///ஏ.கே.செட்டியாரின் "இந்தியப் பயணங்கள் " பிரயாண கட்டுரை நூலை முன்வைத்து

குடும்பம்,வேலை பளு,பொருளீட்டல் என அன்றாட  சலிப்பில் தன்னை புதைத்துக்கொண்டு எப்போதும் வாழ்வின் பேரிரைச்சலில் சிக்கித்தவிக்கும் மனித மனதை பயணமும்,வாசிப்பும் மட்டுமே இலகுவாக்கும் என்பது என் எண்ணம்.

 பாம்பு தன்னை புதிதாய் தோலுரித்துக் கொள்வது போல பயணம் ஒருவரை புதுப்பித்துக் கொடுக்கிறது.

 பல்வேறு சூழலை,பல்வேறு மனிதர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பை பயணம் நமக்கு வழங்குகிறது.

சாமிநாத சர்மா எழுதிய "எனது பர்மா வழி நடைப்பயணம்" நூலை வாசித்து பிறகுதான் எனக்கு பயணம் பற்றிய நூல்களை வாசிக்கும் ஒரு மன வெறி மலர்ந்தது. அந்த வெறியின் தொடர்ச்சியில் வாசித்தது தான் ஏ.கே.செட்டியார் எழுதிய "இந்தியப் பயணங்கள்" நூல்.

தமிழில் பிரயாண இலக்கியத்தின் பிதாமகராக திகழ்கிறார் ஏ.கே.செட்டியார்.

மனிதர் பிரயாணத்தை பிராணமாகக் கொண்டு பல்வேறு தேசங்களுக்கு சென்று சுற்றித்திரிந்திருக்கிறார்.

போக்குவரத்துச் சூழலும்,வசதிகளும் குறைவாக இருந்த நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எப்படி இவரால் இவ்வளவு இடங்களுக்கு பயணம் செய்ய முடிந்தது என நம் புருவத்தை உயர வைக்கிறார்.

தான் பார்த்த இடங்களை,அதன் வரலாறை, வாழ்வியல் கூறுகளை பண்பாட்டை, கலாச்சாரத்தை சுருக்கமாக, தெளிவாக பயணக் குறிப்பாக எழுதும் பலம் அவருக்கு மட்டுமே வாய்த்தது.

அவர் பயணக் குறிப்புகளை வாசிக்கும்போது அதில்  ஒரு பகடித்தன்மை இருப்பதை உணரலாம்.

இந்தியாவின் யாத்திரை ஸ்தலமான காசியில் பயணிக்கும்போது பாவ விமோசனத்திற்காக வைதிக காரியங்களை செய்யும் பண்டாக்களைப் பற்றி இப்படி பகடி செய்கிறார்

 "நமது பாவங்களைப் போக்குவதற்கு முன் அவர்கள் நமது பணத்தை போக்கி விடுவார்கள்" என்று.

ஒரு முறை கான்பூரிலிருந்து டெல்லிக்கு பிரயாணம் செய்யும்போது தான் பயணம் செய்யும் பெட்டிக்குள் கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறிக்கொண்டு பயணம் செய்கிற போது குழந்தைக்கு பால் காய்ச்ச சாராய ஸ்டவ்வைப் பற்ற வைக்க சமையல் தெரியாத அந்த அம்மாவும், இவரும் "கடைசியில் நல்ல காலமாக பாலில் சாராயம் கலக்காமல் அந்த குழந்தைக்கு கொடுத்தோம் " என்கிறார்.

 ஜெய்ப்பூர் ரயில் பணத்தின்போது தனக்கு மேலே உள்ள மெத்தையில் 200 பவுண்டுள்ள இரண்டு கனமுள்ள கனவான்கள் படுத்துள்ள மெத்தை ஆடியதை கண்டு பயந்ததை பதிவு செய்யும் நிகழ்வு என பயணக்குறிப்பு முழுவதும் பகடி செய்திருக்கிறார்.

தான் பார்த்த இடங்கள் சுமந்துள்ள வரலாற்று நிகழ்வுகளையும், தரவுகளையும் கச்சிதமும்,
துல்லியமும் கலந்து எழுதுகிறார்.

ஒரு பிரயாணக் கட்டுரை எப்படி எழுதப்படவேண்டும் என்ற வடிவ கச்சிதம்
ஏ.கே.செட்டியாரின் எழுத்தில் இருக்கிறது.

இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூரைப் பற்றிக் குறிப்பிடும் போது அங்கு உலகத்தரம் வாய்ந்த ஒரு கோல்ப் மைதானம் இருந்ததையும்,

ஆமேர் அரண்மனை பற்றியும் இந்தியாவின் வியாபார துறைகளில் முன்னணியில் இருக்கும் பெரும்பாலான மார்வாடிகள் இந்த ஜெய்ப்பூர் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலை குறிப்பிடுகிறார்.

கூடுதல் தகவலாக ஒரு லட்சத்துக்கு மேல் ஜனத்தொகை கொண்டிருந்த ஜெய்ப்பூரில் ஒரே ஒரு திரைப்படக் காட்சி சாலை இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

எலிபெண்டா தீவைப் பற்றி குறிப்பிடும்போது அதன் உண்மையான பெயர் கரபுரி என்றும்,போர்த்துக்கீசியர் இத்தீவை தம் வசப்படுத்துக் கொண்ட போது அங்கு யானை சிலை இருந்ததால் அதற்கு எலிபெண்டா என பெயரிட்ட தகவலை குறிப்பிடுகிறார்.

அங்குள்ள சிற்பங்களில் முக்கியமானது மகேஸ்வர மூர்த்தியின் உருவச்சிலை என்கிறார். எலி பெண்டா குகையில் இருட்டு என்பதே கிடையாது என்றும் அங்குள்ள சிற்பங்கள் 15 முதல் 20 அடி உயரம் உள்ளவை என்று பதிவு செய்கிறார்.

கத்தியவார் செளராஷ்டிரா இரண்டையும் இணைத்து உருவான ராஜ்கோட் பயணித்து பற்றி குறிப்பிடும் போது காந்தியின் சத்திய சோதனையில் வரும் வீரம் காம் என்ற இடத்தையும், காந்தி கல்வி பயின்ற ஆல்பிரட் ஹைஸ்கூல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

குஜராத்திகளும்,கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட தமிழருக்கும் தெலுங்கர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அவ்வளவு வித்தியாசம் அவர்களுக்கு இருக்கிறது என்கிறார்.

காந்தியும் முகமது அலி ஜின்னாவும் கத்தியவாரிகளே என்கிறார்.

பிரபலமான சோமநாதர் ஆலயம் சௌராஷ்ட்ராவில் தான் இருக்கிறது என்பதையும் கூடுதலாக பதிவு செய்கிறார்.

பீஜப்பூரில் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாக கோல் கும்பஸ் மற்றும் ஜூம்மா மசூதியை குறிப்பிடுகிறார்.

கோவாவின் தலைநகர் பஞ்சிம் ஒரு குடியர்களின் சுவர்க்கம் என்கிறார்.

 அங்குள்ள கோவானியப் பெண்கள் நல்ல தேகக்கட்டு உடையவர்கள் என்றும்,
அவர்கள் பாதி பிடித்த சுருட்டை அணைத்துவிட்டு அதைக் கூந்தலில் செருகிக் கொள்ளும் பழக்கத்தை உடையவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவலைக் குறிப்பிடுகிறார்.

நகரிக்கு அருகிலுள்ள புக்க ஸ்தலத்தில் உள்ள அதிசயமான நீரூற்று,
செஞ்சியில் கிடைக்கும் பரங்கிக்காய் வத்தல் குழம்பு பற்றி குறிப்பிடும் போது முன்னதை சிலாகித்தும்,பின்னதை சலிப்பாகவும் கூறுகிறார்.

தரங்கம்பாடியில் உள்ள மீனவ செம்படவர்களின் வினோத கல்யாணம் பழக்கத்தை குறிப்பிடுகிறார்.

மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி முடிந்ததும் மணமகன் கையையும் மணமகள் கையையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டியவர் புரோகிதர்.
பலவந்தமாக பெண்ணின் கையை பிடித்து மாப்பிள்ளையின் கையோடு சேர்க்க வேண்டும்.

ஏழு ரூபாய் சம்பளத்திற்கு புரோகிதர் படும்பாட்டை பகடியாக பதிவுசெய்கிறார்.

தரங்கம்பாடி பற்றி நினைக்கும் பொழுது கொம்பில்லாத மாடுகளும், கூரையில்லாத வீடுகளுமே ஞாபகத்துக்கு வருகிறது என்றும்,

தென்னிந்தியாவில் உள்ள சிறந்த சுகவாச ஸ்தலங்களில் தரங்கம்பாடி குறிப்பிடத்தக்கது என்கிறார் ஏ.கே.செட்டியார்.

கன்னியாகுமரி பயணத்தின்போது புத்தேரி என்ற இடத்தில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை சந்தித்த நிகழ்வை பெருமையாக கூறுகிறார்.

கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் வாசக சாலைக்கு காந்தி வந்த சுவாரஷ்யமான நிகழ்வோடு இப்பிரயாண கட்டுரையை முடிக்கிறார்.

பயண குறிப்புகள் எழுதுவதில் ஏ.கே.செட்டியார் இன்றும் முதன்மையானவராக கொண்டாடப்பட காரணம் அவர் பயண அனுபவங்களை எடுத்துரைத்து எளிமையாக எழுதும் கச்சிதமான பாணி,இன்றும் அவர் எழுத்தில் காணப்படும் புத்துணர்ச்சி,பகடித்தன்மை ஆகிய சிறப்புகள் அவரை பயண இலக்கியத்தின் பிதாமகர் என நிரூபிக்கின்றன///

13.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்