///தகடூர் புத்தக பேரவை இணைய வழியில் நடத்திய"பெரிதினும் பெரிது கேள்" என்ற நிகழ்வில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி "காலம் அறிந்து கூவிய சேவல்" என்ற தலைப்பில் தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஏப்ரல் 13 1930 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர்.

29 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான கவிஞன்.

சினிமாவுக்காக 9 ஆண்டுகளில் 180 திரையிசைப் பாடல்கள்களை எழுதியவர்.

ஆரம்ப காலகட்டங்களில் திரையிசை பாடல்களை தாழ்வாக எண்ணிய காலம் உண்டு.

கர்நாடக இசை வடிவம் போன்ற மேட்டுக்குடிகளின் இசையை திரையிசைப் பாடல்கள் தான் வெகுஜன சாமான்ய மக்களுக்கு கொண்டு சேர்த்தது.

திரையிசை இலக்கியம் ஆகுமா ?
கவிதைக்கான இலக்கியத்துக்கான மரியாதையை திரையிசைக்கு தரமுடியுமா? என்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுந்த காலங்கள் உண்டு.

கவிஞர் கண்ணதாசனை கவிஞர் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு.

சினிமாவின் வளர்ச்சி என்பது நாடகங்களில் இருந்து தொடங்கியது.

அப்போதெல்லாம் டூரிங் கொட்டாயில் படம் பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். எங்க பாட்டி ஒரு தடவை ஊரில் உள்ள டூரிங் கொட்டகையில் சினிமா பார்க்கப் போகும் ரொம்ப நேரம் படம் போடலைன்னு கேமராவிலிருந்து வரும் ஒளியை பாத்துட்டு இருந்திருக்குதுட்டு இந்த பொந்துக்குள்ள வர ஒளியை பார்க்கறதுக்காடா
ஒன்றறை அணாவை வாங்குனீங்கன்னு சொல்லியிருக்கு.

நாடகங்கள் பிறகு ஊமைப் படங்களாக வளர்ந்து ராஜா ஹரிச்சந்திரா,கீசகவதம் போன்ற படங்கள் என வந்தது.பின்னர் தான்  பேசும் படங்கள் வர ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் மறுத்த காலம் உண்டு.

அதனால்தான் ஆரம்ப கால நாடகங்களில் எம்ஜிஆர்,சிவாஜி நம்பியார் போன்றவர்கள் அவர்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள்.

தமிழகத்தில் பெண்கள் திரைப்படம் நடிக்க முன்வராததால் ஆரம்பகாலப் படங்களில் கதாநாயகி தெலுங்கு பேசுவார் கதாநாயகன் இந்தி பேசுவார் இன்னொரு நடிகர் தமிழ் பேசுவார் இப்படி பல மொழி கலந்து பேசும் படமாக இருந்தது ஆரம்பகட்ட படங்கள்.

மருதகாசி எழுதிய பாடல்களான ஏர்முனைக்கு நேரிங்கு எதுவுமில்லை, மணப்பாறை மாடு கட்டி போன்ற பாடல்களை பட்டுக்கோட்டையார்தான் பாடினார் என்ற குழப்பம் நிறையப் பேருக்கு உண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1956ஆம் ஆண்டு வெளியான பாசவலை என்ற திரைப்படத்தில் முழு பாடலையும் எழுதியுள்ளார். அவருக்கு அப்போது 19 வயது .அவருக்கு அந்த வாய்ப்பை வாங்கித் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
வாய்ப்பு வாங்கித் தந்த அந்த பாடல்

"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்
 தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான் சொந்தம்"

கலைஞரின் கதை வசனத்தில் உருவான புதையல் என்ற திரைப்படத்தில்

"சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி
நம் தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி "
 என்ற பாடலையும் பட்டுக்கோட்டை எழுதியுள்ளார்.

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை எவை என்று எனக்கு தெரியாது. ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் புகழப்பட்டவர் மக்கள் கவிஞர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உயிரோடு இருந்திருந்தால் என் அரசவைக் கவிஞராக அவரை அமர்த்தியிருப்பேன் என எம்ஜிஆர் கூறுமளவிற்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் முக்கிய மனிதராக கருதப்பட்டவர்.

பக்தி பாடல்கள் எழுதினாலும் அதிலும் மக்கள் பிரச்சனையை பேசியவர்.

விவசாயிகளின் கஷ்டங்களையும் காதலையும் பாடல்களில் எழுதியவர்.

காதல் பாடல்களிலும் நாகரிகமான கண்ணியத்தை கடைபிடித்தவர்.

கோயம்புத்தூர் பஞ்சாலைத் தொழிலாளிகளால் மக்கள் கவிஞர் என்ற பட்டம் சூட்டப் பெற்றவர்.

முதன்முதலில் திரையில் ஒரு பாடல் ஆசிரியனுடைய பெயர் வரும்போது மக்கள் கைதட்டி கொண்டாடிய பெருமையைப் பெற்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞன்.

திரையிசையில் ஒன்பது ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்தவர்.

சிங்கப்பூரில் உழைப்பாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் மன்றம் வைத்துள்ளார்கள்.

"டீ டீ பாட்டாளி யும் கூட்டாளியும் சேர்ந்து குடிக்கும் டீ பல சமயங்களில் இவர்களுக்கு சாப்பாடே அந்த டீ"

என உழைக்கும் வர்கத்தின் வறுமைகளைதன் பாட்டில் வைத்தவர்.

"வெலக்கி வச்ச வெண்கல தவலை மனசுக்குள்ள என்னடி கவலை"
என விவசாயிகளின் காதலை யதார்த்தமாகப் பதிவு செய்தவர்.

பட்டுக்கோட்டை கடவுளைப்பற்றி பாடினால் கூட அதில் மக்களின் கஷ்டங்களை பற்றியும் பாடியவர்.

காதலைப் பாடினாலும்
 "நான் கருங்கல்லில் சிலையா?
காதல் எனக்கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ? என காதல் பாடல்களில் கண்ணியத்தை  கடைபிடித்தவர்.

பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, கண்ணதாசன் போல
சிறியதாக இல்லாமல் உங்கள் பெயர் ஏன் பெரியதாக இருக்கிறது என்று ஒருவர் கேட்டதற்கு அவர்கள் எல்லாம் பெரிய கவிஞர்கள் அதனால் அவர்கள் பெயர் சிறியதாக இருக்கிறது.
நானோ சிறிய கவிஞன் பெயராவது பெரியதாக இருக்கட்டுமே என பகடியாக பதில் சொன்னவர்.

பாரதி மீதும் பாரதிதாசன் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தவர்.

" உச்சி மலையில் ஊறும் அருவிகள் ஒண்ணா கலக்குது

ஆனால் பாழும் மனித கூட்டம் பேதம் சொல்லி வளக்குது

யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்

ஆக மொத்தம் எல்லோருக்கும் பத்து மாசம் தான் "

என மனித சமத்துவத்தை தன் பாடல்களில் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

1959ஆம் ஆண்டு இறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை நாம் இப்போது பேசுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தன்னை ஒரு எளிய மனிதனாக, பொதுவுடைமை சித்தாந்த வாதியாக, சுயமரியாதை கொண்ட மனிதராக வாழ்ந்தவர் என்பது தான் காரணம்.

"மீண்டும் பாரதி பிறந்து விட்டான்"
 என பொதுவுடைமைச் சிற்பி ஜீவா அவர்களால் பாராட்டப் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 13 நாளை சிறப்பிக்க மிகச்சிறந்த உரை நிகழ்த்திய தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு தகடூர் புத்தக பேரவையின் சார்பில் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்///

12.4.2020

Comments

Post a Comment

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்