///ஏ.கே.செட்டியார் எழுதிய "குடகு" பயண நூலை முன்வைத்து

"தன் இடத்தை விட்டு அயலிடங்களுக்கு சென்றே இராதவன் மற்ற மக்களையெல்லாம் எதிரிகளாகவே நோக்குகிறான்.வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இருப்பவனோ தன்னுடைய கூட்டம் வாழ வேண்டுமானால் மற்ற கூட்டங்களுடன் ஓரளவாவது ஒட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்கிறான்" என்று கூறுகிறார் இங்கிலாந்து அறிஞர் பெட்ரண்ட் ரசல்.

அப்படி கர்நாடகாவின் குடகிற்கு சென்று அம்மக்களுடன் பழகியும் பயணித்தும் திரண்ட ஏ.கே.செட்டியாரின் அனுபவங்களின் பதிவு தான் இந்த குடகு நூல்.

 ஏற்கனவே ஏ.கே.செட்டியாரின் இந்திய பயணங்கள்  நூல் வாசித்த எனக்கு குடகு நான் வாசித்த இரண்டாவது நூல்.

குடகு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு இது ஒரு பயணப் புத்தகம் என்பதையும் தாண்டி குடகின் வரலாற்றைப் பதிவு செய்யும் நூலாகவும்,அங்கு வாழும் குடகர்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்யும் பண்பாட்டு ஆவணமாகவும் இருப்பதை உணர்ந்தேன்.

குடகு ஒரு மலை நாடு.குடகின் மொத்த நிலப்பரப்பு 1587 சதுர மைல். இந்தியாவின் மற்ற எந்த பகுதிகளைக் காட்டிலும் தமிழ் நாட்டுக்கும் குடகு நாட்டுக்கும் ஒரு உயிர் தொடர்பு உண்டு.
தமிழ் நாட்டின் உயிர்நாடி காவிரி. காவிரியின் பிறப்பிடம் குடகு.

பெங்களூரிலிருந்து குடகை நோக்கி பயணிக்கும் போது மைசூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாக சாமுண்டீஸ்வரி ஆலயம்,மைசூர் அரண்மனை, கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார் ஏ.கே.செட்டியார்.

குடகு பயணத்தின்போது குடகில் சாலையின் இருபுறங்களிலும் திபெத்தியர்கள் இருப்பதை பார்க்கும் செட்டியார் 1959 ஆம் ஆண்டு சீனர்கள்
திபெத்தை தாக்கியபோது தலாய்லாமா இந்தியா தஞ்சம் புகுந்த காலத்தில் சுமார் 40 ஆயிரம் அகதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தபோது அதில் 3000 ம் அகதிகளை மைசூர் ராஜ்ஜியம் ஏற்றுக் கொண்டதாகவும் அதில் குடகின் எல்லையில் உள்ள பெரியபட்டணம் தாலுகாவில் 3500 ஏக்கர் நிலத்தில் 3,000 திபெத்தியர்கள் குடியேறி வாழ்ந்து வரும் தகவலைக் குறிப்பிடுகிறார்.

குடகு எல்லையில் முதல் நகரம் குஷால் நகரம். குடகின் மீது திப்பு சுல்தான் படையெடுத்தபோது இவ்வூரில் தங்கியிருந்தபோது அவனுக்கு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தான் தங்கியிருந்த ஊரின் பெயருக்கு குஷால் நகர் என்று பெயர் மாற்றியுள்ளான் என்ற தகவலையும் ஹிந்துஸ்தானியில் குஷால் என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம் என்பதையும் பதிவு செய்யும் வரலாற்று நிகழ்வு வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

காவிரியின் பிறப்பிடம் குடகு என்பதால் குடகர்களுக்கு காவிரியின் மீது மிகப்பெரிய பக்தி உள்ளது என்றும்,குடகர் பெண்களில் பத்தில் ஒருவருக்கு காவேரி என்ற பெயரும்,ஆண்களில் கூட சிலருக்கு காவேரியப்பா என்ற பெயரும் உள்ளது குடகர்களின் இயற்கை பக்தியை நமக்கு காட்டுகிறது.

குடகர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள்.குடகர்களின் விருந்தில், திருமணத்தில் பன்றி இறைச்சி கட்டாயமாக இடம் பெறுவது,
அண்ணன் இறந்துவிட்டால் அண்ணி திருமணமாகாத கொழுந்தனையே மணம் செய்து கொள்ளும் வழக்கம் என குடகர்களிடம் உள்ள பழக்கங்கள் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

தனி நாடாக இருந்த குடகு நாடு 1956ஆம் ஆண்டு மைசூர் உடன் இணைக்கப்பட்ட போது நேருவிடம்
 "மைசூர் என்ற பாத்திரத்தில் உள்ள தண்ணீரில்  கடைந்த வெண்ணெய்யை போடுகிறீர்கள்" என்று கூறிய ஜெனரல் கரியப்பா ஒரு குடகர் என்பது ஆச்சரியமான தகவல்.

குடகர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
குடகு தனிநாடாக இருந்தபோது குறைவாக அரசு வேலையில் இருந்தவர்கள் இப்போது மைசூர் உடன் இணைந்து விட்ட பிறகு நிறைய பேர் அரசு வேலைகளில் பணிபுரிகிறார்கள்.

குடகின் தலைநகர் மெர்க்காரா (அ)மடிக்கேரி.மடிக்கேரி என்றால் சுத்தமான நகரம் என்று பொருள்.

அமெரிக்காவின் டேரியன் நகருக்கும், மடிக்கேரிக்கும் ஒரு தொடர்பு உண்டு 1954 ஆம் ஆண்டு டேரியன் நகர் மடிக்கேரியை சுவீகரித்துக் கொண்ட வரலாறை பதிவு செய்துள்ளார்.

மடிக்கேரியில் பிரசித்தி பெற்ற இடங்களாக ராஜா ஸீட் மண்டபம், ஓம்கரேஸ்வரா ஆலயத்தை குறிப்பிடுகிறார்.

கர்நாடகாவிற்கு காப்பியை அறிமுகப்படுத்திய பாபு புடான் சாகிப் என்றும் ஆனால் இந்தியா முழுக்க காப்பியை பரவலாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதையும்,
இந்தியாவில் உள்ள 47 ஆயிரம் காப்பி எஸ்டேட்டுகளில் குடகில் மட்டும் 10,000 காப்பி எஸ்டேட்டுகள் உள்ளதாக செட்டியார் பதிவு செய்கிறார்.

குடகில் அதிக கணபதி கோவில் இருந்தாலும் முருகன்தான் வணங்கப்படும் கடவுளாக உள்ளார்.குடகர்களில் ஜாதிகள் கிடையாது ஆனால் ஏற்றத்தாழ்வு உண்டு.

குடகர்கள், ஜம்மா குடகர்கள் என்ற பிரிவு இருந்தாலும் இவர்களுக்கிடையே திருமணம் நடைபெறுவது மிகக் குறைவு. குடகர்களுக்கு வேலை செய்ய ஹொலையர்கள் என்ற தாழ்த்தப்பட்டவர்கள் குடகில் வசிக்கிறார்கள்.

குடகர்கள் சிறந்த போர் வீரர்கள். ஆனாலும் அவர்கள் மண்ணை அவர்கள் இதுவரை ஆண்டதில்லை.இதுவரை குடகு நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் லிங்காயத்துகள்.

மலேசியாவில் உள்ள மலேயர்கள் தங்கள் நாட்டில் சிறுபான்மையினராக இருப்பது போல் குடகில் உள்ள குடகர்கள் தங்கள் நாட்டிலேயே சிறுபான்மையினராக இருக்கின்றனர்.

குடகர்களின் ஆதி வரலாறு என்பது பல்வேறு வரலாறு தகவல்கள் இருந்தும் எது மூலம் என்பதை அறிய முடியாததாக இருக்கிறது.குடகின் கடைசி அரசனான சிக்கவீர ராஜேந்திரன் ஆயிரத்து 1834 ஆண்டு பதவி நீக்கப்பட்ட வரலாறு சுவாரசியமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் தேர்தல் 1952ல் குடகின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செப்பூடிரா முத்தண்ணா பூனச்சா.

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை போல குடகில் ஷூத்ரி எனும் அறுவடை திருவிழா நடைபெறுகிறது.

குடகர்கள் தவிர குடகில் ஒக்கலிகர், லிங்காயத்துகள்,மலை ஜாதியினர் என பலர் இருந்தாலும் குடகர்கள் தான் அம்மண்ணின் ஆணிவேர்.

 குடகு  நாட்டில் அதிசயம் அங்கே பிச்சைக்காரர்கள் இல்லை என்பதுதான் என்று பதிவு செய்கிறார் ஏ.கே.செட்டியார்.

இந்த குடகு புத்தகம் பயண நூல் வடிவிலான குடகர்களைப் பற்றிய ஒரு இனவரைவியல் ஆவணம்.///

15.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்