///நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை சற்று முன்னான கணத்தில் தான் படித்து முடித்தேன்.

நான் என் பள்ளி காலத்து கல்வி வழியாக தேர்வு எழுதுவதற்காக மட்டுமே தெரிந்து கொண்ட என் தமிழின் சங்க கால வாழ்க்கை முறையை,
மன்னர்களை,புலவர்களான பரணரை, கபிலரை,மன்னர்களை புகழ்ந்து பாடி இரந்து வாழும் பாணர்களை,ஆடிப்பாடும் கூத்தர்களை, என் தாய் மண்ணான தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியை, அவன் ஆதரித்த தமிழ் மூதாட்டி அவ்வையை நான் இந்த நாவலின் வழியாக நெருங்கிப் பார்த்தேன்.

சிறுவயதில் தொலைந்து போன தன் மகன் மயிலனை தேடி புறப்படும் ஒரு பாணர் கூட்டத்தின் புறப்பாடும் அவர்களின் பயணத்தின் வழியே அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் தான் இந்நாவல்.

 நாவல் மூன்று அத்தியாயங்களாக சொல்லப்படுகிறது.

 முதல் அத்தியாயம் கொலும்பன் என்ற தந்தையின் பார்வையிலும்,
இரண்டாவது அத்தியாயம் அவனது மகள் சித்திரையின் பார்வையிலும்,
மூன்றாவது அத்தியாயம் கொலும்பனின் மகன் மயிலன் பார்வையிலும் சொல்லப்படுகிறது.

 சங்ககால பழமையின் ஊடாக மனோஜ் குரூர் நிகழ்த்தியிருக்கும் இந்த  புனைவு எழுத்து தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்த்தியிருக்க வேண்டியது.

எண்ணமுடியாத எழுத்தாளர்களை வைத்திருக்கும் தமிழ்மொழி எழுத தவறிய நம் மூத்தோர் களத்தை ஒரு மலையாள பேராசிரியர் மனோஜ் குரூர் நாவல் ஆக்கியதில் என் எண்ணத்தின் வலப்புறத்தில் பெருமிதம் என்றாலும் மறுபுறத்தில் ஒரு சின்ன வருத்தமும் உண்டெனக்கு.

கவித்துவம் அடர்ந்த மொழியில் இந்நாவலை மலையாளத்திலிருந்து தமிழ்ப்படுத்திய மரியாதைக்குரிய எழுத்தாளர் திருமதி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துப்பணி இந்நாவலுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

தீவிர இலக்கிய வாசிப்பு திறன் கொண்ட நபர்களாக இருந்தால் உங்கள் விருப்பப் புத்தகப் பட்டியலில் இந்நாவலை உடனடியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
வாசித்த உடனான ஆர்வத்தின் அவசர முன்னோட்டமே இக்குறும் பதிவு.

அடுத்த பதிவில் இந் நாவலைப் பற்றி நீண்ட பார்வையுடனும் நீண்ட விமர்சனத்துடன் வருகிறேன்///

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்