///மக்கள் நலனுக்காக அரசின் அவலங்களை பாட்டு மூலமாக பிரச்சாரம் செய்யும் தெருவோர மேடைப் பாடகரான நாராயண் காம்ளேவை மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே காவல்துறை கைது செய்கிறது.

அதற்கான காரணம் நாராயண் காம்ளே பாடிய பாடலால் தான் வாசுதேவ் பவார் என்ற மனித மலம் மற்றும் சாக்கடை குழிக்குள் வேலை செய்யும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி கைது செய்கிறது.

நாராயண் காம்ளேவிற்கு ஆதரவாக வினய் வோரா என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரும், நாராயண் காம்ளேவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அவருக்கு எதிராக ஒரு பெண் வழக்கறிஞரும் வாதாடுவது தான் Court படமே.

வினய்வோராவாக நடித்திருக்கும் வழக்கறிஞர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விவேக் கோம்பர்.ஒரு மனித உரிமையாளர்,வழக்கறிஞர் என்ற பாத்திரத்தில் நாராயண் காம்ளே விற்கு ஜாமீன் வாங்கி கொடுப்பதாகட்டும்,
இறந்து போன வாசுதேவ் பவாரின் மனைவி ஷர்மிளா பவாரை அவர் வசிக்கும் சேரிப் பகுதியில் தன் காரிலேயே கொண்டு சென்று விடுவதாகட்டும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரால் தாக்கப்படுவதை நினைத்து அழுதுவிட்டு அடுத்த நாளே தன் அன்றாட பணியை கவனிப்பதாகட்டும் என சிறப்பாக நடித்திருக்கிறார் விவேக் கோம்பர்.

பெண் வழக்கறிஞராக வரும் கீதாஞ்சலி குல்கர்னி(ரன்,வீரம் படங்களின் வில்லன் அதுல் குல்கர்னியின் மனைவி) ஒரு வழக்கறிஞர் என்பதைத் தாண்டி தன் மகனை பள்ளி முடிந்து அழைத்து வருவது, இரண்டு குழந்தைகளையும், கணவனையும் கவனிக்கும் ஒரு சராசரி குடும்பப் பெண்ணாக,வாரத்தின் இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் நேரம் செலவிடுவது,ரயிலில் வீட்டுக்கு வரும் போது பக்கத்தில் அமர்ந்துள்ள பெண்மணியிடம் இந்த புடவை அழகாக உள்ளது எங்கு எடுத்தீர்கள் என கேட்பது என்று ஒரு சராசரி இந்திய குடும்பப் பெண்ணின் மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திர வார்ப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

Court,வழக்கறிஞர்கள் வாதாடுவது, வாதாடும் வழக்கறிஞர்கள் இருவரின் அன்றாட வாழ்க்கை நகர்வு இவைகளைத் தாண்டி படம் செல்வதில்லை.

மலம் அள்ளும் தொழிலாளி வாசுதேவ் பவார் சாக்கடைக் குழிக்குள் இறங்கும் முன் அவருக்கு உயிர் காக்கும் முன் எச்சரிக்கை உபகரணங்கள் வழங்காத அரசை கண்டிக்காமல் ஒரு அம்பேத்கரிஸ்ட் பாடிய பாடலால் தான் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற வழக்கை விசாரிக்கும் நீதித்தறையின் தடித்தனப் போக்கை கேலி செய்கிறது Court திரைப்படம்.

ஒரு காட்சியில் பெண் வழக்கறிஞர் தன் குடும்பத்துடன் ஒரு நாடகம் பார்க்க செல்கிறார்.அந்த நாடகத்தின் காட்சியில் ஒரு பெண்  தான் காதலிக்கும் வேற்று மாநில பானிபூரி விற்கும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்தும் போது அந்த பெண்ணின் தந்தை இந்த மராட்டிய மண்ணுக்கும் சரி,என் மகளுக்கும் சரி ஒரு மராட்டிய மண்ணில் பிறந்தவன் தான் வேண்டும் என்று அந்த காதலனையும், அவனுடைய அப்பனையும் துரத்துவார். இந்த காட்சியில் மராட்டிய மக்களின் மண் பற்றை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

ஒரு வழியாக நாராயண் காம்ளேவிற்கு நீதிபதி ஜாமீன் வழங்கினாலும்,தன் வழக்கு சம்பந்தமான புத்தகத்தை அச்சடித்து பிரசுரிக்க தயார் செய்து கொண்டிருக்கும் போதே மீண்டும் கைது செய்யப்படுகிறார் நாராயண் காம்ளே.

நாராயண் காம்ளேவின் வயோதிகத்தை கூட கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டு நீதிபதி நீதிமன்ற கோடை விடுமுறையை கழிக்க தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்று கழிப்பதுடன் படம் முடிகிறது.

சுற்றுலா சென்ற நீதிபதி ஒரு பூங்காவின் மேசை மீது உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடன் சுற்றுலா சென்ற சிறுவர்கள் அவர் அருகே கத்தி கூச்சலிடும் போது கோபத்தில் அந்த கத்திய சிறுவனை
நீதிபதி அடித்து விடுகிறார்.அழுது கொண்டே அந்த சிறுவன் நடக்கும் போது திரை கறுப்பாக மறைந்து படம் முடிகிறது. தற்காலிகமாக தூங்கிக் கொண்டிருக்கும் தன்னை தொந்தரவு செய்து விட்டதாய் பொறுமையிழந்து ஒரு சிறுவனை அடிக்கும் நீதிபதிக்கு நாராயண் காம்ளேவின் கருத்துரிமையின் கழுத்தை காவல்துறையும்,தான் சார்ந்த நீதித்துறையும் நெறிப்பது தெரியாதோ என்னவோ.

இந்திய நீதித்துறையின்  நீதி வழங்கும் முறைமைகள்,அதன் போக்கு,அதன் தடித்தனங்களின் மீதான பகடியை பதிவு செய்கிறது Court திரைப்படம்///

 #Court Marathi movie

#Chaitanya Tamhane

பேரன்புடன்
#ம.வேலு

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்