வெ.சாமிநாத சர்மாவின் "எனது பர்மா வழிநடைப்பயணம்" நூலை முன்வைத்து

எனக்கு பயணங்கள் பிடிக்கும். பொதுவாக என் பயணங்கள் என்பது என் சொந்த மாநில நிலப்பரப்புகளுக்குள்ளே இருந்த நீர்வீழ்ச்சிகள், காடுகள் என சுற்றி அலைவதாக இருந்தது.

ஆனால் சொந்த மாநில நிலப்பரப்பைத்தாண்டி என் உடலை வேற எங்கேயும் நான் தூக்கிக் கொண்டு சென்றதில்லை.

அப்படி சொந்த மாநிலத்தைத் தாண்டிய என் முதல் பிரயாணம் என்பது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களுக்கு என்னுடைய சமகால நண்பர்கள் ஜெயவேல், ஞானதீபன்,சிவன் மற்றும் சரவணன் ஆகியோருடன் சென்றது தான்.

பொதுவாக அதிகம் பயணம் செல்லும் என் நண்பர்கள் ஜெயவேல்,தீபன் ஆகியோருக்கும் பயணம் செல்ல விரும்பும் எனக்கும் பயண குரு, பாஹியான் ஆசிரியர் திரு.தங்கமணி அவர்கள் தான்.இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணம் சென்றவர், பயணம் சென்று கொண்டிருப்பவர்.

பயண நூல்கள் நான் அதிகம் படித்ததில்லை.ஜெயமோகன் எழுதிய நூறு நிலங்களின் மலை என்ற பயண நூலை வாசித்து இருக்கிறேன்.
அதுவும் முழுமையாக வாசிக்கவில்லை.
நான் முழுமையாக வாசித்த முதல் பயண நூல் "எனது பர்மா வழி நடைப்பயணம்"நூல் தான்.

பயணம் செல்லும் ஒரு நிலப்பரப்பின் தன்மை, அதன் மனிதர்கள்,அதன் கலாச்சாரங்களை பதிவு செய்யும் பொதுவான பயண நூல்களிலிருந்து இந்நூல் வேறுபடுகிறது.

வாழ்வின் நெருக்கடியான யுத்தத் தருணத்தில் தன் உயிரை மீட்டுக் கொள்ள இலட்சக்கணக்கான அகதிகளில் ஒருவராக பர்மாவிலிருந்து இந்தியா வந்த சாமிநாத சர்மாவின் சாகசம் நிறைந்த பயணக்குறிப்புகள் இந்நூல்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் தாக்குதலுக்கு உட்பட்ட பர்மாவின் ரங்கூன் நகரிலிருந்து தப்பித்து வந்த நூற்றி நாற்பத்தி ஐந்து நாட்கள் பயண அனுபவங்களின் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல்.

சாமிநாத சர்மா ரங்கூனில் ஜோதி என்ற தமிழ் மாதப் பத்திரிகையை 1937 முதல் 1947 வரை நடத்தி வருகிறார்.1941 டிசம்பர் 23-ஆம் தேதி ஜப்பானின் ராணுவ விமானங்கள் குண்டுவீசி தாக்குகிறது. ஜப்பானின் தாக்குதல் தொடர்வதால் ரங்கூனில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாந்தளை என்ற நகருக்கு மனைவி மங்களத்துடன் நண்பர் ஒருவருடன் காரில் பயணம் செய்கிறார்.

ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கில இந்தியர்கள் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதனால் ஆங்கிலோ இந்தியர்களைப் போல் உடை அணிந்தும் ராமசாமி என்ற பெயரை ராம்சே எனவும்,மூர்த்தி என்ற பெயரை மார்ட்டி எனவும்,காவேரி கரோலின் எனவும், லட்சுமி லூசி எனவும் பொய்யாக பெயர் மாற்றி தம் பரம்பரையை அடகுவைத்து சௌகரியமாக விமானத்தில் பயணம் செய்து இந்தியா சேர்ந்ததையும்  பதிவு செய்கிறார்.

மாந்தளையில் இருக்கும் போது யுத்த காலத்திலும் ரவை,கோதுமை,பால் ஆகியவை மலிவு விலையில் கிடைப்பதை பதிவு செய்கிறார்.
ஆனால் இங்கு இந்தியாவில் கொரோனா யுத்தத்தை காரணம்காட்டி எல்லா பொருள்களையும் கூடுதல் விலையில் விற்க்கிறார்கள் நம்மூர் வியாபாரிகள் .

ஒரு தலைமுறையாக அல்லது பல ஆண்டுகளாக பர்மாவில் குடியேறி சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக அலையும் துயர் மனநிலையை  யுத்தம் ஏற்படுத்தி விடுகிறது என்பதை இந்த பயண நூலில் பதிவு செய்கிறார் சர்மா.அவருடைய புத்தகங்களையும்,
கைப் பிரதிநூல்களையும் ரங்கூனில் விட்டு வந்ததையே பெரிய இழப்பாக கருதுகிறார் சாமிநாத சர்மா.

ஜப்பானின் ராணுவத் தாக்குதலால் ரங்கூன் நகர் சிதைவதை,உயிர் பலிகளை மேலோட்டமாக பதிவு செய்யும் சர்மா ரங்கூன் 89 முறை ஜப்பானின் விமான குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டது எனவும்,178 முறை அபாய சங்கு நிலைக்கு உட்பட்டதையும் பதிவு செய்கிறார்.

நூலின் தலைப்பு தான் பர்மா வழி நடைப்பயணம் என்று உள்ளது.ஆனால் சர்மா தனது பெரும்பான்மையான பயணத்தை ரயில்,கார்,லாரி,படகு,டோலி மூலம் பயணம் செய்கிறார்.

நூலின் ஆரம்பத்தில் அவரே குறிப்பிடுகிறார்.அவர் நடைபயணம் செய்தது குறைந்த தூரம் தான் என்று.ரங்கூனில் பத்திரிக்கை நடத்தியதால் அதிகமான அரசு அதிகாரிகளுடன் அவருக்கு பரீட்சயம் இருந்ததால் அவர்கள் அவருக்கு ரயில் மூலம், லாரி மூலம் செல்ல உதவி புரிகிறார்கள்.போகும் இடமெல்லாம் உதவக் கூடிய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

நிறைய அகதி முகாம்களைக் கடந்து லாரி மூலமான பயணம் வக்ஸி முகாம் வரை முடிந்து விடுகிறது.வக்ஸீ முகாம் உள்ள நாகலாந்திலிருந்து டோலி மூலம் பயணம் தொடர்கிறது .டோலி என்பது மூங்கில் கழிகளால் செய்யப்பட்ட சப்பரம்.டோலியை மணிப்பூரிகள் சுமந்து செல்கிறார்கள்.

நாகர்கள் பிறந்தமேனியாக இருப்பவர்கள் அவர்களின் பிறப்புறுப்பு மறைப்பதற்காக சிவப்பு நாடா போன்ற துண்டு மட்டும் கட்டியுள்ளதை கூறுகிறார்.நாகர்கள் நாகரிக வாசனையற்றவர்கள் நரமாமிச பட்சினிகள்,முரட்டு சுபாவம் உடையவர்கள் என எல்லாம் சொல்கிறார்கள்.ஆனால் அவர்களும் நெருங்கி பழகும் போது நாகரிகப் பண்பு உடையவர்கள் தான் என்று கூறுகிறார்.

சாமிநாத சர்மா ஒருமுறை சவரம் செய்து கொண்டிருக்கும் போது முகத்திலுள்ள சோப்பு நுரையை நாகர்கள் கையில் தடவி அவர்களுடைய முகத்தில் தடவிக் கொள்கிறார்கள்.அவர் வைத்துள்ள அந்த சோப்புக் கட்டியை நாகர்கள் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

 இப்படி மலிவான பொருட்களைக் கொடுத்து பாதிரியார்கள் நாகர்களை மதம் மாற்றி வைத்துள்ளதாக சர்மா பதிவு செய்கிறார்.நாகலாந்து மணிப்பூர் காடுகளை அதன் பள்ளத்தாக்குகளை மிக சிறப்பாக பதிவு செய்கிறார்.

நடைபயணத்தில் வெற்றுடம்புடன் வரும் ஒரு சக்கிலியர் குடும்பத்து பையனுக்கு தன் பைஜாமாவை கழட்டி கொடுத்தும், தன்னை டோலியில் தூக்கி வரும் மணிப்பூர் தொழிலாளிக்கு கூடுதலாக இரண்டு ரூபாய் கொடுத்தும் தன்னை ஒரு கருணையுள்ள பிராமணராக காட்டிக்கொள்கிறார் சாமிநாத சர்மா.

பர்மாவின் தேக்கு மரங்களை அசாம் காடுகளின் தேக்கு மரங்களோடு ஒப்பிடும்போது அசாம் காடுகளின் தேக்கு மரங்கள் குழந்தை என்கிறார் சாமிநாத சர்மா.ரங்கூனில் 20.2.1942ல் தன் பயணத்தை தொடங்கும் சாமிநாத சர்மா 24.4.1942 ல் கல்கத்தா வந்தடைகிறார். பின் 13.5.1942ல் தனது மனைவி மங்களத்துடன் சென்னையில் காலடி வைக்கிறார்.

இந்தப் பயண நூல் நிறைய சாகச திணிப்பில்லாமல் எளிமையாக எதார்த்தம் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

ஒரு யுத்தம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் நம்பிக்கையை, வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்பதை கூறும் நூலாக இருக்கிறது.

இதில் குறைகளும் இருக்கிறது நடைபயணம் மூலம் இந்தியா நோக்கி வந்தவர்களின் துயரத்தை,
அவர்களின் மரணத்தை நெருங்கி பதிவு செய்யவில்லை.

அப்புறம் நிறைய இடங்களை கடந்து வரும்போது ரசித்ததாக அந்த பகுதிகளை சுற்றி பார்க்க வேண்டும் போல இருந்ததாக கூறுகிறார்.உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பயணிக்கும் ஒரு நெருக்கடியான சூழலில் மனம் எப்படி ஒன்றை ரசிக்கவும்,லயக்கவும் செய்யும் என்று தெரியவில்லை.
ஆனாலும் இது வாசிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர் :எனது பர்மா வழி நடைப்பயணம்

ஆசிரியர் : வெ.சாமிநாத சர்மா

 பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்

விலை: ரூ.195/

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

ரயில் நிலையங்களின் தோழமை