திவைத்து அழுத்தி கொன்று விடுகிறான்.

சென்ன பசவன் ஆங்கிலேயேர் உதவியை நாடுகிறான்.ஆங்கிலேயே படை,உள்ளூர் மந்திரிகள் ஏற்பாடு செய்யும் படை எல்லாம் சேர்ந்து சிக்க வீர ராஜேந்திரனை கைது செய்து ஆட்சியிலிருந்து இறக்கி குடகை ஆங்கிலேயேர் ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள் என்பது தான் நாவலின் கதையே.

இந்தியாவில் நிறைய சாம்ராஜ்ஜியங்கள் பெண்களை சீரழித்ததாலும்,
அவர்களின் சாபத்தாலும் சரிந்திருக்கிறது. சிக்கவீர ராஜேந்திரனும் அப்படி பெண் மோகத்தாலும், ஒழ்க்க மற்ற நிர்வாகத்தாலும் அழிகிறான்.

உறவுகளுக்குள் நடக்கும் அரியணை ஏறும் போட்டி ஆங்கிலேயர்களை உள் நுழைய வைத்து அவர்களை ஆட்சியாள செய்து விடும் இந்திய சமஸ்தானங்களை ஆண்ட மன்னர்களின் ஒட்டுமொத்த மனநிலையின் பிரதிபலிப்பு இந்த நாவல்.

நாவலில் மிக முக்கியமாக வரும் பாத்திரங்கள் ராணி கெளரம்மா, பசவன், தீட்சிதர், பகவதி,தொட்டவ்வா,உத்தய்ய தக்கன், உத்தய்யன் ஆகியோர்கள் .

ராணி கௌரம்மாள்:

கௌரம்மா குடகு பெண். கௌரம்மா முக்காடீர புட்டய்யா என்பவரின் மகள். தொட்ட வீர ராேஜந்திரனுக்கு வேண்டியவன். மேலும் லிங்கராஜன் பட்டத்திற்கு வருவதற்கு சாதகமாக செயல்பட்டதால் கெளரம்மாவை தன் மகனுக்கு கட்டி வைக்கிறான் லிங்கராஜன். கௌரம்மா கம்பீரமான நடத்தை கொண்டவள். கெட்டிக்காரத்தனம் உடையவள். அனைவரையும் மதிக்கும் பண்புள்ளவள். சிக்க வீர ராேஜந்திரனின் அத்தனை கீழ்மையான நடத்தைகளையும் பொறுத்துக் கொண்டு குடகு ராஜ்ஜியத்தை காப்பாற்றி வருகிறார். தன் கணவன் தன்னுடைய நாத்தனார் தேவம்மாஜியை சிறையிலிருந்து  விடுவிக்க காரணமாகும் இடத்தில் தன்னை ஒரு கருணையான ராணியாகவும்,

 அதே போல தன்னுடைய நாத்தனாரின் ஆறு மாத குழந்தையை சிக்க வீர ராேஜேந்திரன் கொன்று விடுவதை அரசன் தான் கொன்றான் என சொல்லாமல் குழந்தை இறந்து விட்டது என மட்டும் தெரிவியுங்கள் என்ற இடத்தில் ராஜ்ஜியத்தின் ரகசியம் காக்கும் ஒரு ராஜதந்திரியாகவும் செயல்படுகிறார்.

 சிக்கவீர ராஜேந்திரன் சிறைபிடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட சமயத்தில் ஆங்கிலேயர்களும்,குடகு ராஜ்யத்தின் அமைச்சர்களும் உங்கள் மகளை ராணியாக அறிவித்து நீங்கள் ராஜ்ஜியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எனக் கேட்கும்போது வேண்டாமென்று கூறிவிட்டு நான் இருக்க வேண்டியது என் கணவருடன் தான் என மடிக்கேரி அரண்மனையை விட்டு வெளியேறி காசிக்கு போகும் ஒரு தருணத்தில் அங்கேயே இறந்து போகிறாள்.

பசவன் :

பசவன் சிக்கவீர ராஜேந்திரனின் பால்யகால நண்பன். அவனுடைய அமைச்சர்.வலது கால் ஊனமுற்ற தால் அவனை நொண்டி என்றே அழைக்கிறார்கள்.

அரண்மனையில் ஒருநாள் அமைச்சரவை கூடும்போது மன்னருக்கு பக்கத்தில் ஒரு இருக்கை போடப்படுகிறது அது பசும்பொன் உட்காருவதற்கு என்று தெரிந்ததும் அமைச்சர்கள் போபண்ணா,லட்சுமி நாராயணய்யா ஆகியோர்கள் ஒரு நாவிதன் அமைச்சராக மன்னர்கள் அருகில் உட்காருவதா?என்று எதிர்க்கிறார்கள்.

சிக்கவீர ராஜேந்திரனுக்கு எல்லாமுமாக இருக்கிறான் பசவன். பெண்கள் சகவாசம் கட்டுப்பாடற்ற மதுப்பழக்கம் என மன்னனை தவறான பாதைக்கு கொண்டு சென்று 35 வயதிலேயே மன்னனை ஒரு வயோதிகனாக, நோயாளியாக மாற்றி விடுகிறான்.

ஆனால் பசவன் விசுவாசத்தில் மன்னனுக்கு நாயாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு தன்னை காட்டிக் கொடுத்தவன் இவன் தான் என தவறாக புரிந்து கொண்டு பசவனை சிக்கவீர ராஜேந்திரன் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.

பசவன் இறந்த பிறகு தான் தெரிகிறது பசவன் தன்னுடைய அண்ணன் என்று. பகவதி என்பவளுக்கும்,
லிங்கராஜனுக்கும் பிறந்தவன் தான் பசவன்.லிங்கராஜன் பகவதியை நாட்டைவிட்டே துரத்தி விட்டு பசவதின் வலது காலை முறுக்கி அவனை தொட்ட வ்வா என்ற கிழவியிடம் கொடுத்து இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என ஆணையிடுகிறான்.

பகவதி :

பகவதி மருத்துவம் மாந்த்ரீகம் தெரிந்தவள்.
பகவதி லிங்கராஜானால் ஏமாற்றப்பட்டவள். பசவனின் தாய். பகவதி தான் தன்னுடைய தாய் என்பது தெரியாமலேயே பசவன் இறந்து போகிறான். சிக்கவீர ராஜேந்திரனுடைய சாம்ராஜ்யத்தை சரிக்க ஆங்கிலேயருக்கு மன்னனைப் பற்றி புகார் கடிதம் எழுதுகிறாள்.

நால்கு நாடு அரண்மனையிலிருந்து சிக்கவீர ராஜேந்திரன் சுரங்கப்பாதை வழியாக தப்பிக்கும் போது அந்த சுரங்கப் பாதையை ஆங்கிலேயர்களுக்கு காட்டி சிக்கவீர ராஜேந்திரனை கைது செய்ய காரணமாக இருக்கிறாள் பகவதி.
(நால் குநாடு அரண்மனை)

சிக்கவீர ராஜேந்திரனை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு தன் மகன் பசவனை மன்னனாக்குவது அவள் எண்ணம். லிங்க ராஜன் பகவதிக்கு செய்த பாவத்திற்கு பகவதியாள் சிக்க வீரராஜேந்திரன் ஆட்சியை இழக்கிறான். பகவதி சிக்கு வீர ராஜேந்திரனுக்கு செய்யும் பாவத்தால் தன் மகன் பசவனை இழக்கிறாள்.

சிக்கவீர ராஜேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் போகும் போது அவனை சரி செய்ய பகவதியை அழைக்க பசங்க மலையாள தேசம் செல்கிறான்.
அப்போது பசவனை பகவதி கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுகிறாள்.பகவதி வயதானவள், தன்னைப் பெற்ற தாய் என்பது தெரியாமலேயே அவள் மீது பசவன் சபலப்படுகிறான்.

சிக்கவீர ராஜேந்திரனும்,அவனது மகள் கௌரியம்மாவும் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார்கள்.

கௌரி இங்கிலாந்து ராணியால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். கௌரி கேப்டன் காம்ப்ளின் என்பவனை மணந்து கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறுகிறாள்.1859ல் சிக்க வீர ராஜேந்திரன் இங்கிலாந்தில் இறந்து போகிறார். கேப்டன் காம்ப்ளிக்கும், கெளரியம்மாவுக்கும் ஒரு மகள் பிறக்கிறாள். அவள் பெயர் எடித் சாது கெளரி காம்ப்ளின்.

கெளரியம்மாவின் நகைகளை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற காம்ப்ளின் என்ன ஆனார் இறந்தாரா? என்பது தெரியவதில்லை. சிக்கவீர ராஜேந்திரனின் மகள் கெளரியம்மாளும் இறந்து போகிறாள்.

வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள மைசூரிலிருந்து ராயர் என்பவர் இங்கிலாந்து செல்கிறார்.அவரை எதேச்சையாக சந்திக்கும் சிக்கவீர ராஜேந்திரன் பேத்தி எடித் சாது கௌரி ராயரிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், அவள் கொடுத்த ஆவணங்களை வைத்து மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய வரலாற்று புனைவுதான் இந்த நாவல்.

ஒரு அரண்மனைக்குள் நடக்கும் அரியணை ஏறும் குடும்பப் போட்டியை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னிடம் அகப்பட்ட இரையை மலைப் பாம்பு விழுங்குவது போல்  ஒட்டுமொத்த இந்தியாவும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் வாய்க்குள் விழுங்கப்பட்டதற்கு குடகு நாடு ஒரு சான்று.

பசவனை வளர்க்கும் தொட்டவ்வா அரண்மனையில் தாதியாக பணிபுரிகிறாள்.அரண்மனைகளில் மருத்துவம் பார்க்கும் தாதியாக இருப்பவர்கள் நாவிதர்கள்.அதனால் தான் தொட்டவ்வா வளர்ப்பதால் பசவனை நாவிதன் என்கிறார்கள்.

சிக்கண்ண செட்டியின் மருமகள் மீதான மோகம், அமைச்சர்களை அலட்சியமாக நடத்தும் குணம்,மன்னனுக்குரிய எவ்வித நடத்தையுமற்று கடிவாளம் இல்லாத குதிரை போன்ற ஒரு அரசனின் நிர்வாகம் தன் கீழ் வாழும் மக்களையே அவனுக்கு எதிராக நிற்க வைத்து ஆட்சியை இழக்க வைக்கிறது.

சிக்கவீர ராஜேந்திரன் கடுகளவும் கருணையற்றவன் என்பதற்கு சான்று தன் தங்கைக்கு பிறந்த ஆறு மாத குழந்தையை கொல்லும் நிகழ்வும் ,
 தன் தங்கை தப்பித்துப் போக உதவிய சோமன் என்பவனை கழுவேற்றம் செய்யும் நிகழ்வும்.

உண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கொண்டு தன்னுடைய புனைவில் ஒரு அரசனின் வீழ்ச்சியை நம் கண் முன் சித்திரமாக்குகிறார் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்.

ஒரு வரலாற்று புனைவு நாவல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிக்கவீர ராஜேந்திரன் நாவல்///

Velu malayan
20.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்