/// ஆதவன் எழுதிய "காகித மலர்கள்" நாவலை முன்வைத்து

"மனித  மனங்களின் அந்தரங்க மொழிபெயர்ப்பு"

ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்ற நாவல் தான் நான் முதலில் வாசித்தது.ஆதவன் எழுத்து மீது அளப்பரிய ஆர்வமும்,பற்றும் எனக்கு ஏற்பட ஒரு திறப்பாக இருந்தது என் பெயர் ராமசேஷன் நாவல்.

என்பெயர் ராமசேஷன் நாவலில் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண இளைஞன் பார்வையில் மனிதர்களின் சுயமிழப்பையும்,காமத்தையும் உளவியல் நோக்கில் எழுதியிருப்பார் ஆதவன்.

மனிதர்கள் ஒரு சின்ன சிரிப்பின் மூலம் தனக்குள் இருக்கும் அத்தனை சின்னத் தனங்களையும் மறைத்து உறவாடும் உயர்கலை அறிந்தவர்கள்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கொலையாளி,ஒரு திருடன்,
ஒரு கற்பழிப்பவன் இருக்கக்கூடும்.

ஒருவனை ஏய்க்கவும்,சுரண்டவும் வாய்ப்புகளை எதிர்நோக்கியும்,
அப்படி அமையும் வாய்ப்புகளை வேண்டாம் என்று விளக்கியும் செல்லக் கூடியவர்களாக வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால் ஆழ்மனதில் ஆதி மனிதனின் அத்தனை வன்மத்தையும், மூர்க்கத்தையும் மூடி வைத்து சமூக கட்டுக்கு நல்லவர்களாய்,நாகரிகம் வளர்ந்தவர்களாய் நடித்து வாழ்கிறோம் அவ்வளவு தான்.

ஒரு திருட்டுச் சமூகத்தில் ஏழைகளும் திருடுகிறார்கள்.செல்வந்தர்களும் திருடுகிறார்கள்.ஒருவனை ஒருவன் ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் வாழவே முடியாது என்று ஒரு தத்துவத்தை வகுத்துவிட்டார்கள் இந்தச் சமூகத்தில்; இது கெடுக என்கிறார் எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன்.

அப்படி குறுக்கு வழியில் ஸ்டெனோகிராபராக தன் பணியைத் தொடங்கி Joint Secretary ஆகும் பசுபதி என்ற டெல்லி வாழ்  தமிழ் பிராமண குடும்பத்தின் வாழ்வு நகர்வைப் பேசுகிறது "காகித மலர்கள்" நாவல்.

நாம் நாமாக இருக்க நம் மனம் நம்மை விடுவதில்லை.நம்மை இன்னொன்றாக, நகலாக இருக்க மனம் நம்மை இட்டுச் செல்கிறது.

அப்படி நிரந்தரமாகி விட்ட பிம்பங்களை களைந்து எல்லோரும் வேறு பிம்பங்களை அணிந்துகொள்ளும் மனிதர்களைப் பற்றிய பதிவே காகித மலர்கள் நாவல்.

மனித மன அடுக்குகளின் வேஷங்களை, அதன் ஜோடனைகளை உளவியல் மொழியில் கலைத்தன்மை மேலோங்க எழுத்தாக்குவது தான் ஆதவனின் ஆகச் சிறந்த கலைத்திறன் என கருதுகிறேன்.

நாவலின் முக்கிய பாத்திரங்கள் பசுபதி அவனது மனைவி பாக்கியம்,
அவனது பிள்ளைகள் விசுவம், செல்லப்பா, பத்ரி, விசுவத்தின் மனைவி பத்மினி, பத்ரியின் நண்பன் கணேசன், செல்லப்பாவின் தோழி தாரா ஆகியோர்கள்.

பசுபதி :

அரசு பணியில் பணிபுரிபவர்கள் தன்னுடைய மேல்மட்ட அதிகாரிகளுக்கு குனிந்து கும்பிடு போட்டு பணிவு வேஷத்தில் தன்னுடைய சுயநிறத்தை இழந்து எது அவர்கள் என்று அவர்களே மறந்து போகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் பசுபதி.தாம் உயர் பதவியில் உட்கார எல்லா குறுக்குவழிகளையும் கையாள்பவர்.

தன்னுடைய பதவியின் ஸ்திரத்தன்மையை தக்கவைக்க,
உயர் பதவியில் அமர தன்னுடைய மனைவி பாக்கியத்தையே அமைச்சர்களுடன் மேலதிகாரிகளிடம் அடகு வைக்கிறார்.

இப்படி அதிகாரத்தை அடைய பிம்பத்தை அணிந்து கொள்ளும் சுயநிறமற்ற மனிதரை பசுபதி வடிவில் நமக்கு காட்டுகிறார் ஆதவன்.

பசுபதி ஒரு சாதாரண ஸ்டெனோகிராபராக இருந்து குறுக்குவழியில் joint Secretary ஆக மாறுவது ஏணிப்படி நாவலை நியாபகப்படுத்துகிறது.

பாக்கியம்:

பசுபதியின் மனைவி.52 வயதான பாக்கியம் தன்னை ஒரு 30 வயது பெண்மணி ஆகவே கட்டிக் கொள்பவர். டெல்லி நாடக சபாக்களில் நடிக்கும் ஒரு நாடக நடிகை.உண்மைக்கும் பொய்க்கும் இடைப்பட்ட ஒரு பிம்பம்.மனதின் அந்தரங்க எல்லைக்கோடுகள் அழிந்து ஒரு கட்டத்தில் கார் விபத்தில் இறந்து போகிறாள்.

விசுவம்:

பசுபதியின் மூத்த மகன்.டெல்லியில் பணிபுரிந்த வேலையை வேண்டாம் என்று விட்டுவிட்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஈகாலஜி பற்றி ஆராய்ச்சி செய்கிறான்.

ஐந்து வருடங்கள் அமெரிக்காவில் இருந்திருந்தாலும் பேஸ்பால் விளையாட்டு,ப்ளூ ஃபிலிம்  என எதையும் பார்க்காமல் தனிமையில்  இருக்க விரும்புபவன்.விசுவம் ஒரு அறிவுஜீவி.தன்னுடைய அப்பாவை போல போராட்டமேயின்றி உலகப் போக்குடன் அதிக செலவாணி பிம்பங்களுடன் அடித்துச் செல்லப்பட விரும்பாதவன்.அறிவுஜீவி என்ற பிம்பத்தில் வாழ்பவன்.

செல்லப்பா :

பசுபதியின் இன்னொரு மகன்.
சாந்தா என்ற பெண்ணுக்காக ரசாயன பிரிவில் சேரும் செல்லப்பா பெயில் ஆகிவிடுவதால்,இரண்டாம் ஆண்டிலிருந்து ஆர்ட்ஸ் குரூப்புக்கு மாற்றிக் கொள்கிறான்.

அங்கும் மூன்று தடவைகள் பெயில்.
B.A பாஸ் செய்ய படித்துக் கொண்டே இருக்கிறான். படித்து வேலைக்குச் செல்ல விரும்பாமல் எந்த பற்றுதலும் இல்லாமல் வாழும் செல்லப்பா தாரா என்ற பெண்ணின் நட்பால் வாழ்வின் மீது பிடிமானம் கொள்கிறான்.

கணேசன் :

கணேசன் பசுபதியின் இளைய மகன் பத்ரியின் நண்பன்.பசுபதியும்,
கணேசன் தந்தையும் ஒரே அலுவலகத்தில் ஒரே பணியில் சேர்கிறார்கள்.கணேசன் அப்பா செக்சன் ஆபிசராகவே இருக்கிறார்.ஆனால் பத்ரியின் அப்பா பசுபதி joint Secretary ஆகிவிடுகிறார்.

அதன் காரணமாக பத்ரிக்கும், கணேசனுக்கும் இடையில் வர்க்க முரண் இருக்கிறது. தன் அப்பா மீது கணேசன் கோபம் கொள்கிறான்.அவருடைய உந்துதல்கள் பழையவை.பிம்பங்கள் பழையவை.மார்க்கங்களும் ஊன்று கோல்களும் பழையவை எனவும், கடவுள் கொடுத்த லஞ்சத்தில் மனிதர்களுக்கு பாதி கொடுத்திருந்தால் அவர் உருப்பட்டு வசதியாய் இருந்திருக்கலாம் என கருதுகிறான்.டைம்ஸ் என்ற ஒரு பத்திரிகையில் சப் எடிட்டராக பணி புரிகிறான். தனக்கு கிடைக்காத வசதியான வாழ்க்கையை கனவுகளிலும் ,பிம்பங்களிலும் வாழ்ந்து பார்த்துக் கொள்கிறான்.

கணேசனைப் போன்றவர்கள் வாழ்க்கையில் எதையும் பறித்துக் கொள்ள வேண்டியவர்கள்.
ஒவ்வொன்றுக்கும் சண்டையிட வேண்டியவர்கள்.
பத்ரி,விசுவம் போன்றவர்களுக்கு எல்லாம் சண்டையிடாமலே  கிடைத்துவிடுகின்றன.
அவனுக்கு அப்படி இல்லை.
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அங்குலமும் அவன் சண்டையிட்டாக வேண்டும் என்கிறார் ஆதவன்.

நாவல் 1977இல் எழுதப்பட்டது.
நாவலின் களம் டெல்லி என்பதால் டெல்லியின் நிலச்சித்திரத்தை நமக்கு எழுத்தில் காண்பிக்கிறார் ஆதவன்.

நாவலின் காலம் 1970கள் என்பதால் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், இந்திய பிரதமர் இந்திரா காந்தி என அப்போதைய ஜனநாயக அரசியல், சூழலியல் ,அலுவலக அரசியல் என அனைத்தையும் பேசுகிறது நாவல்.

ஆதவன் எழுத்துக்களின் மிகப்பெரிய பலமும், தரிசனமும் எதுவென்றால் அவரது படைப்புகள் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப சுருங்கி விடாமல் எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போவதுதான்.

ஆதவனின் கூற்றுப்படி

"இந்த நாவலில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது. கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஆர்வமும்,
ஒரு பரபரப்பும் இருக்கிறது.
 ஒப்பாரி அல்லது வெறும் அங்கத சிரிப்பைக் கடந்த நிலையில் வாழ்வின் பிரம்மாண்டத்தையும் வெல்ல முடியாத தன்மையையும் உணர்த்த எழுதப் பட்டிருக்கிறது"

மனித மன அந்தரங்கங்களின் மொழிபெயர்ப்பு இந்நாவல்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்