///ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" நாவலை முன்வைத்து

" மனித மனங்களின் முகமூடி"

நாம் வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் குடும்பத்தில்,குடும்பத்தைத் தாண்டி பழகுபவர்களிடம்,பணிபுரியும் இடத்தில் எல்லோரிடத்திலும் ஒருவித முகமூடியை மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறோம்.

 போட்டா போட்டிகள்,பாசாங்குகள், குரோதங்கள்,மனக்கிலேசங்கள் என எதுவுமற்றவர்களைப் போல் நடிக்கிறோம்.

நம்மை இழந்து நம்மை யாருக்கோ நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறோம்.

சமூகப் பரப்பில் வர்க்க முரண்களை காட்டிக்கொள்ளாமல் எல்லாம் இருப்பவர்களைப் போல் காட்ட ஒரு முகமூடியை விரும்பி மாட்டிக் கொள்கிறோம்.

இந்திய நடுத்தர மற்றும் மேல் மட்ட வர்க்கத்து குடும்ப மனிதர்களின் உறவு, காதல்,குடும்ப உறவுகளின் குலைவு, போலித்தனம்,பாஷாங்குகள்,முகமூடிகள் ஆகியவற்றை ஒரு பிராமண இளைஞனின் பார்வையிலும்,
குரலிலும் சொல்லப்படும் நாவலே
 "என் பெயர் ராமசேஷன் ".

தன்னை ஒரு Casonova வாக காட்டிக் கொள்ளும் Amoral hero வின் கதை இந்நாவல்.

இன்ஜினியரிங் படிக்கும் பிராமண இளைஞன் ராமசேஷன் என்பவனின் குடும்பம், அவன் சந்திக்கும் நண்பர்களின் நட்பு,
பெண்களுடனான காதல்,
அதன் முறிவுகள்
ஆகியவற்றை மூன்று பகுதிகளாக அவன் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

 என் பெயர் ராமசேஷன் நாவலை எழுதி ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே இன்றைய நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் மனத்தடங்களில் நடந்து பார்த்திருக்கிறார் ஆதவன்.

1980களில் எழுத்தப்பட்ட இந்நாவல் கால இடைவெளிகளைக் கடந்து இன்றைய நவீன நடப்பு வாழ்விற்கும் பொருந்திப் போகிறது.

ராமசேஷன் மரபுகளை மீறி வாழ நினைக்கும் ஒருவன்.

"ஆமாம் ராமசேஷன் கர்நாடகமான ஒரு பெயர்.எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.வேறுபெயர் கிடைக்கவில்லையா?" என்று தான் நாவலின் முதல் வரியே தொடங்குகிறது.

மனித மனங்களின் வேஷங்களிலிருந்து தன்னை விலக்கி தன் வயதில் ஒரு பையனும் பெண்ணும் உள்ள பங்கஜம் மாமியை மணந்து கொள்ளலாம் என அவன் மனம் அவனைக் குடையும் அளவுக்கு இந்த வாழ்க்கை அவனுக்கு அபத்தமாய் போய் விடுகிறது.

அம்மாவின் கௌரவ முகமூடிக்காக இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறான் ராமேசேஷன்.அம்மாவின் பெரிய அக்காவின் பிள்ளையும்,சின்ன அக்காவின் பிள்ளையும்,அண்ணன் மகனும் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக ராமசேஷனை இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார் அவனது அம்மா.

என் அப்பாவும் இதே காரணத்துக்காக என்னை இன்ஜினியரிங் சேர்த்தார்.

ராமசேஷனுக்கு கிளார்க் வேலைக்கு செல்ல விருப்பம்.அம்மா மாதம் நூறு ரூபாய் பாக்கெட் மணி தருகிறேன் என்ற லஞ்சத்துக்காக இன்ஜினியரிங் சேருகிறான்.

ராமசேஷனுக்கு கல்லூரியில் கிருஷ்ணமூர்த்தி ராவ் என்ற கன்னடப் பையனும், மூர்த்தி என்பவனும் நண்பர்கள் ஆகிறார்கள்.

இதில் கிருஷ்ணமூர்த்தி ராவ்வின் தங்கை மாலாவுடன் ராமசேஷன் நெருக்கமாக பழகுகிறான்.நெருக்கம் என்பது உடைகளை களைந்து உடல் விளையாட்டு வரை செல்கிறது.

மாலா ஒரு காபி எஸ்டேட் அதிபரின் மகள். ராமசேஷன் ஒரு intelletual ஆன நபர். தன்னுடைய நடுத்தர வர்கத்து நிலையை அவளிடம் காட்டாமல் அவளுக்கு தானும் இணையானவன் என பாஷாங்குத்தனம் செய்கிறான்.

இவன் அவளை தன் அறிவு கொண்டு மடக்கும் போதெல்லாம் அவள் இவன் நடுத்தர வர்கத்து சூழ்நிலையை சொல்லிக் காட்டுவாள்.

ஏற்கனவே நடந்த உடல் விளையாட்டு ருசியில் மீண்டும் ஒரு நாள் உறை வாங்கி வைத்துக் கொண்டு அவனை வீட்டுக்கு அழைக்கிறாள்.அவனுக்கு உள்ளூர அந்த ஆசை இருந்தாலும் அந்த உறவை தவிர்க்க விரும்புகிறான்.

அவளுடன் அவன் பழகும் போது அவளுக்கு தெரிந்தவர்களிடம் அவனை தன்னுடைய Cousin என அறிமுகப்படுத்துகிறாள்.
அவளை ராமசேஷன் தவிர்ப்பதால் அவனில்லாத சமயங்களில் அவனுடைய வீட்டுக்கு வந்து தான் ராமசேஷவுன் தோழி என கூறுகிறாள்.

அதனால் அவளுடைய வீட்டுக்கு நேராகச் சென்று அவளிடம் சொல்லிவிட்டு வரலாம் என்று செல்கிறான். அங்கு மாலா வேறு புது Cousin உடன் இருக்கிறாள்.அவளுக்கு தேவை ராமசேஷன் அல்ல.ஒரு அல்சேஷன்.அவளை விட்டு விலகுகிறான் ராமசேஷன்.
மாலா Chapter இவ்வாறாக முடிந்து விடுகிறது.

இரண்டாவது காதல் Chapter பிரேமாவுடன் தொடங்குகிறது.
பிரேமா Architecture படிக்கும் Juniour.பிரேமா மாலாவைப் போல் அழகானவள் இல்லை.ஆனால் அறிவானவள்.நடுத்தர வர்கத்து பெண். அவளை ராவின் நட்பிலிருந்து அபகரித்து அவளுடனும் உடல் விளையாட்டில் திளைக்கிறான் ராமசேஷன்.அவளை அவன் விரும்புவதில்லை. முற்போக்குத் தனமான அவள் அறிவுக்காக அவளை விரும்புகிறான்.

அவள் மேல் அவனுக்கு இருப்பது வெறும் அனுதாபம் மட்டுமே. அதனால் தான் அவளுடன் உடல் விளையாட்டில் அவள் அவன் கால்களுக்கிடையில் வருடி என்ன ஆச்சு என கேட்கும் போது "மெஷின் வேலை செய்யவில்லை" என்கிறான்.
என்ன ஆச்சு மெஷினுக்கு? என்கிறாள். தெரியவில்லை என்கிறான்.
மெஷின் என்பது அவன் மனம், சிந்தனை.

யாரை ஏமாற்றினாலும் ஏமாற்றலாம் நமக்குள்ளிருக்கும் மெஷினை ஏமாற்ற முடியாது என்று தெரிந்துகொண்டேன். அனுதாபம் அல்ல அதை ஓடச் செய்யும் விசை என்கிறான். மெஷின் வேலை செய்யாததால் பிரேமாவுடனிருந்தும் விலகுகிறான்.
ராமசேஷன் பாஷாங்கன மனமில்லாத உடல் சுகம் கடந்த ஒரு அன்பின் மடியைத் தேடுகிறான். அப்படி ஒரு அன்பை அவனை சிறு வயதிலிருந்து அணைத்து கொஞ்சும் பங்கஜம் மாமியிடம் கண்டடைகிறான். அதனால் தான் அவன் மனம் அவளை மணந்து கொள்ள நினைக்கிறது.

 பங்கஜம் மாமியை கட்டி அணைத்துக்கொண்டு இந்த உடம்புங்கறதைத் தனியாப்பிரிச்சு வைக்க முடியாதா மாமி?
அதை மறக்க முடியாதா? என்கிறான்.

நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மையில் வாழ்பவர்கள்.

கிருஷ்ணமூர்த்தி ராவ் :

Rao is a Voyeur.அதாவது பாலுணர்வூட்டுபவைகளைப் பார்த்து பாலின்பம் அடைபவன். He is a Pervert.தன் அம்மா வி.எஸ்.வி என்ற சினிமா இயக்குனருடன் சுற்றுவதை பின் தொடர்ந்து பார்க்கும் ஒரு வக்கிரமான குணம் கொண்டவன்.அவனுக்கு இந்த உலகமே Prosகளும்,Bitchகளும் நிரம்பியதாக தோன்றுகிறது.

மூர்த்தி:

மூர்த்தி ராவ் வின் நண்பன்.ராவ்வின் பணத்திற்காக அவனுடைய நண்பனாக முகமூடி அணிந்து வாழ்பவன்.

ராமசேஷன் இப்படிக் கூறுகிறான்
 " மூர்த்தி ஒரு நாய் அல்லது விசுவாசமுள்ள பழங்காலத்து பண்ணையாளை எனக்கு நினைவூட்டினான்.

ராமசேஷன் அப்பா குடும்ப சிக்கல்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய் விடுகிறார். அவருக்கு எஸ்கேப்பிஸம் ஒரு முகமூடி.

ராமசேஷன் பெரியப்பா ஒரு தெலுங்குக் காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக, சுதந்திரமாக வாழ்வதாக ஒரு முகமூடிக்குள் வாழ்கிறார். அவரைத் தான் தன் Role model ஆக ராமசேஷன் நினைக்கிறான்.

தன் பெரியப்பன் வாழ்வது ஒரு பொய் வாழ்க்கை என்று ராமசேஷனிடம் அவனது அப்பா ஒரு முறை சொல்கிறார்.

மரபுகளை மீறி,குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி முகமூடி அணிந்த மனித மனங்கள் கொண்ட மனிதர்களை வெறுத்து திருமண விருப்பமின்றி இருக்கும் ராமசேஷன் ஒரு கட்டத்தில் தன் தங்கை வேறு ஒரு தடியனுடன் சினிமா பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு பஸ்ஸில் வீட்டுக்கு வரும் போது தங்கை வீட்டுக்கு வந்த உடன் எப்படியெல்லாம் சண்டை பிடிக்க வேண்டும் அவளுக்கு என்னவெல்லாம் புத்தி சொல்ல வேண்டும் என்றும் ஒத்திகை பார்த்தவாறு இவ்வாறு சொல்கிறான்

"இந்தத் தடியன்களை எனக்குத் தெரியும்.
இவன்களுடைய கீழான எண்ணங்களும் வழிமுறைகளும் தெரியும்.ஆனால் என் தங்கையிடம் நீங்கள் வாலாட்ட முயல வேண்டியதில்லை.பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன் ஜாக்கிரதை"

என்று முகமூடி அணிந்து நானும் இந்த அமைப்பிற்குள் ஒருவன் தான் என நிரூபித்து விடுகிறான்.

கொஞ்சம் ஆங்கில வாடையும்,
வயது வந்தவர்களுக்கான வார்த்தை வாடையும் இருந்தாலும் ஒரு சிறந்த புனைவு இந்நாவல்.

சிருங்கேரி ஆற்றுக்குத் தான் எவ்வளவு சின்ன புத்தி. தமிழின் ஒரு சிறந்த படைப்பாளியை சின்ன வயதிலேயே கொன்று விட்டது.
ஆதவன் இருந்திருந்தால் அவரின் எழுத்தின் உயரம் தமிழின் உச்சமாக இருந்திருக்கும்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்