.நாவல் பெயர்:சித்தார்த்தன்

ஆசிரியா்:ஹெர்மன் ஹெஸ்ஸெ.

தமிழுக்கு மடைமாற்றியவர்:
திருலோக சீதாராம்.

பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.100/-

"ஞானம் தேடிய பயணம்"
சித்தார்த்தன்

இது கொளதம சித்தார்த்தனாகிய "புத்தரைப்பற்றிய கதையல்ல.
புத்தரையே நேரில் சந்தித்து அவரை பின்பற்றாமல் தனித்த பயணத்தில் தன்னை கண்டறியும் அந்தண குமாரனாகிய சித்தார்த்தன் எனும் பிராமண இளைஞனின் கதை".

சித்தார்த்தன் தன் தந்தையின் விருப்பமற்ற விடைபெறுதலுடன் தன்னுடைய நண்பன் கோவிந்தனுடன் சேர்ந்து சமண மதம் சேர்கிறான்.பிறகு சமண மதத்தில் தன் மனம் சமநிலை கொள்ளவில்லை என்பதால் புத்த மதம் புகுகிறார்கள் சித்தார்த்தனும்,கோவிந்தனும்.

புத்தரை நேரில் சந்தித்து உரையாடுகிறான் சித்தார்த்தன்.சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனை புத்தரிடம் விட்டு விட்டு புத்தரை கடந்து புறப்படுகிறான்.புறப்படும் முன் சித்தார்த்தன் "புத்தா் என் உடமையைப் பறித்தார்" ஆனால் எனக்கு என்னை(சித்தார்த்தனை)
வழங்கியிருக்கிறார் என கூறுகிறான்.

இதன் பொருள் புத்தர் என்னை பாதித்தார்,ஆனால் அவர் என்னை ஆக்கிரமித்து ஆட்கொள்ளவில்லை என்பதே.புத்தருடன்,சித்தார்த்தன் கொள்ளும் உரையாடலின் முடிவில் புத்தரின் குமிண் சிரிப்பையும்,ஒளிப்பார்வையையும் கடந்து புத்தரே தன்னை கவராத போது வேறு யாரும்,வேறு யாரின் போதனைகளும் தன்னை கவராது என நினைத்து புத்தரை விட்டு வெளியேறுகிறான்.

"தான்" என்பதை அழித்து தன்னை வென்று தன்னை கண்டடைவது தான் "ஞானம்" என்பதை உணர்கிறான்.
மேலும் ஞானம் என்பது ஒருவரை பின்பற்றுவதிலும்,தொடர்வதிலும் அல்ல.ஞானம் என்பது தேடுதலில் ஒருவரிடமிருந்து பெறுவது அல்ல,தனக்குள் கண்டடைவது.

புத்தரை கடந்த தன் பயணத்தில் சித்தார்த்தன் "கமலா" எனும் தாசியை அடைகிறான். உடல் வெறியை நெறிப்படுத்தும் காமகலையை வென்ற ஞானத்தை கமலாவிடம் கண்டடைகிறான் சித்தார்த்தன்.

உண்மையில் உலகின் உயர்ந்த கல்வி கலவியே.உடல் புணர்வு ஒரு உயர்ந்த தியானம்.மனிதன் அந்த தற்காலிக தியானத்தில் ஒரு வித சளைத்த நிம்மதி கொள்கிறான்.மனிதன் உடற்புணர்வின் உச்சத்தில் தன்னையும்,இப்பிரபஞ்ச பரப்பையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான்.சித்தார்த்தன் அப்படி தான் கமலாவின் உடலை தன் உடல் போர்த்தி தன்னை புதுப்பித்துக்கொள்கிறான்.

பின் காமஸ்வாமி எனும் வணிகனிடம் வணிகம் கற்று பொருளீட்டல் வழி கண்டு பொருளீட்டி மகிழ்ந்து,பின் பொருளீட்டலும் பொருளற்றது என அதையும் கடந்து பயணம் தொடர்கிறான்.பிறகு வாசுதேவன் எனும் தோணிக்காரனுடன் தோழமை கொள்கிறான்.அங்கு வாசுதேவனுடன் சேர்ந்து ஆற்றில் படகு ஓட்டுகிறான்.

ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் வயோதிகம் அடைகிறான்.வயோதிகம் காரணமாக புத்தர் இறக்கும் தறுவாயில் உள்ளதை காண அனைவரும் ஆறு தாண்டி வரும் போது,தாசி கமலாவும் தன் மகனுடன் வருகிறாள்.அப்போது கமலாவை கருநாகம் கடித்து விடுகிறது.அவளது அலறலில்,பையனின் கூவிய அழுகையை கேட்டு வாசுதேவன் ஆற்றங்கரையில் உள்ள தன் குடிசைக்கு அவளை எடுத்துச் செல்கிறான்.அங்கு சித்தார்த்தன் கமலாவை கண்டு கொள்கிறான்.அப்போது கமலா சிதத்தார்த்தனிடம் இவன் உங்கள் மகன் என தன் மகனை காட்டுகிறாள்.புத்தரை தரிசிக்க வந்த கமலா,சித்தார்த்தன் மடியில் அவன் கண்களை பார்த்தவாறே உயிர் விடுகிறாள்.

பிறகு ஒரு கட்டத்தில் கோவிந்தனும்,சித்தார்த்தனிடம் வந்து சித்தார்த்தனின் பாதம் பணிவதுடன் நாவல் முடிகிறது.நாவலில் ஆறு ஒரு குறியீடாகவும்,பாத்திரமாகவும் காட்டப்பட்டுள்ளது.

ஆறு தனக்கான பாதையை தானே சமைத்துக்கொள்கிறது.ஆறு எப்போதும் முன்னோக்கியே ஓடுகிறது.ஆறு எப்போதும் தன் பாதையை மாற்றாமல் காத்திருக்கிறது.ஆறு எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறது.அதே போல் ஆறு எல்லாவற்றையும் தனக்குள் வாங்கி கேட்டுக் கொள்கிறது.

மனிதன் தனக்கான வாழ்க்கையை,தனக்கான பாதையை தானே சமைத்துக் கொள்வதில் இருக்கிறது வாழ்க்கைக்கான ஞானம் என்பதை ஆற்றிடம் கற்றுக்கொள்கிறான் சித்தார்த்தன்.தான் புத்தருடனே இருந்தாலும் தன்னை அறியமுடியவில்லை என உணர்ந்து தான் கோவிந்தன் சித்தார்த்தனின் ஞானப்பாதம் பணிகிறான்.

மனிதன் மீது சாயங்களாய்,நிறங்களாய் ஒட்டியிருக்கும் மதம்,சாதி,ஞானம்,புனிதம்,புண்ணாக்கு இவைகளின் ஊர்ஜித தண்மையின் பலத்தை உலுக்கி பார்க்கிறது இந்நாவல் சித்தார்த்தனின் வழியே.மனிதன் அவன் விரும்பிய வாழ்வை ,வாழ்வின் அதன் இயல்பு வழியில் வாழ்வது தான் புனிதம் என எண்ணுகிறேன்.மனிதனை நிர்பந்தப்படுத்தி,வருத்தி வாழச் சொல்லும் மதமோ,மாரக்கமோ,ஞானமோ தேவையில்லை.
இந்த பிரபஞ்சம்,
இந்த வாழ்க்கை மனிதனுக்கானது.அவனுக்கான வழி,
அவனுக்கான மதம்,அவனுக்கான ஞானம் அவனுக்குள்ளே தான் உள்ளது,வெளியில் இல்லை.

வாசக நண்பர்களுக்கு இந்நாவலை பணிவுடன் பரிந்துரை செய்கிறேன்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்