///கண்மணி குணசேகரன் எழுதிய
 "கோரை" நாவலை முன் வைத்து

நான் அடிப்படையில் சிறு விவசாய பின்புலமுள்ள குடும்பத்தில் பிறந்தவன்.

இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நுகத்தடியில் மாடுகளைப் பூட்டி கவலை மூலம் கிணற்றிலிருந்து நிலத்திற்கு நீர் பாய்ச்சுவோம்.

பிறகு நீர் இரைக்கும் வளர்ச்சி டீசல் என்ஜீனுக்கு மாறியது.

அதன் பிறகு மின் மோட்டார் மூலம் நீர் இரைக்கும் வசதியில் வந்து நிற்கிறோம்.

பயிருக்கு இரண்டு நாள் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் பயிர் வாடிவிடும் என என் அப்பா நிலத்தை சுற்றி சுற்றி வருவார்.

சில நேரங்களில் கிணற்றில் நீர் இருப்பு இல்லையென்றால் பக்கத்து நிலத்துகாரனின் கிணற்றிலிருந்து நீர் பாய்த்துக் கொள்வதும் உண்டு.

பயிர்களுக்கு மருந்தடிக்க,
உரம் வைக்க காசில்லாமல் அழைந்து என் அப்பா அலுப்பு கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன் வரை என் நிலத்தில் விளைந்த நெல் அரிசியைத் தான் உண்டேன்.இப்போது பல்பொருள் அங்காடியில் அரிசி வாங்கித் தின்னும் அவல நிலை.

முதலாளித்துவ முதலையின் வாயில் அகப்பட்டு விட்டோம்.கடுகளவு மனம் கொண்ட கருங்காலி பெரியப்பன் ஒருவனால் என் நிலம் இன்று கரம்பாக காய்ந்து கிடக்கிறது.

விவசாயத்தை விட்டு விலகி ஒடிக்கொண்டிருக்கும் தற்போதைய வாழ்க்கைச் சுழலில் முன்பெனப்படும் ஒரு காலச் சூழலில் தினக் கூலியாய் வாழ்வை நகர்த்தும் ஒருவன் கால் காணி நிலம் வாங்கி விவசாயம் செய்து படும் அவஸ்தையை விவரிக்கிறது கோரை நாவல்.

ஒரு விவசாயியின் வாழ்வில் கோரை நிகழ்த்தும் கோரத்தாண்டவத்தை எதார்த்த புனைவாக்கியிருக்கிறார் கண்மணி குணசேகரன்.

கண்மணி குணசேகரனைப் போலவே அவரது கதைகளும்,கதை மனிதர்களும் எளிமையானவர்கள்.

கொல்லையில் மிளகாய் அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் பன்றியின் சாணத்தை நிலத்தில் உரமாக இடுகிறான் உத்தண்டி.

கொல்லையெல்லாம் கோரை முளைத்து விடுகிறது. காரணம் தெரியாமல் வருந்துகிறான்.பக்கத்தில் இருக்கிற சின்னசாமி கொல்லையில் கோரை இல்லை நம் கொல்லையில் மட்டும் எப்படி என உழல்கிறான்.கடைசியில் செம்புலிங்க கிழவர் வழியாக அறிந்து கொள்கிறான்.கோரைக்குக் காரணம் பன்றியின் சாணம் என்று.

கோரைக்கிழங்கை தின்று விட்டு போட்ட பன்றியின் சாணம் தான் உன் நிலமெல்லாம் கோரை முளைக்க காரணம் என்கிறார் கிழவர்.

அரை ஏக்கர் நிலத்தில் முளைந்துவிடும் கோரையால் உத்தண்டி என்ற குடியானவனுக்கு ஏற்படும் பிரச்சனையை,அவனது தவிப்பை பதிவு செய்கிறது கோரை நாவல்.

கோரையை மையமாக வைத்துக் கொண்டு ஒரு விவசாயின் வாழ்வு போராட்ட தவிப்பையும்,செம்மண் புழுதி வாசனையையும் வாசகனுக்கு நுகர வைத்திருக்கிறார் கண்மணி குணசேகர்.

காடுவெட்டி தினக்கூலியாய் சந்தோஷமாய் வாழ்க்கை நகர்த்தும் உத்தண்டிக்கும்,அவனது மனைவி பூரணிக்கும் இடையில் கொல்லையில் கோரை முளைத்ததால் கோரையை ஒழிக்க முடியாமல் அதன் மேலிருக்கும் கோபத்தை தன் மனைவி பூரணி மேல் காட்டுகிறான்.

உத்தண்டியே சொல்கிறான் சந்தோஷமாய் வாழ்ந்த எங்கள் இருவருக்கு இடையில் கோரை வந்து படுத்துக் கொண்டது என்று.

கோரையை ஒழிக்க துவரையையும், சோளத்தையும் கலந்து கொல்லையில் விதைக்கும் ஒரு தருணத்தில் துவரையும், சோளமும் நன்றாக மடம்பாக வளர்ந்த தருணத்தில் மழை வந்து அவைகளை வேருடன் சாய்த்து விடுகிறது.

அவைகளை  கொல்லையிலிருந்து உத்தண்டியும்,பூரணியும் பிடுங்கி எறிந்து விட்டு வீட்டுக்கு வரும் அன்றைய இரவு பூரணியின் கால்கள் வழி ரத்தம் வழிந்து ரொம்ப நாள் கழித்து கருவுற்றிருந்த அவளுடைய மூன்று மாத கரு கலைந்து போகிறது.ஒரு கொடுமையான மனிதனாக கோரை அவனை மாற்றி விடுகிறது.

ஒரு விவசாயிக்கு நிலம் என்பது வெறும் உடைமை அல்ல.அது அவனுடைய இரண்டாவது உடல்.

தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதை கூட பெரிதுபடுத்தாமல் அவனை நிலமும் கோரையும் நிம்மதியிழக்கச் செய்கிறது.

ஏழு நாட்கள் மாத்திரையை சாப்பிட்டு விட்டு அடுத்த எட்டாம் நாள் இருவரும் இணைந்தால் கரு நிற்கும் என விருத்தாசலத்திலிருந்து மாத்திரை வாங்கி வந்து சாப்பிடுகிறாள் பூரணி.

ஆனால் அந்த எட்டாவது நாளின் இரவில் விருத்தாச்சலத்தில் தங்கி கோரையை ஒழிக்க துவரை வாங்கி மறுநாள் வருகிறான் உத்தண்டி.

கோரையை ஒழிக்க உத்தண்டி கையாளும் எல்லா யுத்திகளும் அவனுக்கு ஏமாற்றத்தையே தருகிறது.

கொல்லையில் வளர்ந்த கோரை அவன் மனதிலும் வளர்ந்து அவனை நிம்மதியிழக்க வைக்கிறது.

நாவலில் உத்தண்டியின் நிலத்திற்கு வாரத் தண்ணீர் விடும் பக்கத்து நிலத்துக்காரராக வரும் சின்னசாமி பாத்திரம் நான் நிஜத்தில் பார்த்த மனிதன்.

செட்டியாரிடமிருந்து அரை ஏக்கர் நிலத்தை வாங்கும் விஷயத்தை உத்தண்டி தன்னிடம் சொல்லாமல் அவனே நிலத்தை வாங்கி விட்டானே என்ற கோபம்,தான் வாங்கியிருக்கலாம் என்ற ஏக்கம் கொண்ட மனிதர் சின்னசாமி.

உத்தண்டி தன் நிலத்திற்கு தண்ணீர் விடுமாறு சின்னசாமியிடம் கேட்டு நிற்கும் போதெல்லாம் சின்னசாமி கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு குத்திப் பேசுவான்.

எழுத்தாளர் பூமணியின் படைப்புகளில் வரும் எல்லா சாதிய மனிதர்களின் இணக்கத்தையும் கண்மணி குணசேகரனின் படைப்புகளிலும் காணலாம்.

இந்நாவலிலும் முத்துச்செட்டியின் மகனாக வரும் சிக்கண்ண செட்டி, தலித் கிறித்தவராக வரும் சக்கரையாஸ் (எ) சக்கரை அங்குள்ள படையாச்சிகள் என எல்லோரும் இணக்கமாக வாழ்கிறார்கள்.

சிக்கண்ண செட்டி:

சிக்கண்ண செட்டி முத்து செட்டியின் மகன்.முத்துசெட்டி மணக் கொல்லையில் அதிகம் நிலம் வைத்துள்ளவர்.
அவரிடம் சித்தண்டியின் அப்பா குட்டையன் வேலை செய்கிறார். குட்டையன் இறந்து பிறகு தன் தந்தையிடம் குட்டையன் காட்டிய விசுவாசத்தை மனதில் வைத்து தான் சிக்கண்ண செட்டி அந்த கால் காணி நிலத்தை பத்தொன்பதாயிரத்துக்கு உத்தண்டிக்கு விற்கிறார்.

சக்கரை :

சக்கரை வேதக் கோயிலில் குடியிருக்கும் ஒரு தலித் கிறித்துவர்.
உண்மையான பெயர் சக்கரையாஸ்.
அது மருவி சக்கரை என இந்து பெயராகி விடுகிறது.உத்தண்டியை வீரெட்டிக்குப்பத்துக்கு கூட்டிப் போய் அவனுக்கு பூரணியை பெண் பார்த்து கட்டி வைப்பவனே சக்கரை தான்.உத்தண்டிக்கும்,சக்கரைக்கும் சாதி, மதம் தாண்டி ஒரு இணக்கமான உறவை நாவலில் காட்டுகிறார் கண்மணி.

சங்கு:

நடுக்குப்பத்தில் குடியிருக்கும் பன்றி மேய்க்கும் குடும்பம் சங்குவினுடையது. அங்குள்ள படையாச்சிகளிடம் முந்திரி கொட்டைக்கு பதிலாக எடைக்கு எடை பன்றிக்கறி கொடுத்து அவர்களுடன் இணக்கமாக வாழ்பவர்.

கோரைக்கிழங்குத் தின்று போட்ட  பன்றி சாணியை கொடுத்து விட்டார் என்பதற்காக நாவலின் தொடக்கத்தில் வயதானவர் எனவும் பாராமல் சங்குவின் நெஞ்சு மீது கை வைத்து நெட்டி தள்ளி விடுகிறான் சித்தண்டி.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் நிலத்தில் உள்ள கோரையை பன்றியை விட்டே அழிக்க சங்குவிடம் போகும் சித்தாண்டியை பழைய சண்டையை மனதில் வைக்காமல் உத்தண்டியை வாங்க சின்னவர என கூப்பிடும் வெள்ளந்தி மனம் சங்குவினுடையது.

பன்றிகள் நிலத்தில் உள்ள கோரைக்கிழங்கை தின்ன நிலம் முழுதும் குழி நோண்டுவதை காண உத்தண்டி சகிக்காமல் முதல்ல பன்றியை கொல்லையிலிருந்து ஓட்டு என் கொல்லை நாசமாய் போய்விட்டது என கோபமாய் பேசும் போதும் இப்படி பேசுவ என தெரியும் என நடந்து போகும் சங்குவின் பாத்திரம் சிறப்பாக புனையப்பட்டுள்ளது.

சித்தண்டி கோபத்தில் பூரணியை அடித்து விடுவதால் அவள் அழுது கொண்டு அவளுடைய பிறந்த வீட்டுக்குப் போய் அவளுடைய அப்பனின் காலில் விழுந்து அழும் போது "நீ வாயாடியிருப்ப அவன் கையாடியிருப்பான் " எழுந்து போ. ரெண்டு பேரும் சேர்ந்து வந்தா வாங்க இல்ல வராத என பூரணி அப்பா சொல்லும் இடம் அருமை.

கிராமங்கள் வெள்ளந்தியான மனிதர்களையும் விஷ மனது கொண்ட மனிதர்களையும் கொண்டது.

சித்தண்டி புதிதாய் நிலம் வாங்கியது அங்குள்ள யாருக்குமே பிடிப்பதில்லை. கோரையை அழிக்க துவரை,சோளம் என காட்டுப் பயிரை விதைப்பதால் இவனுக்கு யோக்கித காடுவெட்டு,கத்தி, முந்திரிக்காடு தான் என நிலம் வாங்கியதற்கு தேக்கி வைத்திருந்த பொறாமை எச்சில்கள் துப்புவதில் நெளிகிறான் உத்தண்டி.

புதிதாய் வாங்கிய நிலத்தில் மல்லாட்டை விதைக்கலாமா அல்லது மிளகாய் விதைக்கலாமா என நடேசன் என்பவரிடம் சித்தண்டி கேட்பான்.

அதற்கு நடேசன் இது உங்கக் கொல்லை நீங்கள் மல்லாட்டையும் வைக்கலாம்,பீக்கருவை முள்ளும் வைக்கலாம் என்பார்.

மனசுல அம்மாம் முள்ளு இருக்கு. சொல்றான் பீக்கருவை முள் வைக்கலாமுன்னு.ஆனா ஒண்ணு இந்த ஊர்ல காடுவெட்டிக்கிட்டு கெடக்கிறவன் கடைசி வரைக்கும் காடுவெட்டிக்கிட்டு கெடக்கணும்.கால் குழி நிலம்கிலம் வாங்கிட்டான்னாப்போச்சி.எதிரி வாழ்ந்தா எட்டு நாளைக்கிப் பட்டினி கெடப்பானுவோ " என்பாள் பூரணி.

முதுகுல ஊத்தற தண்ணிய வயித்துல ஊத்திக்கிட்டு பொழுத ஓட்டுற உத்தண்டி போன்ற இல்லாதவர்களின் பெரிய ஏக்கம் என்பது இருக்க ஒரு இடம் வாங்க வேண்டும் என்பதே.அப்படி ஒரு கால் காணி நிலம் வாங்கி எதுவும் மிஞ்சாத ஒரு நடு நாட்டு விவசாயியின் வலியின் பதிவாக்கம் தான் இந்நாவல்.

சொந்தக் கொல்லையில் அதுவும் தான் வந்த பிறகு வாங்கிய கொல்லையில் நிற்பது தாய் வயிற்றில் நிற்கிற பச்சைக் குழந்தையின் பரவசமாய் அவளுக்குப் பட்டது என்கிறார் கண்மணி.பன்றி தோண்டி குழி பண்ணிய நிலத்தில் சித்தண்டியும்,அவன் பின்னாடியே அவனது மனைவி பூரணியும் கோரைக்கிழங்கை வெட்டி அலசி போடுகிறார்கள்.

பொழுது சாயும் நேரத்தில் அவன் கோரைக்கிழங்கு வெட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு தெரியாமல் பூரணி சோறாக்க போய்விடுகிறாள்.

அவள் வெட்டிக் கொண்டு வருவதைப் போன்ற லேசான அரவத்தைத் தவிர வேறெந்த பதில் குரலும் வராததால் "என்னா நேரா நேரத்துல வூட்டுக்கு வுடலன்னு கோவத்துல பேசாம வர்றியா" என கேட்ட படி அவன் திரும்பும் போது அவள் வெட்டிக் கொண்டிருந்த இடத்தில் முதல் நாள் நிண்டிய ருசியில் ஒரு பெரிய பன்றி.

அவன் விட்டாலும் விடலாம்,தான் விடமாட்டேன் என்பதாய் கோரையை விடாப்பிடியாகத் தோண்டிக் கொண்டிருந்தது என நாவல் முடிகிறது.

மணக் கொல்லை,வீரெட்டிக்குப்பம், நடுக்குப்பம்,வேதக் கோயில், இருளக்குறிச்சி என விருத்தாச்சலத்தின் செம்மண் கிராமங்களில் நம்மை நடக்க வைக்கிறார் கண்மணி.

ஆடு மேய்க்கும் கத்தாழை ஆச்சி,ராயர், சித்தண்டியின் பாட்டி செல்லப்பாங்கி கிழவி, சித்தண்டியின் அக்கா செம்பாயி, பன்னிக்கார கிழவன் சங்கு, சின்னசாமி என மண் மனம் மாறாத மனிதர்களின் பாத்திர வார்ப்பு நாவல் முழுதும்.

அஞ்சலை நாவலைப் போலவே ஒரு தரமான எதார்த்தவாத புனைவு கோரை ///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்