"சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,
வண்டலூர் மிருக காட்சியும்" -
(ஒரு நாள் பயண அனுபவம்)

வாழ்வின் சள்ளைகள் முட்டி கோணல் கொள்ளும் மனங்களை நேராக்க,
அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும் பிழைப்புக்கலையில் எழும் சிக்கல்களால் சக மனிதர்கள் நோக்கியும்,சமூகத்தை நோக்கியும் மனம் கொள்ளும் கோபம், பொறாமை, குரோதம்,எரிச்சல் என எல்லா அழுக்குகளையும் அகம் கழுவிக்கொள்ள வாசிப்பதும்,
பயணம் கொள்வதும் மட்டுமே ஒரு பயனுள்ள வழியாக இருக்கும் என கருதுகிறேன்.

வாசிப்பு என்பது கண்களால் புத்தகத்திற்குள் இறங்கி நடக்கும் கலை.பயணம் என்பது புதிய நிலங்களின் மீது கால்களால் கவிதை எழுதும் கலை.இந்த நவீன வாழ்வின் அழுத்தத்தில் எப்போதும் இரைச்சலில் இயங்கும் மனதை சமநிலைப்படுத்த புத்தகங்களை வாசிப்பதும்,
புதிய இடங்களை நோக்கி பயணம் செய்வதும் மட்டுமே மனதை லகுவாக்குவதற்கு தீர்வு என்பது என் எண்ணம்.

இந்த சராசரி மொண்னைத்தன வாழ்விலிருந்தும்,எவ்வித அறமுமற்ற சுரணையற்ற சமூகத்திலிருந்து உங்களை தனித்து நிறுத்திக் கொள்ள வாசிப்பும், பயணம் செய்வதும் மட்டுமே ஒரு சிறந்த வழி.

எங்களின்  பயணம் 18.1.2020 சனிக்கிழமை விடியற்காலை நான்கு மணிக்கு அரூரில் இருந்து சென்னை நோக்கி தொடங்கியது.

நண்பர் திரு.ஞானதீபன் அவர்கள் மகிழுந்து இயக்க நான் மற்றும் நண்பர்கள் திரு.சிவன், திரு.சரவணன் ஆகிய நான்கு பேர் சேர்ந்த புறப்பாடு அதிகாலை இருட்டில் சென்னை நோக்கி தொடங்கியது.

காலை 10 மணிக்கு வண்டலூரைச் சென்றடைந்தோம்.
வண்டலூரில் உள்ள ஒரு உணவகத்தில் சிற்றுண்டி முடித்து விட்டு அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்தோம்.
நுழைவு கட்டணம் ஒருவருக்கு ரூ.75 ரூபாய் என கட்டணம் வசூலிக்கிறார்கள்.உயிரியல் பூங்காவை கால் வலிக்க நடந்து முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு மணிக்கு பூங்காவை விட்டு வெளியே வந்தோம்.

நண்பர் சரவணன் அவர்கள் இல்லையென்றால்  பயணம் கல கலப்பின்றி போகும்.
 மனிதரின் நாக்கில் நகைச்சுவை நாத்து போல் நட்டு வைக்கப்பட்டுள்ளது. சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பது போல அவர் நகைச்சுவையில் கொஞ்சம் விரசம் உண்டு.மற்றபடி அவர் ஒரு குழந்தை பெற்ற குழந்தை.
அவர் நிகழ்த்தும் பகடிக்கலைக்கு எப்போதும் பலிகடா நண்பன்
திரு. அண்ணா.ஜெயவேல் அவர்களே. மதிப்பிற்குரிய சிவன் சார் அவர்களைப்பற்றி சொல்வதென்றால் அவர் பேசவே மாட்டார்.
ஒரு மகாமுனி போல் மௌனமாக இருப்பார்.

நண்பர்திரு.ஞானதீபன் அவர்களைப்பற்றி செல்வதென்றால் அவரும் ஒரு மகாமுனி தான்.
நிறைய தொழில்நுட்பம் தெரிந்த மகாமுனி. இங்கிருந்து அமெரிக்காவுக்கு காரை ஓட்ட சொன்னால் கூட கடுகளவும் அயற்சி கொள்ளாமல் காரை ஓட்டும் மனித ரோபோ அவர்.

வண்டலூரை கடந்து கேளம்பாக்கம் சங்கீதா உணவகத்தில் மதிய உணவு உண்டுவிட்டு அப்படியே நண்பர் ஜெயவேல் அவர்களுக்கு தயிர்சாதம் ஒன்று பார்சல் கட்டிக்கொண்டு சென்னை புத்தக கண்காட்சி நடக்கும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தை நோக்கி புறப்பட்டோம்.

புத்தக கண்காட்சிக்குள் நுழையும்போது மூன்று மணி ஆகிவிட்டிருந்தது.
ஆறரை மணி வரை எல்லா புத்தக அரங்குகளையும் சுற்றிப் பார்த்து விட்டு எனக்கு விருப்பமான புத்தகங்களை
ரூ.3200/-க்கு வாங்கினேன்.

ஏற்கனவே 11.1.2020 மற்றும் 12 .1.2020  ஆகிய இரண்டு தினங்களிலும்
 ரூ.4000க்கு புத்தகம் வாங்கியதால் போதும் என்றும், போதாது என்றும் இரண்டு மனநிலையில் அங்கிருந்து வீட்டை நோக்கி புறப்பட்டோம்.

ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4.30 மணிக்கு அவரவர் வீட்டை அடைந்தோம். அறிவைத் தேடியதாகவும்,புதுமையை தேடியதாகவும் மனதிற்கு ஒரு புத்தாக்கத்தை கொடுத்தது இந்தப் பயணம்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்