துயரெனும் தூரிகை தீட்டிய சித்திரம் - "அஞ்சலை"

இலக்கியத்தில் இயல்புவாத எழுத்து என்பது ஒருவர் வாழும் மண்ணை,
அவர்களின் வாழ்வியலை எவ்வித பூச்சும் இல்லாமல் நேரடியாக எடுத்து வைப்பது. இயல்பு வாத எழுத்தின் மிகப்பெரிய பலம் என்பதும், பலவீனம் என்பதும் அது கலைத்தன்மை நோக்கி பயணிக்காத மேலோட்டமான தட்டையான வாசகர்களின் மனங்களுக்கு நெருக்கமாக நிற்பதில்லை.

இயல்பு வாத படைப்புகள் வாசகனின் மனதை உணர்ச்சிகளின் உயரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தும் வேலையையோ,அவன் நோக்கும் சுவாரஸ்ய பார்வைக்கு பந்தி வைக்கும் வேலையையோ ஒரு போதும் செய்வதில்லை.

தமிழில் இயல்புவாத படைப்பாளிகளில் முக்கியமாக கருதப்படுபவர்கள் பூமணி,ஆ.மாதவன் மற்றும் இமையம். இந்த இயல்பு வாத படைப்பாளர்களின் வரிசையில் கண்மணி குணசேகரும் சேர்கிறார் அஞ்சலை நாவல் வழியாக.

நாம் பார்த்த வாழ்க்கையை எதார்த்தமாக கூறும் கலை கூறின் வடிவம் கொண்டவைகளே இயல்புவாத படைப்புகள் .அப்படி அஞ்சலை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை, அவளின் அவஸ்தையை,அலைக்கழிப்பை, அவளின் கண்ணீரை இயல்பு நீங்காமல் பேசும் கலைக்காவியம் தான் அஞ்சலை நாவல்.

இமையத்தின் "கோவேறு கழுதைகள்" நாவலில் வரும் பற வண்ணாத்தி ஆரோக்கியத்தின் உழைப்பும்,
அவள் வாழ்வும் சுரண்டப்படுகிறது.
சாதியாலும், அதிகாரவர்க்கத்தாலும்
அவமானப்படுத்தப்படுகிறாள். அலைக்கழிக்கப்படுகிறாள் ஆரோக்கியம்.

பூமணியின் "பிறகு " நாவலில் வரும் அழகிரி பகடையின் மகளாக வரும் முத்துமாரி ரெண்டு ஆண்களுக்கு வாக்கப்பட்டு அவர்களிடம் சித்ரவதையில் சிதைந்து வாழ்வின் வலி தாங்காமல் கைக்குழந்தையாய் இருக்கும் பெண் சிசுவை முதுகில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
அப்படிப்பட்ட ஆரோக்கியம், முத்துமாரி போன்றவர்களின் நீட்சியாக நீளும் கதையே அஞ்சலை.

விருத்தாசலத்தில் உள்ள கார்குடல் கிராமம் தான் நாவலின் தொடக்க கதைக்களம்.நிலம் மூலம் ஆண்டைகளாய் இருக்கும் படையாச்சிகளின் நிலத்தில் வேலை செய்யும் பறத்தெருவில் உள்ள பாக்கியத்தின் மகள் அஞ்சலை.
 பயிர் நடவு வேலை செய்யும் போது ஆண்டையின் மகனுடன் அஞ்சலை சிரித்து பேசுவதால் ஊரின் அரசல் புரசலான பழிச் சொல்லுக்கு பாக்கியம் பயந்து அஞ்சலைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள்.

நாவலின் தொடக்கமே இப்படித்தான்ஆரம்பிக்கிறது

" புகைய ஆரம்பித்தபோதே அணைத்துவிடுவதற்குத் தான் பாக்கியம் நினைத்தால் .தோது மாது இல்லாமல் வெறும் கையில் முழம் போட முடியவில்லை".

கணவன் இல்லாத பாக்கியம் தன் இரண்டாவது மகள் தங்கமணியின் கணவன் சின்னசாமியிடம் அஞ்சலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைக்கிறாள். ஆனால் சின்னசாமிக்கு அஞ்சலையை தானே இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறான்.

அஞ்சலைக்கும் அவனைக் கட்டிக் கொள்ள ஒரு எண்ணம் இருந்தாலும் அந்த எண்ணத்தை அஞ்சலையின் அக்கா தங்கமணி இப்படி உடைக்கிறாள்.

" இங்க பாரு அஞ்சல அவன் ஒரு மாசமா என்கிட்ட உன்ன கட்டி வைக்கச் சொல்லி சண்டை வளர்த்துட்டு இருக்கிறான். அவன் அது இது சொல்றான்னு என்கிட்ட வந்து பங்கு போட்டுக்கிட்டு நிக்காத.என்ன காரணம் காட்டி உன்னை கொண்டு வந்து வைத்து ஒண்ணுக்கு ரெண்டா சம்பாதிச்சு போடச்சொல்லிட்டு உட்கார்ந்து திங்கலாம்னு பார்க்கறான். எனக்கு உடம்பு முடியல தான்.ஆனா ஒரு நாளைக்கு ஒரு சாத்துக்குடி வாங்கி வந்து என் கையில குடுத்துருப்பானா?எப்படி எனக்கு உடம்பு உழும், வேலை செய்ய முடியும்.அவன் கெடக்கிறான். இங்க பாரு புள்ளே பாடு பயலா இருந்தாலும் வேற எவனையாவது பார்த்து கட்டிக்க.மீறி நீயும் ஒம்மாவும் ஏதாவது திட்டம் போட்டீங்க, அப்புறம் என் பொணத்ததான் பாக்கலாம் ஆமா என பொறிச்சி தள்ளி விட்டு போனாள் ".

அக்காவின் அழுகைக்கும்,மிரட்டலுக்கும் பயந்து சின்னசாமியை மணக்க முடியாது என்கிறாள். இடையில் அஞ்சலையின் மூத்த அக்கா கல்யாணி தன் கொழுந்தன் ஆறுமுகத்திற்கு அஞ்சலையை கேட்கிறாள்.
ஆனால் பாக்கியம் அவனை வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.

சின்னசாமி தன்னை கட்டிக் கொள்ள மறுத்த அஞ்சலையை பழிவாங்க மணக் கொல்லை என்ற ஊரில் மாப்பிள்ளை பார்க்கிறான்.

மாப்பிள்ளை அண்ணன் தேவராசுவை மாப்பிள்ளை என்று காட்டி நம்ப வைத்து விட்டு தேவராசுவின் தம்பி அவலட்சணமான மண்ணாங்கட்டி (எ) கணேசனை தாலி கட்ட வைத்து அஞ்சலையை ஏமாற்றி விடுகிறான்.

மாப்பிள்ளை பார்க்க வரும் போது இவன் தான் மாப்பிள்ளை என சின்னசாமி பக்கத்திலிருக்கும் கணேசனைக் காட்டாமல் தெருக்கூத்தில் மத்தளம் அடிக்கும் தேவராசனை காட்டி விடுவதால் திருமணத்திற்கு முன்னே தன் மனதில் தேவராசு உடன் அடவி கட்டி ஆடி ஆனந்தமாய் வாழ ஆரம்பிக்கிறாள் அஞ்சலை. மனதில் நினைத்தவன் ஒருவன்.
மனம் விரும்பாத தாலி கட்டியவன் ஒருவன் என்ற அவஸ்தையில் தவிக்கிறாள் அஞ்சலை.தன் மாமன் சின்னசாமியின் சதியால் பலியாகி ஏமாற்றப்படுகிறாள்.

 மணக் கொல்லையில் மண்ணாங்கட்டியை தன்னை
தொடவிடாமல் அஞ்சலை நிராசைகள் நிரம்பிய மனதோடும்,விரக்தியோடும் வாழ்வது போல் வாழ்கிறாள்.
ஒரு நாள் மண்ணாங்கட்டியும், அவனது அப்பனும் அஞ்சலையை அடித்து விடுவதால் கோபத்தில் தலை விரிக்கோலத்தில் மனக் கொல்லையை விட்டு பஸ் ஏறி விருத்தாச்சலம் வந்து விடுகிறாள்.

தன் தாய் வீடு கார்குடலுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் இருப்பவளை தன் மூத்த அக்கா கல்யாணி தன் கொழுந்தனுடன் புடவை வாங்க வந்தவள் அஞ்சலையை பார்த்து நடந்ததை விசாரித்து இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல என் கொழுந்தன் என் பேச்சை தட்ட மாட்டான் என்று தன் கொழுந்தன் ஆறுமுகத்திற்கு கல்யாணம் செய்து வைத்து தான் வாக்கப்பட்ட தொளாருக்கு அழைத்துப் போகிறாள்.
பொழுது விடிந்த மறுநாள் அஞ்சலை இப்படி கூறிக்கொள்கிறாள்
 "நேற்று மணக் கொல்லையில் விடிந்த பொழுது இன்று தொளாரில் விடிந்தது" என்று.

அஞ்சலைக்கு அங்கு போன பிறகு தான் தெரிகிறது தன் கணவனை கல்யாணி கைக்குள் வைத்து கொழுந்தனுடன் கள்ள உறவில் வாழ்கிறாள் என்று.
தன் அக்கா கல்யாணியிடம் சித்ரவதைப் பட்டு சின்னப் படுகிறாள். ஆறுமுகத்திற்கும் அஞ்சலைக்கும் வெண்ணிலா என்ற பெண் குழந்தை பிறக்கிறது.

தன்னை கண்டு கொள்ளாத கணவன், சித்ரவதைச் செய்யும் அக்கா ஆகியோரிடம் சண்டையிட்டுக் கொண்டு கைக்குழந்தையுடன் மீண்டும் கார் குடலுக்கு வருகிறாள்.கார்குடலில் தன் அம்மா, இரண்டாவது அக்கா தங்கமணி, தம்பி மணிகண்டன் ஆகியோருடன் வாழ்கிறாள்.

அங்கும் மணியாரு என்பவனுடன் தப்பாக இணைத்து வைத்து ஊரே பேசுவதால் சின்னசாமிக்கும்,மணியாருக்கும் சண்டை முற்றி சின்னசாமி உதடு கிழிந்த கோபத்தில் தங்கமணியை அடிக்கிறான். தன்னால் தான் பிரச்சனை என மனம் உடைகிற அஞ்சலை குழந்தையை தன் அம்மாவிடமே விட்டு விட்டு பவழங்குடியில் வாக்கப்பட்டுள்ள தன் தோழி வள்ளி வீட்டுக்குப் போகிறாள்.

அங்கு வள்ளியின் அறிவுறுத்தலில் மீண்டும் மண்ணாங்கட்டியுடன் சேர்ந்து வாழ்ந்து அவனுக்கு இரண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்து தரைக்கும் தண்ணிக்கும் வாக்கப்பட்ட தவளையைப் போல் கார் குடலுக்கும்,
மணக் கொல்லைக்கும் இடையில் அஞ்சலை அல்லல்பட்டு தாளாத துயரில் கண்ணீர் வடிப்பது தான் நாவலின் கதை.

கடுங்காற்றில் சிக்கி கிழியும் வாழையிலை போல அஞ்சலை வாழ்வை துயரங்கள் கிழிக்கக் காரணம் அஞ்சலை விரும்பிய வாழ்வு அவளுக்கு அமையாமல் போனதும் அதை நிறைவேற்றிக் கொள்ள அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவளை துயர்படுத்தி அவளை ஏமாற்றி அழவைக்கிறது.

தேவராசு தான் தனக்கு ஏற்ற கணவன் என தன் மனது முழுக்க ஊற்றி நிரப்பி எரியவிடும் ஆசை தீபத்தை மண்ணாங்கட்டி கணவனாக வந்து ஊதி அணைத்து விடுகிறான்.

அந்த நிறைவேறாத ஆசை தான் மண்ணாங்கட்டி மீது வெறுப்பாகவும், தேவராசு மீது கோபம் கலந்த மோகமாகவும் வளர்கிறது என்பதற்கு நாவலில் வரும் மூன்று இடங்கள் உதாரணமாக சொல்லலாம்.

ஒன்று:

காட்டில் உள்ள ஆற்றில் வள்ளியும், அஞ்சலியும் துணி துவைத்து கொண்டிருக்கும் போது
 அஞ்சலை என்ன நினைத்தாளோ தெரியவில்லை பட்டென்று சொன்னாள்.

"வள்ளி நம்ம தெரு ஆம்பளையில கைலி கட்டிக்கிட்டு பாக்குறதுக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி லட்சணமாய் இருக்கிறது என் மூத்தாறு மட்டும்தான்.மத்தது பூரா ஒட்டுக் கோமணந்தான்"
 என சொல்லிவிட்டு சிரிக்கும் இடம்

இரண்டாவது:

முந்திரிக்காட்டில் நடந்து வரும் தேவராசை நிறுத்தி அதட்டிக் கேட்கிறாள் அஞ்சலை " எனக்கு என்னடா வழி சொல்ற? நீ தான் மாப்ளன்னு வந்தன். ஒன்னப் பார்த்து தான் சம்மதிச்சேன்.
நீயும் ஏமாத்திட்ட. உன் அப்பன் ஊரு சனமெல்லாம் ஏமாற்றிவிட்டது.
எனக்கு அவன் கூட படுக்க சம்மதமில்லை.எனக்கு என்ன வழி சொல்ற? எனக்கு என்னடா வழி சொல்லுற ? உன் பொண்டாட்டி விடுவாளா, கொழுந்தனாருக்கு பொண்ணு பாக்க அனுப்பினாள,
இப்ப விடுவாளா என்கிட்ட ஒன்ன? வுடுவாளா? எப்படிடா நாங்க இருந்தோம்,
என்னை இந்த மாதிரி நாசம் பண்ணிட்டீங்கள" என்பதும்

மூன்றாவது:

அஞ்சலை கர்ணன் மோட்சம் தெருக்கூத்து பார்க்க போகும் போது கூத்தில் மத்தளம் அடித்துக் கொண்டிருக்கிறான் மூத்தாரு தேவராசு.இதுவரை மத்தளம் அடிக்கிறவன் னு கேள்விப்பட்டிருந்தாளே ஒழிய இப்படி நேரில் பார்த்தது இல்லை.

தலையை ஆட்டி ஆட்டி உடம்பை குலுக்கி குலுக்கி அடித்ததில் கொஞ்ச நேரத்தில் மேலே போட்டிருந்த பனியன் தெப்பலாகி விட்டது. உருவி எறிந்து விட்டு அடிக்கிறான்.முத்து முத்தாய் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் வியர்வை மின்னுகிறது. அந்த மீசைக்கும் ஒரு புறமாய் துள்ளுகிற தலைமுடிக்கும் பறந்து பாய்ந்து அடிக்கிற விரல்களுக்கும் பார்த்துப் பார்த்து மூத்தவள் துப்படியாக்காரி வளர்த்திய சண்டையையும் மறந்து பெருமூச்சு விடுகிறாள்,பொறாமையில்.

நமக்கு ஏத்தவன் இவந்தான்.என்னமோ நல்ல நேரத்துல ஒரு கெட்ட நேரம் கண்ணுக்குப் பிடிக்காத கையாலாகாதவன் கையில் கொண்டு போய் வுட்டுட்டுது.அடியை மாற்றி அடிக்கிறான் அஞ்சலை அவனை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மனசுல முதன் முதலாய் நின்றவன் மத்தளம் அடிக்கிறான்.
 அஞ்சலை கனவில் அவன் அடிக்கு தகுந்த மாதிரி அடவு போடுகிறாள் "

ஒருவேளை இது தான் கதி என்று மண்ணாங்கட்டியுடன் அஞ்சலை சகித்துக்கொண்டு வாழ்ந்திருந்தாலும், தன்னுடைய மூத்தாரு தேவராசு உடன் தவறான உறவு கொண்டிருந்தாளோ அஞ்சலையின் பாத்திரப்படைப்பும் இந்நாவலும் கலைத் தன்மை இழந்து நின்றிருக்கும்.

மண்ணில் படரும் கொடி தான் பற்றிக் கொள்ள ஒரு மரமோ,மடம்போ கிடைக்காதா? என படர்ந்து நிற்பதைப் போல தான் விரும்பி பற்றும் அத்தனை உறவுகளினாலும் அஞ்சலை அவஸ்தைக்குள்ளாகி அலைக்கழிக்கப்படுகிறாள்.

தொடர் துயர் அவளை துரத்துகிறது. அந்த துயர்களின் ஆண் வடிவங்கள் என சின்னசாமி, மண்ணாங்கட்டி, தேவராசு, அதியமாங்குப்பத்தான்,ஆறுமுகம், மணியாரு ஆகியோரும்
துயர் கொடுக்கும் பெண் வடிவங்களாக கல்யாணி, துப்படியாக்காரி ஆகியோரும் புறம் பேசி பழித்துச் சபிக்கும் ஊர் ஜனங்கள் என அனைவரும் அஞ்சலையை சுரண்டுகிறார்கள்,
துரத்துகிறார்கள்.

 தன் மகள் வெண்ணிலாவை தன் தம்பி மணிகண்டன் கல்யாணம் செய்து கொள்வான் என்ற கனவில் அஞ்சலை இருக்கும் போது அதற்கும் தன் அக்கா கல்யாணி எதிரியாக வந்து தன் மகளை மணிகண்டனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுகிறாள்.இப்படி தொடர்ச்சியாக சொந்த உறவுகளால் அஞ்சலை ஏமாற்றப்படும் வாழ்க்கையே கடைசி வரை அவளுக்கு அமைகிறது.

தன் மகள் வெண்ணிலாவின் வாழ்வும் தன்னைப்போலவே ஆகிவிடுமோ என்ற பயம்,தம்பி தன் மகளைக் கட்டிக் கொள்ளாமல் ஏமாற்றிய வேதனை, தன்னை பழிச் சொற்களால் சண்டைக்கு இழுத்து சொத்து ஏமாற்றப் பார்க்கும் துப்படியாக்காரி, தன்னை நாடு மாறி, தேவிடியா என பேசும் தன் கணவன் மண்ணாங்கட்டியின் வார்த்தைகள் ஆகியவற்றில் மனம் உடைந்து முந்திரிக்காட்டில் தூக்குப் போடப் போகும் போது அஞ்சலையை அடித்து உதைக்கும் வெண்ணிலா "நாடுமாரி  நீ ஏண்டி சாகப்போற? நீ பண்ணுனதுக்கு நான்தாண்டி சாவணும். நானு அப்பனையும் பார்த்ததில்லை. தொளார்க்காரி மொவளக் கொண்டாந்து போட்டியா வைக்கிற . அங்கியும் எனக்கு இடமில்லை. நீனும் இங்கு சாவப் போறங்கற .எனக்கு யாரடி இருக்கிறா?என்னை யாரு வைச்சிடி நல்லது கெட்டது பார்க்கிறது? அனாதையா நிக்கிற நான் தாண்டி சாவுனும். நீ பண்ணுனதுக்கு நான்தாண்டி சாகணும். எனக்கு கொடுமை பண்ணட்டு நீ ஏண்டி சாகற?என்ன கொன்னுட்டு செத்து போடி. செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போவுது. பொறந்தது பொறந்தாச்சு. என்ன ஆயிடுங்கிற? இதுவும் இல்லாம இப்ப நானும் வேற கூட வந்து இருக்கேன். இன்னும் பத்து பொழுது இந்த சனங்ககிட்ட இருந்து என்னா ஏதுன்னு வாழ்ந்து பார்க்காமல் செத்துப் போறது தானா பெரிசு. ஏந்திரு
சாவப்போறாளாம் சாவ" என அஞ்சலையை கைப்பற்றி நடப்பதாக நாவல் முடிகிறது.

நாவலில் அஞ்சலைக்கு உறுதுணையாக வரும் அவளது தோழி வள்ளியின் பாத்திர வார்ப்பு மட்டுமே அஞ்சலைக்கும் நமக்கும் ஆறுதலாக உள்ளது.

நாவலில் சாதியமும்,தீண்டாமையும் இருந்தாலும் பறையர்களும், படையாச்சிகளும் இணக்கமாக தான் வாழ்கிறார்கள்.
ஊருக்கே ஒரே தண்ணீர் பம்பு தான் இரு சாதியினரும் ஒரே பம்பில் தான் தண்ணீர் பிடிக்கிறார்கள்.

ஆனாலும் பறையர்களுக்கு குடிக்க கொடுத்த சொம்பைக் கீழே வைக்கச் சொல்லித் தண்ணீர் தெளித்து தீட்டுக் கழித்து எடுத்துப் போகிறார்கள்.

மெயின் ரோட்டிலிருந்து தெற்காக ஊர் தெருவுக்கு ரோடு போவதால் ஆண்டைகள் சேரித்தெருக்களை பார்த்துக் கொண்டே போவதைப் பார்த்து சேரி சனங்கள் திண்ணையில் இருந்து அடிக்கடி இறங்க வேண்டும் என்பதற்காகவே ரோட்டு ஓரத்து வீடுகள் ஒன்று கூட கிழக்கு முகமாய் வைத்துக் கட்டாமல் எல்லாம் வடக்கு பார்த்தும் தெற்கு பார்த்துமாய்க் கட்டியிருப்பதில் சாதிய ஆதிக்கத்தை கண்முன் காட்டுகிறார் கண்மணி குணசேகரன்.

கார் குடல் மண்ணில் நெல்லும்,
மணக் கொல்லையில் முந்திரியும்,
தொளாரில் கரும்பும் என வெவ்வேறு மண்ணில் வெவ்வேறு பயிர்கள் என மண்ணின் தன்மை மாறினாலும் மனிதர்கள் ஒரே மாதிரியான நாக்குடனும்,சொல்லுடனும் அஞ்சலையை சபிக்கிறார்கள்.

கிராமத்து சொலவடைகளை தங்கள் வாழ்வியல் சம்பவங்களோடு நாவலில் சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணங்கள்

"நெனப்பு பொழப்பு கெடுத்ததாம். நீராகாரத்த உப்பு கெடுத்துதாம்"

"நம்ம சூத்தையே நம்பளால பாக்க முடியல. ஊரு சூத்துக்கு நோணாட்டம் சொல்றதுக்கு நாம யாரு?"

"காடைக்கு களம் போட்டாலும் காட்டத்தான் நோக்குமாம்"

 நான் பார்த்த என் ஊரின் என் மண்ணில் வாழ்ந்த நிறைய பெண்களின் வாழ்வு கதையே அஞ்சலை.

கோவேறு கழுதைகள் நாவலுக்குப் பிறகு ஒரு ஆணின் பார்வையில் ஒரு பெண்ணின் வாழ்வை பதிவு செய்த சிறந்த நாவல் அஞ்சலை என்பது என் கருத்து///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்